தென்பாண்டியில் உள்ள தென்கைலாயத் தலத்தில்,வேளாளர் குலத்தில் திருவாளர் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும்,திருவாட்டி சிவகாமியம்மையாருக்கும் மகவாய் தோன்றியவர் குமரகுருபர்.ஐந்து வயதுவரை ஊமையாக இருந்து,முருகன் அருளால் பேசும் திறனைப் பெற்ற குமரகுருபர்,முருகன் மேல் முதன்முதலில்’கந்தர் கலிவெண்பா’ என்ற நூலை அருளினார்.அதன் பிறகு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துசுவாமி பிள்ளைத்தமிழ்,மதுரைக்கலம்பகம்,நீதிநெறி விளக்கம்,மதுரை மீனாட்சியம்மை குறம் போன்ற பல புகழ் பெற்ற இலக்கிய வகைகளைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் மதுரை மீனாட்சியம்மை குறம் 51 பாடல்களைக் கொண்டு,இலக்கிய நயத்துடனும்,பக்தி செறிவாயும் இலங்குகின்றது. இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. குறம்-குறவஞ்சி .தொன்மையில் வழங்கிவந்த குறி சொல்லும் வழக்கமே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக எழுந்தது என்றும், சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக இருந்த குறம்,பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக மலர்ந்தது என்றும் கூறுவர்.ஒரு குறத்தி குறி கூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்றும் வழங்கும் என்பர் உ.வே.சா.குறத்தி ஒருத்தியின...