ஆத்தா என்னும் ஆளுமை

எத்தனையோ உறவுகளை கடந்து சென்றுகொண்டுள்ளோம் ஆனால் சில உறவுகள் உள்ளிருந்து உடற்றிக்கொண்டு இருக்கும். அவர்கள் நம்முள் ஏற்படுத்திய அதிர்வுகள்  அதிர்ந்துபடியே உடன் உறையும். நாம் சோர்வடையும் பொழுதெல்லாம் அது நம்மை விழிப்படையச்செய்யும். எப்படி பட்ட மனுஷி இவள் எனப் பல நேரங்களில் நான் பார்த்து வியந்தவர் என் அம்மாவைப் பெற்ற அம்மாயி என்று எங்கள் ஊர்பக்கம் அழைகக்ககூடிய எங்கள் ஆத்தா.

20 வயதுக்குள் இரண்டு பெண்பிள்ளைகள், சிங்கபூருக்குச் சென்ற தன் கணவன் இறந்துவிட்டார் என்னும் செய்தி கேட்டு, வாழ்க்கையின் ஒட்டுமொத்த துயரங்களையும் சுமந்து நின்ற நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்துகாட்டிய தன்நம்பிக்கை அவர்.

நான் பிறந்த ஊர் கிராமம் 1950 அந்த காலகட்டங்களில் கிராமங்களின் முகம் எப்படியிருந்து இருக்கும் என்பது நமக்கும் தெரியும் , கணவனை இழந்த சூழலிலும், தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய இரண்டு பெண்களையும் பி.யூ.சி வரை படிக்கவைத்தவர்.

வீட்டு வேலையிலிருந்து வயல் வேலைகள் வரை அவருக்கு அத்துப்படி. கரம்பை என்று சொல்லக்கூடிய ஊரைவிட்டு தூரமாக இருகக்கூடிய வயல்வெளியில் தனியாளாய் நின்று, இரவு எந்நேரமானாலும்  வயலுக்குத் தண்ணீர் பாய விட்டு  வரக்கூடிய துணிவுடையவர்.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து, வயலுக்குச் சென்று வரும்பொழுது எல்லாம் அங்கிருக்க்கூடிய களிமண்ணில் விதவிதமாய் சொப்பு பாத்திரங்கள் செய்து சுட்டு விளையாட எங்களுக்குக் கொண்டுவந்து தருவார். தென்னை மட்டை வெட்டி அதில் செத்துக்கி அதில் சத்தம் எழுப்பகூடிய விளையாட்டு மட்டை செய்து கொடுப்பார். பனங்காயில் சக்கரம் செய்து வண்டி செய்து ஆசையோடு தருவார்.பூவரசம் இலையில் பீப்பீ, தென்னை ஒலையில் விதவிதமான அணிகலன், என இயற்கையில் கிடைக்க கூடிய ஒவ்வொன்றையும் , எங்களுக்கானதான மாற்றும் வல்லமை அவரிடம் உண்டு.

அப்பொழுது ஒரு பத்து பனிரெண்டு மாடுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் எருமைமாடுகள் இருந்தன. காலையில் தயிர் கடையும் ஒலி, திரளும் வெண்ணெய்,  மோரும் வெண்ணையுமாக உள்ளங்களில் எடுத்து கொடுத்து , நாங்ககள் நக்கி சாப்பிடும் சுவையிருக்கே அப்பப்பா இன்னும் நாவில் ஊறுகிறது. சோளம் முற்றாமல் பறித்து வந்து அவித்து கொடுப்பது, கேழ்வரகு முக்கா விளைச்சலில் பறித்து விறகு அடுப்பில் சுட்டு, முறத்தில் வைத்து தேய்து புடைத்து கொடுப்பது, பச்சைக் நிலக்கடலையை கொல்லையிலையே சுட்டு கொடுப்பது,  பேரிச்சை மரத்தில் காய்,  காராமணி,உளுந்து, பயறு இளசா பறித்து வேகவைத்து கொடுப்பது, அவர் வைக்கும் மருந்து கொழம்பு, அம்மியில் வைத்து அரைத்து வைக்கும் குழம்பு துவையல், அவரோடு தூங்கும் பொழுது தலையை மென்மையாக நெருடியபடியே கதை சொல்லியாய் கதையுலகில் என்னை வசிகரித்த தருணங்கள், தலையில் உள்ள ஒவ்வொரு முடியாய் எடுத்து எண்ணெய் தேய்து  நீவி விடும் சுகம் என விரிந்துகொண்டே செல்லும்.


எனக்குத் தெரிந்த வரை பிறப்பு சடங்கிலிருந்து இறப்பு சடங்கு வரை இவர் இல்லாமல் எங்கள் தெருவில் நடந்து இல்லை. சாவு வீட்டில் பிணத்தை இவர் தூக்கி அமர்த்தி , குளிக்க வைப்பதைப் பார்த்து.எப்படி இவ்வளவு துணிச்சல் என்று வியத்தது, பயந்தது உண்டு . குழந்தை பிறந்து 18 ஆம் நாள் செய்யும் சடங்கில் குழந்தையை முறத்தில் வைத்து புடைத்து தலைகீழாக அவர் தூக்கும் பொழுது இமை இமைக்க மறுக்கும்.  அவரிடமிருந்து பல கற்றுகொண்டுள்ளேன். ஒய்வு ஒழிசல் இல்லாமல் சளைக்காமல் வேலை செய்துகொண்டே இருப்பார். அவருக்கான வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். சிறுவயதாக இருக்கும் பொழுது,சில நாள் இரவுகளில் சிவப்பாக நெருப்புத்துண்டு அசைவதை பார்த்து இது எனவாக இருக்கும் எண்ணியதுண்டு. அதன் பிறகுதான் தெரியும் எப்பொழுதாவது சுருட்டு பிடிக்கும் பழக்கம் எங்கள் ஆத்தாவுக்கு உண்டு என்று.

தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி கொண்டே இருப்பார். அவருக்கென்று தனியாக எதனையும் அவர் செய்துகொண்டது கிடையாது. பணம் கூட தனக்கானதாக சேர்த்து வைத்துகொள்ள மாட்டார். 80 வயதை தாண்டிய நிலையிலும் தனக்கான வேலையை யாரும் செய்யக்கூடாது என்பதில் உறுதியுடையவர்.

சென்ற சில மாதங்களுக்கு முன் திடீர் என அவருக்கு வயிற்று வலி , மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த பொழுதான் தெரிந்தது, சூல்பையில் புற்றுநோய் என்று. இருந்தும் அவர் மனம் தளராமல் எங்களுக்கு அவர் ஆறுதல் கூறுகிறார். சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது என்பதில் உறுதி. எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை.  கால் கை ஒருநாள் செயலபடாமல் போய்விடக்கூடிய நிலை வந்தது. எனக்கு ஒன்றும் செய்யாது. தைலத்தை எடுத்து நன்றாக நீவிவிடுங்கள் என்று கூறி, காலை கையை அவராகவே அசைத்து அசைத்து தன்னால் முடியும் என்ற அந்த நம்பிக்கை அவரை எழுந்து உக்கார வைத்து, நடமாட வைத்தது. நல்லெண்ணெய் தான் அவருக்கு மருத்து அதை எப்பொழுதும் தன் உடல் மீது தடவி கொண்டே இருப்பார். இப்பொழுதும் தனக்காக யார் வேலை செய்தாலும், அதனை ஏற்க முடியாமல் ஏற்கொண்டு காலத்தை நகர்த்திகொண்டு உள்ளார். நேரம் கிடைக்கும் பொழுது அவரோடு பொழுதுகளை கழிக்கவே விரும்புவேன். நேரம் ........... அது நழுவிகொண்டே இருக்கிறது.
















கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
என்னவொரு மன உறுதி... அம்மாயி விரைவில் பூரண நலம் அடைய வேண்டுகிறேன்...
செல்வ.முரளி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆத்தா எல்லாம் வல்ல இறையருளால் நிச்சயம் உங்களோடு இருப்பார். படைத்தவனே பாதுகாவலன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தனபாலன் சார், நன்றி செல்வமுரளி.
அ. வேல்முருகன் இவ்வாறு கூறியுள்ளார்…
உழைக்க வேண்டும் என்ற அந்த எண்ணமே மனிதனை உயரமாக்குகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......