பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியத்தில் இராமாயணம் மகாபாரதம் குறிப்புகள்
இந்தியக் கண்டம் என்று அழைக்கப்பெறும் முப்புறம்
ஆழிசூழ் நிலத்து தொன்மை கதைகள் இராமாயணம், மகாபாரதம். இக்கதைகள் இந்திய நிலவெளியில்
வாய்மொழியாகவும் எழுத்து மொழியாகவும் உரைமொழியாகவும்
திரைமொழியாகவும் வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்தும், நவீன புனைவாக்கங்களில் பல்வேறு
தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்து வருகின்றன. தமிழ் மொழியின் தொல் இலக்கியங்களாக
அறியக்கூடிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு பனுவல்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும்
உவமையாகவும், மன்னர்களின் சிறப்பை உயர்வுபடுத்தி சொல்லும் சூழலிலும் புலவர்கள் இரு
இதிகாசங்களிலும் வரக்கூடிய கதை மாந்தர்களையும் கதையின் சில குறிப்பிட்ட தருணங்களையும்
பயன்படுத்தியுள்ளனர்.
Ø
ஊன்பொதி பசுங்குடையார்
Ø
முரஞ்சியூர் முடிநாகராயர்
Ø
தமிழ் கூத்தன் கடுவன்
மள்ளனார்
Ø
பெருங்கடுங்கோ
Ø
சோழன் நல்லுருத்திரன்
Ø
கபிலர்
Ø
நல்லந்துவனார்
Ø
நப்பண்ணனார்
Ø
இடைக்கழி நாட்டு நல்லூர்
நத்தத்தனார்
புறநானூறு 378 ஆம் பாடலில்
இராமன் சீதையை இழந்ததும் இராவணன் அவளைக் கடத்திச் சென்றபோது சீதை கீழே வீசிய நகைகளை
அவற்றின் முறையான இடம் எதுவென்று தெரியாமல் செம்முகக் குரங்குகள் மாற்றி அணிந்த காட்சி
இதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் காட்சி வான்மீகி இராமாயணத்திலோ கம்பராமாயணத்திலோ காணப்படாத
தனிச்சிறப்பான செய்தியாகும்.
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து
ஆங்கு
சோழ வேந்தன் இளஞ்சேட் சென்னி நாட்டை
விவாக்கும் நோக்கில் வஞ்சிப்பூ சூடி செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டான்.
இந்த வஞ்சிப்போரை ஊன்பொதி பசுங்குடையார் பாடுகிறார். அவரின் பாடலில் சிறப்பைக் கருதி
புலவருக்கு பல அரிய அணிகலன்களையும் செல்வத்தையும் வழங்கினான் மன்னன். அதனைப் பார்த்த
புலவரின் சுற்றத்தார் விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில்
அணியவேண்டியதை விரலில் அணிந்துகொண்டனர். இடுப்பில் அணிவதை கழுத்திலும் கழுத்தில் அணிய
வேண்டியதை இடுப்பிலும் மாறி மாறி அணிந்தனர். இதனை கம்பராமாயண கதையில் கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு
வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க
கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுக்கொள்ளத் தக்க வகையில்
ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியும் இடம்
தெரியாமல் அணிந்து அழகு பார்த்துக் கொண்டது போல் இருந்தாகப் புலவர் பாடுகிறர்.
அகநானூறு 70 ஆம் பாடலில்
இராவணனை வென்ற பிறகு வெற்றிப் பெருமித்ததுடன் இராமன் தனுஷ்கோடியில் உள்ள ஆலமரத்தின்
நிழலில் அமர்ந்திருந்தான் அப்போது அங்குள்ள மரங்களில் ஒலித்த பறவைகளின் ஓசையைத் தன்
கையைக் காட்டிய அடக்கிய நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது.
வென்வேல் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெற்றெழு தகைமையின் இராமன் எய்திய
தொலுமுது ஆலத்து அரும்பிய வதரி
நன் இறைக் கிளவி ஒடுங்கிய ஆங்கு
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன்
மள்ளனார் பாடல். தோழி தலைவிக்குக் கூறியது. உன்னை விரைந்து தலைவன் திருமணம் செய்துகொள்ள
உள்ளான். முன்னர் உன்னையும் அவனையும் இணைத்து அலர் பேசிய இவ்வூர் திருமணத்திற்குப்
பிறகு அடங்கிவிடும். என்று கூறுவதற்கு உவமையாக வெற்றி வேல் உடைய பாண்டியர்களின் தொன்மையான
இன்று தனுஷ்கோடி என அழைக்கப்பெறும் கோடியில் முழுங்குகின்ற பெரிய கடல் ஒலிக்கின்ற்
முன் துறையில் வெற்றிப் போரை உடைய இராமன் மந்திராலோசனை செய்வதற்காக, தன் கை அசைவால்
பறவைகளின் ஒலியை அடக்கச் செய்த பெரிய விழுதுகளை உடைய ஆலமரப் போல நம்மைப்பற்றி பேசிவந்த
இந்த ஆலுரினது கூச்சலும் ஒலியும் அடங்கிவிடும்.
பரிபாடல் 19 ஆம் பாடலில் இந்திரன்
பூசை, அகலிகை சாபம் பெற்ற கதை மற்றும் கோதமர் பற்றிய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
இந்திரன், பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும்
புறநானூற்று 2 ஆம் பாடலில் மகாபாரத
போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் நடந்தபோது இரு தரப்புச் சேனைகளுக்கும்
எல்லையற்ற உணவை சேர மன்னன் உதியன் சேரலாதன் வழங்கினான் என்ற குறிப்பு உள்ளது.
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந்தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து
ஒழிய
பெருஞ்சோற்று மிகு பதம் வரையாது
கொடுத்தோய்!
முரஞ்சியூர் முடிநாகராயர் சேரமான்
பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தி அவனுடைய சிறப்புகளைப் பாடும் பொழுது தும்பைப்பூ
சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்களத்தில் இருபாலருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன்
என்று அவன் பொருள் வளத்தைப் பாடுகிறார்.
கலித்தொகையில் பாலைக்கலி 25 ஆம்
பாடலில் துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகைக்குத் தீயிட்டபோது,
பீமன் தன் குடும்பத்தினரைக் காப்பாற்றி வெளியேறிய நிகழ்வு கூறப்பட்டுள்ளது
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்
பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்பினால்
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள்
அகத்த,ஆ
கைபுனை அரக்கு இல்லைக் கதழ்எரி
சூழ்ந்தாங்கு
………………………………………………………………….
ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்
தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான்
போல
குறிஞ்சிக்கலி 52 ஆம் பாடலில் மகாபாரதப்
போரில் துரியோதனனின் தொடையைப் பிளந்து வஞ்சம் தீர்த்த பீமனைப் பற்றியக் குறிப்பு உள்ளது.
முறம்செவி மறைப் பாய்பு முரண் செய்த
புலி செற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறித்திடுவான் போல், கூர்
நுதி மடுத்து அதன்
நிறம்சாடி முரண் தீர்த்த நீள் மருப்புஎழில்
யானை
மேலும் கலித்தொகையின் நெய்தற்கலி 134 ஆம் பாடலிலும்
மருதக்கலி மற்றும் முல்லைக் கலிப் பாடல்களில் கண்ணன், பலராமன் பற்றிய செய்திகள் ஆங்காங்கு
உவமைகளாக இடம்பெற்றுள்ளன.
சிறுபாணாற்றுபடையில் இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார்(238-240)
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாப் பல்வேறு அடிசில்
ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் காட்டை
எரியூட்டிய அரிச்சுனனுக்கு மூத்தவன் வீமன் சமையல் தேர்ச்சி மிக்கவனாகத் திகழ்ந்த்தால்
அவன் செய்த சமையலுக்கு வீம்பாகம் என்று பெயர். அச்சுவை போன்ற உணவினை பாணர்களுக்கும்
விருந்தினர்களுக்கும் வழங்கிய செய்தியை நல்லூர் நத்தத்னார் கூறுகிறார்.
மேற்கண்ட சங்க இலக்கிய நூல்களில்
புலவர்கள் அக இலக்கிங்களான அகநானூறு, கலித்தொகையிலும் புறநூலான புறநானூற்றிலும் அகப்புறநூலான
பரிபாடலிலும் சிறுபாணாற்றுப்படையிலும் கம்பராமாயாணம் மகாபாரதம் குறித்த செய்தியைப்
பதிவுசெய்துள்ளனர்.
கருத்துகள்