விரிச்சி நிற்றல்

விரிச்சி நிற்றல் எனபதற்கு நற்சொல் கேட்டல் என்பது பொருள்.இச் சொல் வாய்ப்புள் எனவும் வழங்கப்படுகிறது. இப்பொழுது அசீரீரி எனக் கூறப்பெறுகின்றது. திருந்திழை விரிச்சி நிற்ப என நற்றிணையிலும்(40) நெல்நீர் எறிந்து விரிச்சி ஒருக்கும் எனப் புறநானூற்றிலும்(280) இச் சொல் பயிலப்படுகின்றது. இந்சொல் வாய்ப்புள் என வழங்கப்பெறுவதற்கு காரணம் நிமித்தம் காணப் பறவைகள் பயன்பட்டமை போல வாய்ச்சொல்லும் அதற்கு பயன்பட்டமை எனலாம்.

பெருமுது பெண்டிர் மாலைப்பொழுதில் பிரிந்து சென்ற தலைவன் நிலையினை அறிதற்கு, மூதூர் மருங்கு சென்று, நற்சொல் கேட்டனர். அப்பொழுது இடைக்குல மடந்தை குளிர் நடுக்கத்தால் கையைத் தோளில் கட்டிக்கொண்டு இளங்கன்று பாலகுடிக்காத துயரால் பசுவை நோக்கிக் கதறும் தன்மை கண்டு, கோவலர் ஆனிரையை ஓட்டிவர நன்கு மேய்ந்து நின் தாயார் இப்பொழுது வருகுவார் என்று கூறிய இன்சொல் அவர்கள் கேட்டனர். இது பிரிந்த தலைவன் விரைந்து வருவான் என்னும் குறிப்புணர்த்தியமையின், மடந்தைமொழி நன்மொழி எனச் சுட்டப்பட்டது.

-----------------------ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள்; கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுநர் தாயர் என்போள்
நன்னர் நனமொழி கேட்டனம் (முல்லைப்பாட்டு)

தலைவன் போரில் விழுப்புண்பட்டு உயிர் துறந்து நிலையில் இருந்தான். அந்நிலையில் நிகழ்ந்த தீநிமித்தங்களைத் தொகுத்துக் கூறிய புலவர், விரிச்சி குறிப்பினையும் அதனுடன் இணைத்துள்ளார். நண்பகலில் முரலாத தும்பிகள் அக்காலத்தே முரல்கின்றன. ஏற்றிய விளக்கும் எரியாமல் அணைகின்றது. தலைவியும் தன்னை யறியாது உறங்குகின்றாள். இல்லத்தின் கூரை மேலிருந்து கூகை குழறுகிறது என்று இத்தீநிமித்தங்களைத் தொகுத்துக் கூறிய பின், இறுதியில் விரிச்சி கேட்கும் பெண்டிரின் சொற்களும் குறையுடையவாயின என்று விரிச்சி செய்தி சுட்டப்பெறுகின்றது.

நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா (புறநானூறூ,280)


முல்லப்பாட்டில் நன்நிமித்தமும், புறநானூற்றில் தீ நிமித்தமும் கூறப்பட்டுள்ளன.

கருத்துகள்

ஆரூரன் விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பாடல்களை அழகாக விளக்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஆரூரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்