திருநாவுகரசு சுவாமிகள் வரலாறு
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் கொள்கையில் உறுதியாக நின்று உழவாரப்பணி மேற்கொண்டு, சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய போது தன்னை துன்புறுத்திய மகேந்திர பல்லவ மன்னனைச் சைவ சமயத்தின் பால் ஈடுபடவைத்து,பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர்பெற்று எழச்செய்து,திருமறைக்காட்டில் பாடியே கோயில் வாசலை திறக்கச்செய்து,எனப் பல செயற்கரிய செயல்களைச் செய்து 80 வயது வரை திணைத்துனையும் இறைபற்று நீங்காமல், ‘சிவனென்னும் ஓசை யல்ல தறையோ வுலகில் திருநின்ற செம்மை யுளதே’ என இறைதொண்டு ஆற்றி, இறையடி அடைந்தவர் மருள் நீக்கியார் என இயற்பெயர் கொண்டு ,இறைவனால் நாவுக்கரசர் எனவும் திருஞானசம்பந்தர் பெருமானால் அப்பர் எனவும்,தமது வாக்குத் திறத்தால் வாகீசர் எனவும்,தாண்டகம் என்னும் பாவகையைச் சிறப்பாக பாடியதால் தாண்டக வேந்தர் எனவும் அழைக்கப்பெற்ற திருநாவுகரசர் ஆவார். திருமனைப் பாடி என்னும் நாட்டில் உள்ள திருவாமூர் என்னும் ஊரில் வேளாண் மரபு குடி வழிவந்த புகழனார் ,மாதினியார் என்னும் இணையருக்கு மூத்த பெண்ணாக திலகவதியார் என்னும் புகழ்ச் செல்வியார் தோன்றினார். அவர் பிறந்து சில ஆண்டுகள் கழிந்து ஒளி விளங்கு கதிர் போல...