சிலப்பதிகாரத்தில் மாசறு பொன்னே எனக் கோவலன் கண்ணகியை நோக்கி கூறும் காதல் மொழிமட்டுமே அனைவரும் அறிந்ததே.அதில் உள்ள எட்டு அடிகள் மட்டுமே தெரியும் .கோவலனும் கண்ணகியும் மயங்கியிருக்கும் நிலையை இளங்கோவடிகள் தாரும் மாலையும் மயங்கி கையற்று எனக் குறிப்பிடுவார்.அதே போல அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் காட்சி கதிர்கள் இரண்டும் ஒருங்கே இருந்தது போல் எனக் கூறி,கோவலன் தீராத காதலினால் கண்ணகியினுடைய அழகு முகத்தினை நோக்கி அவளின் அழகை வர்ணிக்கின்றான்.

திங்களை இறைவன் அணிந்தால் அதற்குச் சிறப்பு உண்டு என்றாலும் ,அது உன்னுடைய ஒளி பொருந்திய நெற்றியாக விளங்குவதல் அல்லவா சிறப்பு.

பகைவர்களிடையே போர்செய்ய செல்லும் போது படை வழங்குவது அரசருக்குரிய கடமை,அதுபோல மன்மதன் உனக்கு அவனுடை கரும்பு வில்லை இரண்டு வில் போன்ற புருவமாக அல்லவா கொடுத்துவிட்டான்.

அமிழ்தத்திற்கு முன் பிறந்தாதல் ,தேவருக்கு அரசனாகிய இந்திரன் அசுரர்களை அழிக்க வைத்திருந்த வச்சிரப்படையை உணக்கு இடையாக கொடுத்தானோ?(வச்சிராயுதம் என்பது இரண்டு பக்கமும் சூலமாகவும் நடுவில் பிடிபோன்றும் இருக்கும்)

முருகப் பெருமான் பகைவர்களை அழிக்கும் வேலினை உனக்கு இரண்டு கண்களாக கொடுத்துவிட்டாரோ?

ஐயோ! உன் அழகை மயில்கள்கண்டு ஓடி ஒளிகின்றன,அன்னமோ உன் மெல்லிய நடையினைக் கண்டு தம் நடையைவிட,உன் நடை மென்னநடையாகவுள்ளதே என வெட்கி மலர்களுக்கிடயே சென்று மறைகின்றதே.

குழலும் யாழும் தோற்றுப் போகும் உன் அழகிய இனிய குரலைக் கேட்டு கிளிகள் பாவம் வருந்தி உன் போன்று பேச வேண்டுமென் உன்னை விட்டு நீங்காமல் அருகில் இருக்கின்றதோ!
இயற்கையே தெய்வீக அழகாக உன்னிடம் குடிக்கொண்டுருக்கும் போது உனக்கு ஏன் செயற்கை புனைவெல்லாம் ,என்று கூறி பிறகு மாசறு பொன்னே என்று பாடுகிறான்.

தாரும் மாலையும் மயங்கி கையற்றுக்
தீராக் காதலில் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்தாயினும்
உரிதின் நின்னொடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆககென

அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங்கு வதோர் பண்புண் டாகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவற்
படைநினக் களிக்க அதனிடைநினக்கு இடையென
ஆறுமுக ஒருவனோர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினில் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டாக ஈத்தது

மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற் கிடைந்து தண்கான் அடையவும்
அன்ன நன்னுதல் மென்னடைக் கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்
அளிய தாமே சிறுபசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடந்தை மாதுநின் மலர்க்கையின் நீங்காது

உடனுறைவு மரீஇ ஒருவா வாயின
தறுமல்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்
பல்லிருங் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல்லவிழ் மாலையொடு என்னுற் றனர்கொல்
நானம் நல்லகில் நறும்புகை அன்றியும்
மன்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்

திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்
திங்கண்முத்து அரும்பவும் சிறுஇடை வருந்தவும்
இங்கிவை அண்ந்தனர் என்னுற்றனர் கொல்

மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே
பெருங்குடி வணிகன் பெருமட மகளே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னையென்று
உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயஙிகணர் கோதை தன்னொடு தருக்கி

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பாடலும், விளக்கமும் நன்றாக உள்ளது
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன் அவர்களே..........
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு இடுகை பகிர்வுக்கு நன்றிகள்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி சந்ரு........
சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு.. நேற்று என் அம்மா மாசறு பொன்னே வலம்புரி முத்தே... என்ற பாட்டை அருமையாகப் பாடினார்.. உடனே என்ன பாடலிது எனக்கேட்க அவரால் ஞாபகப்படுத்த முடியவில்லை.. என்றாலும் அந்தப்பாடல் ஆழமாக என்மனதில் பதிந்து விட்டது. இன்று காலை உடனடியாக Google இல் தேடியபோது உங்களது இந்த அருமையான விளக்கத்தைப் பெறமுடிந்தது.. மிக்க நன்றி...


மற்றும் பட்டாம்பூச்சி விருதுக்கும் வாழ்த்துக்கள்..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுபானு அவர்களே........
சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
காசறு என்றால் என்ன கருத்து..?
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//காசறு என்றால் என்ன கருத்து..?//



காசு அறு எனப் பிரிக்க வேண்டும் காசு என்றால் குற்றம் என்று பொருள்.அறு என்றால் அற்ற என்று பொருள்.அதாவது குற்றமற்ற என்பது பொருள்
சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுபானு......
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வலம்புரிச் சங்கைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதென்ன வலம்புரி முத்து? விளக்க முடியுமா?
அதே போல், விரை என்பது எதைக் குறிப்பிடுகிறது?
அன்புடன்
கி விசுவநாதன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்