இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்


இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்
ITAM – 31 – அற இலக்கியமும் காப்பியமும்

திருக்குறள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் பதினொன்று (திருக்குறள், நாலடியார்நான்மணிக்கடிகைஇனியவை நாற்பதுஇன்னா நாற்பதுதிரிகடுகம்ஆசாரக்கோவைசிறுபஞ்சமூலம்பழமொழிமுதுமொழிக் காஞ்சிஏலாதி ) . இவற்றுள் முதன்மையான அற நூல் திருக்குறள். திருக்குறள் அறம்(38) பொருள் (70) இன்பம் (25) என்னும் மூன்று பிரிவுகளையும்  குறள் வெண்பா என்னும் பாவகையால் 1330 ஈரடிச் செய்யுள்களையும் கொண்டது. இந்நூல் மதச் சார்பு அற்ற அக, புற வாழ்வியலுக்கான வழிகாட்டி நூலாக இலங்குவதுடன். உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்பெறுகிறது,. தமிழரின் அறிவு மரபின் உச்சம் திருக்குறள் என்று கூறலாம். இந்நூலின் சிறப்பு கருதி இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


உழவு
1.   சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
உழுவதைத் துன்பம் என்று கருதிப் பிற தொழில்களைச் செய்து அலையுமாயின் உலகம் உணவுக்காக ஏருடைய உழவரையே நாடும். அதனால் வருத்தமுறினும் தொழில்களுள் உழவே தலையானதாகும்.
2.   உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
     உழவுத் தொழினைத் செய்ய முடியாமல் பிற தொழில்கள் மேற்கொள்வானைத் தாங்குவதால் உழுவார் உலகமாகிய தேர்க்கு அச்சாணி போன்றவராவர்
3.     உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
     உழவு செய்த அதனாற் பெறும் உணவைத் தாமும் உண்டு பிறரும் உண்ணக் கொடுத்து வாழ்பவரே தமக்குரிய வாழ்க்கையை வாழ்பவர். பிறரெல்லாம் உணவுக்காகப் பிறரைத் தொழுது அதனாற் பெற்றதை உண்டு வாழ்பவர்.
4.   பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
     நெற்கதிரால் பெற்ற செல்வத்தால் பலர்க்கு நிழல் செய்து வாழும் உழவர் வேந்தர் பலரின் குடைநிழல் செய்யும் இவ்வுலகத்தைத் தம் அரசின் குடைநிழலின் கண் கொண்டு வரும் வலிமையினை உடையவர்.
5.   இரவார் இரப்பார்க்கொன்று ஈவார் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
     தம் முயற்சியால் உழவுத் தொழில் புரிந்து வாழும் இயல்பினை உடையவர் இரந்து வாழமாட்டார். தம்மை இரப்பவர்க்கு அவர் வேண்டிய ஒன்றை ஒளிக்காது வழங்குவார்.
6.   உழவினார் கைம்மடக்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கு நிலை
     உழவுத் தொழில் செய்வார் அத்தொழிலைத் செய்யாது கைவிடுவாராயின் யாவராலும் விரும்பப்படும் உணவு கிடைக்காது. எல்லாவற்றையும் துறந்துவிட்டோம் என்று கூறுவாரும் அத்துறவற நெறியில் தொடர்ந்து நிற்றல் இயலாது.
7.   தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேணாடாது சாலப் படும்
     நிலத்தினை உழுபவன் ஒருமடங்கான புழுதி காலமடங்காகும் அளவு காயவிடுவானாயின் கைப்பிடியளவு எருவும் இடவேண்டாமல் மிகுதியாக விளையும்.
  
8.   ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
     ஏர் கொண்டு உழுவதைக் காட்டிலும் எரு இடுதல் நல்லது; எனவே இவ்விரண்டும் செய்து களையை நீக்கிய பின் பயிரைக் காத்தல் அப்பயிர்க்கு நீர் பாய்ச்சுதலை விட நல்லது.
9.   செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்
     நிலத்துக்குரியவன் நாள்தோறும் சென்று பார்த்துத் தானே உரியன செய்யாவிடின் அந்நிலம் அவனால் அன்பு செய்யப் பெறாத இல்லாளைப் போல அவனைத் தன்னுள் வெறுத்து ஊடுதல் செய்யும்.
10. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
     எம்மிடம் ஒன்றும் இல்லை என்று கூறிச் சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலம் என்ற நல்ல பெண் அவர்களை இகழ்ந்து சிரிப்பாள்.
                
ஒழுக்கமுடைமை
1.   ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
     ஒழுக்கம் உடையவராக வாழ்தல் எல்லார்க்கும் பெருமையைத் தருவதால் அஃது உயிரைவிட உயர்ந்தாகக் கொண்டு போற்றப்பட வேண்டும்.
2.   பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
     ஒழுக்கம் உடைமையை எதனாலும் அழிவுறாமல் ஒருவன் வருந்தியும் பேணிக் காப்பானாக. அறங்கள் யாவற்றையும் ஆராய்ந்து பார்ப்பினும், அவ்வொழுக்கமே சிறந்து துணையென்பது விளங்கும்.
3.   ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிற்பாய் விடும்.
     ஒழுக்கம் உடையவராக இருப்பதே சிறந்த குடிப்பிறப்பிற்குரிய பண்பாகும். அவ்வொழுக்கமுடைமையிலிருந்து தவறுதல் அவரை அறிவிற்குறைந்த விலங்குப் பிறப்பாகி விடும்.
4.   மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
     ஒருவன் தான் ஓதும் வேதத்தை மறந்தாலும் மீண்டும் அதனைப் படித்து நினைவிற்கொள்ள முடியும். ஆனால் அவ்வேதம் ஓதும் பார்ப்பான் தன் பிறப்புக்குரிய ஒழுக்க நெறியிற் குறைவுபடுவானாயின் தன்னை மீண்டும் பழையபடி ஆக்கிக் கொள்ள இயலாது.
5.   அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
     பிறர் ஆக்கம் கண்டு பொறுக்காதவனுக்கு ஆக்கம் இல்லாதது போல ஒழுக்கமில்லா தவனுக்கு உயர்வு இல்லையாம்.

6.   ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
     ஒழுக்கம் உடைமையிலிருந்து நீங்குவதால் உண்டாகும் குற்றத்தினை அறிந்து சான்றோர் அவ்வொழுக்கம் உடைமையிலிருந்து குறைய மாட்டார்.
7.   ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
     ஒழுக்கமுடைமையால் எல்லாரும் உயர்வினை அடைவர். அவ்வொழுக்கம் உடைமையிலிருந்து தவறியவர். அடையக்கூடாத பெரும்பழியை அடைவர்.
8.   நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
     நல்லொழுக்கம் வாழ்க்கையின் எல்லா நன்மைகளுக்கும் விதையென அமையும். தீயொழுக்கம் வாழ்க்கை முழுமைக்கும் துன்பமே தருவதாய் அமையும்.
9.   ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
     ஒழுக்கம் உடையவர் தீயசொற்களைத் தம் மனத்தால் நினையாமல் வாயால் தவறியும் சொல்லுதல் நிகழாது.
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
     உலகத்தில் வாழும் நல்ல பண்புடையாரோடு பொருந்த வாழ்தலைக் கற்றுக் கொள்ளாதவர் பலதுறை நூல்களைக் கற்ற அறிவினராயினும் அறிவாற்றவரே ஆவர்.
காலமறிதல்
1.   பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
     தன்னைவிட வலிமையுடைய கோட்டானைக் காக்கை பகற்பொழுதில் வென்று விடும். அதனால் பகையை வெல்லக் கருதும் வேந்தர்க்குக் காலமறிந்து ஒழுகும் திறன் வேண்டும்.
2.   பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
     செயலைச் செய்தற்குரிய காலத்தை அறிந்து செயல்படுத்ல் ஒருவர்க்கு அவருடைய செல்வம் அவரை விட்டு நீங்காது பிணிக்கும் கயிறாகும்.
3.   அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
     செயலைச் செய்தற்குரிய கருவிகளோடு அதனைச் செய்தற்குரிய காலமும் அறிந்து செய்தால் முடித்தற்கரிய செயல்களும் உள்ளனவா?
4.   ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
     ஒருவன் காலமறிந்து, செயலைச் செய்தற்குரிய இடமும் அறிந்து செய்வானாயின், அவன் இவ்வுலகத்தையே ஆளக்கருதியினும் அஃது அவனுக்குக் கைகூடும்.
5.   காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
     உலகம் முழுவதும் கையப்படுத்த விரும்பும் அரசர் அதற்குரிய வலிமையைப் பெற்றிருந்தால் அதற்குரிய காலம் வருமளவும் பொறுத்திருப்பர்.
6.   ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
     மன எழுச்சி மிக்கவன் காலம் கருதி ஒடுங்கி இருப்பது போரிடும் ஆட்டுக்கடா தன் வலிமை முழுதும் செலுத்தப் பின்னவாங்குதல் போன்றது.
7.   பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
     அறிவாற்றல் மிக்கவர். பகைவர் தமக்குத் தீமை செய்த காலத்து அவரை வெளிப்படப் பகைத்துக் கொள்ளார். அவரை எதிரிக்கத் தக்க காலம் பாரத்து மனத்தின் கண் கறுவு கொள்வர்.
8.   செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
     பகைவரை வெல்லுதற்குரிய காலம் அல்லாத பொழுது, வலிமையால் மிக்க அவரைத் கண்டவிடத்துப் பணிந்து ஒழுகுக. தக்க காலம் வந்த போது அவரைத் தலைகீழாக வீழ்த்துக.
9.   எய்தற் கரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
     கிடைத்தற்கு அரிய காலம் கிடைத்த போது அதுவே செய்தற்கு அருமையான செயலைச் செய்தற்குரியது என அறிந்து அக்காலம் கழியும் முன் அதனை விரைந்து செய்க.
10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
     தனக்குரிய காலம் வரும் வரையில் கொக்குப் போலச் செயலின்றி ஒடுங்கி இருக்க வேண்டும். அக்காலம் சேர்ந்த விடத்து அக்கொக்கு விரைந்து மீனைக் குத்திக் கொள்வதைப் போலச் செயற்பட வேண்டும்.
நட்பு
1.   செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
      இவ்வுலகில் ஒருவன் பொற்றுக் நட்புக் போல் அரியவையாக உள்ளவை யாவை? அதுபோலப் பகை வராமல் காக்கும் பாதுகாப்பை ஒத்த செய்ல்களாக உள்ளவை யாவை?
2.   நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
     நற்பண்பு உடையவர்களின் நட்பு நாள்தோறும் கூடி வரும் பிறையைப் போல வளர்வது. பேதைகளோடு கொள்ளும் நட்பு மதி தேய்ந்து வருவது போன்று குறைவது.
3.   நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
     பயில்தோறும் நூலின் சிறப்பு மேன்மேலும் விளங்குதல் போலப் பழகுந்தோறும் பண்புடையவர் நட்பு மேன்மேலும் உயர்வு தரும்.
4.   நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
நட்பு கொள்வது என்பது சிரித்து மகிழ்தற்காக அன்று. தன்னோடு பழகுவாரிடத்து அளவுக்கு மீறிய செய்கை தோன்றுமானால் அதனைக் கடிந்துரைப்பதற்கு ஆகும்.


5.   புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
     உள்ளம் கலந்து நட்புக்குப் பல காலம் நெருங்கிப் பழகுதல் வேணாடா. இருவருக்கும் ஒத்த மன உணர்வே நீங்காத நட்பினை உரியதாக்கும்.
6.   முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
     ஒருவரை ஒருவற் நேரில் காணும்போது அகம் மலராது முகம் மட்டும் மலர்வது நட்பாகாது. மனம் மலர்ந்து உவகை கொள்வதே நட்பாகும்.
7.   அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
     தன்னோடு நட்புக் கொண்ட ஒருவன் கேடு தரும் வழிகளில் செல்லும் போது அவனை அவற்றினின்று விலக்கி, நல்ல நெறிகளின் பால் எப்போதும் நெலுத்தி, அழிவு வந்த போது அவனோடு துன்பத்தைத் துய்ப்பதே நட்பாகும்.
8.   உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
     பலரிடையே ஒருவனுக்கு அவனுடைய ஆடை அவிழுமாயின் அவன் கைகளே விரைந்து சென்று அவ்விழிவைத் தடுப்பது போல ஒருவனுக்கு வந்த துயரைத் துடைப்பது நட்பாகும்.
9.   நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
     நட்பு இவ்விடத்தே கொலுவிருக்கிறது என்று சொல்லத் தகும் நிலை யாதெனில் நண்பனோடு மாறுபாடில்லாமல் அவனைத் தளராமல் தாக்குவதேயாகும்.
10. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
     எமக்கு இவர் இத்தகையவர். இவருக்கு நாம் இத்தன்மை உடையேம் என்று ஒருவரை ஒருவர் பிறர் அறியப் புகழ்ந்து பேசினாலும் நட்பின் பொலிவழியும்.
பிரிவாற்றாமை
1.   செல்லாமை உண்டேல் உனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.
     நீ என்னைப் பிரிந்து செல்லாமை உண்டென்றால் அதனை எனக்குச் சொல்க. அஃதில்லாது, நீ பிரிந்து சென்று விரைந்து வருவது குறித்துச் சொல்வது உண்டென்றால் அதனைக் கேட்டு உயிர் வாழ்ந்திருப்பாரிடத்துச் சொல்.
2.   இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
     முன்னாளில் அவர் நம்மைப் பிரியாது நோக்கத்தோடு பார்த்த பார்வை நமக்கு இன்பம் தந்தது. இன்று அவர் நம்மோடு சேர்ந்திருந்தும், பிரிவரோ என்ற அச்சத்தால் அவர் பார்வை துன்பம் உடையதாயிற்று.
3.   அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓரிடத்துண்மை யான்.
     பிரிவினால் வரும் துன்பங்களை அறிந்த காதலரும், ஒரு சமயம் பிரிவது குறித்து எண்ணுவர். ஆதலால் அவர் முன்பு பிரியமாட்டேன் என்று கூறியதை நம்புதல் இயலாது.

4.     அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
     என்னைக் கண்டபோதே எனக்கு அன்புசெய்து எக்காலத்தும் உன்னைப் பிரியேன். அது குறித்து அஞ்சாதே என்றவர் இப்போது பிரவாரானால், அதனை நம்பிய எம்மிடம் தவனுண்டா? அவ்வுறுதி கூறிய அவரிடத்து அன்றோ தவறு உளது.
5.   ஓம்பின் அமைத்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
     என் இயிரைப் பாதுகாக்க விரும்பினால் அவர் என்னைப் பிரியாது பாதுகாப்பாராக. அவ்வாறு அன்றி அவர் பிரிவாராயின் என் உயிர் நில்லாதாகலின் அவரோடு சேர்ந்து வாழ்தல் அரிது.
6.   பிரிவுரைக்கும் என்கண்ண ராயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
     நம் நிலை கருதாது பிரிதல் பற்றி நம்மிடத்தே நேரே கூறும் இரக்க மற்றவராக நம் தலைவர் இருப்பின், அவர் திரும்பி வந்து நமக்கு அன்பு செய்வார் என்ற ஆசை அரியதாகும்.
7.   துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
     தலைவன் என்னைப் பிரிந்து சென்றமையினை நான் யார்க்கும் சொல்லாவிடினும் என் முன்கையிலிருந்து தாமே கழலும் வளைகள் பலரும் அறியக் கூறாவோ?
8.   இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப பிரிவு.
     நம் இனத்தவர் இல்லாத ஊரில் வாழ்தல் இன்னாததாகும். அதனைவிட இன்னாதது காதலரைப் பிரிந்து வாழ்தல்.
9.   தொடிற்சுடின் அல்லதுகாமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
     நெருப்பு தன்னைத் தொட்டால் மட்டுமே சுடுவது. அந்நெருப்பு காமம்  நெருங்காமல் விட்டு நீங்கினால் சுடும் வல்லமையுடையதா?
10. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றி
பின்இருந்து வாழ்வார் பலர்.
     தாங்க முடியாத பிரவைத் தாங்கியிரந்து பிரிவினால் உண்டாக்கும் துன்பங்களை நீங்கிக்கொண்டு, பிரிந்த காலத்தில் உயிர்விடாது பொறுத்திருந்து வாழ்வோர் உலகில் பலராகலாம். நான் அப்படி இல்லை.
    


நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி;[பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

 பெரியாரைப் பிழையாமை

1.   பொறுப்பரென்று எண்ணி புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
     பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து மாசு நீங்கிய பெரியோரிடத்திலும் அவர் வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல் வேண்டும். அவர் உள்ளம் அதனால் வருந்தியபின் ஆராவரித்து ஒலிக்கும் அருவிகளை உடைய அழகிய மலைகள் பொருந்திய சிறந்த நாடனே. அவ் வருத்தத்தால் உண்டாகுந் தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும் இயலாது.
2.   பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்
     பொன்னையே விலையாகக் கொடுத்தும் நட்புச் செய்தற்கு அரியரான பெரியோர்களைப் பொருள் செலவில்லாமலே அவரை நட்புச் செய்து கொள்ளும் நிலை பெற்று இருந்தும் சிறந்த பண்புடைமை இல்லாத அறிவினை உடைய பேதையார் ஆ. தம்முடைய வாழ்நாட்களைப் பயன் இல்லாத வீண் காலமாகக் கழிக்கின்றரே.
3.   அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால – நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
     மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும் மேன்மக்களாகிய பெரியோர்களால் மதித்தற்கு உரியனவாகும்; நன்மையை உணர்தல் இல்லாத ஒழுக்கம் அறியாக் கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும் ஏத்துரையும் தெளிந்த நூலறிவினை உடையோர் ஒரு பொருளாக மனத்துள் கொள்ளமாட்டார்கள்.
4.   விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
     படம் விரித்தலையையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடிய ஒலிச் சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மை உடைய பெரியோர் சீறுவராயின், ஏனைய சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.
5.   எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று – தம்மை
அரியரா நோக்கி அறன்றியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்
     எமது தகுதியை நீவிர் அறிதீர் இல்லை; எம்மைப் போன்ற தகுதியுடையார் பிறர் ஈண்டு இல்லை என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது. தம்மை அருமை உடையவராகக் கருதி, அறம் உணரும் சான்றோர் பெரியர் என்று மதித்து ஏற்றுக் கொள்ளுதலே பெருமை ஆகும்.
6.   நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை – விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
பெரிய கடலின் குளிர்ந்த துறையை உடையவனே! சிறியோர் நட்புக் காலை நேரத்தின் நிழல் போலக் குறைந்து கெடும்.அவ்வாறு குறைந்து கெடுதல் இல்லாமல்,  மாலை நேரத்தின் நிழல்போல, பழைமை தொட்டு வரும் புகழினை உடையரான பெரியோர் நட்பு வளர்ந்து பெருகும்.
7.   மன்னர் திருவும் மகளிர் வழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா – துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு.
     அரசர் வளமும் மகளிரின் எழுச்சி அழகும் அவர்களுடன் நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர். நேயம் என்னும் அந் நெருக்கம் அல்லது அதற்குத் தகுதி உடைமை வேண்டா. தெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ள குளிர்ச்சியான மரங்கள் எல்லாம் தம்மிடம் வந்தடைந்தார் அனைவருக்கும் வேறுபாடு இன்றி நிழல் இடம் ஆகும்.
8.   தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும் – பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும்.
       நூற்பொருள்களை விளங்கத் தெளியும் தெளிவில்லாதவர் இடத்தும், அவரைப் பிரிய அப் பிரிவு பெரிய நினைவுத் துன்பத்தை உண்டாக்கும். வளங்கெடாத கருநிறமான பெரிய கழிக்கரையை உடையோனே, ஆதலால் பெரியோரிடத்து அன்றிப் பிறர் யாரிடத்திலும் நேயங்கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.
9.   கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும் – ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
     கற்றற்குரிய நூல்களைக் கற்காமல் கழிந்த நாட்களும், கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பால் செல்லாது நின்ற நாட்களும் இயன்ற பொருள்களை உரியவர்களுக்கு உதவாமல் நீங்கிய நாட்களும் சொல்லுமிடத்து நல்லியல்புடைய பெரியோர்களிடம் உண்டாக மாட்டா.
10. பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் – தெரியுங்கால்
செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.
கல்வி கேள்விகளில் பெரியாருடைய பெருமைக் குணமாவது யாண்டும் தாழ்வுமையாய் இருத்தல். வீடுபேற்றிற்கு உரியரான மெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பானது மனமொழி மெய்கள் இடக்கமாக இருத்தல். ஆரயுமிடத்து தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களை நீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும் செல்வரே ஆவர்.

பழமொழிநானூறு

பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடவுள் வாழ்த்துப் பாடலுடன் 401 பாடல்களைக் கொண்டது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்வதற்கு அந்நாட்டு மொழியுள் வழங்கும் பழமொழிகள் பெரிதும் பயன்படுகின்றன. பழமொழிகளே அந்நாட்டு மக்கள்பால் அடிப்பட்டுவரும் மன இயல்புகளை எடுத்துக்காட்டுகின்றன.  பண்பாட்டை உணர்த்தும் தமிழ்நாட்டில் வழங்கி வந்து பழமொழிகளைத் திரட்டி, ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு தாம் கருதிய பொருளை வெண்பா யாப்பில்   400 செய்யுள்களில் 400 பழமொழிகளை அமைத்து முன்றுரையறையனார் இயற்றியுள்ளார்.  பழமொழி நானூறு என்னும் தனிப்பெருஞ் சிறப்புடைய இவ்வுயர்நூல் இரண்டு வகையில் பயில்வாருக்கு இன்பந்தந்து நிற்கிறது. முதலாவது, நூலகத்தே பயின்று வரும் பழமொழிகளின் பொருட்சிறப்பும் நாட்டில் வழங்கிவரும் அப்பழமொழிகளால் உணரலான தமிழ் மக்களின் இயல்பும் பிறவும் அறிதல். 


கல்வி
1.   ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ – ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.
          வழியை மிகவும் கடந்துபோக விட்டுவிட்டுப் பின், பின்தொடர்ந்து சென்று வரிப்பணம் வாங்கியவர் எவரும் இல்லை. ஓடத்தைச் செலுத்திக் கரையிலே கொண்டு விட்டபின் முறையான கூலி பெற்றவரும் எவருமில்லை. அவைபோலக் கற்கத் தகுதியான இளமைப் பருவத்திலே கற்காத ஒருவன், முதுமையில் கல்வியைப் போற்றுபவனாவான் என்பதும் பொருந்தாது ஆகும்.
பழமொழி – சுரம்போக்கி உலகுகொண்டார் இல்லையே; இல்லை மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்.
2.   சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிச்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.
          தம்மினும் கல்வியுடையார் முன்னர்ச் சென்று சொல்லும் பொழுதிலெல்லாம் சொல்வதிலேயே தளர்ச்சியானது தோன்றலாம். அதனால் சோர்வு அடையவே கூடாது. புதிதாக ஒன்றைக் கற்குந்நொறும், தான் கல்லாதவன் என்று கருதி அதனைக் கற்கும் வழியினை நினைத்து இரங்கி மனம் ஒருமைப்பட அது ஒன்றையே சிந்தித்து, வருந்தியாயினும் அந்த ஒன்றை அறிய முறபட வேண்டும். இப்படியாவதனால், புதிதாக ஒவ்வொன்றையும் கற்றும் தொறும் தான் அதனை முன்னர் கல்லாத தன்மை தோன்றும் என்க.
 அறிதோறும் அறியாமை கண்டற்றால் , கல்வி கரையில் கற்பவர் நாள் சில.
பழமொழி – கற்றொறுத்தான் கல்லாத வாறு.
3.   விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கம்இன்று என்றனைத்தும் தூக்கி – விளக்கு
மருள்படுவ தாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்
          மலை நாடனே! விள்க்கு ஒளி அற்று இருக்கிறது என்று கருதியே, அதற்குரிய நெய் முதலியவற்றை ஒருவர் பொருள் கொடுத்து வாங்கி இட்டு, அதனை விளக்கம் உடையதாக்கிக் கொள்கிறார்கள். அப்படி ஏற்றிய விளக்கு துளக்கமின்றி மங்கலாக எரிவதாயின் அதனால் பயன் என்ன? யாரும் பொருளைக் கொடுத்து இருளை வாங்குவார்களோ?
பழமொழி – பொருள் கொடுத்துக் கொள்ளார் இருளை.
4.   ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்
          கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர்களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடே இல்லையாகும். அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடுகளும் ஆவதில்லை. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அங்கனமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக்கட்டுச் சோறு கொண்டு போக வேண்டியது இல்லை. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
பழமொழி – அற்றுணா வேண்டுவது இல் – வழிக்கு உதவும் கட்டுச்சோறு.

5.   உணற்(கு) இனிய இன்னீர் பிற(து) உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் – கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதித்
கற்றலின் கேட்டலே நன்று.
          உண்ணுதற்கு இனிமையாக இருக்கும் இனிதான தண்ணீர் இந்தக் கிணற்றுத் தவிர வேறு எங்கும் கிடையாது என்று கருதும் கிணற்றினுள்ளேயிருக்கும் தவளை அதனைப் போல அறிவுடையோர் என்றும் ஆகமாட்டார்கள். நூல்களை முழுதுமாகப் பகல் எல்லாம் வெறுப்பில்லாமல் இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும், அவற்றைத் தக்க ஆசிரியரிடம் முறையோடு பாடங்கேட்டு அறிந்து கொள்ளுதலே நன்மையானதாகும்.
பழமொழி – கற்றலின் கேட்டலே நன்று.
6.   உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்
          கரிகாற் பெருவளத்தானிடம் இரு முதியவர்கள் ஒரு வழக்கினைத் தீர்த்துக்கொள்ள வந்தனர். அவனுடைய இளமையைக் கண்டதும், இவன் இளமை பருவத்தான், சொல்லும் வழக்கிலே முடிவினைக் காண முடியாதவன் என்று கருதினர். அதனை அறிந்த அவன், நரைமயிரை முடிந்தவனாகத் தன்னை முதியவன் போல ஒப்பனை செய்து கொண்டு வந்தமர்ந்து, அப்படிச் சொன்னவர்கள் மகிழுமாறு, அவர்கள் வாக்கு மூலங்களைக் கேட்டு நியாயம் வழங்கினான். இதனால், குலத்துக்கு உரிய அறிவுச் செழுமை கற்று அறியாமலேயே, இயல்பாக ஒருவனுக்கு வந்து படியும் என்று அறிதல் வேண்டும்.
பழமொழி – குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.
7.   புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் – நலமிக்க
பூனம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்
நன்மைகள் மிகுதியாக உடைய, அழகிய நீர்வளம் மிகுந்த ஊருக்கு உரியவனே! பாம்பின் கால்களை அதற்கு இனமான பாம்புகளே நன்றாக அறியும் திறன் உடையன. அதுபோலவே, அறிவுத்திறத்தால் மிக்கவர்களுடைய அறிவின் செழுமையை அறிந்து கொள்ளுதல், அவரைப் போன்ற அறிவால் மிகுந்தவர்களுக்கே முடிவதாகும். அறிவுச் சிற்ப்பில்லாத சாதாரண மக்களுக்கு அவர் சிறப்பை அறிந்து கொள்ளவே முடியாது.
பழமொழி – பாம்பறியும் பாம்பின் கால்.

8.   நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் – நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயியாலே போழ்ப அயில்.
            காட்சிக்கு இனியதாகத் தோன்றுகின்ற மயில்கள் ஆடிக்கொண்டிருக்கின்ற, பெரிய மலைகளையுடைய வெற்பனே! எஃகினை எப்பொழுதுமே எஃகினைக் கொண்டேதான் பிளக்கலாம். அதைப்போலவே, நல்லவர்களின் நல்ல தன்மையை உணரவேண்டுமானால் அவர்களைவிட நல்லவர்களே அதனை முறையாக உணரக்கூடியவர்கள். தீயவர்கள் ஒரு போதும் அதனை உணரவே மாட்டார்கள்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல்
பழமொழி – அயிலாலே போழ்ப அயில் – வைரத்தை வைரத்தால் அறுப்பது போல்
9.   கற்(று) அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் – தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்த்தளும்பல் இல்.
பாறைக் கல்லிலே அருவிகள் வீழ்ந்து ஒலி முழங்கிக் கொண்டிருக்கின்ற அழகிய மலைநாடனே! கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவரானவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களுடைய அறியாமையான தன்மையை மறந்து விட்டுத் தம்மைப் புகழ்ந்து தெளிவாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். நீர் நிறைந்த குடம் தளும்புவது இல்லை, குறை கடமே என்றும் தளும்பும் அல்லவா!
பழமொழி – நிறைகுடம் நீர்த்தளும்பல் இல்.
10. விதிப்பட்ட  நாலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாக செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.
             கற்க வேண்டிது என விதிக்கப்பட்ட அற நூல்களைக் கற்று உணர்ந்து, அவற்றிலே கூறப்பட்ட நெறிகளுக்கு மாறுபாடு இல்லாதவராகவும் விளங்குபவர். அந்நூலுக்கு மாறாக எழுந்தவர்களின் நூல்களை எல்லாம் பொருந்தாதெனக் கைவிட்டவருமாகி ஒரு நிலைமைப்பட்டு வாழ்ந்து வருபவர், தாமே பழியான செயல்களைச் செய்தால் சந்திரனிடத்துப் பட்ட களங்கத்தைப் போல, அது எங்கும் விளங்கித் தோன்றி அவருக்கு இழிவைத் தரும்.
பழமொழி – மதிப்புறத்துப் பட்ட மறு.





காப்பியம்
காப்பிய இலக்கணம்
தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம்என்னும் நூலைத் தமிழ்ப் படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.
Ø   பெருங்காப்பியமாவது வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள்  உரைத்தல் என்ற
மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றுமோ
பெற்றும் காப்பியம் தொடங்கலாம். 

  
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.
தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

5) திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

6) அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.

7) சந்தி எனப்படும் கதைப் போக்கு (கதைத் தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை)     வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.

8) அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

9) எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

10) கற்றறிந்த புலவரால் புனையப்பட்டதாக இருத்தல் வேண்டும். நாற்பொருளும் குறையாது வரவேண்டும். இவை தவிரப் பிற உறுப்புகளில் சில குறைந்தும் வரலாம்
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்

பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி
சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும்  பெற்றிய தென்ப
(தண்டியலங்காரம், நூற்பா - 8)
கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்
(தண்டியலங்காரம், நூற்பா - 9)

சிலப்பதிகாரம்
இந்திர விழவு ஊரெடுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா) 

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து 
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல் 
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை 
புதைஇருள் படாஅம் போக நீக்கி 
உடைய மால்வரை உச்சித் தோன்றி 5 
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி, 
வேயா மாடமும், வியன்கல இருக்கையும், 
மான்கண் காதலர் மாளிகை இடங்களும், 
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் 
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10 
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் 
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும், 
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் 
பூவும் புகையும் மேவிய விரையும் 
பகர்வனர் திரிதரு நகர வீதியும், 15 
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும், 
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் 
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் 
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20 
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும், 
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு 
கூலம் குவித்த கூல வீதியும், 
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர் 
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் 25 
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு 
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும், 
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் 
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் 
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் 30 
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் 
துன்ன காரரும் தோலின் துன்னரும் 
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் 
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும் 
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் 35 
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும் 
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும், 
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு 
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும், 
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், 40 
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர் 
மாட மறுகும், மறையோர் இருக்கையும், 
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை 
ஆயுள் வேதரும் காலக் கணிதரும் 
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், 45 
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு 
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும், 
சூதர் மாகதர் வேதா ளிகரொடு 
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் 
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் 50 
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர் 
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர் 
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும், 
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் 
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் 55 
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும், 
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய 
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும், 
இருபெரு வேந்தர் முனையிடம் போல 
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய 60 
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் 
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் 
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில் 
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென 
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் 65 
தேவர் கோமான் ஏவலின் போந்த 
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப் 
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும் 
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து 
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் 70 
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் 
பசியும் பிணியும் பகையும் நீங்கி 
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி 
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும் 
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, 75 
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் 
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் 
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை 
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப் 
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80 
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல் 
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி 
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச் 
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை 
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென 85 
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு 
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து 
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி, 
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச் 
செருவெங் காதலின் திருமா வளவன் 90 
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் 
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் 
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப் 
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் 
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் 95 
பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன 
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் 
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு, 
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் 
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் 100 
மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன் 
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், 
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த 
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும் 
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் 105 
நுண்வினைக் கம்மியர் காணா மரபின, 
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு 
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம் 
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும் 
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும், 110 
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த 
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் 
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் 
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக் 
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் 115 
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது 
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும், 
கூனும் குறளும் ஊமும் செவிடும் 
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப் 
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று 120 
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும், 
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர் 
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர் 
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர் 
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் 125 
சுழல வந்து தொழத்துயர் நீங்கும் 
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும், 
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர் 
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் 
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் 130 
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என் 
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக் 
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப் 
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும், 
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து 135 
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் 
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் 
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும், 
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் 
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ, 140 
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் 
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி, 
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக் 
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் 
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து 145 
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து, 
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப் 
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை 
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும் 
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து 150 
மங்கலம் பொறித்த மகர வாசிகைத் 
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன் 
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை 
பாவை விளக்குப் பசும்பொன் படாகை 
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து 155 
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு, 
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் 
அரச குமரரும் பரத குமரரும் 
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் 
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி 160 
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில் 
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென 
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும் 
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட 
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் 165 
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி 
மண்ணகம் மருள வானகம் வியப்ப 
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி, 
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் 
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் 170 
வால்வளை மேனி வாலியோன் கோயிலும் 
நீல மேனி நெடியோன் கோயிலும் 
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் 
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ 
நான்மறை மரபின் தீமுறை ஒருபால், 175 
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் 
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து 
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால், 
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும் 
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் 180 
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால், 
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் 
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால், 
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர் 
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு 185 
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால், 
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் 
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண் 
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா 
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு 190 
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை 
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர் 
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து 
காமக் களிமகிழ்வு எய்திக் காமர் 
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து 195 
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில் 
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் 
புகையும் சாந்தும் புலராது சிறந்து 
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக் 
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு 200 
திரிதரு மரபின் கோவலன் போல 
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு 
மலய மாருதம் திரிதரு மறுகில், 
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு 
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி 205 
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித் 
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல். 
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின் 
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி 
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த 210 
வான வல்லி வருதலும் உண்டுகொல். 
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத் 
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என 
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் 
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு 215 
உள்வரி கோலத்து உறுதுணை தேடிக் 
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல். 
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் 
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் 
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது 220 
நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப் 
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப் 
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன, 
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை 
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர் 225 
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ 
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு 
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த 
வடமீன் கற்பின் மனையுறை மகளிர் 
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் 230 
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை 
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் 
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக் 
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்: 
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து 235 
கள்உக நடுங்கும் கழுநீர் போலக் 
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் 
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன 
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன 
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன். 240
இந்திர விழவு ஊர் எடுத்த காதை)

நகர்க் காட்சி

புகார் நகர் காலையில் கவின் மிக்கதாக விளங்கியது; காலை ஒளியில் அதன் மாடங்களும், கோபுரங்களும், கோயில் தலங்களும், மற்றும் உள்ள மன்றங்களும் அழகு பெற்றுத் திகழ்ந்தன.

இந்த நகர் சுருசுருப்பாக இயங்கியது; வணிகர்கள் மிக்கு வாழ்ந்தனர்; அவர்கள் குடியிருப்புப் பெருமை தேடித் தந்தது.

மருவூர்ப் பாக்கம்

மருவூர்ப் பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டினப் பாக்கம் என்பது கடற்கரையை அணுகிய பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்; வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது; மற்றையது உயர் குடிமக்கள் வசித்த இடமாகும்.

மாடி வீடுகளும், அழகுமிக்க இருக்கைகளும், மான கண் போன்ற சன்னல்கள் வைத்த மாளிகைகளும், பொய்கைக் கரைகளில் கவர்ச்சிமிக்க யவனரது வீடுகளும், வேற்று நாட்டவர் வசிக்கும் நீர் நிலைகளின் கரைகளில் கட்டி இருந்த வீடுகளும் அந்நகரை வளப்படுத்தின, அழகு தந்தன.

தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தனர்; நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணிகலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்கள் குவித்து விற்றவர் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை வாசனைப் பொருள்கள் விற்போர், இரைச்சி, எண்ணெய் விற்போர், பொன் வெள்ளி செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர், பொம்மைகள் விற்போர், சித்திரவேலைக்காரர், தச்சர், கம்மாளர், தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனார். இந்தப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப்பட்டது.

பட்டினப் பாக்கம்

அடுத்தது பட்டினப்பாக்கம்; உயர்நிலை மாந்தர் வசித்த பகுதி இது. அரசவிதி, தேர்விதி, கடைத்தெரு, வணிகர் தெரு, அந்தணர் அக்கிரகாரம், உழவர் இல்லம், மருத்துவர், சோதிடர், மணிகோத்து விற்பவர், சங்கு அறுத்து வளையல் செய்வோர் ஆகிய இவர்கள் தனித்தனியே வசித்து வந்தனர்.

காவற்கணிகையர், ஆடற் கூத்தியர், பூவிலை மடந்தையர், ஏவல் பெண்கள், இசைக்கலைஞர்கள், கூத்தாடிகள் இவர்கள் எல்லாம் ஒருபகுதியில் வாழ்ந்தனர்.

அரசன் அரண்மனையைச் சுற்றிப் படை வீரர்கள் குடியிருப்புகள் இருந்தன. யானை, குதிரை, தேர், காலாள் வீரர்கள் இங்குக் குடி இருந்தனர். இப்பகுதி கடற்கரையை ஒட்டி இருந்தமையால் இது பட்டினப்பாக்கம் எனப் பட்டது. முன்னது ஊர் எனப்பட்டது; இது பட்டினம் என்று பாகுபடுத்திக் காட்டப்பட்டது. இதை வைத்துத்தான் புகார் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது. இதற்குப் பூம்புகார் என்றும், பூம்பட்டினம் என்றும் இருவேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

பலிக் கொடை

இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட மையப் பகுதியே சிறப்பு மிக்கதாக விளங்கியது. கடைகள் மிக்குள்ள பகுதி, பகலில் செயல்பட்டது; இது நாளங்காடி எனப்பட்டது. இங்கு எப்பொழுதும் விற்பவர் ஓசையும், வாங்குவோர் ஓசையும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

மரங்களின் அடிப்பகுதியே இவர்கள் கடைகளுக்குத் தூண்களாக விளங்கின; சோலைகள் மிக்க பகுதி அது என்று தெரிகிறது; இங்கே காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை அமைத்திருந்தனர். அது பலிப் பீடிகை எனப்பட்டது. இந்திர விழா கொண்டாடும் நாளில் இங்குப் பூவும் பொங்கலும் இட்டு மறக்குடி மகளிர் வழிபாடு செய்தனர். வீரர்கள் தங்கள் தலைகளை அறுத்து வைத்துப் பலி இட்டனர். “சோழ அரசன் வெற்றி பெறுக” என்று வாழ்த்துகள் கூறினர்.

இந்தக் காவல் பூதம் அங்கு வைக்கப்பட்டதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. முசுகுந்தன் என்னும் சோழ அரசன் இந்திரனுக்கு உதவினான்; அசுரர்களை ஓட்டினான்; அவர்கள் இவனுக்குத் தீங்கு கருதி மந்திரங்கள் சொல்லி இவனை அழிக்க முயன்றனர். அந்த அசுரர்களிடமிருந்து காக்க இந்திரன் காவல் பூதத்தை அனுப்பிவைத்தான். அப்பூதம் அசுரர் செய்த வஞ்சங்களை ஒழித்துக் கட்டியது. அங்கேயே அது நிலைத்து அந்நகருக்கு அது காவல் பூதமாக அமைந்து விட்டது.

இந்த விழா சித்திரை மாதம் சித்திரை முழுநிலவு அன்று எடுக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இவ்விரு பகுதிகளினின்றும் வீரர்கள் இங்கு வந்து விழா எடுத்துப் பலியும் தந்து கொண்டனர். இது வியத்தகு காட்சியாக விளங்கியது.

சித்திர மண்டபம்

இந்திரவிழா காண வருவோர் இப்பலிப்பீடத்தைக் கண்டு வியப்பும் மகழ்வும் அடைந்தனர். இதனை அடுத்து அந்நகரில் பார்க்கத் தகுந்த காட்சியாக விளங்கியது திருமாவளவன் அமைத்த சித்திர மண்டபம். அவன் வடநாடு சென்று வெற்றி கொண்டு திரும்பி வருகையில் பேரரசர்கள் அவனுக்குத் திறைப் பொருளாக மூன்று பொருள்களைத் தந்தனர். ஒன்று ‘கொற்றப் பந்தர்’; மற்றொன்று ‘பட்டிமண்டபம்’; மற்றொன்று ‘தோரண வாயில்’; வச்சிர நாட்டு அரசன் தந்தது கொற்றப்பந்தர், மகத நாட்டு அரசன் தந்தது பட்டிமண்டபம்; அவந்தி வேந்தன் அளித்தது. தோரணவாயில். இவை மானுடரால் செய்யப்பட்டவை அல்ல; தேவதச்சன் மயன் செய்து தந்தவை; இந்திரன் அவ் அரசர்களுக்கு அவ்வப் பொழுது தந்தவை அவை எனப்பட்டன. இவற்றை ஒருங்கு வைத்து ஒரே மண்டபமாகத் திருமாவளவன் சமைத்தான் என்பது வரலாறு. இது சித்திர மண்டபம் எனப்பட்டது. இந்திர விழாவுக்கு வருபவர் இதனையும் கண்டுமகிழ்ந்தனர்.

ஐம்பெரு மன்றங்கள்

மற்றும் அந்நகரில் காணத் தகுந்தவை ஐம்பெரும் மன்றங்கள் எனப்பட்டன. இவை பல்வேறு சோழர்கள் காலத்தில் இந்திரனால் அளிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

களவு செய்வோரை அவர்கள் தலையில் களவாடிய பொதிகளை அடுக்கிவைத்துச் சுற்றிவரச் செய்வது ‘வெள்ளிடை மன்றம்’ எனப்பட்டது. நோய் நொடியால் வாடுவோர் குளத்து நீரில் முழுகி எழுந்தால் அவர்கள் நோய் தீர்ந்தனர். அந்தக் குளம் உடைய மன்றம் ‘இலஞ்சிமன்றம்’ எனப்பட்டது; பித்தம் பிடித்தவர், நஞ்சு உண்டவர், அரவு தீண்டப் பெற்றவர் இவர்கள் துயர் நீங்கி உயர்வு பெற்றனர். அந்தப் பகுதிக்கு ‘நெடுங்கல்நின்ற மண்டபம்’ என்று கூறப்பட்டது. தீய ஒழுக்கத்தவர் அவர்களைப் புடைத்து உண்டு தண்டித்தது ‘பூத சதுக்கம்’ எனப்பட்டது. அரசன் நீதி தவறினாலும், மன்றங்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினாலும் கண்ணீர் உகுத்து அழுது காட்டி அநீதியை எடுத்து உரைத்தது; அது ‘பாவை மன்றம்’ எனப்பட்டது. இவை ஐம்பெரு மன்றங்கள் எனப்பட்டன. இவையும் வியத்தகு காட்சிகள் ஆயின; இவ்விழாவுக்கு வந்தவர் இவற்றைக் கண்டு வியந்தனர். விழா அழைப்பு

வச்சிரக் கோட்டம் என்பது இந்திரன் கோயில்; அதில் இருந்த முரசத்தை எடுத்து யானையின் பிடரியில் ஏற்றி வைப்பர். அதன் மீது இருந்து விழாச் செய்தியை ஊருக்கு அறிவித்தனர்.

கால்கோள் விழா இது தொடக்க விழா, கால்கோள் விழா முதல் கடைநிலை நிகழ்ச்சி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பற்றி நவின்றனர். மங்கல நெடுங்கொடி எடுத்து ஏற்றினர்.

நகரத்து மாளிகை முன் எங்கும் தோரணங்கள் தொங்கவிட்டனர். பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர். பாவை விளக்கும், கொடிச் சீலையும், வெண்சாமரமும், சுண்ணமும் ஏந்தி விதிகளில் பொலிவு ஊட்டினர்.

நீராட்டு விழா

ஐம்பெரும் குழுவினரும், எண்பேராயத்தினரும், அரச குமரரும், வணிக இளைஞரும் தத்தமக்கு உரிய தேர்களில் ஏறிச் சென்று, “அரசன் வெற்றி கொள்வானாக” என்று, வாழ்த்துக் கூறி இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்தினர். குறுநில மன்னர்கள், குடங்களில் காவிரிநீர் கொண்டுவந்து இந்திரனுக்கு மஞ்சனம் ஆட்டி நீர் முழுக்குச் செய்வித்தனர். இந்த நீராட்டுதலே தலைமை விழாவாகக் கருதப்பட்டது. அதனால் இது நீராட்டு விழா எனவும் சிறப்பித்துக் கூறப்பட்டது.

ஊர்த்திருவிழாக்கள் மற்றும் சிவன்கோவில், முருகன், பலராமன், திருமால் இக்கோவில்களில் அவரவர் மரபுப்படி பூசைகள் நடத்தினர். தேவர்க்கும், பதினெண் பூத கணங் களுக்கும் விழா எடுக்கப்பட்டன. அறச் சாலைகளில் அவர்கள் விழா எடுத்தனர். சிறைப்பட்ட பகை மன்னரை அரசன் விடுவித்தான்.

அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தென்றல் வீசும் தெருக்களில் காமக் கணிகையர் கண்களுக்கு விருந்து அளித்தனர், அவர்கள் வடிவழகில் மயங்கி ஆடவர்கள் அவர்களோடு உறவு கொண்டனர்.

இந்தக் காதற்பரத்தையர் பேரழகு ஆடவர்களைத் திகைக்க வைத்தது. வானத்துத் திங்கள் வையகத்துக்கு வந்ததோ என்று வியந்தனர். திருமகளைத் தேடித் தாமரைம்லர் இங்கு வந்து புகுந்ததோ என்று பேசினர். கூற்றுவன் பெண் உருக் கொண்டு எம்மைப் பேதமைப் படுத்துகிறானோ என்றும் அஞ்சினர்; வானத்து மின்னல் மண்ணில் வந்து புரள்கிறதோ என்று வியந்து பேசினர். இத்தகைய அழகு உடையவர்கள்பால் தம்மைப் பறிகொடுத்துக் களி மகிழ்வு எய்தினர். அவர்களோடு தோய்ந்ததால் அவர்கள் மார்பில் எழுதியிருந்த தொய்யில் இவர்கள் மெய்யில் படிய அது இவர்களைக் காட்டிக் கொடுத்தது.

ஊடல் கொள்வதற்கு இந்தக் காமக் கணிகையர்தம் உறவு விட்டு மகளிர்க்குக் காரணம் ஆகியது. ஊடலைத் தீர்ப்பதற்கு அவர்கள் பட்ட பாடு ஏட்டில் எழுத முடியாது; விருந்தினர் வந்தால் ஊடல் தீர்வர். அதுவும் மருந்தாக அமையவில்லை; சுவைமிக்க வாழ்க்கை

மாதவியும் கண்ணகியும்

இது இந்திர விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று; இந்நிலையில் மாதவியின் நிலை யாது? செங்கழு நீர்ப்பு தேன்சிந்தி உகுகிறது. அது போல் இவள் சிவந்த கண்கள் உவந்த காரணத்தால் மகிழ்வக் கண்ணீர் சொரிந்தன.

கண்ணகி அவள் கருங்கண்கள் எந்த மாற்றமும் அடையவில்லை; தனிமையில் உழந்து தளர்ந்த நிலையில் அவள் கண்ணீர் உகுத்தாள்.

மாதவியின் வலக்கண் துடித்தது: கண்ணகியின் இடக்கண் துடித்தது. இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை; ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள்: மற்றொருத்தி தனிமையில் தவித்தாள். இந்த மாறுபட்ட நிலைகளில் இருவரும் மகிழ்வும் துயரமும் காட்டினர்.


மணிமேகலை
ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத்திரன் திறம் அணி இழை! கேளாய்
வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
தென் திசைக் குமரி ஆடி வருவோள்
சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க
13-010
தாய் இல் தூவாக் குழவித் துயர் கேட்டு ஓர்
ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து
13-020
"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்
13-030
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட
நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்
13-040
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
13-050
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?"
"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்
13-060
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும்
"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
13-070
"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என
"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி
13-080
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்
13-090
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே
13-100
தாதை பூதியும் தன் மனை கடிதர
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்தி
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி
13-110
'காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்
13-115

தன்முன்பு மணிமேகலை வைத்த அமுதசுரபியைப் பார்த்து அறவண அடிகள் முறுவலித்தார்.

யார் இந்த ஆபுத்திரன்? எதனால் அவனுடைய அமுதசுரபியை மணிமேகலை கொண்டுவர வேண்டும்? அவளுடைய தற்போதைய வாழ்வின் போக்கு மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறதே!’என்ற சிந்தனை ஓட்டங்களுடன் சுதமதி அறவண அடிகள் கூறப்போவதைக் கேட்க ஆவலானாள்.

“எத்துணை திறம்பெற்ற பாத்திரம் தெரியுமா இந்த அமுதசுரபி, மணிமேகலை? இதன் திறம்பற்றிக் கூறவேண்டுமானால் ஒரு நெடுங்கதையைக் கூறவேண்டியிருக்கும்” என்றார் அறவண அடிகள்.

“பொழுது போகவேண்டுமல்லவா? கூறுங்கள்!“ என்றாள் சுதமதி.

சுதமதியின் தொடைமீது மாதவி தட்டினாள். அதன் பொருள் பெரியவர்களிடம் இவ்வாறு பேசக் கூடாது என்பதாகும்.

“சிறியவள்தானே? விடு மாதவி. சில நேரங்களில் அவர்களது நடவடிக்கை பெரியவர்களைவிட மேம்பட்டதாக இருக்கும்,“ என்றார் நகைமாறாமல்.

“நீங்கள் கூறுங்கள், அடிகளே!” என்றாள் மணிமேகலை, வினயத்துடன்.

வாரணாசி என்று அறியப்படும் காசிநகரத்தில் அபஞ்சிகன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். அவன் ஆரணம் என அறியப்படும் வேதத்தை ஓதுவிக்கும் தொழிலாகக்கொண்டவன் என்பதால் ஆரண உவாத்தி (உபாத்தியாயன் என்பதன் திரிபு) அபஞ்சிகன் என்று அறியப்பட்டவன். அவனுடைய மனைவியின் பெயர் சாலி. கற்புநெறி தவறி, அந்தப் பார்ப்பினி தனது கணவனுக்குத் தவறு இழைத்துவிட்டாள். அதன்பின், அவளுக்குக் குற்ற உணர்ச்சி மிகுந்தது. தான் செய்த குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக என்னசெய்வது என்று எண்ணி வருந்திக்கொண்டிருந்தபோது தீர்த்தயாத்திரை செல்லும் கூட்டம் ஒன்று குமரிக் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தது. அவளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். நெடுங்கால யாத்திரை என்பதால் அவளது சூல் மெல்லமெல்ல வளர்ந்து நிறை கர்பிணியாகிவிட்டாள். ஒருநாள் இரவு எவருக்கும் தெரியாமல் ஒரு மறைவிடத்தில் சிசுவைப் பெற்று இறக்கிவைத்தாள். கை கால்களை நீட்டி உதைத்து அழுத குழந்தைக்கு வயிறுநிரம்ப முலைப்பால் அளித்தாள். பிறகு அந்தச் சிசுவைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த தோட்டத்திற்குள் சென்றாள். புற்கள்நிறைந்த மெத்தென்ற பரப்பில் அந்தக் குழந்தையைக் கிடத்தினாள்.

வா’ என்று கை நீட்டி சிரித்து அழைக்கும் குழந்தையை மறுத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

சிறிதுநேரம் சென்றது. ஒருமுறை ஊட்டிய தாயின் அமுதால் வாழ்நாள் முழுவதும் சிசுவின் பசி அடங்குமா என்ன? மீண்டும் பசித்தது. தனக்கு அமுதூட்டிய தாயை அங்கும் இங்கும் தேடியது. முனகியது.  “.ஊ, ஆ,” என்று அழைத்தது. கல்நெஞ்சம் படைத்த தாய் வரவில்லை. பசித்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது.

சிசுவின் குரல் கேட்ட பசு ஒன்று ஓடி வந்தது. சிசுவின் வாயில் வழியுமாறு தனது பாலைச் சொறிந்தது. ஆவின் பாலை உண்டு வயிறு நிரம்பிய சிசு அழுகையை நிறுத்தியது. பசு தனது கழுத்தை வளைத்து சிசுவை நாக்கால் நக்கிக் கொடுத்தது.

இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படப் பசி நேரத்தில் சிசு அழத் தொடங்கியதும் எங்கிருந்தாலும் அதன் குரல்கேட்டு ஓடிவரும் பசு பாலைப் பொழிந்து அதன் பசியைப் போக்கும். இது இப்படியே ஒருவாரம் தொடர்ந்தது.

அப்போது வயனங்கோடு என்ற ஊரைச் சேர்ந்த பூதி என்ற அந்தணன் ஒருவன் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தவன் சிறுகுழந்தையின் பசித்து அழுவதையும் அதற்குப் பசு ஒன்று பால் வழங்குவதையும் கண்டான்.

“என்ன அதிசயம்!  அந்த மாட்டுக்குத்தான் அந்தக் குழந்தையிடம் எவ்வளவு ப்ரீதி?     இப்படிக் குழந்தையைப் போட்டுட்டு பெத்தவ எங்கே போய்த் தொலைஞ்சா?“  என்று உடன்வந்த அவன் மனைவி வியந்துபோனாள்.

“அசடு! பெத்தவ இருந்தா இப்படிக் குழந்தையைப் பாலுக்கு அழவிடுவாளா? பசுவும் வந்து பால் கொடுக்குமா?” என்றான் அந்த மறையோன்.

“அப்போ அந்தக் குழந்தை அனாதைன்னு சொல்கிறீர்களா?”

“அனாதை இல்லை. இனிமேல் நாமதான் அதுக்குத் தாய்-தந்தை. இத்தனை வருஷம் குழந்தையில்லாமல் இருந்தோமே, இனிமேல் இதுதான் உங்கள் குழந்தை என்று அந்த ஆண்டவன் அருளிய குழந்தை,” என்று அந்தணன் சொன்னதும் அவன் பத்தினி ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அள்ளிக்கொண்டாள்.

தன் குலம் தழைக்க நம்பி பிறந்துவிட்டான்” என்ற பெரிய உவகையுடன் அந்தணன் அந்தக் குழந்தையைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.

நாள் பார்த்துப் ஆபுத்திரன் என்ற பெயர் சூட்டினார்கள். உரிய பருவத்தில் அவனுக்கு முப்புரிநூல் அணிவிக்கும் யக்நோபவீதம் என்ற பூணூல் வைபவத்தை நடத்தி வேதம்பயில்விக்க அந்தணர்களிடம் அனுப்பினர். வேதம்பயிலும் அந்தண இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து சாத்திரங்களையும் அவன் கற்றுக்கொண்டான். கல்வியிலும் மறை ஓதுவதிலும் சிறந்து விளங்கினான்.

அன்றொருநாள் ஆபுத்திரன் வழியில் போய்க்கொண்டிருந்தபோது ஓர் அந்தணர் வீட்டில் வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்தது.

“ஏதாவது விசேடமாயிருக்கும்,” என்று எண்ணிய ஆபுத்திரன் பார்வையை உள்ளே ஓடவிட்டான். பெரிய வேள்விக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. சுடுமணலால் புனையப்பட்ட பெரிய யாககுண்டம் ஒன்று தெரிந்தது. மூட்டைமூட்டையாகச் சமித்துக் குச்சிகளும், பசுஞ்சாணத்தில் செய்த எருவாட்டிகளும் அடுக்கிவைக்கபட்டிருந்தன. தரையெங்கும் அழகிய கோலங்கள் போடப்பட்டிருந்தன. வேள்விக்கூடத்தின் தூண் ஒன்றில் பசுமாடு ஒன்றைக் கட்டியிருந்தார்கள்.

அந்தப்பசு மாட்டின் கொம்பில் பூ சுற்றியிருந்தார்கள். அதன் உடல் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டிருந்தது. நெற்றியில் நீளமாகச் சிந்தூரம் தீட்டபட்டிருந்தது.  முதுகில் ஒரு புதுத்துணி போர்த்தபட்டிருந்தது. இவ்வளவு அலங்காரம் செய்திருந்தும் அதன் கண்களில் மகிழ்ச்சி இல்லை. வேடுவர்கள் துரத்திவரும்போது மருண்டுநிற்கும் மானின் அச்சம்நிறைந்த கண்களைப்போல அதன் கண்கள் விளங்கின. அதன் மேனி பயத்தில் விதிர்த்தபடி இருந்தது. சட்டென்று ஆபுத்திரனுக்கு விளங்கியது. இது வேள்விப்பசு.  ஆவின் பாலைக் குடித்துவளர்ந்த ஆபுத்திரனுக்கு அந்தப் பசுவின் துயரநிலை மனதை  வருத்தியது. உடனே அந்தப் பசுவை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அந்த இடத்திலேயே இரவு வரும்வரை தங்கியிருந்தான். பகலில் கொண்டுசென்றால் தனது செயல் தடுக்கப்படும் என்பதால் இரவு வந்ததும் ஒருவருக்கும் தெரியாமல் பந்தலுக்குள்  நுழைந்து தூணில் கட்டபட்டிருந்த பசுவின் கயிற்றை அவிழ்த்து, அதைத் தனது இருப்பிடத்திற்குக் கொண்டுசென்றான். வேள்விச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பசுவைக் காணாமல் அந்தணர்கள் வழியெல்லாம் தேடிக்கொண்டிருக்கும்போது ஆபுத்திரன் அந்தப் பசுவடன் செல்வதுகண்டு அவனை வழிமறித்தனர்.

“இந்த அர்த்தராத்திரிவேளையில் கையில் பசுவைப் பிடித்துக்கொண்டு போகக்கூடாத வழியில் போகும் நீ பையனா. இல்லை புலையனா? எதற்காக எங்கள் வேள்விப்பசுவை இப்படித் திருடிக்கொண்டு செல்கிறாய்?” என்று கேட்ட்னர்.

அந்தக் கூட்டத்தில் ஓர் அந்தணன் கையில் நீண்ட கழி வைத்திருந்தான். அந்தக் கழியால் ஆபுத்திரனை அடித்தான்.

“அடியாத மாடு மட்டுமில்லை மனிதனும் பணியமாட்டான். வாயைத் திறந்து சொல்லுடா” என்று அடித்தபடி கேட்டான்.

அந்தப்பசுவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஆபுத்திரனை அடித்துக் கேள்விகேட்ட அந்தணனின் வ்யிற்றைத் தனது கூரிய கொம்பினால் கிழித்து, ஆபுத்திரனின் கயிற்றுப் பிடியிலிருந்து விடுபட்டு, அருகில் இருந்த காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிமறைந்தது.

ஆபுத்திரன் அந்த மறையோர்களைப் பார்த்து, “வேள்வி என்று கூறி பசுவைப் பலிகொடுப்பது முறையாகுமா? நீங்கள் போடும் புல்லைத் தின்றுவிட்டு  வாழ்நாள் முழுவதும் உங்களுக்குத்  தேவையான பாலை அளிக்கும் அந்தப் பசுவை வதைக்கலாகுமா? பாவமில்லையா அது? இந்தப் பசுமீது உங்களுக்கு எதற்காக இவ்வளவு சினம்? முற்றும் அறிந்த அந்தணர்களே, பதில் கூறுங்கள்!” என்றான்.

“யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்? நாங்கள் யார் தெரியுமா? அழகிய அணிகளுடன் விளங்கும் பொன் சக்கரத்தைத் வலக்கரத்தில் சுழலவிட்டுக்கொண்டிருக்கும் ஆதி கடவுளான மகா விட்டுணு, தனது நாபியில் தோன்றிய பிரமனுக்கு வாழ்வின் நெறிகளை உபதேசித்தான். பிரும்மன் அதனை மனுவிற்குச் சொன்னார். மனு எங்களுக்கு உரைத்தான். மனுதர்மம் பிறழாமல் நடக்கும் வைதீக பிராமணர்களான எங்களுக்கு நீ உபதேசம்செய்ய வந்துவிட்டாயா? நிலைபெற்ற உள்ளத்தைக் கொள்ளாமல் தடுமாறும் சிந்தனை உடைய அற்பச் சிறுவனே! நீ மானிட சாதியைச் சேர்ந்தவன்போலத் தெரியவில்லை. அந்த மாட்டுக்குப் பிறந்தவன்போல புத்தியில்லாமல் பிதற்றுகிறாய். நீ மனிதனா என்றுகூட ஐயமாக இருக்கிறது. மாட்டுக்குப் பிறந்தவனே!” என்று இகழ்ந்தனர்.

“அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன்,“ என்றான் ஆபுத்திரன் பதிலுக்கு.

“என்ன உளறுகிறாய்?” என்று அவர்கள் அதட்டிக் கேட்டனர்.

“உங்களுடைய ரிஷிமூலம் சொல்லக் கிளம்பினால் ஒருநாள் போதாது. பசுவிற்கு மகனாகப் பிறந்தவன் அசலன் என்ற ரிஷி; மான் பெற்றெடுத்த ரிஷி சிருங்கி; புலிக்குப் பிறந்தவன் விரிஞ்சி என்ற ரிஷி. வானுலகும் வணங்கும் கேசகம்பளன் என்ற ரிஷி ஒரு நரிக்குப் பிறந்தவன் என்பதை மறந்து விடாதீர்கள், நான்மறை ஓதும் வைதீகப்பிராமணர்களே! முதலில் குற்றம்கூறும் முன்னர் உங்கள் குறைகளைத் தெரிந்துகொண்டு குற்றம் கூறுங்கள் “ என்றான் ஆபுத்திரன்.

“வாயை மூடுடா, அதிகப்பிரசங்கி. எங்களுக்குச் சொல்லவந்துட்டான்,” சீறினார் ஒருவர்.

“இவன் பிறப்பு லட்சணம் நமக்குத் தெரியாது?” என்று எள்ளி நகையாடினார் இன்னொருவர்.

“இவன் கதை என்ன ஓய்? முதலில் அதைச் சொல்லும்” என்று தூண்டினார் வேறொருவர்

இரண்டாவதாகக் கூறியவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார் “ஒரு தீர்த்தயாத்திரைக் கூட்டத்தில் நானும் ஒருவனாகப் போயிருந்தேன். கன்யாகுமரி போய் அம்பாளைத் தரிசித்து பாவத்தைத் தொலைச்சிட்டு வரப் போயிருந்தோம். நடக்கமுடியாமல் சிரமத்துடன் ஒரு பார்ப்பனத்தி கூடவந்தாள்.  இந்தப் பக்கம்மாதிரித் தெரியவில்லை. யாரென்று விசாரித்தேன். காசியிலிருந்து வருவதாகவும், பேரு சாலியென்றும் சொன்னாள். ஏது எதுக்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாளென்று கேட்டேன்.”

“அதுக்கு அவள் என்ன சொன்னாள்?” என்றார் தூண்டியவர்.

“காசி நகரில் எங்காத்துக்காரர் வேத உபாத்தியாயம் செய்துகொண்டு இருக்கிறார். நானும் அவருக்குப் பத்தினியாத்தான் வாழ்ந்துவந்தேன். என்னோட போறாதகாலம் கற்புநெறி பிறழ்ந்து அவருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டேன். பண்ணின பாவத்திற்குக் குமரிக்கடலில் குளிக்க எண்ணிக் கிளம்பி இந்தத் தீர்த்தயாத்திரைக் கும்பலுடன் சேர்ந்துகொண்டேன் என்றாள்.“ என்ரு சொல்லிவிட்டு இரண்டாமவர் சிரித்தார்.

“ஓ! கதை அப்படிப் போகிறதா

கேட்டவரும் பூடகமாகச் சிரித்தார்.

“ ‘பொன்தேர்கொண்ட பாண்டியன் செழியன் என்பவனது தென்மதுரை நகரைக் கடந்து சிறிது தூரம் சென்றபின்பு ஒரு மாடுமேய்க்கும் கோவலர்களின் குடியிருப்புப் பகுதி வந்தது. நிறைமாத கர்ப்பமான எனக்குப் பேறுகால வலி எடுத்தது. நள்ளிரவு வேறு. நான் அருகிலிருந்த ஆளரவமற்ற தோட்டத்தில் குழந்தையை ஈன்று, அதன் முகத்தில்கூட விழிக்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டேன். அப்படிப்பட்ட பாவியாகிய எனக்குப் பாவவிமோசனமே கிடையாது,’ என்று கூறி அழுதாள். அந்தப் பாவியின் மகன்தான் இந்த ஆபுத்திரன். சொல்லவேண்டாமென்றுதான் இருந்தேன். சொல்லவைத்துவிட்டான்.” என்றார்.

ஆபுத்திரன் அவர்களுடைய வசைமொழிகளைக் கேட்டு ஆத்திரம் கொள்ளாமல் புன்னகைத்தான்.

“பாரு, பாரு, வெட்கங்கெட்டவன். தன் பிறப்பிற்கும், தாயின் நடத்தைக்கும் வருந்தாமல் சிரிக்கும் அழகைப் பாருங்கள்,” என்றார் ஒரு முதியவர்.

“உங்கள் குலத்திற்கு மூத்தவர் என்று கருதப்படும் வசிட்டமுனியும், அகத்திய முனியும் பிரம்மனுக்கும், தேவகணிகையான திலோத்தமைக்கும் பிறந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? நான் சொல்லவில்லை உங்கள் சாத்திரம் கூறுகிறது இவர்கள் பிறப்பைப்பற்றி. அது பிழையில்லை என்றால் என் தாய் சாலிசெய்ததும் பிழையில்லை. சொல்லுங்கள் வேதங்களில் சிறந்த அந்தணர்களே” என்றான்.

“வாய்க்கொழுப்பைப் பார். இத்தனை திமிர் ஓர் அந்தணனுக்குக் கூடாது,” என்றார் முதியவர்.

“இவன் கொழுப்புத் தெரிந்துதான் இவனுடைய தகப்பனார் பூதி இவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்போல.“ என்றார் வேறொருவர்.

அங்கே வைதீக அந்தணர்கள் வைத்ததே சட்டமானது. சபை கூடியது. ஆபுத்திரனின் செயல் விசாரணைக்கு வந்தது. பசுவைக் களவாடியது குற்றம் எனத் தீர்ப்பானது. இனி ஒருவரும் அந்த ஊரில் அவன் அன்னத்திற்காக ஓடு ஏந்தி வரும்போது பிச்சை இடக்கூடாது என்று முடிவானது. அவன் தந்தையும் அவனை வீட்டைவிட்டு  வெளியேற்றினார்.

“அடப் பாவமே!“ என்றாள் மாதவி.

“ஆமாம் வைதீக அந்தணர்களை எதிர்த்து யாரால் உயிர்வாழ முடியும்?” என்றாள்சு தமதி.

“அவர் கூறும்போது குறுக்கே பேசாதீர்கள். அறவண அடிகளே! நீங்கள் மேலே கூறுங்கள்,” என்றாள் மாதவி.

“அப்புறம் என்ன? ஊர்மக்கள் அவன் ஓட்டில் அன்னத்திற்கு பதில் கற்களை இட்டனர். ஒருநாள் இரண்டுநாள் என்றால் பசி பொறுக்கலாம். வாழ்நாள் முழுவதும் முடியுமா? வெறுத்துப்போன ஆபுத்திரன் உணவு தேடி மதுரை நகரை நோக்கிச் சென்றான்.

“அங்கு சிந்தாதேவி என்று அறியப்படும் கலைமகள் சரஸ்வதியின் கோவில் ஒன்றை அடைந்தான். அங்குள்ள மண்டபத்தில் தங்கினான். அனைத்து  வீதிகளிலும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்தான். அப்படிப் பெற்றுவந்த பிச்சை உணவினை வைத்துக்கொண்டு, ‘கண் பார்வையற்றவர்களே! காது கேளாதவர்களே! கால்கள் முடமாகிப் போனவர்களே! ஆதரவற்றவர்களே! நோய்வாய்ப்பட்டவர்களே! வாருங்கள் அனைவரும் வாருங்கள். உங்களுக்காக மிகுதியான உணவைப் பிச்சையாகக்கொண்டு வந்துள்ளேன்,’ என்று அனைவரையும் கூவி அழைத்து, அவர்களுக்கு உணவளித்து, அதன் பிறகு எஞ்சியதைத் தான் உண்டு, அந்தப் பிச்சைப் பாத்திரத்தை தலைக்கு அணையாகக்கொண்டு உறங்கினான். இவ்வாறாக ஆதரவற்றவர்களுக்கு உற்ற துணைவனாகத் தனது காலத்தை ஆபுத்திரன் மதுரையில் கழித்தான்,” என்ற அறவண அடிகள், “அவன் கதை முடியவில்லை.” என்றார்.



பெரியபுராணம்
அப்பூதி அடிகள் பூராணம்

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகளெல்லாவற்றையும் தாங்கினவரும், கிருகஸ்தாச்சிரமத்தையுடையவரும், சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார். இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவ; அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்களெல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனாரென்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள். அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள். உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார். அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவ; திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவ; அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார். திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்து, அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார். அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார். அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது. அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டு அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார். அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார். அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார். உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள். அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார்.


நன்றி
https://shaivam.org/devotees/appoothi-adikal-nayanar-puranam




கம்பராமாயணம்
வாலி வதைப்படலம்
இராமன் கிட்கிந்தையின் மன்னனான வாலியைக் கொன்ற நிகழ்ச்சியைக்
கூறும் பகுதியாகும்.
     இராமன், இலக்குவன், சுக்கிரீவன், அனுமன் ஆகிய நால்வரும் பிற
வானர வீரர்களோடு கிட்கிந்தையை அடைந்து, வாலியைக் கொல்லுதற்குரிய
வழியை ஆராய்ந்தனர்.  போர் நடக்கையில் தான் வேறுபுறம் நின்று வாலி
மீது அம்பு தொடுப்பதாக இராமன் கூற, சுக்கிரீவன் அதை ஏற்றுக்கொண்டு,
வாலியை வலியப் போருக்கழைத்தான்.  வாலியும் போருக்குப் புறப்படத் தாரை
இராமன் துணையொடு சுக்கிரீவன் போரிட வந்துள்ளமையைச் சுட்டிப்
போருக்குச் செல்வதைத் தடுத்தாள்.  வாலி, இராமனது அறபபண்புகளைத்
தாரைக்கு உணர்த்திவிட்டுப் போரை விரும்பிக் குன்றின் புறத்தே வந்தான்.
     பேராற்றல் படைத்த வாலி சுக்கிரீவர்களை இராமன் வியந்து பேச,
இலக்குவன் சுக்கிரீவனை ஐயுற்றுப் பேசினான்.  நட்புக் கொள்வாரிடம் உள்ள
நற்குணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டுமென இராமன்
இலக்குவனுக்கு மறுமொழி உரைத்தான்.  வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் இடையே
போர் கடுமையாக நடந்தது.  வாலி, சுக்கிரீவனை யானையைச் சிங்கம்
அழிப்பது போல அவன் வலிமை தளர்ந விழும்படி செய்ய, சுக்கிரீவன்
இராமனை அடைந்து உதவி வேண்டினான்.  இராமன் சுக்கிரீவனைக் கொடிப்
பூ அணிந்து, போர் புரியச் சொல்ல, அவ்வாறே சென்று சுக்கிரீவன்
வாலியோடு மோதினான்.  வாலி சுக்கிரீவனை மேலே தூக்கிக் கீழே எறிந்து
கொல்ல முயன்றபோது, இராமன் வாலியின் மார்பில் அம்பினைச் செலுத்த
வாலி மண்ணில் சாய்ந்தான்.  தன்மீது அன்பு செலுத்தியவன் யார் என அறிய,
வாலி அம்பைப் பறிக்க, அதனால் குருதி வெள்ளம் பெருக, அதைக் கண்டு
உடன்பிறந்த பாசத்தால் சுக்கிரீவன் கண்களில் நீர்மல்க நிலமிசை வீழ்ந்தான்.
     வாலி தன் மார்பில் தைத்த அம்பில் 'இராமன்' என்னும் நாமத்தைக்
கண்டான்.  இராமன் அறமற்ற செயலைச் செய்துவிட்டதாக இராமனைப்
பலவாறு இகழ்ந்த்ான். இராமன் தான் செய்தது முறையான செயலே எனத்
தெளிவுபடுத்தினான்; வாலி தன்னை விளங்கெனக் கூறிக்கொள்ளம் முகத்தான்
தன்பால் சிறிதும் குற்றம் இல்லை என உணர்த்த, உருவத்தால் விலங்காயினும்
நல்லறிவு பெற்ற வாலி செய்த செயல் குற்றமுடைத்து என இராமன்
விளக்கினான்.  அதனைக் கேட்ட வாலி, தகாத வகையில் மறைந்து நின்று
எய்யக் காரணம் யாது என வினவ, அதற்கு இலக்குவன் விடையளித்தான்.
இராமனைச் சுக்கிரீவன் முதலில் சரணடைந்துவிட்டதால், அவனைக் காக்க
வேண்டி இராமன் இவ்வாறு செய்ய நேரிட்டது என்று உரைத்தான்.
     'சிறியன சிந்தியாதா'னாகிய வாலி மனம் மாறி இராமனிடம் தன்னை
மன்னிக்குமாறு வேண்டி, அவன் பெருமை கூறித் துதித்தான். தன் தம்பி
சுக்கிரீவன்
தவறு செய்யின் அவன்மீது அம்பு தொடுக்க வேண்டாம் என ஒரு வரம்
வேண்டினான்.  அனுமனின் ஆற்றலை இராமனுக்கு வாலி எடுத்துரைத்தான்.
சுக்கிரீவனுக்குப் பல அறிவுரைகள் கூறி, அவனை இராமனிடத்தில்
அடைக்கலப்படுத்தினான்.
     போர்க்களம் வந்த அங்கதன், குருதி வெள்ளத்தில் தந்தையைக் கண்டு
அரற்ற, வாலி அவனைத் தேற்றி, இராமன் பெருமைகளை அறிவுறுத்தினான்.
அவனை இராமனிடம் கையடைப்படுத்த, இராமன் அங்கதனுக்கு உடைவாள்
அளித்து ஏற்க, வாலி வீடு பேறு அடைந்தான்.  வாலி மார்பில் தைத்த அம்பு
இராமனிடம் மீண்டது.  வாலிக்கு ஏற்பட்ட துயர் கேட்டுத் தாரை போர்க்களம்
உற்று, வாலியின் மேல் வீழ்ந்து புலம்பினாள்.  அவளை அந்தப்புரம் செலுத்தி,
அனுமன் வாலிக்குரிய இறுதிக் கடன்களை அங்கதனைக் கொண்டு
செய்வித்தான்.
     அந்நிலையில் கதிரவன் மறைய இருள் சூழ்ந்தது.  இராமன் சீதையின்
நினைவோடு இரவுக்கடலை அரிதில் நீந்தினான்.

இராமன் முதலியோர் சென்ற மலைவழி
எழுசீர் ஆசிரிய விருத்தம்














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......