எனது பால்யகால ஆசிரியர்கள் இன்றும் நினைவுகளில்….
பால்ய காலத்து (1 – 5 ஆம் வகுப்பு) ஆசிரியர்களில் நினைவில் நிற்பவர் மறைமலை என்ற ஆசிரியர். வெறுப்பின் பொருட்டே அவர் என் நினவுகளில் தங்கியுள்ளார். சமத்துவம் என்ற குணம் துளியும் அவரிடம் நான் அந்த வயதில் பார்க்கவில்லை என்பதே (நிறபேதம் பார்த்தவர் பேசியவர்). ஒக்கநாடு கீழையூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். ஆறாம் வகுப்பு ஒக்கநாடு கீழையூர் ஊரின் புறத்தே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு வகுப்பெடுத்த வி. என். என்று அன்புடன் அழைக்கப்படும் வி. நடராசன் சார். அவர் மீது பயம் கலந்த மரியாதை எப்பொழுதும் உண்டு. மிக கண்டிப்பானவர். பாடம் நடத்துவதில் வல்லவர். மாணவர்கள் தவறு செய்யும் பொழுது கிண்டலும் கேலியுமாக அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார். அவர் கரும் பலகையில் எழுதிக்கொண்டிருப்பார். ஆனால் பின்னால் பேசும் மாணவர்களைச் சரியாக் கணித்து அவர்களின் மீது சாக்பீஸைத் தூக்கி எறிவார். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் சாருக்கு முதுகில் ஒரு கண்ணுயிருக்குமோ ஒருவேளை தட்டானைப் போல் எல்லாப் பக்கமும் அவர் கண்களால் நமக்குப் புலனாகாமல் பார்க்க முடிகிறதோ என்று எங்களுக்குள் பேசிக்கொள...