எனது பால்யகால ஆசிரியர்கள் இன்றும் நினைவுகளில்….

 


பால்ய காலத்து (1 – 5 ஆம் வகுப்பு) ஆசிரியர்களில் நினைவில் நிற்பவர் மறைமலை என்ற ஆசிரியர். வெறுப்பின் பொருட்டே அவர் என் நினவுகளில் தங்கியுள்ளார். சமத்துவம் என்ற குணம்  துளியும் அவரிடம் நான் அந்த வயதில் பார்க்கவில்லை என்பதே (நிறபேதம் பார்த்தவர் பேசியவர்).  ஒக்கநாடு கீழையூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். ஆறாம் வகுப்பு ஒக்கநாடு கீழையூர் ஊரின் புறத்தே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கு வகுப்பெடுத்த வி. என். என்று அன்புடன் அழைக்கப்படும் வி. நடராசன் சார். அவர் மீது பயம் கலந்த மரியாதை எப்பொழுதும் உண்டு. மிக கண்டிப்பானவர். பாடம் நடத்துவதில் வல்லவர். மாணவர்கள் தவறு செய்யும் பொழுது கிண்டலும் கேலியுமாக அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார். அவர் கரும் பலகையில் எழுதிக்கொண்டிருப்பார். ஆனால் பின்னால் பேசும் மாணவர்களைச் சரியாக் கணித்து அவர்களின் மீது சாக்பீஸைத் தூக்கி எறிவார். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் சாருக்கு முதுகில் ஒரு கண்ணுயிருக்குமோ ஒருவேளை தட்டானைப் போல் எல்லாப் பக்கமும் அவர் கண்களால் நமக்குப் புலனாகாமல் பார்க்க முடிகிறதோ என்று எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அதே நேரம் மாணவர்களின் நலன் மீது உண்மையான அக்கறைக் கொண்டவர். வரலாறு எடுத்த கருணாநிதி சார். எளிமையான தோற்றம். மென்மையான போக்கு. வரலாற்றை மிக சுவராசியமாகச் சொல்லிக்கொடுத்தவர். நாங்கள் அணுகி பேசக்கூடிய ஒருவராகயிருந்தார். இன்று வரை நலம் விசாரித்து அக்கறையுடன் இருக்க கூடியவர். இன்று அவருடன் திறன்பேசியில் வாழ்த்துகள் கூறி வாழ்த்துகள் பெற்றது மகிழ்வான தருணம். கிட்டத்தட்ட 80 வயதை நெருங்கி வருபவர். அவருடைய மகன் வழி பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து தாத்தா பாட்டியுடன் விடுமுறையைக் கழிக்க வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து இராமநாதபுரம் உச்சப்புளி அருகே உள்ள அலை ஓசையே இல்லாத மணற் பாங்கான சவுக்குத் தோப்புகள் நிறைந்த கடற்கரையில் பேரப்பிள்ளைகளுடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நேரம் போனது தெரியாமல்  மகிழ்ச்சியில் திளைத்து சிறு வயதில் மணிக்கனக்கான நீந்துவதைப் போல தன் வயதை மறந்து குளித்தையும் அதனால்  கரையேறிய சில நிமிடங்களில் மயக்கம் வந்து அடைந்த துயரத்தையும் நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார். என் ஆசிரியரின் ஆசிரியரான ஐயா கலியபெருமாள் அவர்களுடனும் உரையாடினேன். 90 வயது கடந்தும்  தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் போன்ற பாடல்களை நினைவு கூர்ந்து பேசியனார்கள் அவர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது.

ஏழாம் வகுப்பிலிருந்து மன்னார்குடி  புனித வளனார்  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன்.  அங்கு என்னைக் கவர்ந்த ஆசிரியர்கள் தமிழம்மா (அவர்கள் பெயர் நினைவில்லை ஏழிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடம் எடுத்துள்ளார்கள்) தமிழ் இயல்பாகவே விரும்பி படிக்கும் பாடம் கூடுதலாக அவர்களின் அன்பும் சேர்ந்து தமிழ்ப்பாடத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. நிறைய மனப்பாடம் செய்யச் சொல்வார். கூடவே நீதிக் கதைகள் பலவற்றைக் கூறுவார். பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பில் கணித பாடம் எடுத்த ஆசிரியர் பத்மாசனி. அன்பானவர். கணித்தை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் படி நடத்தக்கூடியவர் எனக்கு கணிதம் மிகப்பிடித்த பாடமும் கூட பத்மாசனி மேம் நடத்தும் விதத்தினால் கூடுதலான விருப்பமுடைய பாடமாக கணிதம் மாறியதில் வியப்பில்லை.  கரும்பலகையில் கணக்குகளை எங்களைப் போடச் சொல்லுவார். நான் ஆர்வமுடன் கரும்பலகையில் கணிதம் போடுவேன். தறவறுகள் நிகழும் பொழுது பொறுமையாக சொல்லிக்கொடுப்பார். அதே நேரத்தில் வீட்டுப்பாடம் கொடுத்துப் போட்டு வரவில்லை என்றால் வகுப்பறைக்கு வெளியில் அனுப்பி முட்டிப்போட வைப்பார். சிறிது நேரம் தான் அதுவும் அவருக்கும் மனது கேட்காது உடனே நாளை செய்துகொண்டு வரவேண்டும் என வகுப்பறை உள்ளே அழைத்துவிடுவார். அது என்னவென்று தெரியவில்லை அவருடன் எனக்கு அப்படியொரு அன்பான பிணைப்பு உருவானது. பத்மாசனி மேம் சிவந்த நிறம். சராசரியான உயரம். ஒழுங்கான அழகான புடவைக்கட்டுதல் அப்படியெல்லாம் இல்லாமல் அள்ளி செருகியது போன்று முன் கொசுவம் வைத்த சேலை கட்டல். கொஞ்சம் சுருண்ட கேசம். தலைப்பின்னி எப்பொழுதாவது சிறிது பூ. மையிடாத கண்கள்.  புன்னகைக்கும்  இதழ் அதே நேரத்தில் சிடுசிடுப்பு குறையாத முகம். வேகமான நடை. என்னவோ தெரியாது அவரை எனக்கு நிரம்ப பிடித்திருந்தது.

ஆங்கில ஆசிரியர் வெரோனிக்கா மேம். என்ன காரணம் என்றே தெரியாது எனக்கும் அவர்களுக்கும் ஆகாது. அதனாலேயே எனக்கு ஆங்கிலப்பாடத்தின் மீதான நாட்டம் குறைந்துவிட்டது. பலருக்கு அவர்களைப் பிடிக்கும் இன்று வரை நினைத்துப் பார்க்கின்றேன் என்ன காரணம் என்பது தெரியவில்லை. அவர்கள் ஆங்கில உச்சரிப்பு அழகாக இருக்கும். அவர்கள் புவடை கட்டும் விதம் ஈர்ப்பாகயிருக்கும். காட்டன் புடவை தான் கட்டுவாங்க. அவரை ரசிப்பேன் அதே நேரத்தில் பிடிக்காது அது என்ன மனோநிலை தெரியவில்லை. இன்று நினைத்தால் சிரிப்பாகவுள்ளது. பூனையில் காலடி ஓசையைப் போல காலம் தெரியாமல் நழுவிக்கொண்டே போகிறது.

 

         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்