இடுகைகள்

ஆகஸ்ட், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைப்பும் மறப்பும்........

தலைவியை விட்டு பொருள் ஈட்டும் காரணமாக பிரிந்து மீண்ட தலைவன் தன் காதலியிடம் (மனைவியிடம்)உரையாடுங்கால் முன் பிரிந்த போது விருப்புடன் உன்னை நினைத்தேன் என்று கூறினான்.உடனே அவள் மறந்தால் தானே நினைக்க முடியும்,ஏன் என்னை மறந்தீர் எனக் கேட்டு அவனிடம் புலந்தாள். உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.(1316) நினைப்பதும் மறப்பதுமின்றி எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற கருத்தைத் திருமூலரும் தமது திருமந்திரத்தில் பதிவு செய்துள்ளார். நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற் ற்றுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற் ற்றுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறிலவன் நீறிய னாமே (2970) இதே கருத்தினைக் கம்பரும் ஆண்டுள்ளார். மண்டோதரி இராவணனை இடையறாது எப்பொழுதும் நினைத்திருந்தாள் என்பதைக் குறிப்பிடும் போழுது, 'நினைத்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்' என்று கூறுகின்றாள்.

கூந்தலின் வகை...

படம்
பெண்கள் கூந்தலுக்கு ஐம்பால் என்ற பெயருண்டு.காரணம் ஐந்து வகையாக அமைக்கப்படுதலின் என்று கூறுவர். அவை குழல்,அளகம்,கொண்டை,பனிச்சை,துஞ்சை எனப்படும். சங்க இலக்கியத்தில் 'துஞ்சை' என்பதைத் தவிர பிற நான்கு வகையும் இடம் பெற்றுள்ளன. குழல் என்பது ஆண்,பெண் இருபாலரின் முடியையும் குறிக்கும். குஞ்சி,கோதை,கதுப்பு,கூந்தல்,ஓதி,பின்,பித்தை என்ற சொல்லாட்சிகளும் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன. இவற்றுள் ஓரி,பித்தை,குஞ்சி என்பன் ஆடவரின் முடியைக் குறிக்க வருகின்றன.

சினம் குறித்த சொற்கள்........

படம்
இப்பொழுது கோபம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றோம் அல்லவா? அச்சொல்லுக்கு பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.கோபம் என்னும் சொல் சங்க நூல்களில் இந்திரகோபப் பூச்சிகளைக் குறிதனவே ஒழிய சினம் என்பதைக் குறிக்கவில்லை.பிற்காலத்தில் தான் சினம் என்பதற்கு கோவம் கோபம்,என்ற சொல்லட்சிகள் வழக்கில் வந்தன. கோபம் என்பதே சரியான சொல்வழக்கு.அனால் பேச்சு வழக்கில் கோவம் என்று கூறுகின்றோம். சங்க இலக்கியத்தில் கதம்,சீற்றம்,சினம்,வெகுளி முதலிய சொற்கள் கோபத்தை உணர்த்தும் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.அச்சொற்கள் எல்லாம் ஒரே பொருள் உடையன போல் இருந்தாலும் இவற்றுள் சிறு வேறுபாடு உண்டு. கதம் --- இச்சொல் இளஞ்சூட்டைக் குறிக்கும். கோபம் வந்தால் உடலில் சூடும் தோன்றுகிறது அல்லவா? கோபப்படுபவரைப் பார்த்து எதற்கு இதற்கெல்லாம் சூடாகிறாய் என்று இன்றும் நாம் வழக்கில் கூறுகின்றோம் தானே.சிறு கோபம் கொண்டு உடலில் இளஞ்சூடு பரவுவதற்குக் கதம் என்று பெயர்.உடல் எப்பொழுதும் வெதுவெதுப்பாக காய்ந்து கொண்டு இருப்பதால் அதனைக் காயம் என்று கூறுகின்றோம். சீற்றம் --- பாம்பு சீறுவது போல வெகுண்டெழுவது.கோபம் அதிகமாவது. வெகுளியும் சி...

கள்ளின் வகை......

படம்
சங்க நூற்பாடல்களில் பல வகையான கள்வகைகள் காணப்பெறுகின்றன.அக்கால மக்களின் வாழ்க்கையில் மது உண்டு களித்தல் எனபது இயல்பாக இருந்துள்ளது. கள்ளினைத் தேறல்,நறவு,தோப்பி,அரியல்,வேரி,காந்தாரம்,மட்டு,பிழி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கியுள்ளனர்.இவற்றுள் சிறுசிறு வேறுபாடு உண்டு. கள்ளில் தெளிந்து காணப்பெறுவதைத் தேறல் என்று குறிப்பிட்டுள்ளனர். நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை கள்ளின் பெயர் நறவு என்றும் தோப்பி என்றும் வழங்கப்பெற்றுள்ளது. நெற்சோற்றினில் இருந்து இறக்கப்படும் ஒருவகை கள் அரியல்.இதற்கு தேன் என்றும் பொருள் உண்டு. மூங்கிற் குழாயில் ஊற்றி நிலத்தில் புதைத்து வைத்து முதிரச்செய்தவது மட்டு. பனை,பலா,தேனிறால் முதலியவற்றில் இருந்து பிழுந்து எடுப்பது பிழி.

தொகைச்சொற்கள்.....

படம்
பத்து எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்....... அரசற்குரியதசாங்கம் ----- மலை,யாறு,நாடு,ஊர்,மாலை,பரி,கரி,முரசு,கொடி,செங்கோல் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் ---- காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வாரானை,அம்புலி, சிறுபறை,சிற்றில்,சிறுதேர். கமகம் ----- ஆரோகணம்,அவரகோணம்,தாலு,ஆந்தோளம்,ஸ்புரிதம்,ஆகதம்,மூர்ச்சனை, திரியுத்தம்,பிரத்தியாதகம்,கம்பிதம். கலாயாணப் பொருத்தம் ----- நட்சத்திரப் பொருத்தம்,கணப்பொருத்தம்,மகேந்திரப்பொருத்தம், ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்,யோனிப்பொருத்தம்,இராசிப்பொருத்தம்,இராசியாதிபதிப்பொருத்தம், வசியப்பொர்த்தம்,வேதைப்பொருத்தம்,இரச்சுப்பொருத்தம். கனராகம் ----- நாட்டை,சாரங்கநாட்டை,கேதாரநாட்டை,வராளி,ஆரபி,பௌனம்,கௌளம், ரீதி கௌளம்,நாராயணகௌளம்,நீரகம். காவிய குணம் ----- செறிவு,தெளிவு,சமநிலை,இன்பம்,ஒழுகிசை,உதாரம்,உய்த்தலின் பொருண்மை,காந்தம்,வலி,சமாதி. சேனைத் தொகை ----- பதாதி,சேனாமுகம்,குமுதம்,கணகம்,வாகினி,பிரளயம்,சமுத்திரம், சங்கம், ,அக்கோணி பத்துப் பாட்டு ------ திருமுருகாற்றுப்படை,சிறுபாணாற்றப்படை,பெருபாணாற்றுப்படை, பொருநராற்றப்படை,குறிஞ்சிப்பாட்டு,முல்லைப்பாட்டு,நெடுநல்வாடை,மலைபடுகடாம்,பட...

காதற்காமம்

காதற் காமம் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றது. இச் சொல் முன்பு உணர்த்திய பொருள் மறைந்து ,இப்பொழுது இழிந்த பொருளில் வழங்கப்பெறுகின்றது. காதல் என்பது உள்ளத்தைப் பொருத்தது.காமம் என்பது உடலைப் பொறுத்தது. உள்ளப் புணர்ச்சியில்லா மெய்யுறு புணர்ச்சியும்,மெய்யுறு புணர்ச்சி இல்லா உள்ளப் புணர்ச்சியும் அத்துணை சிறவா.உள்ளப் புணர்ச்சியையும் மெய்யுறு புணர்ச்சியையும் ஒருங்கே இணைத்துக் கூறும் ஒருசொல் தமிழில் இல்லை.அவ்விரு புணர்ச்சியையும் சுட்டக் குன்றம் பூதனார் காதற் காமம் என்னும் புதுச் சொல்லைப் படைத்துள்ளார் எனத் தமிழ்கா காதல் என்னும் நூலில் செம்மல் வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். அச்சொல்லுக்கு மனமொத்துப் புணர்தல் என்பது பொருள் காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி.(பரிபாடல்,9)

பூவின் பல நிலைகள்.......

படம்
பேதை பெதும்பை,மங்கை ,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண், என்று பெண்களுக்கு ஒவ்வொரு நிலையும் இருப்பது போல,பூவுக்கு ஒவ்வொரு நிலை உண்டு. அரும்பு,போது,மலர்,வீ,செம்மல் அரும்பு என்பது பூவின் தொடக்க நிலையைக் குறிக்கும். போது என்பது பூ மலர்வதுக்கு முன் உள்ள நிலையினைக் குறிக்கும். மலர் என்பது பூவின் விரிந்த நிலையினைக் குறிக்கும். மலர்ந்த பின் செடியில் இருந்து பூக்கள் உதிரும் நிலையினைக் குறிப்பது வீ . கீழே உதிர்ந்த பூ மணம் பரப்பிக் கொண்டு இருப்பது செம்மல் எனப்படும்.

தொகைச்சொற்கள்.....

படம்
ஒன்பது எண்ணிக்கையில் அமைந்துள்ள தொகைச்சொற்கள்........ இரதம் ----- சிங்காரம்,வீரியம்,பெருநகை,கருணை,இரௌத்திரம், குற்சை,சாந்தம்,அற்புதம்,பயம் இராட்சதகணம் ------ கார்த்திகை,ஆயிலியம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை, மூலம்,அவிட்டம்,சதயம் கீழ்நோக்குநாள் -----உரோகிணி,திருவாதிரை,பூசம்,உத்திரம்,உத்திராடம்,திருவோணம், அவிட்டம்,சதயம்,உத்திரட்டாதி தாரணை ----- மதாரணை,வச்சிரதாரணை,மாயாதாரணை,சித்திரதாதணை,வத்துத்தாரணை, சதுரங்கதாரணை தாளம் ----- அரிதாளம்,அருமதாளம்,சமதாளம்,சித்திரதாளம்,துருவதாளம், நிவிர்த்திதாளம்,படிமதாளம்,விடதாளம்,நவசந்திதாளம் திரவியம் ----- பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம்,காலம்,திக்கு,ஆன்மா,மனம். நிதி ----- சங்கம்,பதுமம்,மகாபதுமம்,மகரம்,கச்சபம்,முகுந்தம்,குந்தகம்,நீலம்,வரம்

மாலை வகைகள்........

படம்
நம் முன்னோர்களால் எழுதப்பட்ட பழமை இலக்கியங்களின் வாயிலாக மாலை என்று இன்று ஒரு சொல்லால் குறிப்பிடுகின்றோமே பூமாலையை அதற்கு பலப் பெயரில் வழங்கியுள்ளதை அறியலாம். மாலை,தார்,கோதை,கண்ணி,தெரியல்,தொடையல்,ஒலியல்,தாமம் என்ற சொற்கள் சங்க நூல்களில் காணப்பெறுகின்றன.இந்நொற்கள் அனைத்தும் சில வேறுபாடுகள் உடையது. கண்ணி கார்நறுங் கொன்றை,காமர் வண்ண மார்பில் தாரும் கொன்றை என புறநானூற்றிலும், கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் என அகநானூற்றிலும் கண்ணியார் தாரர் கமழ்நறுங் கோதையர் எனப் பரிபாடலிலும் காணப்பெறுவதால் கண்ணி,தார் மாலை,கோதை என்ற சொற்கள் வெவ்வேறானவை என்பதை அறியலாம். கண்ணி என்பது தலையில் சூடுவது.செறிவாக பல வண்ணமலர்களைக் கொண்டு தொடுக்கப்பெறுவது. தார் ஆண்கள் அணியக்கூடியது. மாலை பெண்கள் அணியக்கூடியது. கோதை ஆண்கள்,பெண்கள் இருபாலரும் அணியக் கூடியது. தெரியல் என்பது தேர்ந்தெடுக்கப் பட்ட மலர்களால் தொடுப்பது என்று கூறுவர். தொல்காப்பியர் 'உறுபகை வேந்திடை தெரியல் வேண்டி' என்று கூறுவதனால் தெரியல் என்பது இன்ன குலத்தினர் என்று அறிந்து கொள்ள சூடிக்கொள்ளும் பூமாலை என்லாம். அதாவ...

மலையின் வகை.......

படம்
சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கையைப் பற்றிய வருணனை பெருமளவில் காணக்கிடக்கின்றன.இவ்வருணனைகளில் குறிஞ்சி நிலப்பகுதியான மலையைப் பற்றிய வருணனையும் இடம் பெற்றுள்ளது.நம் முன்னோர் மலையின் தோற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பெயரினை இட்டு மகிழ்ந்து பயன்பாட்டில் பயன்படுத்தியுள்ளனர். அடுக்கம்,குன்று ,ஓங்கல்,வெற்பு,சிலம்பு,கல்,வரை எனப் பல பெயர்கள் வழங்கப்பெற்றாலும் இவற்றிற்கு இடையே சிறுசிறு வேறுபாடு உண்டு. அடுக்கம் என்பது மலை பக்கத்தைக் குறிக்கும்.அதாவது அடுக்கம் போன்று தோன்றும் பகுதியைக் குறிக்கும். குன்று என்பது குறுகிய மலையைக் குறிக்கும்.குறு என்பது மெல்லின னகரம் பெற்று குன்று ஆயிற்று என்பர். ஓங்கல் என்பது ஓங்கிய மலையினைக் குறிக்கும். வெற்பு என்பது மிகு உயர்ந்து பிற மலைகளை வென்று நிற்பது.பல மலைகள் சூழ்ந்திருக்கும் போது ஒரு மலை மட்டும் உயர்ந்து காணப்பெறுவது. சிலம்பு என்பது மலையில் எதிரொலி கேட்கும் பகுதியைக் குறிக்கும். கல் என்பது கற்கள் அதிகம் நிறைந்த மலைப் பகுதியாக இருப்பது. வரை என்பதற்கு சுவர் போல் நிலத்தை வரையறுக்கும் மலை எனப் பொருள் கூறுவர் பாவாணர். மலைக்கு இத்தனைச் சொற்களை நம் முன்னோர் பயன்படுத்த...

விடிவுற்று ஏமாக்க......

படம்
விடிவுற்று ஏமாக்க என்ற சொல்லிற்குப் பொருள் துன்பம் நீங்கி இன்புறுக என்பதாகும்.பொதுவாக நாம் வழக்கில் என் வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் தீர்ந்து இன்பம் வருமோ தெரியவில்லையே என்று கூறுவது வழமை,அதேபோல எனக்கு எப்பொழுது விடியுமோ,விடிவுகாலம் வருமோ தெரியவில்லையே என்று புலம்புவதையும் கேட்டிருப்போம்.ஆகையால் விடிவு என்பது இருள் நீங்குவதைக் குறிக்கும்.இங்கு குறிப்பாக விடிவு என்ற சொல் துன்பம் நீங்குதலைக் குறிக்கும். சங்க நூல்களில் ஒன்றான பரிபாடலில்,மதுரை மக்கள் வையை ஆற்றுக்குப் புனலாடச்செல்லுகின்றனர்,அப்பொழுது அவர்கள் வையை ஆற்றினை நோக்கி,இன்று நீராடி இன்பம் அடைந்து போல என்றும் உன்னை விட்டுப் பிரியாமல் நீராடி துன்பம் நீங்கி இன்புறுவோம் என்று பாடுகின்றனர். பேஎம்நீர் வையை, நின்பயம் பாடி விடிவுற்று ஏமாக்க ; நின்படிந்து நீங்காம் இன்றுபுணர்ந் தெனவே.(பரிபாடல் 7) இன்று இச் சொல்லாட்சியை நாம் பயன்படுத்துவதில்லை.எத்தனையோ சொற்கள் நம்மைவிட்டுச் சென்று கொண்டு இருக்கின்றன.

தொகைச்சொற்கள்

படம்
எட்டு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்...... அட்டபுட்பம் ----- புன்னை,வெள்ளெருக்கு,நந்தியாவர்த்தம்,அண்பகம்,நீலோற்பம்,பாதிரி, அலரி,செந்தாமரை அட்டவீரட்டம் ----- கண்டியூர்,கடவூர்,அதிகை,வழுவூர்,பறியலூர்,கோவலூர்,குறுக்கை, விற்குடி அருகனெண்குணம் ----- கடையிலாவறிவு,கடையிலாக்காட்சி,கடையிலாவீரியம், நாமமின்மை, கோத்திரமின்மை,ஆயுளின்மை,அழியாவியல்பு அளவை ----- காட்சி,அனுமானம்,ஆகமம்,அருத்தாபத்தி,உபமானம்,அபாவம்,சம்பவம், ஐதிகம் அக்ஷ்தகல்யாணி ----- யான்கு கால்கள்,முகம்,தலை,வால்,மார்பு அக்ஷ்டபந்தனம் ---- சுக்கான்கல்,கொம்பரக்கு,சாதிலிங்கம்,செம்பஞ்சு,தேன்மெழுகு,எருமைவெண்ணெய்,குங்கிலியம் ,நற்காவி அக்ஷ்டமாந்தம் ----- செரியாமாந்தம்,போர்மாந்தம்,மலடிமாந்தம்,பெருமாந்தம், வாதமாந்தம்,சுழிமாந்தம், கணமாந்தம் ஈசுரன் குணங்கள் ----- தன்வயனாதல்,தூயவுதம்பின்னாதல்,இயற்கையுணர்வின்னாதல், முற்றுமுணர்தல்,இயல்பாகப் பாசங்கினின்று நீங்குதல்,பேரருளுடமை,வரம்பிலின்பமுடைமை,முடிவிலாற்றுலுடைமை எட்டுத்தொகை ----- நற்றறிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை,அகநாநூறு, புறநானூறு எண்சுவைத்தமிழ் ----- சிங்காரம்,வீரி...

சங்க சொல்லாட்சி

படம்
சொல்வலை வேட்டுவன் சங்க இலக்கியத்தில் காணப்பெறும் அழகிய சொற்படைப்பு. சொல்வலை வேட்டுவன் என்பதற்குப் பொருள் தேர்ந்த சொற்களைக் கொண்டு தனது நாவண்மையால் பிறரைப் பிணிப்பவன் அதாவது கவர்பவன் என்பதாகும்.இது போன்றே சொல்லேருழவன் என்ற சொல்லாட்சியும் இலக்கியத்தில் உள்ளது அதற்கும் இதுவே பொருள். இச்சொல்லாட்சி புறாநானூற்றில் காணப்பெறுகின்றது. இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன் (252) சொல்லேருழவர் என்னும் சொல்லாட்சி குறளில் பயின்றுவந்துள்ளது. வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை (குறள் ,872)

தொகைச்சொற்கள

படம்
ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... அகத்திணை ----- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,பெருந்திணை அவஸத்தை ----- கர்ப்பாவஸத்தை,ஜன்மாவஸத்தை,பாலியாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை,ஜராவஸத்தை,மரணவஸ்த்தை,நரகாவஸ்த்தை இசை ---- குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் இடையெழுவள்ளல்கள் ----- அக்குரன்,சந்திமாண்,அந்திமான்,சிசுபாலன்,தந்தவக்கிரன் கன்னன்,சந்தன் உலகம் ----- பூலோகம்,புவலோகம்,சுவலோகம்,மகாலோகம்,சனலோகம், தவலோகம்,சத்தியலோகம் உலோகம் ----- செம்பொன்,வெண்பொன்,இரும்பு,ஈயம்,வெங்கலம்,தரா எழுமதநீர் ----- கன்னமிரண்டு,கண்ணிரண்டு,கரத்துவாரமிரண்டு,கோசகம் ஒன்று என்னும் ஏழிடங்களிலிருந்து யானைக்கு மதனநீர் தோன்றும் எழுவகை அளவை ----- நிறுத்தல்,பெய்தல்,சார்த்தியளத்தல்,நீட்டியளத்தல்,தெறித்தளத்தல்,தேங்கமுந்தளத்தல், எண்ணியளத்தல் கடல் ----- உவர் நீர்,நன்னீர்,பால்,தயிர்,நெய்,கருப்பஞ்சாறு,தேன் கடையெழு வள்ளல்கள் ----- எழினி,ஓரி,காரி,நள்ளி,பாரி,பேகன்,மலையன் கீழேழுலகம் ----- அதலம்,விதலம்,சுதலம்,ரசாதலம்,மகாதலம்,பாதலம் கொங்குநாட்டுச் சிவாலயங்கள் ----- திருவெஞ்சமாக் கூடல்,திருக்கரூவூர்த் திருவானிலை,திருப்ப...

அம்பல் அலர்

படம்
அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள். அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது. அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்திய...

தொகைச்சொற்கள்

படம்
ஆறு எண்ணிக்கையில் அமைந்து தொகைச்சொற்கள்..... அங்கம் ------ படை,குடி,கூழ்,அமைச்சு,நட்பு,அரண் அந்தணர் தொழில் ------ ஓதல்,ஓதுவித்தல்,வேட்டல்,வேட்பித்தல்,ஈதல்,ஏற்றல் அரசர் தொழில் ------ ஓதல் ,வேட்டல்,ஊதல்,ஓம்பல்,படையைப் பயிற்றல்,போர்செய்தாடல் அரசியல் ------ அறநிலையறத்,மறநிலையறம்,அறநிலைப்பொருள்,மறநிலைப்பொருள்,அறநிலை இன்பம்,மறநிலை இன்பம் ஆதாரம் ----- மூலம்,சுவாதிட்டானம்,மணிபூரகம்,அனாதகம்,விசுத்தி,ஆஞ்சை ஈச்சுரன் முக்கிய குணம் ----- சருவஞ்ஞத்துவம்,சருவேச்சுரத்துவம்,சருவநியத்திருத்துவம்,சருவாந்தரியாமித்துவம்,சருவகன்மத்துவம்,சருவசத்தித்துவம் உட்பகை ----- காமம்,குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாற்சரியம் உவர்ப்பு ----- ஆசியம்,இரதி,ஆரதி,சோகம்,பயம்,குற்சிதம் சக்கரவர்த்திகள் ----- அரிச்சந்திரன்,நளன்,முசுகுந்தன்,புருகுச்சன்,புரூரன்,கார்த்தவீரியன் சாத்திரம் ----- வேதாந்தம்,வைசேடியம்,பாட்டம்,பிரபாகரம்,பூர்வமீமாஞ்சை,உத்தரமீமாஞ்சை சிறுபொழுது ----- மாலை,யாமம்,வைகறை,விடியல்,நண்பகல்,எற்பாடு சுவை ----- கைப்பு,தித்திப்பு,புளிப்பு,உவர்ப்பு,துவர்ப்பு,கார்ப்பு தானை ---- தேர்,பரி,கரி,ஆள்,வில்,வேல் நாட்டமைதி ----- செல்வம...

தொகைச்சொற்கள்.

படம்
ஐந்து எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........ அக்கினி ----- இராகம்,கோபம்,காமம்,சடம்,தீபம், அகிற்கூட்டு ----- சந்தனம்,கருப்பூரம்,எரிகாசு,தேன்,ஏலம் அங்கம் ----- திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம் அரசர்க்குழு ----- மந்திரியர்,புரோகிதர்,சேனாதிபதியார்,தூதர்,சாரணர் அரசர்க்குறுதிச்சுற்றம் ----- நட்பாளர்,அந்தணர்,மடைத்தொழில்,மருந்துவக் கலைஞர்,நிமித்திகர் அவத்தை ------ சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாதீதம் அன்னுவயவிலக்கணம் ---- விசேடம்,விசேடியம்,கருத்தா,கருமம்,கிரியை இலக்கணம் ----- எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி இலிங்கம் ----- பிருதிவிலிங்கம்-காஞ்சி,அப்புலிங்கம் - திருவானைக்கா, தேயுலிங்கம் -திருவண்ணாமலை,வாயுலிங்கம் - சீகாளத்தி,ஆகாயலிங்கம் - சிதம்பரம் ஈசுரன்முகம் ----- ஈயானம்,தற்புருடம்,அகோரம்,வாமம்,சத்தியோசாதம் உரைஇலக்கணம் ----- பதம்,பதப்பொருள்,வாக்கியம்,வினா,விடை உலோகம் ----- பொன்,வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் எழுத்தானம் ----- பாலன்,குமரன்,அரசன்,விருத்தன்,மரணம் ஐங்காயம் ----- கடுகு,ஓமம்,வெந்தயம்,உள்ளி,பெருங்காயம் ஐங்காரம் ----- சீனக்காரம்,வெங்காரம்,பொரிகாரம்,சௌக்காரம்,நவச்சாரம் ஐம்பு...

தொகைச்சொற்கள்

படம்
நான்கு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........ அச்சம் ---- அணங்கு,விலங்கு,கள்வர்,தம்மரசன் அரண --- மலை,காடு,மதில்,கடல் அளவு---எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் அழுகை ---- இளிவு,அழவு,அசைவு,வறுமை அனுபந்தம் ---- விடயம்,சம்பந்தம்,பிர்ரயோசனம் ஆச்சிரமம் ----- பிரமநரியம்,இல்வாழ்க்கை,வானப்பிரத்தம்,சந்தியாசம் ஆடூஉக்குணம் ------ அறிவை,நிறை,ஓர்ப்பு,கடைப்பிடி இழிச்சொல் ---- குறளை,பொய்,கடுஞ்சொல்,பயினில் சொல் இளிவரல் ----- மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை, உண்டி ------ உண்டல்,தின்னல்,நக்கல்,பருகல் உபாயம் ----- சாமம்,தானம்,பேதம்,தண்டம் உவகை ----- செல்வம்,புலன்,புணர்வு,விளையாட்டு உரை ----- கர்த்துரை,பதவுரை,பொழிப்புரை,அகலவுரை ஊறுபாடு ------ எறிதல்,குத்தல்,வெட்டல்,எய்தல் கதி ----- தேவர்,மக்கள்,விலங்கு,நாகர் கணக்கு ---- தொகை,பிரிவி,பெருக்கு,கழிவு கம்பம் ----தாலம்பம் ,வெள்ளை,சாலாங்கம்,கற்பரி கரணம் -----மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம் கல்வி ---- கேள்ளவி,தானுணர்தல்,பயிற்சி,ஓதுவித்தல் கவிகள் ----- ஆசு,மதுரம்,சித்திரம்,வித்தாரம் காதிகள் ----- ஞானாவரணீயம்,தரிசனாவரணீயம்,மோகநீயம்,அந்தராயம் சதுரங்கம் ----- தேர்,கரி,பரி...

தொகைச்சொற்கள்

படம்
மூன்று எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்......... அரசர் ----- சேர ,சோழ , பாண்டியர் இசை -----மந்தரம் ,மத்திமம்,தாரம் இடம் ---- தன்மை ,முன்னிலை , படர்கை இலக்கணை -----இட்டவிலக்கணை ,விடாத இலக்கணை , விட்டும்விடாத இலக்கணை இனம் ----- வல்லினம் , மெல்லினம் ,இடையினம் ஈச்சுரன்பிரபுத்துவ சாமர்த்தியகுணம் --- கர்த்தத்துவம்,அகர்த்தத்துவம்,அன்னிய தாகர்த்தத்துவம் உயிரில் உள்ள தீ --உதரத்தீ ,விந்துத்தீ,சினத்தீ உலகம் ---பூலோகம் ,பரலோகம்,பாதாளம் கடுகம் ----சுக்கு,மிளகு,திப்பிலி காலம் ---இறப்பு ,நிகழ்வு ,எதிர்வு குணம் ----சாத்விகம்,இராசதம்,தாமதம் குற்றம் ----- காமம் ,வெகுளி,மயக்கம் சத்தி ----- இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞானசக்தி சாத்திரம் ---- சாங்கியம்,பாதஞ்சலியம்,வேதாந்தம் சீவதேகம் ---- தூலம்,சூக்குமம்,காரணம் சுடர் ----- சூரியன்,சந்திரன்,அக்கினி தமிழ் ----இயல் ,இசை,நாடகம் தானம் ----- தலைப்படுதானம்,இடைப்படுதானம்,கடைப்படுதானம் தீ ----- ஆகவனீயம்,தக்கிணாக்கினீயம்,காருகபத்தியம் தொழில் ----- ஆக்கல் ,அழித்தல்,காத்தல் நூல் ---- முதல் ,வழி ,சார்பு பலை ----- கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய் பாவபுண்ணிய வழக்கம்--- செ...

தொகைச்சொற்கள்

படம்
இரண்டு எண்ணிக்கையில் இருக்க கூடியது சொற்கள் இப் பகுதியில் தொகைகளாக வரக்கூடிய சொற்களைத் தொகுத்துக் கொடுக்கின்றேன்.இத்தொகுப்பு அபிதான சிந்தாமணியில் கண்டது. அயனம் -----உத்தராயனம் , தஷிணாயனம் அவத்தை ----கேவலாவத்தை , சகளாவத்தை அறம் ------ இல்லறம், துறவறம் அயுதவகை -----அத்திரம் , சத்திரம் ஆன்மா ------சீவான்மா,பரமான்மா இடம் ------ செய்யிளிடம்,வழக்கிடம் இதிகாசம் ---- பாரதம்,இராமாயணம் இருமுதுகுரவர் -----தாய் , தந்தை இருமை ------- இம்மை , மறுமை ஈழநாட்டுச் சிவாலயம் ------திருக்கோணமலை,திருக்கேதீச்சரம் உலகம் ------ இகலோகம் ,பரலோகம் எச்சம் ------பெயரெச்சம் , வினையெச்சம் எழுத்து -----உயிரெழுத்து,மெய்யெழுத்து கலை ----- சூரியகலை,சந்திர கலை கந்தம் -----நற்கந்தம்,துர்கந்தம் கற்பம் ----- பதுமகற்பம் , சுவேதவாரக கற்பம் கிரகணம் ----- சூரியகிரகணம் , சந்திர கிரகணம் கூத்து ------- தேசி , மார்க்கம் சம்பாஷணை ----- வினா , விடை சவுக்கியம் ------ இகலோக சவுக்கியம் ,பரலோக சவுக்கியம் சாமானியம் ------ பரம் ,அபரம் சுடர் ------- சூரியன் , சந்திரன் ஞானம் ------ பரோக்ஷம் , அபரோக்ஷம் திணை ------ உயர்திணை , அஃறிணை தோற்றம் ---...

புதிய புத்தகம் பேசுகிறது

படம்
புத்தக அறிமுகத்திற்கென ஒரு மாத இதழை நடத்தி,வாசகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுத் திகழும் பதிப்பகம் பாரதிபுத்தகாலயம் ஆகும்.இந் நிறுவன்ம ஆண்டு தோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகின்றது.கொண்டாதுவது மட்டுமில்லாமல்,ஆய்வாளர்களிடையே கட்டுரையினைப் பெற்று,அதனை நூலாக வெளியிடுவது பெரும் சிறப்பு. கடந்த ஆண்டு தமிழில் உள்ள சிறந்த,முதன்மையான நூல்கள் குறித்தும் ,சில நூல்கள் சமூகத்தளத்தில் மக்களால் எவ்வாறு வாசிப்புக்கு உள்ளக்கப்பெற்றுள்ளது என்பது குறித்தும் கட்டரைகளைத் தொகுத்து சிறப்பு மலராக வெளியிட்டது.அம் மலர் இலக்கியம் சார்ந்த இலக்கியவாதிகளால் பெரும் ஆதரவு பெற்றும்,சமகால சிறந்த வரலாற்று ஆவணமாகவும் திகழ்ந்தது. இந்த ஆண்டும் உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு,சுவடியிலும் ,செப்பேட்டிலும் ,கல்வெட்டிலும் இருந்த தமிழை அச்சேற்றிய பிறகு எத்தனையோ,நுல்கள் அச்சேறியுள்ளன.தமிழ் நூல்களை ,பல்வேறு நிறுவனங்களும்,தனி மனிதர்களும் அச்சேற்றி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.அதனை வெளிகொணரும் நோக்கில் பாரதி புத்தகாலயம் ஆய்வாளர்களிடையே கட்டுரைகளைப் பெற்று நூலாக்கியுள்ளனர். இம்மலருள் தனிமனித பதிப்புகள் ...

புலவர் பெருமிதம்

படம்
சங்க பாக்களில் புறநாறூற்றுப் பாக்களைப் படிக்கும் பொழுது,சங்க புவலர்கள் தங்களது வாழ்க்கையை எவ்வளவு பெருமித்துடன் வாழ்ந்துள்ளனர் எனபதை அறியலாம்.பரிசு கொடுப்பவர் மன்னராக இருந்தாலும் அவர்கள் உள்ளன்பு இல்லாமல் கொடுக்கும் பரிசினைப் பெறாது அதனை மறுக்கும் துணிவு அப்பொழுது இருந்துள்ளது.புறநானுற்று 159 பாடலில் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணனை அணுகி ,வறுமைத் துயரால் தன்னைப்பெற்ற வயது முதிர்ந்த தாயும்,அன்பான மனைவியும்,மக்கள் செல்வங்களும் உடல் தளர்ந்து,மேனி வாடி கிடப்பதைக் கூறி,பொருள் பெற வந்திருப்பதாகக் கூறுகின்றார்.அவ்வாறு நீ தரும் பரிசு மனமகிழ்வோடு வழங்கியதாக இருக்க வேண்டும். நீ உள்ளன்பு இல்லாமல் களிறு முதலிய பெருஞ் செல்வம் வழங்குவதைக் கட்டிலும்,மனம் விரும்பி சிறிய குன்றிமணி அளவில் பொருள் வழங்கினால் அதனை மனமகிழ்வோடு எடுத்துச்செல்வேன் என்று கூறுகின்றார். உயர்ந்துஏந்து மருப்பிற் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசிலின் கொள்ளலென்;உவந்துநீ இன்புற விடுதி யாயின்,சிறிது குன்றியும் கொள்வல்;கூர்வேல் குமண! ஒருமுறை பெருஞ்சித்திரனார் வெளிமான் என்னும் கொடைவள்ளலை அணுகி தன் வறுமையை நிலையைக் கூறி ,பொரு...

மழலை இன்பம்

படம்
குழந்தையை விரும்பாத உயிர்களே இல்லை.குழந்தைகளோடு இருக்கையில் நாமும் ஒரு குழந்தையாக மாறிவிடுவோம்.குழந்தை செல்வத்தின் அருமையை உணர்ந்து வள்ளுவப் பெருந்தகை பெருமவற்று யாம் அறிவது இல்லை அதாவது பெறத் தகுந்த செல்வங்களில் மக்கள் செல்வத்தை விட வேறு செல்வத்தை யாம் மதிப்பதில்லை என்று கூறுகின்றார். புறநானூற்றுப் பாடல் ஒன்று ,எத்துணைப் பெரிய செல்வந்தராக இருந்தாலும்,ஏன் நாட்டுக்கே மன்னனா இருந்தாலும் குழந்தை இன்பம் கிடைக்க வில்லை என்றால் அவர்கள் வாழ்ந்தும் பயனில்லை என்று கூறுகின்றது.குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளுமே நமக்கு எல்லையில்லா ஆனந்ததைக் கொடுக்க கூடியது. படைப்பு பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம் வாழும் நாளே. முதுமொழி காஞ்சி என்ற நூலும் மக்கள் பேறே தலையா செல்வம் எனப் பாடுகின்றது. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் மக்கட் பேற்றிற் பெறும் பேறில்லை குழந்தை இன்பமே நமது துயரங்களை எல்லாம் போக்க கூடியது என்பதைக் கம்பர் ,...

அந்திமாலை

படம்
அழகினைப் பற்றி கூறும் பாவேந்தர் மேற்றிசையில் இலங்குகின்ற மாணிக்கச் சுடரில் அழகு வீற்றிருக்கும் என்பார்.அந்தி மாலை என்பது இறைவன் படைப்பில் இன்பத்தின் தொடக்கம் என்று கூறலாம்.மாலை நேரத்திற்கு மயங்காத உயிர்களே இல்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தினைக் காட்டி மயக்கும் மாலை நேரத்திற்கு மயங்காதார் யார்.அந்தி மாலையைப் பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள், யாரங்கே ? ராத்திரி வரப்போகும் ராச குமாரிக்கு மேற்கு அம்மியில் மஞ்சள் அரைப்பது யார் ? இத்தனை வண்ணக்கோலம் ஏனங்கே? ஓ அது இரவின் வாசல் என்றா இத்தனை அலங்காரம்? என்ன அது ? தீயில் அங்கே தேன் வடிகிறதா? அங்கே வழிந்தோடுவதெல்லாம் வனத்துக்கு ஒரு பகைலைப் பலிகொடுத்த ரத்தமா? இத்தனை வண்ணப் புடவைகள் கலைத்துப் போட்டும்....... கடைசியில் இரவு கறுப்பைத்தானே கட்டிக்கொள்ளுகிறது? என்று மாலை நேரத்தின் கோலத்தினை கவிதைப் பொருளாக்கி பாடுகின்றார்.இந்த மாலை நேரத்தினைப் பற்றி இளங்கோவடிகளும் பாடுகின்றார்.கண்ணகியை விட்டு பிரிந்து கோவலன் மாதவியிடம் சென்றுவிடுகின்றான். பிரிந்த பிறகு, அந்தி மாலை கோவலனைப் பிரிந்த கண்ணகிக்கு எத்தகைய துன்பம் தரக்கூடியதாக இருந்தது என்பதையும்,அதேவேளையில் க...

உள்ளத்திலிருந்து...............

படம்
என் மீது விழும் கடைசித் துளி உன் துளியாக இருக்கட்டும் என் தேடலின் ஆரம்பம் பூக்கிறது முடிவு உன்னுள் இனிக்கின்றது. புரியாதவர் கூறுவர் அடிமை என்று புரிந்தவர் போற்றுவர் உயிரடிமை என்று....... ஆழ்வார் நாயன்மார் நாயக நாயகியாக எவ்வாறு குழம்பினேன் பின் உன்னை பார்த்தும் தெளிந்தேன்........ நிலா தண்ணிழல் தரும் நீ........ என் நிழலையும் அல்லவா சேர்த்து மகிழ்கிறாய்......... ஆணில் பாதி பெண்ணென்று உணர்ந்தவன் நீயல்லவா..... அர்த்தநாரீஸ்வரன்...... நான் அடிமைப் படுத்தினேனாம் அது - உண்மை எப்படி சாத்தியமானது குழம்பினார்கள்.......... அன்பினால் என்றவுடன் அதிசயித்தார்கள்......... நீ கேட்டதை நானும் நான் கேட்டதை நீயும் கொடுத்தோம்....... வசமானது வாழ்க்கை......... யார் சொன்னது மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமென்று...... கணவன் அமைவது அல்லவா கடவுள் கொடுத்த வரம்........ கணவன் எனக் கைபிடித்தேன் தோழனெனத் தோள் கொடுத்தாய்.........

நன்றி நவிலும் நேரம்..............

படம்
இணையத்தின் மூலம் இணைந்து இணையில்லா நட்பினை அள்ளி அள்ளி வழங்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் பல பல. இணைத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த தோழராய் ,என்னை என்று ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கும் நண்பர் முனைவர் குணசீலன் அவர்கள் முதலில் எனக்குப் பட்டாம் பூச்சி விருதுவழங்கி சிறப்பித்தார்கள்.அவருடைய அன்பு அளவிடற்கரிது அவருக்கு என் நன்றியும் பாராட்டுகளும்......... அடுத்து அன்பு தம்பி சந்ரு பற்றிக் கூறவேண்டும் ஒவ்வொரு இடுகையினையும் படித்துவிட்டு உடனே தனது கருத்துரையை இடுவார். அவரும் நட்பு என்னும் நேசக்கரத்தை நீட்டி என்னை நெகிழச் செய்துவிட்டார் அவருக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்......... அன்பின் தோழர் சிங்கை ஞானசேகரன் அவர்கள் ,என்னுடைய பதிவுகளையெல்லாம் படித்து உடனுக்குடன் கருத்துரை இடக்கூடிய நன்நெஞ்சர் .என்னை வலைச்சரத்திலும் அறிமுகப்படுத்திய பண்பர். அவரும் எனக்கு நட்பு கரம் நீட்டி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார் அவருக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும்......... வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய அன்பு தோழி தமிழரசி அவர்களுக்கும் என்னுடை ய இதயம் கனிந்த ந...
சிலப்பதிகாரத்தில் மாசறு பொன்னே எனக் கோவலன் கண்ணகியை நோக்கி கூறும் காதல் மொழிமட்டுமே அனைவரும் அறிந்ததே.அதில் உள்ள எட்டு அடிகள் மட்டுமே தெரியும் .கோவலனும் கண்ணகியும் மயங்கியிருக்கும் நிலையை இளங்கோவடிகள் தாரும் மாலையும் மயங்கி கையற்று எனக் குறிப்பிடுவார்.அதே போல அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் காட்சி கதிர்கள் இரண்டும் ஒருங்கே இருந்தது போல் எனக் கூறி,கோவலன் தீராத காதலினால் கண்ணகியினுடைய அழகு முகத்தினை நோக்கி அவளின் அழகை வர்ணிக்கின்றான். திங்களை இறைவன் அணிந்தால் அதற்குச் சிறப்பு உண்டு என்றாலும் ,அது உன்னுடைய ஒளி பொருந்திய நெற்றியாக விளங்குவதல் அல்லவா சிறப்பு. பகைவர்களிடையே போர்செய்ய செல்லும் போது படை வழங்குவது அரசருக்குரிய கடமை,அதுபோல மன்மதன் உனக்கு அவனுடை கரும்பு வில்லை இரண்டு வில் போன்ற புருவமாக அல்லவா கொடுத்துவிட்டான். அமிழ்தத்திற்கு முன் பிறந்தாதல் ,தேவருக்கு அரசனாகிய இந்திரன் அசுரர்களை அழிக்க வைத்திருந்த வச்சிரப்படையை உணக்கு இடையாக கொடுத்தானோ?(வச்சிராயுதம் என்பது இரண்டு பக்கமும் சூலமாகவும் நடுவில் பிடிபோன்றும் இருக்கும்) முருகப் பெருமான் பகைவர்களை அழிக்கும் வேலினை உனக்கு இரண்டு கண்க...

தளமுகவரி பெறுவது குறித்து..

வலைப்பதிவில் நமக்கெனத் தனி தளமுகவரியினைப் பெறுவது எப்படி என்று அறிய இத் தளத்தினை அணுகவும் தமிழ் இணையப் பயிலரங்கக் குழு