சிதம்பரத்தில் நாளை ஆருத்ரா தரிசனம்

பஞ்சபூத தலங்களுள் ஆகாயத் தலமாக விளங்கக் கூடியது தில்லையம்பதியாகும். இவ்வூர் சைவபெருமக்களால் கோவில் நகரம் எனவும் அழைக்கப் பெறும் சிறப்புடையது.மேலும் ஞானகாசம், பொன்னம்பலம் எனப் பல பெயர்கள் வழங்கப் பெறுகின்றன.இக் கோயிலில்
சிற்றம்பலம்,பேரம்பலம்,பொன்னம்பலம்,நிருத்தசபை,இராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.
பொன்னம்பல இராஜசபையில் தூக்கயாடிய காலுடன் உலக இயக்கத்தினை உணர்த்திக்கொண்டிருக்கும் ஆதிகூத்தனுக்கு ஒவ்வொரு நாளும் ஆறுகால பூசையும்,வருடத்திற்கு ஆறுமுறை திரு நீராட்டும் நடைபெறும்.ஆறுமுறை நடைபெறும் திருநீடாட்டில் இரண்டு முறை மட்டும் இறைவனும்,இறைவியும் தேரேறி மக்களைக் காண வருவர்.இங்கு என்ன
சிறப்பென்றால் மற்ற கோவில்களில் உற்சவ மூர்தியைத் தேரேற்றுவர் ,ஆனால் சிதம்பரத்தில் இராஜ சபையில் இருக்க கூடிய மூலவரான அம்மையும்,அப்பனுமே தேருலா வருவர்.
திருவாதிரை நட்சத்திற்கு உரியவனாகிய சிவனை ஆதிரையான் எனப் போற்றுவர்.வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆனி உத்திரத்தன்றும்,மார்கழி திருவாதிரையன்றும் தேருலா நடைபெறும்.பிறகு இறைவனும் இறைவியும் ஆயிரங்கால் மண்டத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்று அடியவர்களுக்குத் தரிசனம் தருவர்.ஆனி உத்திரத்தைவிட மார்கழி திருவாதிரை உற்சவம் சிறப்பு. காரணம் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்திரா தரிசனத்தின் போது திருவாதிரை நட்சத்திரம் தோன்றும்.அந்நட்சத்திரத்தின் ஒளியில் அமர்ந்து இறைவனைத் தரிசிக்கும் போது,உடலுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால் திருவாதிரை நட்சத்திர ஒளியில் சோடியம்,மக்னீசியம்,இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்து காணப்பெறுவதால் உடலுக்கு நன்மை ஏற்படும்.

விழாகொடியேற்றத்துடன் தொடங்கிப் பத்து நாளும் மாலை வழிபாட்டின் போது மாணிக்கவாசகர் தீபாரத்தனையும் ,திருவெம்பாவையும் பாடப்பெறும். ஒவ்வொறு நாள் இரவிலும் ஒவ்வொருவித அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறும்.

பத்தாம்நாள் தேருலா நடைபெறும். சிதம்பரத்தில் இன்று அவ்விழா நடைபெறுகிறது.விடியற் காலையில் சிவனையும் சிவகாமி அம்மையையும் இராஜசபையிலிருந்து தேருக்கு எடுத்து வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.அப்படியே அந்த கைலாயத்திற்கு வந்து விட்டோமோ எனத் தோன்றும்.அங்கு ஒலிக்க கூடி ஒலிகள் தேவகானம் என்பது இது தானோ என நம்மை வியக்க வைக்கும்.நம்மை மறந்து அதிசயிப்போம்.
மத்தளம் கொட்ட வரிசங்குகள் ஊத தேரில் மூலவரான நடராஜமூர்த்தி,சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவமூர்த்திகளான சண்டிகேஸ்வரர்,விநாயகர்,முருகன் ஆகியோர் தனித்தனி வீதி வலம் வருவர்.
நாளை அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் இறைவன் இறைவிக்கு மாகாஅபிஷேகமும்,புஷ்பாஞ்சலியும் ,ஆடை ஆபரண அலங்கார காட்சியும் நடைபெறும்.12 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும்,சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்