செய்யுளும் உரைநடையும்


முதலாமாண்டு – இரண்டாம் பருவம்
தாள் -1 –ITAC - செய்யுளும் உரைநடையும்
அலகு – 1      குறுந்தொகை

நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன.
குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வண்டியில், உலகிற் சிறந்த குறும் பாடல்களை, அந்தந்த மொழி வடிவிலும் ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் அச்சடித்து வைக்கும் பழக்கம் உள்ளது. பிறகு இப்பாடல்கள் மண்ணுக்கடியில் மலரும் பாக்கள் என்று தொகுத்து அச்சுவடிவம் பெறுமாம். அங்கு யாயும் யாயும் என்று தொடங்கும் 40 வது குறுந்தொகைப் பாடல் பொறிக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.


திணை
முதற்பொருள்( நிலம், பொழுது)
உரிப்பொருள்
கருப்பொருள்(தெய்வம், மக்கள்)

குறிஞ்சி
மலையும் மலை சார்ந்தும்
கூடலும் கூடல் நிமித்தமும்
முருகன் (தெய்வம்)
குளிர் காலம்
முன்பனி (பெரும் பொழுது)
யாமம் (இரவு 10 முதல் 2 மணி வரை) சிறு பெழுது
குறவன், குறத்தி (மக்கள்)
முல்லை
காடும் காடு சார்ந்தும்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
திருமால்
கார்காலம்
மாலை (முன்னிரவு 6 முதல் 10 வரை)
ஆயர், ஆய்ச்சியர்
மருதம்
வயலும் வயல்சார்ந்தும்
ஊடலும் உடல் நிமித்தமும்
இந்திரன்
ஆறு பெரும் பொழுதுகளும்
வைகறை (பின்னிரவு 2 முதல் 6 வரை)
உழவர், உழத்தியர்
நெய்தல்
கடலும் கடல் சார்ந்தும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
வருணன்
ஆறு பொழுதுகளும்
எற்பாடு (பிற்பகல் 2 முதல் 6 வரை)
பரதர், பரத்தியர்
பாலை
மணலும் மணல் சார்ந்தும்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
கொற்றவை
எயினர், எயிற்றியர்
இளவேனில், முதுவேனில், பின்பனி
நண்பகல் (பகல் 10 முதல் 2 வரை)


1.   தலைமகள் கூற்று
காதலன் வீட்டுக்குப் பின்னுள்ள வேலியின் வெளிபுறமாக நிற்க, தோழி விரைவில் திருமணம் புரியவில்லை என அவன் இயல்பை பழித்துக் கூற, காதலி மறுத்து அவன் நட்பைச் சிறப்பித்துக் கூறுகிறாள். ( இயற் பழித்தல் – காதலன் விரைவில் திருமணம் முடிக்கவில்லை என அவன் இயல்பைப் பழித்துப் பேசுதல்)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவு இன்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே  (குறுந்தொகை, 3)
திணை – குறிஞ்சி                                ஆசிரியர் – தேவகுலத்தார்
விளக்கம்   
                    மலைச் சாரலிலுள்ள, கரிய தண்டினையுடைய குறிஞ்சிப்பூவைக் கொண்டு, பெரிய தேனடையைக் கட்டும் மலை நாடனாகிய தலைவனுடன் நான் கொண்ட காதல் இப்பூமியை விட அகலமானது; வானத்தை விட உயர்ந்தது; கடலை நீரைவிட அளத்தற்கரிய அளவினையுடையது ஆழமானது! (தோழி! அத்தகைய எங்கள் காதலை குறைத்து மதிப்பிடாதே என்பது குறிப்பு)
2.   தலைவி கூற்று
 திருமணம் முடிக்க பொருள் தேடச் சென்ற காதலனின் பிரிவு தாங்க முடியாமல் தோழியுடம் புலம்புதல். ( வரைவிடை பிரிவு – திருமணத்திற்குப் பொருள் தேடுதல் காரணமான பிரிவு)
நள்ளென்று அன்றே யாமம் ; சொல்அவிந்து
இனிதுஅடங் கினரே மாக்கள்; முனிவுஇன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே (குறுந்தொகை,6)
திணை – நெய்தல்                                          ஆசிரியர் – பதுமனார்
விளக்கம்
            நள்ளிரவாகிய யாமமும் இருள்செறிந்து உள்ளது. சுற்றியுள்ள மக்களும் பேச்சடங்கி, இனிதாக உறங்கி அமைதியாயினர். பரந்த இடத்தையுடைய இவ்வுலகமும், தடை ஏதுமின்றி உறங்குகிறது. உறுதியாக யான் ஒருத்தியே உறக்கமின்றி தவிக்கிறேன்.
3.   தோழி கூற்று
கூற்று – பொருள் தேடிச் சென்ற கணவனின் பிரிவைத் தாளமுடியாமல் இல்லால் வருந்த தோழி கூறும் ஆறுதல் மொழி. (பொருள்வயின் பிரிதல் – பொருள் தேடி பிரிந்து செல்லுதல்)
உள்ளார் கொல்லோ தோழி! கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பம் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலக்
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடுஇறந் தோரே (குறுந்தொகை, 16)
திணை – பாலை                         ஆசிரியர் – பாலை பாடிய பெருங்கடுங்கோ


விளக்கம்
            தோழி! வழிப்பறி செய்யும் கள்வர்கள் தமது இரும்பாற் செய்த அம்பைச் செப்பம் செய்து கூர்மையாக்கும் பொழுது, தம் நக நுனியில் வைத்துப் புரட்டித் தீட்டுகின்ற ஓசை போல், சிவந்த காலையுடைய ஆண் பல்லி தன் துணையாகிய பெண் பல்லியை ஆசையோடு அழைக்கும் அழகிய அடியுடைய கள்ளிகள் உள்ள காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர், அவ்வோசையைக் கேட்டதும் நம்மை நினைக்க மாட்டாரோ?
4.   தோழி கூற்று
கூற்று – இரவில்( இரவுக்குறி) வந்து காதலியைச் சந்தித்துவிட்டு திரும்பும் காதலனிடம் தோழி விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவது( வரைவு கடாவுதல்) ( இரவுக்குறி – இரவில் காதல்கள் சந்திப்பது, வரைவு கடாவுதல் – விரைவில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திக் கேட்பது)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசி னோரே, சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே ( குறுந்தொகை, 18)
திணை – குறிஞ்சி                                ஆசிரியர் – கபிலர்
விளக்கம்
சிறு மூங்கில்களையே உயிர்வேலியாக உடைய, வேரில் பழக்குலைகளைக் கொண்ட வேர்ப்பலா நிறைந்த மலைச்சாரலின் நாடனே! பக்க மலையிலுள்ள பலாவினது வலிமையில்லாத சிறிய கிளையில் பெரிய பழம் தொங்குவது போல, இவளது உயிர் வலிமையற்ற சிறுமையை உடையது; இவளது காம உணர்வோ மிகவும் கூடுதலாகவுள்ளது. அதனால் என்ன ஆகுமென்று தெரியவில்லை. என்ன நடக்கும் என்று யார் அறிவர்? ( அவள் உயிருக்குக் கேடு கூட நேரலாம்) அதனால் நீ விரைந்து உற்ற சமயத்தில் அவள் உயிரைக் காப்பவனாக செய்படவேண்டுமென்றால் விரைந்து உன் காதலியைத் திருமணம் செய்து கொள்.
5.  தலைவி கூற்று
கூற்று – பிரிந்து சென்ற காதலன் வரவேண்டிய காலம் (பருவம்) வரலாமல் இருப்பதைக் கண்டு காதலி புலம்புவது. (பருவம் – இளவேனிற், கார் ஆகிய காலங்களில் பிரிந்து சென்ற தலைவன் திரும்புவதாக கூறுவது. இம்மாதங்கள் இன்பம் துய்ப்பதற்குரிய மாதங்கள்)
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழைய, கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென்று அவ்வே. (குறுந்தொகை – 24)
திணை – முல்லை                                          ஆசிரியர் – பரணர்
விளக்கம்
        கரிய அடியினை உடைய வேம்பினது ஒளிமிக்க பூவாகிய புதுவருவாய் (இளவேனில்) என் தலைவன் என்னுடன் இல்லாமலும் கழிந்து போகுமோ? என் காதலர் என்னைப் பிரிந்ததால், கொடிய ஊர்ப்பெண்டிரின் நாக்குகள், அலர் தூற்றின (வம்பு பேசுதல்). ஆற்றங் கரையில் முளைத்து வளர்ந்த வெண்மையான கிளைகளையுடைய அத்திமரத்தின் ஒரு பழத்தைத் தின்ன விரும்பிய ஏழு நண்டுகள் அதை மிதித்த்துப் போல், நான் குழைந்து வருந்துமாறு, பழித்துப் பேசி ’கல்’ லென்று ஆரவாரம் செய்தன (காதலன் திரும்பி வராமல் காலம் தாழ்த்த தாழ்த்த ஊர்ப்பேச்சு நின்றபாடில்லை)
6.   தலைவி கூற்று
கூற்று – காதலன் திருமணம் செய்யாமல் காலம் கடத்துவதை நினைத்து                   (வரைவிடை ஆற்றாமை), காதலி தோழியிடம் உரைப்பது. (வரைவிடை ஆற்றாமை – திருமணம் செய்யாமல் இருக்கும் காதனின் செயலைக் கண்டு, காதலி வருந்துவது)
முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ! ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே (குறுந்தொகை, 28)
திணை – பாலை                                 ஆசிரியர் – ஔவையார்
விளக்கம்
            சுற்றிச் சுழன்று வந்து அசையும் தென்றல் காற்று என்னை அலைத்து வருத்துதலால், என்னை வறுத்தும் காமநோயினை அறியாமல், நன்கு அயர்ந்து உறங்குகின்ற இவ்வூரின் மேல் எனக்குவரும் சீற்றத்தால் அவர்கள் மீது முட்டிக் கொல்வேனா? அவர்களைத் தடிகொண்டு தாக்குவேனா? அல்லது தனி ஒருத்தியாகிய நான், ஒரு வெறி பிடித்தது போன்ற தன்மை மேலே எழுவதால் ’ஆஅ’  என்றும் ‘ஒல்’ என்றும் வாய்விட்டு அலறி கூவுவேனா? அந்தோ! உறக்கமின்றித் தனியே புலம்பித் துடிக்கிறேனே!

7.   தலைவன் கூற்று
கூற்று – காதலியை அடைய விரும்பும் காதலன் அவள் தோழியிடம் உதவுமாறு கெஞ்சிக் கேட்பது (பின்னிற்றல் – காதலன் தோழியிடம் உதவி கேட்பது)
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்த்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்
பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்;
மாஎன மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் துற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே – பிரிவுதலை வரினே (குறுந்தொகை,32)
திணை – குறிஞ்சி                                ஆசிரியர் – அள்ளூர் நன்முல்லையார்
விளக்கம்
            தோழி! காலை, நண்பகல், பிரிவில் செயலற்று வருந்தும் மாலை, ஊர்முழுதும் ஆழ்ந்துறங்கும் நள்ளிரவு, புலர் காலையாகிய விடியல் என்று இச்சிறு பொழுதுகள் வருவதும் போவதும், இடைவெளி விட்டு, உண்மையான காதலர்களால் உணரப்படுவதில்லை. அங்ஙனம் அப்பொழுதுகள் இடையிடையே தெரிந்தால், இது உண்மையான காதல் ஆகாது. அக் காமம் பொய்யாகும். அத்தகைய சிறு பொழுது கூடப் பிரிவறியாக் காதலில், பிரிவு நேருமாயின், குதிரை என்று பனை மடலைக் கொண்டு, அதன் மீது ஏறி நாற்சந்தியில் தோன்றி, ’இன்னாள் காரணமாக இவன் இவ்வாறு ஆனான்’என ஊரார் பழிக்கும் படி, அவளைப் பற்றிப் பலரும அறியச்செய்தலும் பழியே; அதைக் கூடாது என்று எண்ணி, உயிருடன் வாழ்தல் அதனினும் மிக்க பழியாகும்! அதனால் அவளை அடைய எனக்கு உதவுவாயாக.
8.   தோழி கூற்று
கூற்று – பிரிந்து சென்ற காதலன் விரைவாக வருவான் எனத் காதலிக்குத் தோழி கூறுவது.
நசைபெரிது உடையார் நல்கலும் நல்குவார்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி! அவர் சென்ற ஆறே ( குறுந்தைகை,37)
திணை – பாலை                         ஆசிரியர் – பாலை பாடிய பெருங்கடுக்கோ
விளக்கம்
            தோழி! நின் காதலன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவர் விரைந்து வந்து உன்னக்கு நன்மை செய்வார். ஏனெனில் அவர் சென்ற பாலை வழி, பிடியினது (பெண் யானை) பசியைப் போக்குவதற்கு, பெரிய துதிக்கையுடைய ஆண் யானை, மென்மையான கிளைகளையுடைய யா மரத்தினது தோலை உரித்துக் கொடுக்கும் படியான அன்பு காட்சிகளை உடையது. அக்காட்சியைக் காணும் உன் காதலன் உன்னைக் காண விரைந்து வருவான் கவலைக் கொள்ளாதே.
9.   தலைவன் கூற்று
கூற்று – இயற்கை புணர்ச்சிக்குப் பின், காதலன் தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என்று அஞ்சிய தலைவிக்கு கூறும் ஆறுதல் மொழி. (இயற்கை புணர்ச்சி  - களவில் முதன்முதலில் சந்தித்தல், குறிப்பு வேறுபாடு – மனக் கருத்து முகத்தில் தெரிவது)
யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (குறுந்தொகை,40)
திணை – குறிஞ்சி                                         ஆசிரியர் – செம்புலப் பெயனீரார்
விளக்கம்
            என் தாயும் உன் தாயும் என்ன உறவுடையர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினராவார்? யானும் நீயும் இதற்கு முன் எவ்இதம் அறிமுகமாகினோம்? இவை எதுவும் இல்லாத நிலையில், எதிர்பாராது சந்தித்தபோது நம் இருவரது அன்புடை நெஞ்சங்கள், செம்மண் நிலத்துப் பெய்த மழைநீர், அக்கணமே நிறமும் சுவையும் மாறி ஓன்றாக கலந்துவிடுவது போலத் தாம் ஒன்றுபட்டு கலந்தன! இந்நிலையில் நான் இனிப் பிரிவேன் என்று அச்சம் கொள்ளாதே!
(செம்புலப் பெயல்நீர் என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியருக்குச் செம்புல பெயனீரார் என்று பெயர்)
10.            தலைவி கூற்று
கூற்று – காதலன் திருமணத்திற்குக் காலம் தாழ்துவதை எண்ணி காதலி தோழியிடம் புலம்புவது.
யானே ஈண்டை யேனே; என்நலனே
ஏனல் காவலர் கவண்ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன்எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டுஒழிந் தன்றே (குறுந்தொகை,54)
திணை – குறிஞ்சி                      ஆசிரியர் – மீனெறி தூண்டிலார்
விளக்கம்
            நான் இங்கே தனிமையில் உள்ளேன். எனது அழகு, தினைப் புனத்தைக் காப்பவரது கவண்கல் ஒலி கேட்டு அஞ்சிக் காட்டு யானையானது, தான் வளைத்த பசிய மூங்கிலைக் கைவிட, அது மீன் பிடத்த தூண்டில் மேலே எகிறித் தூக்கப்படுவது போல, அவ்விடத்திலேயே ஒழிந்து போனது.
(பசிய மூங்கிலைத் தின்ன வளைத்த யானை, கவண்கல் ஒலி கேட்டு அதை கைவிட்டது. காதலி மீது காதல் கொண்டு கூடிய காதலன் பிரிவு நீட்டிப்பைக் குறிப்பாக உணர்த்துகிறது. இதல் வரும் மீன் எறி தூண்டிலின் நிவக்கும் என்ற அரிய உவமையால், இப்பாடலாசிரியருக்குப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது)

11.             தலைவி கூற்று
கூற்று – காதல் வயப்பட்டதை அறிந்த பெண்ணின் தாயர் முதலியோர், அவளை வெளியே விடாமல் காப்பது (காப்பு மிகுதி) குறித்து, தோழியிடம் சொல்லியது.

பூஇடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீர்உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவுஅரி தாகிய தண்டாக் காமமொடு
உடன்உயிர் போகு தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே (குறுந்தொகை,57)
திணை – நெய்தல்                                ஆசிரியர் – சிறைக்குடி ஆந்தையார்
விளக்கம்
            இல்லறக் கடமைகளை அறிந்த ஆற்றுதல் காரணமாக இருவராகப் பிறந்த இவ்வுலகத்தில், நாங்கள் தனித்தனியே ஒருவராகி வருந்தும் கீழான இந்நிலையிலிருந்து தப்பிபதற்கு ஒரு வழி உள்ளது. அதாவது தங்களிடையே ஒரு பூ இடைப்பட்டு பிரிய நேர்ந்தாலும் பல ஆண்டுகள் கழிந்ததுபோல வருத்தம் கொள்கின்ற, நீரில் வசிக்கும் மகன்றில் என்னும் பறவைகளின் கூடி வாழும் பண்பு போல பிரிவு என்பது இல்லாமல் குறைவற்ற காம உணர்வுடன், ஒன்றுபட்டு எங்கள் உயிர் போவதாகுக! அதுவே என் விருப்பமாக உள்ளது.
12.            தலைவி கூற்று
கூற்று – பிரிவு துயரில் இருந்த காதலிக்குத் தோழி ஆறுதல் கூறியது.
குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே (குறுந்தொகை,60)
திணை – குறிஞ்சி                                ஆசிரியர் – பரணர்
விளக்கம்
தோழி ! குட்டையான தண்டினையுடைய கூதளஞ் செடி, மேற்காற்றால் அசைகின்ற, உயர்ந்த மலைமேலே, பெரிய தேனடையைக் கண்ட பெரிய காலை உடைய முடவன், கீழே இருந்தபடி, தன் உள்ளங்கையைச் சிறு குடைபோலக் குவித்து, மேலேயுள்ள தேனடையைச் சுட்டிக்காட்டி நக்கி இன்புற்றாற் போல, நம் காதலர் நமக்குத் தண்ணளி செய்யார், விரும்பாராயினும் அவரைப் பலமுறை கண்ணால் கண்டால் அதுவே நம் உள்ளத்திற்கு இனிமை தருவதாகும்.
13.             தோழி கூற்று
கூற்று – தோழி இரவுக்குறி மறுத்தது.
   கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
   கைம்மை உய்யாக் காமர் மந்தி
   கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
   ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்
   சாரல் நாட ! நடுநாள்
   வாரல் வாழியோ வருந்துதும் யாமே (குறுந்தொகை,69)
திணை – குறிஞ்சி                                ஆசிரியர் – கடுங்கட் கரவீரன்
விளக்கம்
            கரிய கண்களையுடைய தாவுதலில் வல்ல ஆண்குரங்கு, இறந்துபடுவதற்காக, கைம்மையைத் தாங்கமாட்டாத, பாசம் மிக்க பெண்குரங்கு, தாவுதல் முதலிய இயல்புகளை இன்னும் கற்காத தன் வலிய குட்டியை, தனது சுற்றத்திடத்தே ஒப்படைத்துவிட்டு, மிக உயரமான மலை அடுக்கத்தின் மேலே ஏறிக் கீழே பாய்ந்து, உயிரை மாய்த்துக் கொள்ளும்படியான மலைச் சாரல்கள் சூழ்ந்த நாடனே! நள்ளிவிரவில் இவளைச் சந்திக்க இனி வரவேண்டாம். அங்ஙனம் வந்தால் தீங்கு எதுவும் உண்டாகுமோ என நாங்கள் வருந்த நேரும் நீ வாழ்வாயாக!
14.            தோழி கூற்று
கூற்று – தோழி  காதலன் காதலியைச் சந்திக்க விரும்புவதை மறுக்காதபடி கூறியது. (குறை மறாதவாற்றல்)
விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்பநம் மாண்நலம் நயந்தே (குறுந்தொகை,74)
திணை – குறிஞ்சி                                ஆசிரியர் – விட்ட குதிரையார்
விளக்கம்
            திடீரென அவிழ்த்து விடப்பட்ட குதிரை, எழுச்சிக்கொண்டு மேலே துள்ளிக் குதிப்பதைப் போல, வானத்தைத் தொடுவது போல் காற்றில் வளைந்து காட்சியளிக்கும் பச்சை மூங்கிலையுடைய நாடன், நாம் அவனை அடைவதற்காகத் துன்புறுதலை  அறியானாய், அவனும் நம் சிறந்த அழகை விரும்பி, வேனிற் காலத்தின் வெப்பத்தைக் தாங்கமாட்டாது வருந்தும் காளையைப் போல, மெலிவுற்றான் என்று கூறுவர்.
15.            தலைவி கூற்று
கூற்று – பிரிவினைத் தாங்கமுடியாத காதலிக்குத் தோழி கூறியது.
அம்ம வாழி தோழி! யாவதும்
தவறெனில் தவறோ இலவே, வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல்இடு பதுக்கை
நெடுநல் யானைக்கு இடுநிழ லாகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே (குறுந்தொகை,77)
திணை – பாலை                                  ஆசிரியர் – மதுரை மருதன் இளநாகனார்
விளக்கம்
            தோழியே ! நான் சொல்வதைக் கேட்பாயாக! வாழி ! கொடிய பாலை வழியில் இறந்துபட்ட வழிப்போக்கர்களின் உடல்கள் மேல் தழைகளைக் குவியலாக இட்டு மூடிய பதுக்கைக் குவியல்கள், உயர்ந்த நல்ல யானைக்கு இட்டுவைத்த நிழலாகப் பயன்படும் அரிய காடு அது. அக் காட்டுவழியில் பிரிந்து சென்றவருக்கு, எளிதாய் உடம்பட்டுப் பின் மெலிந்துபோன, என பருத்த மெல்லிய தோள்கள் தவறு செய்துவிட்டன என்று கூறினால், சிறிதும் அவை தவறுடையனவே அல்ல.
16.            தோழி கூற்று
கூற்று – காதலன் திருமண ஏற்பாட்டைத் (வரைந்து எய்துதல்) தெரிவித்த செவிலியைத் தோழி வாழ்த்தியது.
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்    
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுஉண் டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என்றோளே! (குறுந்தொகை,83)
திணை – குறிஞ்சி                              ஆசிரியர் – வெண்பூதன்
விளக்கம்
            தமது சொந்த வீட்டிலிருந்து, தாம் முயன்று தேடிய செல்வத்தைக் கொண்டு, உண்பதால் ஏற்படும் இன்பத்தைப் போல இன்சுவை தருமாறு பலாமரத்தினது கிளைகள் தோறும் இனிய பலாப் பழங்கள் தொங்குகின்றன. அத்தகைய வளம்மிக்க உயர்ந்த மலைநாடன், திருமணத்திற்கான ஆயத்தங்களுடன் வரப்போகிறான் என்று அன்னை கூறினாள். அங்ஙனம் நல்ல செய்தி கூறிய நம் அன்னை, பெறுதற்கரிய சாவா மருந்தாகிய அமிழ்தத்தையே உணவாகப் பெறுக! மிக்க புகழுடைய துறக்கவுலக இன்பத்தைப் பெறுவாளாக!
17.            தோழி கூற்று
கூற்று – தூது சென்ற பாணற்குத் தோழி மறுத்துக் கூறியது ( வாயில் மறுத்தல்)
யாரினும் அனியன்; பேர்அன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈனில் உழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கிழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே (குறுந்தொகை,85)
திணை – மருதம்                       ஆசிரியர் – வடம வண்ணக்கன் தாமோதரன்
விளக்கம்
ஊர்க்குருவி எனப்படும் சிட்டுக்குருவியின் துள்ளித்துள்ளி நடக்கும் ஆண் குருவி, கருப்பம் முதிர்ந்த தன் பேடைக்கு, ஈனில் ( முட்டையிட்டுப் பொறிக்கும் கூடு) கட்டுவதற்காக, இன்சுவை பொதிந்துள்ள தண்டினையுடைய கரும்பினது, மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களை, அலகால் கோதி எடுக்கும், புது வருவாயை உடைய ஊரனாகியத் தலைவன், தன் பாணனுடைய வாயில் மட்டுமே யாரையும் விட இனியவன் என்றும் மிகுந்த அன்பினன் என்றும் பாராட்டப்படுகிறான். உண்மையில் அவன் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
18.            தலைவி கூற்று
கூற்று – வாயிலாக வந்த தோழிக்கு வாயில் மறுத்தது.
நன்னலம் தொலைய நலம்மிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல்; அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவிஅஃது எவனோ அன்பிலங் கடையே (குறுந்தொகை,93)
திணை – மருதம்                         ஆசிரியர் – அள்ளூர் நன்முல்லையார்
விளக்கம்
            தோழி! நலல் இல்லற நலங்கள் தொலைந்து ஒழிய என் மேனியழகு மெலிந்து என் இனிய உயிரே போகுமாயினும் அவர்பால் பரிவுடைய சொற்களை என் முன் சொல்லாதை! அவர் நமக்கு தாயும் தந்தையும் போல் அன்பு செய்பவராயிற்றே! ஆனால் கணவன் மனைவிக்கிடையே இருக்க வேண்டிய, காம உணர்வு வயப்படும் அன்பில்லாத போது ஊடல் என்பது எதற்காக.
19.            தலைவி கூற்று
கூற்று – காதலன் திருமணத்தை நீட்டித்தலால், காதலி தோழியிடன் கூறியது
யானே ஈண்டுடை யேனே ; என்நலனே
ஆனா நோயொடு கான லஃதே;
துறைவன் தம்ஊ ரானே
மறைஅலர் ஆகி மன்றத் தஃதே (குறுந்தொகை,97)
திணை – நெய்தல்                                ஆசிரியர் – வெண்பூதி
விளக்கம்
            தோழி! நான் இங்கே நம் வீட்டில் உள்ளேன். என் பெண்மை நலம், தீராத காம நோயுடன் கடற்கரைச் சோலையில் உளது. கடற்கரைத் தலைவனோ தங்கள் ஊரில் போய் இருக்கிறான். இதனால் எங்கள் மறைவான களவுக்காதல் ஊராரால் அறியப்பட்டு, அலராகி ஊர்ப்பொது மன்றத்தில் எல்லோராலும் பேசப்படுகிறது!

20.            தலைவன் கூற்று
கூற்று – பொருள் தேடிக்கொண்டு வந்த தலைவனிடம் எம்மை மறந்தீரே என்று கூறியத் தோழிக்குத் தலைவன் கூறியது.
உள்ளினென் அல்லெனோ யானே! உள்ளி
நினைத்தனென் அல்லெனோ பெரிதே; நினைத்து
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே!
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துஉணச் சென்றஅற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் ஈண்டுகடைக் கொளவே. (குறுந்தொகை,99)
திணை – முல்லை                                 ஆசிரியர் - ஔவாயார்
விளக்கம்
            நெடிதுயர்ந்த மரத்தினது கிளையையும் தொட்டுக்கொண்டு ஓடும் பெருவெள்ளம் பின்பு ஆழத்தில் சென்று இறைத்துப் பருகுமாறுபோய், இறுதியில் முற்றிலும் வற்றித் தீர்ந்து போனது போல், முன்பு பிரிந்திருந்த போது அத்துணைப் பெரிதாய் இருந்த காம உணர்வு, இப்போது இங்குவந்து முற்றிலும் தீர வேண்டுமென்று நான் தலைவியையே எண்ணிக்கொண்டிருந்தேன் அல்லெனோ? எண்ணியதுடன், அவளையே, மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தேன் அல்லெனோ? எண்ணி நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் பொருள் தேடிச் சென்று இடையில் திரும்ப முடியாத இவ்வுலகத்து இயல்பை நினைத்து மருட்சியுற்று இருந்தேன் அல்லெனோ? (அவ்வாறு உலகியலால் செய்வதறியாது மயங்கி இருந்தேனே தவிர மறக்கவில்லை)
வினாக்கள்

புறநானூறு

புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்னும் வேறு பெயர்களும் இந்நூலுக்கு உண்டு. அகவற் பாவால் ஆனது. சில பாடல்களில் வஞ்சியடிகளும் வந்துள்ளன.  இதன் அடிவரையறை 4 முதல் 40 வரை. கடவுள் வாழ்த்தினைச் சேர்த்து 400 பாடல்கள் காணப்படுகின்றன.  புறநானூற்றுப் புலவர்களின் எண்ணிக்கை 157. 12 பாடல்கள் பாண்டியர், 18 பாடல்கள் சேரர், 13 பாடல்கள் சோழர் 18 பாடல்கள் வேளிர் என அமைந்துள்ளது. 178 மன்னர் பெயர்கள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. அரசியல், சமுதாயம், கல்வி, நாகரிகம், பண்பாடு, கலை, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்கவழக்கம், வாணிகம் போன்ற செய்திகளைப் பதிவு செய்யதுள்ளாதல், புறநானூற்றினை வரலாற்றுக் களஞ்சியம் என்று கூறுவர்.

9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

பாடியவர்: நெட்டிமையார். நெட்டிமையார் (9, 12, 15). இவர் நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி அறியும் திறமை வாய்ந்தவர் என்ற காரணத்தினால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் உரை நூலில் கூறுகிறார். இவர் கண்ணிமை நீண்டு இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவாரும் உளர். இப்பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, பஃறுளி ஆற்று மணலினும் பலநாள் வாழ்க என்று நெட்டிமையார் வாழ்த்துவதிலிருந்து இவர் பஃறுளி ஆறு கடலால் கொள்ளப் படுவதற்கு முந்திய காலத்தவர் என்பது தெரிய வருகிறது.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போருக்குப் போகுமுன் பசு, பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையோர், ஆண் பிள்ளை இல்லாதோர் ஆகியோரைப் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு அறை கூவிப் பின்னர்ப் போர் செய்தான் என்று நெட்டிமையார் கூறுகிறார். பாண்டிய மன்னர்களில் முன்னோனாகக் கருதப்படும் நெடியோனைப் பற்றிய செய்திகளும் இப்பாடலில் உள்ளன.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
10 முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
அருஞ்சொற்பொருள்:
1. ஆன் = பசு; இயல் = தன்மை; ஆனியல் = ஆன்+இயல் = பசு போன்ற தன்மை. 2. பேணுதல் = பாதுகாத்தல். 3. இறுத்தல் = செலுத்தல். 5. கடி = விரைவு; அரண் = காவல். 6. நுவல் = சொல்; பூட்கை = கொள்கை, மேற்கோள். 7. மீ = மேலிடம், உயர்ச்சி, மீமிசை = மேலே. 9. செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த); பசும்பொன் = உயர்ந்த பொன். வயிரியர் = கூத்தர். 10. முந்நீர் = கடல்; விழவு = விழா; நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)

கொண்டு கூட்டு: அறத்தாறு நுவலும் பூட்கை, எங்கோ, குடுமி வாழிய, பஃறுளி மணலினும் பலவே எனக் கூட்டுக.

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!
 19. எழுவரை வென்ற ஒருவன்!
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
பொருளுரை: 

ஒலிக்கும் கடலால் சுற்றிச் சூழப்பட்ட அணுச் செறிந்த வளமான அகன்ற இப்பூமியில் தமிழ்ப்படை கைகலந்து போரிட்ட தலையலங் கானத்தில் நிலைபெற்ற பலமடங்கும் உயிர்களையும் அவ்வுயிர்களைக் கொல்லும் கூற்றம் ஒன்றே என்பது போல உன்னோடு சீர்தூக்கின் நீ ஒருவனே நின்று பகைவரை சலிக்காமல் வெல்லும் வேலினையுடைய செழிய! கலங்கி மலையிலே தங்கிய குருவியினம் போல அம்பு சென்று தைத்ததால் ஏற்பட்ட வேதனை பொறுக்கவியலாத புண்களையுடைய யானை களின் துளைகளையுடைய தும்பிக்கைகள் வாயுடனே வெட்டி வீழ்ந்து கலப்பையைப் போல நிலத்தின் மீது கிடந்து புரள வெட்டிப் போர்க் களத்தில் வீழ்த்த ஏந்திய வாள் வெற்றியை உடையோராய் எம் தலைவனோடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்கள். 
இப்படிப்பட்ட வெற்றியும் உண்டோ நமக்கு என்று சொல்லி மறக்குடிப் பெண்டிர் இன்புற்று உவகையால் அழ, 
அது கண்டு நாணி கூற்றம் இரங்கிய அஞ்சத்தக்க போர்க்களத்தில் இரு பெரு வேந்தரும், ஐம்பெரும் வேளிருமாகிய வலிமையான எழுவரையும் வென்றவனே! 
பெரும் புலியைப் பிடிக்கும் வேடன், பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் (குகைகள்) இருக்குமிடம் அறிந்து,
 அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி புலிகளை அதனுள் புகுவித்து, 
அவைகளைப் பிடிக்கும் பொறி போன்றது என விருப்பபட்டு, உனது கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த மார்பினைத் தழுவினேன் அல்லவோ நான்! 

திணை: இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. 

’தலையாலங்கானத்து மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய’ என்பதிலிருந்தும், 
’கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல்வலங் கடந்தோய்’ என்பதிலிருந்தும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வீரம் புலப்படுகிறது. 

துறை: அரசவாகை ஆகும். 

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும். 

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது. 
3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், 
நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், 
பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன

 27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. 
திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி. 

சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ் 

நூற்றித ழலரி னிரைகண் டன்ன 
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து 
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை 
உரையும் பாட்டு முடையோர் சிலரே  

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே 

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் 
வலவ னேவா வான வூர்தி 
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் 
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி 

தேய்த லுண்மையும் பெருக லுண்மையும் 

மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும் 
அறியா தோரையு மறியக் காட்டித் 
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து 
வல்லா ராயினும் வல்லுந ராயினும் 

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி 

அருள வல்லை யாகுமதி யருளிலர் 
கொடாமை வல்ல ராகுக 
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே. 
பொருளுரை: 
சேற்றில் வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளி பொருந்திய தாமரை மலரின் பல இதழ்களும் ஒழுங்கான வரிசையாக அமைந்திருப்பது போல, ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியில் பிறந்து அரசுக் கட்டிலில் இருந்த வேந்தரை எண்ணும் பொழுது புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல் களுக்கும் உரியவர்கள் சிலரே; தாமரை இலை போல பயனின்றி இறந்தவர் பலர் ஆவர். 
புலவரால் புகழப்படும் புகழுடையோர் ஆகாயத்தில், தாம் செய்யும் நற்காரியங்களைச் செய்து முடித்து பாகனாற் செலுத்தப்படாத விமானத்தில் நல்லுலகம் செல்வர் என அறிவுடையார் சொல்வர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் என் தலைவனான சேட்சென்னி நலங்கிள்ளி! 
வளர்ந்ததொன்று குறைதலும், குறைந்ததொன்று வளர்தலும் பிறந்ததொன்று இறத்தலும், இறந்ததொன்று பிறத்தலும் ஆகிய உண்மைகளை கல்வியால் அறியாதவர்களுக்கும் அறியச் செய்து திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற உலகத்தில், வல்லவராகவோ, வல்லமை இல்லாதவராகவோ இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும் வறுமையால் வருத்தமுற்று உன்னிடம் வருவோருண்டு. 
அவ்வாறு வறுமையில் வந்தோரது உண்ணாது மெலிந்த நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருளி, வேண்டுவன வழங்குவாயாக! குறைவற்ற வலிமையுடைய உனக்குப் பகையாய் மாறுபட்டு எதிர்ப்பவர்கள் அருள் இல்லாமலும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆகுக! 
 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.
ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.
பொருளுரை:
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பெருஞ்செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை,
அவன் ‘எம்மை நினைத்து மறுபடியும் வருவீரோ?’ என்று கேட்க, 'அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே! பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினை யாளர்க்கும்சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும்
குரவர் வருந்த கொடுமை செய்தோர்க்கும் அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும்,நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்குஅவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறநூல்கள் கூறுகின்றன.புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் கருவாகிய முட்டை போன்ற வரகினது அரிசியை பால் விட்டு சமைத்த சோற்றில் தேனும் கலந்து இளமுயலின் கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு  இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில் கள்ளமில்லா உள்ளத்துடன் வேண்டியஇன்சொற்களைப் பலவாறாகப் பேசியபடி பெரிய கட்டியாக வழங்கிய சுவைமிகுந்த சோற்றைப் பாணர்கள் உண்பார்கள். அவர்களுக்கு நீங்காத செல்வம் எல்லாம் முழுமையாகக் கொடுத்தவன் எங்களுடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று சொல்லி அதிகாலையிலும் மாலை வேளையிலும் உனது பெருமை பொருந்திய வலிய திருவடிகளைப் பாடவில்லை என்றால் பல கதிர்களையுடைய செல்வனாகிய கதிரவன் தோன்றமாட்டான்.
பெருமானே, நானோர் எளியவன்! இவ்வுலகில் நற்குணங்கள் அமைந்த சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின்இமயமலையில் திரண்டு இனிய ஓசையுடன் கீழ்க்காற்றால் வரும் பெருத்த மழை சொரிந்த நுண்ணிய பல துளிகளை விட பல காலம் நீ வாழ்வாயாக!என்று ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வாழ்த்துகின்றார்.

 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். 
ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான். 

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி,
குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.

வரைபுரையு மழகளிற்றின்மிசை 
வான் றுடைக்கும் வகையபோல 
விர வுருவின கொடி நுடங்கும் 
வியன்றானை விறல்வேந்தே 
நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ 

நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச் 
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் 
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் 
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் 
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த 

எம்மள வெவனோ மற்றே யின்னிலைப் 
பொலம்பூங் காவி னன்னாட் டோரும் 
செய்வினை மருங்கி னெய்த லல்லதை 
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும் 
கடவ தன்மையிற் கையற வுடைத்தென 

ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் 
நின்னா டுள்ளுவர் பரிசிலர் 
ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே. 
பொருளுரை:
இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். 
ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான். அதற்கு, ஆவூர் மூலங்கிழார், “மலையை ஒத்த இளம் யானைகளின்மேல் ஆகாயத்தைத் தொட்டுத் துடைப்பது போன்ற பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து தோன்றும் பெரும் படையை உடைய வெற்றி வேந்தனே! 
நீ கோபத்துடன் பார்க்குமிடம் நெருப்பு பரவ நீ கருணையுடன் பார்க்குமிடம் பொன் பூத்துச் சிறக்க சிவந்த சூரியனில் நிலவை விரும்பினாலும் வெண்மையான சந்திரனில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். இனிமையான நிலையை உடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த கற்பகச் சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர்களும் தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, செல்வமுள்ளவர்கள் வறியோர்க்கு வழ்ங்குவதும்,வறியவர்கள் செல்வமுடையவரிடம் சென்று யாசித்தலும் அங்கே செய்ய இயலாது என்பதனால் அதைச் செய்ய முடியாதென எண்ணி, அங்கே பெறும் இன்பம் இவ்விடத்திலே உனது நாட்டில் பெற முடியும். பகைவர் தேசத்திலிருந்தாலும், பரிசு பெற விழைவோர் உனது நாட்டில் நீ இருக்கின்றாய் என்று கருதுவதால் உனது நாட்டையே நினைப்பர். ஆதலால் உனது நிழலில் பிறந்து உனது நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவு எவ்வளவு என்று சொல்லவும் வேண்டுமோ?” என்று இப்பாடலில் கிள்ளி வளவனைப் பாராட்டுகின்றார். 
45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது. 

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,

குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!

பொருளுரை: 

சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.
 51. ஈசலும் எதிர்ந்தோரும் !

பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை: வாகை. 
துறை; அரச வாகை.
குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.
நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.
பொருளுரை:

நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். 

அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, 
ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.

 55. மூன்று அறங்கள்
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!
பொருளுரை:
உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு,ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து,பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின்அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!
கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை,விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை,உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை,நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும்,பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.
அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல்,இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல்,கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே!ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.
 66. நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. 
துறை : அரச வாகை. 
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
பொருளுரை:
காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! 
செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், 
முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?
71. இவளையும் பிரிவேன்!
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன்
ஒல்லையூரைப் பகைவரிடமிருந்து வென்றதால் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று சிறப்பிக்கப்பட்டான். பூதப்பாண்டியனும் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு என்பவளும் மிக்க அன்போடு இல்லறம் நடத்தினர்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் பூதப்பாண்டியனுக்கும் சேர சோழ மன்னர்களுக்கும் பகை உண்டாயிற்று. அப்பகையின் காரணத்தால் அவர்கள் பூதப்பாண்டியனோடு போருக்கு வந்தனர். அதை அறிந்த பூதப்பாண்டியன் மிகுந்த சினத்தோடு கூறிய வஞ்சினமே இப்பாடல். பூதப்பாண்டியன் இப்போரில் கொல்லப்பட்டான். அதை அறிந்த அவன் மனைவி, தன் கணவன் இறந்த பிறகு தான் வாழ விரும்பவில்லை என்று கூறித் தீக்குளித்து உயிர் துறக்கிறாள். அவள் தீக்குளிக்குமுன் பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் (புறம் - 246) உள்ளது.

திணை: காஞ்சி; துறை: வஞ்சினக் காஞ்சி
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
5 அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
10 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
15 கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

அருஞ்சொற்பொருள்
1. மடங்கல் = சிங்கம்; மடங்குதல் = மீளுதல், வளைதல், செயலறுதல். 2. உடங்கு இயைந்து = ஒன்று கூடி. 4. ஆர் = நிறைவு; அமர் = போர். 6. அமர்தல் = அமைதல், பொருந்துதல். 7. மெலிகோல் = கொடுங்கோல். 8. திறன் = தகுதி. 16. களி = செருக்கு, மகிழ்ச்சி. 17. மன்பதை = மக்கட் பரப்பு. 19. வன்புலம் = வளமற்ற நிலம்.

உரை: சிங்கம்போலச் சினத்தையும், உறுதியான உள்ளத்தையும், வலிமைமிக்க படையையுமுடைய வேந்தர் ஒன்று கூடி என்னோடு போரிடுவேமென்று கூறுகிறார்கள். நான் அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அவர்கள் அலறுமாறு போரிட்டு, அவர்களை அவர்களுடைய தேருடன் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்யேனாயின், சிறந்த, பெரிய மையணிந்த கண்களையுடைய இவளிடமிருந்து (என்னுடைய மனைவியிடமிருந்து) நீங்குவேனாக. அறநிலை மாறாத அன்போடு கூடிய என் அரசவையில் தகுதியற்ற ஒருவனை இருத்திக் கொடுங்கோல் புரியச் செய்தேனாக. மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில் பொய்க்காத புதுவருவாயுடைய மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைபெற்ற அரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட என் கண்போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிக் களிக்கும் இனிய செருக்குடைய மகிழ்ச்சியை இழந்தவனாவேனாக. நான், மறு பிறவியில் மக்களைப் பாதுகாக்கும் பெருமைமிக்க பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாக.

சிறப்புக் குறிப்பு: மனைவியைப் பிரியாமலிருப்பது, கொடுங்கோலன் என்று மக்களால் கருதப்படாமலிருப்பது, நண்பர்களின் நட்பு, மற்றும் பாண்டிய நாட்டை ஆளும் வாய்ப்பு ஆகிய இவையெல்லாவற்றையும் பூதப்பாண்டியன் மிகவும் மேன்மையானயவையாகவும் விருமபத்தக்கவையாகவும் கருதினான் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

76. அதுதான் புதுமை!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாண்டிய நாட்டில் இருந்த இடைக்குன்றூர் என்பது இவரது ஊர். இவர் வேளாண் மரபினர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல்கள் நான்கு (76, 77, 78, மற்றும் 79). இந்நான்கு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் சேர சோழ மன்னர்களையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்றதைப் பாராட்டிப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும்.

பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவன் தலையாலங்கானத்தில் தன்னை எதிர்த்து வந்த எழுவரை மற்ற அரசர்களின் துணையின்றித் தான் ஒருவனே போரிட்டு வென்ற சிறப்பை மதுரை நக்கீரர், குட புலவியனார், ஆலம்பேரி சாத்தனார், மாங்குடி மருதனார், கல்லாடனார், இடைக்குன்றூர் கிழார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிய விரிவான செய்திகளைப் பாடல் 72-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் இப்பாண்டிய மன்னன் வென்றதைப் புகழ்ந்து பாடிய புலவர் பலருள்ளும் இடைக்குன்றூர் கிழார் சிறந்தவர் என்பது மிகையாகாது. இவர், இப்போர் நிகழ்ந்த காலத்தில் போரைத் தாமே நேரில் பார்த்தது போல் எழுதியிருப்பதிலிருந்து இவர் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
 பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!

அருஞ்சொற்பொருள்
1. அடுதல் = அழித்தல்; தொலைதல் = கெடுதல் (தோற்றல்). 3. ஊங்கு = முன்னர்; அரை = மரத்தின் அடிப்பக்கம். 4. மன்றம் = மரத்தடிப் பொதுவிடம். சினை = மரக்கொம்பு. 5. பவர் = நெருக்கம், அடர்ந்த கொடி. 6. பாய்தல் = பரவுதல். 7. ஒலியல் = தழைத்தல் , வளைய மாலை. 8. பாடு = ஓசை; கிணை = பறை; கறங்கல் = ஒலித்தல்

கொண்டு கூட்டு: ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை. செழியன் பொருதுமென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டுக.

உரை: ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

82. ஊசி வேகமும் போர் வேகமும்!

பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம்.
பாடலின் பின்னணி: கோப்பெரு நற்கிள்ளி போரவையில் நிகழ்த்திய மற்போரின் வேகத்தைப் பாராட்டி இப்பாடலை சாத்தந்தையார் இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று
உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
5 ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

அருஞ்சொற்பொருள்:
1.சாறு = விழா; தலைக்கொள்ளுதல் = கிட்டுதல்; ஈற்று = மகப்பேறு; உறுதல் = நேர்தல். 2. ஞான்றஞாயிறு = சாயுங்காலம். 3. நிணத்தல் = முடைதல், கட்டுதல்; இழிசினன் = புலைமகன். 4. போழ் = தோல் வார்; தூண்டு = முடுக்கு. மாது - அசைச் சொல். 6. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை; நெடுந்தகை = பெரியோன்.
கொண்டு கூட்டு: நெடுந்தகை போர், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றின்கண் சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றென இழிசினன் கையதாகிய ஊசியின் விரைந்தன்று எனக் கூட்டுக.
உரை: ஊரிலே விழா தொடங்கிவிட்டது; அங்கு போக வேண்டும். மனைவிக்குக் குழந்தை பிறக்கும் நேரம்; வீட்டிற்குச் சென்று அவளுக்கு உதவ வேண்டும். மழை பெய்கிறது; கதிரவன் மறையும் மாலைக் காலமும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கட்டிலைப் பின்னிக்கொண்டிருக்கும் தொழிலாளியின் (புலையன்) கையிலுள்ள ஊசி எவ்வளவு வேகமாக (கட்டில் பின்னும்) தோல் வாரைச் செலுத்துமோ,அவ்வளவு விரைவாக, ஆத்தி மாலை சூடிய பெரியோன் கோப்பெரு நற்கிள்ளி ஊரைத் தன்வசமாக்கிக்கொள்ள வந்த மற்போர் வீரனுடன் போர் நடத்தினான்.

86. கல்லளை போல வயிறு!

பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்து கொண்ட பெண்பாற் புலவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: ஒரு நாள், ஒரு பெண்மணி காவற் பெண்டுவின் இல்லத்திற்கு வந்து, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டாள். அதற்கு, காவற் பெண்டு தன் வயிற்றைக் காட்டி, “ புலி இருந்து சென்ற குகையைப் போன்றது என் வயிறு; என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன் போர்க்களத்தில் இருப்பான்” என்று கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரிப்பது வாகை எனப்படும்.
துறை: ஏறாண் முல்லை. வீரம் மிகுந்த மறக்குடியை மேல் மேலும் உயர்த்திக் கூறுதல்.

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
5 ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
அருஞ்சொற்பொருள்:
4. கல் = மலை; அளை = குகை . ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்
உரை: சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.

92. மழலையும் பெருமையும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: அதியமான் அவ்வையார்க்கு அரிய நெல்லிக்கனியை அளித்ததால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப் புகழ்கிறார். அவற்றை அதியமான் அன்போடு கேட்கிறான். அந்நிலையில், அவன் அன்பை வியந்து அவ்வையார் இப்பாடலை இயற்றுகிறார்.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
5 கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.
அருஞ்சொற்பொருள்:
1. கொள்ளுதல் = ஏற்றுக் கொள்ளுதல்; புணர்தல் = பொருந்துதல். 2. அறிவரா = அறிய வாரா. 5. கடி = காவல்; கடத்தல் = வெல்லுதல். 6. மாறு = ஆல்

கொண்டு கூட்டு: புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்ன எனக் கூட்டுக.
உரை: குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால், என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே.
சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் அவ்வையார் மழலைச் சொற்களின் சிறப்பைக் கூறுவதைப்போல் திருவள்ளுவர்,
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)
என்று கூறுகிறார்.

98. பகைவர்களின் வளநாடு கெடுமோ!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகை மூண்டது. அதியமான் தன்னுடைய வலிமையும் ஆற்றலும் மிக்க படையுடன் கோவலூரை நோக்கிச் சென்றான். கோவலூருக்குச் செல்லும் வழியிலிருந்த சிற்றரசர்கள் அதியமானின் படையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றனர். இதனைக் கண்ட அவ்வையார், அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு இப்பாடலை இயற்றுகிறார். இப்பாடலில், “அரசே! உன் யானைப்படையைக் கண்டவர்கள் தம்முடைய மதில் வாயில் கதவுகளுக்குப் புதிய கணையமரங்களைப் பொருத்துகின்றனர். உன் குதிரைப்படையைக் கண்டவர்கள் காவற்காட்டின் வாயில்களை முட்களை வைத்து அடைக்கின்றார்கள். உன் வேற்படையைக் கண்டவர் தங்கள் கேடயங்களைப் பழுது பார்த்துக்கொள்கிறார்கள். உன் வீரர்களைக் கண்டவர்கள் தங்கள் அம்புறாத்தூணிகளில் அம்புகளை அடக்கிக் கொள்கிறார்கள். நீயோ, இயமனைப் போன்றவன். உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ” என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிக் கூறுகிறார்.
திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல். கொற்றவள்ளை என்றும் கருதப் படுகிறது. தலைவன் புகழைச் சொல்லி, அவனுடைய பகைவர் நாடு அழிதற்கு வருந்துதல் கொற்றவள்ளை எனப்படும்.

முனைத்தெவ்வர் முரண்அவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பின்நின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவம் எழுச்செல்லவும்,
5 பிணன்அழுங்கக் களன்உழக்கிச்
செலவுஅசைஇய மறுக்குளம்பின்நின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளின் புழையடைப்பவும்,
மார்புறச் சேர்ந்துஒல்காத்
10 தோல்செறிப்பில்நின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்,
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்புஒடுக்கவும்,
15 நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்புஅணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
20 பெரும்புனல் படப்பைஅவர் அகன்றலை நாடே.
அருஞ்சொற்பொருள்:
1.முனை = போர்முனை; தெவ்வர் = பகைவர்; முரண் = வலி, மாறுபாடு; அவிதல் = ஒடுங்குதல், கெடுதல் , தணிதல், அழிதல், குறைதல், அடங்குதல். 2. பொர = போர் செய்ததால், நுதி = நுனி; மருப்பு = கொம்பு (யானைத் தந்தம்). 4.எழு = கணையமரம். 5. அழுங்குதல் = உருவழிதல்; உழக்குதல் = மிதித்தல், கலக்குதல். 6. மறு = கறை. 7. நன்மை = சிறப்பு; மா = குதிரை. 8. கவை = பிளப்பு; புழை = காட்டு வழி (வாயில்). 9. ஒல்குதல் = எதிர்கொள்ளுதல். 10. தோல் = தோலால் ஆகிய உறை; செறிப்பு = அடக்கம்; செறித்தல் = சேர்த்தல். 11. தோல் = கேடயம். 12. வாய்த்தல் = கிடைத்தல். 13. மைந்து = வலிமை. 15. ஐயவி = சிறு வெண்கடுகு; ஒய்யென = விரைவாக. 16. உய்த்தல் = கொண்டுபோதல். 18. வரம்பு = வரப்பு. 19. அலம் = அலமரல் = சுழலல்; கழனி = வயல். 20. படப்பை = தோட்டம் (நிலப்பகுதி).

கொண்டு கூட்டு: நீயே, கூற்றத்து அனையை; ஆகலின், வரம்புஅணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனிப் பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே போற்றார் இரங்க விளிவது கொல்லோ எனக் கூட்டுக.

உரை: போர்முனையில் பகைவரது வலிமை அடங்குமாறு போர்புரிந்ததால் குறைந்த (உடைந்த) நுனியுடன் கூடிய கொம்புகளுடைய உனது யனைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் மதிற்கதவுகளில் கணையமரங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பிணங்கள் உருவழியுமாறு போர்க்களத்தில் அவற்றை மிதித்து, தங்கள் கால்கள் வருந்துமாறு சென்றதால் குருதிக்கறைப் படிந்த குளம்புகளுடைய உன் சிறப்புக்குரிய குதிரைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் காட்டுவாயில்களை கிளைகளாய் பிளவுபட்ட முட்களை வைத்து அடைக்கின்றனர். உறையில் இருந்து எடுத்த வேல்களை உன் வீரர்கள் பகைவர்களின் மீது எறிய அவை அவர்களை ஊடுருவிச் சென்றன. அதைக்கண்ட உன் பகைவர்கள் தங்கள் கேடயங்களின் காம்புகளோடு (புதிய) பிடிகளைப் பொருத்திக் கொள்கின்றனர். வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்புகளுடைய உன் வீரர்களின் வலிமையைக் கண்டவர் குருதிக்கறைப் படிந்த தங்கள் அம்புகளைத் தங்கள் அம்புறாத்தூணிகளில் அடக்கிக் கொள்கின்றனர். நீயோ, (தன்னை இயமனிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக) சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டுபோகும் இயல்புடைய இயமனைப் போன்றவன். ஆதலால், வரப்புகளைச் சார்ந்து வளைந்து ஆடும் நெற்கதிர்களுடைய வயலொடு மிக்க நீர்ப்பகுதிகளையுமுடைய உன் பகைவர்களின் அகன்ற இடங்களுடைய நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு: வீரர்கள் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால், இயமன் அவர்களின் உயிரைப் பறிக்க மாட்டான் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றும், சங்க காலத்திற்குப் பிந்திய காலத்திலும், வெண்கடுகுப் புகை கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. உதாரணமாக பன்னிரண்டாம் திருமுறையில் உள்ள ஒரு பாடலில் இக்கருத்து காணப்படுகிறது.
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் வினைப்பர்.
(பன்னிரண்டாம் திருமுறை, 
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், பாடல் 39)
பொருள்: வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய்வார்கள்.


 நாலடியார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வரும் நாலும்என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது. அதுபோல் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள். பொதுமறை என்று புகழ்பெற்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையது நாலடியார் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்குகிறதல்லவா?
 அமைப்பும் உள்ளடக்கமும்
நாலடியார், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல். நாலடி நானூறு என்றும் வழங்கப் பெறும் நூல். இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. திருக்குறளைப் போல் மூன்று பால் பகுப்புகளை உடையது. பதினொரு இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டது.• துறவுக்குச் சிறப்பிடம்
அறத்துப்பாலில் துறவு நெறி அறங்களும், இல்லறநெறி அறங்களும் கூறப்படுகின்றன. சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் கூறப்படுகிறது. நிலையாமை பற்றிய கருத்துகளும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன.
• இல்லறமும் பிறவும்இனிய இல்லறத்தைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இல்லறத்திற்குப் பொருந்தாதவை எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்கிறது. கல்விச் சிறப்பையும், கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சான்றோர் இயல்பையும் பெருமையையும் எடுத்துரைக்கிறது. பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது. குறளின் அதிகாரப் பொருளோடு தொடர்புடைய கருத்தை ஒவ்வொரு குறளும் கூறுகிறது. ஆனால் நாலடியாரில் ஒரே கருத்தைப் பல அதிகாரங்களுள் வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன.
 நூல் சிறப்பு
சிறந்த உவமைகளை நாம் நாலடியாரில் காணலாம். பழமொழிகளாலும், பழைய கதைகளாலும், உறுதிப் பொருள்களை வலியுறுத்துதலில் இந்நூல் ஈடிணையற்றது. அறத்தை உரைக்கும் போதும் அழகும் சுவையும் தோன்றக் கூறுகிறது. இயற்றியவர் முனிவராயினும் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் கற்பனை உணர்வையும் இவர்கள் கைவிடவில்லை.
• கற்பனை
அறிவொளியால் உலகத்தை அறநெறிப்படுத்தும் பெரியோர் விரைவில் இறந்துபடுகின்றனர். அறிவிலிகளோ நெடுங்காலம் வாழ்கின்றனர். இம்முரண்பாட்டின் காரணம் யாதென எண்ணிய புலவர் கூறுவதைப் பாருங்கள். சாற்றை விரைவில் இழுத்துக் கொண்டு, சக்கையை விட்டு விடுதல் எவர்க்கும் இயல்பு. கூற்றுவனும் சான்றோரை இளமையிலேயே எடுத்துக் கொண்டு மற்றோரை விட்டு விடுகிறான். இங்குப் புலவர் கூறிய காரணம் எதுவாக இருப்பினும் சரியோ! தவறோ அதை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற உலகியலை ஒட்டிய கற்பனைகளை நாலடியாரில் காணலாம்.
1.   குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
2.   இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
3.   களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும், கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.
4.   வைப்புழிக் கோட்படா வாய்த்தீயின் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
5.   கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதன்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
6.   தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
7.    தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்(து)
உம்ப ருறைவார் பதி.
8.   கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
துரி஢ன்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
9.   கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
10. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூ லோதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவா ரில்.
குகன்
இராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன் ஆவான். அவனது பண்பு நலன்களைக் கண்ட இராமன், அவனைத் தன் தம்பியருள் ஒருவனாக ஆக்கிக் கொண்டவன்.


தோற்றமும் பண்பும்
குகன், வேட்டுவர் குலத் தலைவன்; அரையில் ஆடையும் காலில் தோல் செருப்பும் அணிந்தவன்; இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்; வீரக் கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவன்; இருளைத் தொடுத்தது போன்ற கருத்த தலைமயிர் கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போலத் தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தைப் பெற்ற உடலும் கொண்டவன். இத்தகு தோற்றத்தைக் கூறும் கம்பர் பாடலைக் காண்போமா?
பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சி ராயுதம் போலும் மருங்கினான்
(கங்கைப் படலம் 34:34)
(பிச்சர் = பைத்தியம்; மருங்கு = இடை, இடுப்பு)
 பண்பு
கங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வாழும் வாழ்க்கையைப் பெற்றவன். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன்; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்; தூய கங்கையாற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன்; வேட்டைக்குத் துணையாக நாயினை உடையவன்; துடி, ஊது கொம்பு, துந்துபி முதலான இசைக்கருவிகள் நிறைந்த படையை உடையவன் என்பதனைத் தம் பாடலில்
புலப்படுத்துகின்றார், கம்பர்:
ஆய காலையிள், ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க்குகன் எனும்நா மத்தான்;
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல்திரள் தோளினான் 

(கங்கைப் படலம் 28)

துடியன் நாயினன் (கங்கைப் படலம் 29:1)
கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான். 
(கங்கைப் படலம் 31:2)
(அம்பி = படகு; காயும் = கொல்லும்; கல்திரள் = மலை)

இத்தகு தோற்றமும் பண்பும் உடைய குகன் கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ள தவப் பள்ளிக்கு இராமன் வந்துள்ளான் என்ற செய்தி அறிந்து பார்க்கச் சென்றான். தனது படைகளையும் சுற்றத்தினரையும் விட்டுத் தான் மட்டும் தனியாக இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் ஒருங்கே காணிக்கையாகக் கையில் எடுத்துக் கொண்டு சென்றான்.
ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தன்
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்

(கங்கைப் படலம் 36:3-4)
1)வேடர் குலத்தில் சிறந்த தலைவனாக விளங்குபவன் குகன். அவன் போராற்றலும், பேராற்றலும் மிக்கவன் என்பதை இப்பகுதி புலப்படுத்துகின்றது.
2)ஆற்றில் கிடைக்கும் மீனையும், உயர்ந்த மலையில் கிடைக்கும் தேனையும் கொண்டு வந்து இராமனிடம் காணிக்கையாகத் தருகின்ற போது குகனின் இறைபக்தி வெளிப்படுகின்றது.
இராமனைக் காணத் தவப் பள்ளி வாயிலை அடைந்த குகன், தான் வந்துள்ளதைத் தெரிவிக்கக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் இலக்குவன் அவனை அணுகி, நீ யார்? என வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி "ஐயனே ! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடனாவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்" என்று கூறினான். இலக்குவன் தன் தமையனாகிய இராமனிடம், தூய உள்ளமும், தாயன்பும் உடைய குகன், தன் சுற்றம் சூழத் தங்களைக் காண வந்துள்ளான் என்று தெரிவித்தான்.
 குகனை அழைத்து வரப் பணித்தல்
இராமனும் மன மகிழ்ச்சியோடு “நீ சென்று குகனை அழைத்து வருக" என்று கூற, இலக்குவனும் “உள்ளே வருக" என அழைத்தான். குகன் அழகு திகழும் இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தண்டனிட்டு விழுந்து வணங்கினான். உடலினை வளைத்து வாயினைப் பொத்திக் கொண்டு பணிவுடன் நின்றான்.
தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான். 

(கங்கைப் படலம் 38:3-4)
(நாவாய் = ஓடம்)
இப்பகுதி மூலம் இராமனுக்கு, இலக்குவன் மூலமாக, குகனின் இயல்பும் சிறப்பும் கூறப்படுவதனை உணர முடிகின்றது. வள்ளுவர் கூறும்பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கு ஏற்பக் குகனின் பணிவு உணர்த்தப்படுகின்றது.
5.2.3 குகனின் பணிவுடைமை
இராமன், பணிவு கொண்ட குகனைத் தன்னருகில் அமரும்படி கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. அளவு கடந்த அன்பை வெளிப்படுத்திக் குகன், இராமனை நோக்கி, “தங்களுக்கு உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?" என்று கேட்டான்.
'இருத்தி ஈண்டு’ என்னலோடும். இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன.
 
(கங்கைப் படலம் 41 : 1-3)
(அருத்தி = அன்பு; திருத்து = பக்குவப்படுத்து)
இப்பகுதியால் குகன் கொண்டு வந்த பொருள்கள் தேன், மீன் மட்டுமல்ல, உயர்ந்த அன்பினையும் கொண்டு வந்துள்ளான் என்பதனை அறிய முடிகிறது.
இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, “குகனே ! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்" என்று குகனிடம் கூறினான்.
அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
(கங்கைப் படலம் 42)
இப்பகுதியால் உயர்ந்தவர்களிடத்தில் நாம் கொடுக்கும் பரிசுப் பொருள்கள் (தேன், மீன்) பெரிதல்ல, அவர்களிடத்தில் காட்டும் மதிப்பும் மரியாதையுமே பெரிது என்னும் பண்பினைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. உண்ணத்தகாத பொருளாயினும் அன்போடு தந்தால் பெரியோர்கள் ஏற்றல் வேண்டும் என்பதை இராமனின் பெருந்தன்மையால் அறியலாம்.
 நாளைவா என்னல்
இராமன், குகனை நோக்கி, "நாம் இன்று தவச் சாலையில் தங்கி, நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ, அன்பு நிறைந்த நின் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்திலே உவகையோடு இனிதாகத் தங்கி, விடியற் காலை நாங்கள் ஏறிச் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக!" என்றான்.
பொங்கும்நின் சுற்றத் தோடும் போய்உவந்து இனிதுன் ஊரில்
தங்கிநீ நாவா யோடும் சாருதி விடியல் என்றான்
 
(கங்கைப் படலம் 43:3-4)
இப்பகுதியில் தவச் சாலையில் தவநெறி நிற்பவரே இருத்தல் வேண்டும் என்பது உள்ளமைந்த செய்தியாக வெளிப்படுகிறது.
கார்மேக வண்ணனாகிய இராமன் கூறியவுடன் பேரன்புடைய குகன், “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாக உடையவனே ! உன்னை இந்தத் தவக் கோலத்தில் பார்த்தும் என் கண்களைப் பிடுங்கி (பறித்து) எறியாத கள்ளனாகிய நான், பெருந்துன்பம் அடைந்துள்ளேன். மேலும் இந்நிலையில் உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னால் முடிந்த அளவில் அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று வேண்டினான்.
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆனதுஐய செய்குவென் அடிமை என்றான் 

(கங்கைப் படலம் 44)
(ஈர்கிலா = பறிக்காத)
இப்பகுதியால் குகனின் மனவுணர்வும், செயலுணர்ச்சியும் வெளிப்படுவதனைக் காண முடிகிறது. தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற துடிப்புப் புலப்படுகிறது.
 இராமனின் நட்பு
குகனின் வேண்டுகோளைக் கேட்ட இராமன், தன் அருகில் நின்ற சீதை, இலக்குவன் ஆகிய இருவரின் திருமுகத்தையும் நோக்கி, அவர்கள் மனமும் ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்", என்று கூறினான். “கருணையினால் மலர்ந்த கண்களை உடையவனாகிய எவற்றிலும் இனிமையான நண்பனே ! நீ விரும்பியவாறே இன்று என்னோடு தங்கியிரு" என்று குகனிடம் கூறினான்.
கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்திஈண்டு எம்மொடு என்றான் 

(பாடல் - 18)
நம்முடன் ஒருவர் தங்கியிருக்க வேண்டுமானால் குடும்பத்தினரின் இசைவும் வேண்டும் என்பதை இராமன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
 குகனின் வருத்தம்
“மனுக்குலத்தின் (அரசகுலம்) வழி வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரத்தை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக" என்று குகன் கேட்டான். இலக்குவன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல, அதைக் கேட்டு இரங்கிய குகன் மிகவும் துன்பமுற்றுக் கூறலானான்: "பெரிய நிலத்தை உடையவளான பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லையே, ஈதென்ன வியப்பு" என்று கூறி. இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான். அன்புக்குரியவர் துன்பப்பட்டால், அன்புடையவர் வருந்துவர் என்பதைக் குகன் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
 இலக்குவன் கூற்று
குகன் கேட்க, இலக்குவன் பின்வருமாறு கூறினான் :
அயோத்தி மன்னன் தசரதன், அரச குல மரபுப்படி மூத்த மகன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்தான். கைகேயி தன் தோழி மந்தரை (கூனி)யின் சூழ்ச்சிக்குப் பலியானாள். தசரத மன்னனிடம், தான் சம்பராசுர யுத்தத்தில் உதவி செய்தற்காகத் தனக்கு அளித்த இரு வரங்களைக் கொடுக்குமாறு வேண்டினாள். தசரதன் உடன்பட்டான். அவ்விரு வரங்களில் ஒன்று தன் மகன், பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பது; மற்றொன்று இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது. தந்தையின் வாக்கைக் காப்பாற்ற இராமன் காட்டுக்குப் புறப்பட்டான்.
அப்போது, சீதையும் உடன் வர, யானும் சேர்ந்து மூவரும் வனவாசம் மேற்கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து வரும்போது இவ்வனத்தில் உன்னைக் கண்டோம்.
இராமன் இட்ட கட்டளையைச் சிர மேற் கொண்ட நிலையில் கண்ணீர் பொழியும் கண்களையும், வாடுகின்ற உயிரினையும், சோர்ந்த மனத்தினையும் கொண்ட குகன், சீதையோடு இருக்கும் கார்மேக வண்ணனாகிய இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாமல், தனது எண்ணத்தைச் சொன்னான்:
“நாங்கள் காட்டில் வாழ்ந்தாலும் செல்வத்திலும் வலிமையிலும் குறைவற்றவர்கள். ஆனால் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். எங்களை உறவினராகக் கருதி எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கியிருங்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம்”.
செய்ம்முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இம்முறை உறவுஎன்னா இனிதுஇரு நெடிதுஎம்ஊர்

(கங்கைப் படலம் 54:3-4)
“தேவர்களும் விரும்பி உண்ணக் கூடிய தேனும், தினையும் உள்ளன; மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போன்ற அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்கு இக்காடும், நீராடுவதற்குக் கங்கையும் இருக்கின்றன. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக." என்றும் தெரிவித்தான் குகன். 
கான்உள புனல்ஆடக் கங்கையும் உளதுஅன்றோ
நான்உள தனையும்நீ இனிதுஇரு நாடஎம்பால்

(கங்கைப் படலம் 55:3-4)
"தேவர்களைக் காட்டிலும் மன வலிமையும், உடல் வலிமையும் கொண்டு வில்லேந்திப் போர் புரியும் வீரர்கள் (5லட்சம் வேடர்கள்) என்னிடம் உள்ளனர். எங்கள் குடியிருப்பில் நீ ஒரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவோம். அதைக் காட்டிலும் வேறான சிறப்பு எங்களுக்கு இல்லை" என்று கூறினான் குகன்.
உய்குதும் அடியேம் எம்குடிலிடை ஒருநாள்நீ
வைகுதி எனின்மேல்ஒர் வாழ்வுஇலை பிறிதுஎன்றான் 

(கங்கைப் படலம் 57:3-4)
(உய்குதும் = கடைத்தேறுவோம்)
"உடுத்துக் கொள்ள மெல்லிய ஆடை போலும் தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன; உறங்குவதற்குத் தொங்கும் பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறு குடிசைகள் உள்ளன. வில் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன.
நீ விரும்பும் பொருள் வானத்தில் இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து சேர்ப்போம்" என்று தொடர்ந்து பேசினான் குகன்.
கலிவானின் மேல்உள பொருளேனும்
விரைவோடு கொணர்வேமால்
 
(க.ப 56)
(கொணர்வேம் = கொண்டு வந்து கொடுப்போம்)
விருந்தினரைத் தம் உறவினரைப் போல நேசிக்கும் தன்மையைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குஎன்னும் குறள் நெறிக்கேற்ப, குகன் இராமனிடம் கொண்ட அன்பிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதை அறிகிறோம்.
 இராமனின் வாக்குறுதி
குகன் வேண்டுகோளைக் கேட்ட இராமன், மிகவும் மன நெகிழ்ச்சியோடு சிரித்தான். “வீரனே ! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள புனிதமான முனிவரை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று குகனிடம் இராமன் கூறினான்.
.... ...... ...... வீரநின் னுழையாம்அப்
புண்ணிய நதிஆடிப் புனிதரை வழிபாடுஉற்று
எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதுஎன்றான்

(க.ப 58:2-4)
(நின்னுழை = நின் இருப்பிடம் ; புனிதர் = முனிவர்)
எளியவர் ஆயினும் அன்போடு இருந்தால், பெரியோர்கள் தம் நிலையில் இருந்து இறங்கி அன்பும் அருளும் செலுத்துவர் என்பது, இராமன் குகனிடம் கூறிய செய்தியால் உணர்த்தப்படுகிறது. பெரியோர்கள், அன்பிற்காக எதனையும் பொருட்படுத்த மாட்டார்கள் என்னும் கருத்தை இதன் வாயிலாக அறிய முடிகிறது.
 கங்கையைக் கடத்தல்
இராமனின் கருத்தை அறிந்துகொண்ட குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும்
படகில் இனிதாக ஏறினான்.
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமைஎல்லாம் ‘அருளுதிர் விடை’என்னா
இந்துவின் நுதலாளாடு இளவலொடு இனிதுஏறா

(க.ப 59:2-4)
(நயனம் = கண்; இந்து = சந்திரன்)
இராமன் உண்மையான உயிர் போன்றவனான குகனை நோக்கிப்படகை விரைவாகச் செலுத்துக என்றான். உடனே படகு விரைவாகவும், இள அன்னம் நடப்பதைப் போல அழகாகவும் சென்றது. படகில் செல்லும் போது சீதையும் இராமனும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் நின்று கொண்டிருந்த முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பில் இட்ட மெழுகுபோல் ஆனார்கள்.
விடுநனி கடிதுஎன்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் ..................................... ..............................
இடர்உற மறையோரும் எரிஉறு மெழுகுஆனார்

(க.ப.60:2-4)
அன்புடையார்களைப் பிரிவது என்பது மிகவும் வருத்தம் தரக் கூடியதாகும்.
கங்கையின் மறுகரையை அடைந்த இராமன் குகனை நோக்கி, ‘சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியினைக் கூறுக’ என்று கேட்டான். இராமனிடம் கொண்ட பக்தியினால் தனது உயிரையும் கொடுக்கும் உள்ளன்பு உள்ளவனான குகன். இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! அடிமைப்பட்ட நாய் போன்றவனாகிய நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது" என்றான்.
சித்திர கூடத்தின் செல்நெறி பகர்என்ன
பத்தியின் உயிர்ஈயும் பரிவினன் அடிதாழா
உத்தம அடிநாயேன் ஓதுவது உளதுஎன்றான் 

(க.ப. 63: 2-4)
"நாய் போன்றவனாகிய நான் உங்களுடன் வரும் பேறு பெறுவேனானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும் அறிய வல்லவனன் ஆகையால், தக்க வழியைக் காட்டுவேன். உண்பதற்கு இனிய நல்ல காய், கனி, தேன் முதலானவற்றைத் தேடிக் கொண்டு வந்து தருவேன். தாங்கள் விரும்பிய இடங்களில் தக்க குடில்கள் அமைத்துக் கொடுப்பேன். தங்களை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிய மாட்டேன்" என்று குகன் கூறினான்.
நெறிஇடு நெறிவல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனிகாயும் நறவுஇவை தரவல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒருநொடி வரைஉம்மைப்
பிறிகிலென் உடன்ஏகப் பெறுகுவென்எனின் நாயேன்

(க.ப. 64)
(நேடு = தேடு; நறியன = நல்லன; நறவு = தேன்)
குகன், தன் பிரிவாற்றாமையை உணர்த்துவதை இதன் மூலம் அறியலாம்.
மேலும் குகன் தொடர்ந்து பேசினான், "தீய விலங்குகளின் வகைகள் யாவும் தங்களை நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயன ஆகிய மான், மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். விரும்பிய பொருளைத் தேடிக் கொண்டு கொடுப்பேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்" என்றான்.
தீயன அவையாவும் திசைசெல நூறி
தூயன உறைகானம் துருவினென் வரவல்லேன்
................. இருளினும் நெறிசெல்வேன்
 
(க.ப. 65)
(நூறி = அழித்து; துருவி = ஊடுருவி)
"மற்போரில் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! மலைப் பகுதி வழியே சென்றாலும் அங்குக் கிடைக்கும் கிழங்கு, தேன் முதலியன கொண்டு வந்து தருவேன். வெகு தொலைவில் கிடைக்கும் நீர் கிடைத்தாலும், எளிதில் உடனே கொணர்ந்து தருவேன். பல வகையான விற்களைப் பெற்றுள்ள நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். இராமனே! உன் மலர்போலும் திருவடியை ஒருபோதும் பிரிய மாட்டேன்" என்றும் குகன் கூறினான்.
 குகனைத் ‘தம்பி’ எனல்
குகன், இராமனை நோக்கி, “என் படைகள் யாவையும் கொண்டுவந்து காவல் காத்து நிற்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும், உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து விடுவேன் என்று கூறினான். மேலும் சிறிது நேரங்கூடப் பிரியாமல் இருப்பேன்" என்றான்.
இராமன் உடனே, “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, அழகுடைய நெற்றியைப் பெற்ற சீதை, உனக்கு உறவினள், குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது" என்றான். மேலும், “உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன் உடன் பிறந்தவர்களாக நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்த்து, உடன் பிறந்தவர்கள் ஐவராகி விட்டோம்" என்றான். “இனி நீ உன் இருப்பிடம் சென்று அங்குள்ள மக்களைக் காக்க வேண்டும்" என்று கட்டளை இட்டான்.
அதனைக் குகன் மறுக்க முடியாமல் ஏற்றுச் செயல்பட்டான்.
முன்புஉளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா
அன்புஉள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர்ஆனோம்
 
(க.ப 69:3-4)
இப்பகுதி அன்பால், உடன்பிறப்பு விரிவடையும் தன்மையைப் புலப்படுத்துகிறது.
 குகன் விடைபெறல்
இராமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெற்றுக் கொண்டான் குகன். பின்பு இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் மரங்கள் அடர்ந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......