மௌன சாட்சியாய் … இல்லாமல் இருப்போமே
பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள் பயனுள்ள விசயங்கள்
மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப்பறித்த
ஆதாயங்களக் கருதிப் பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய்
என்பதை அறிவதற்கு அருகில் வா. செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து
நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்டகால அடிமைப்பழக்கம் உன்னைக்
கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம் புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை
என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை
அறிந்திட வா. நான் வரைகிற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால்
இதுபற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை
விளையாட்டுகளுக்குத் திரும்பிவிடு, இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன.
(Choderlos de Loclose, On the Education of Women)
உலகில் பெரும்பாலான பெண்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள், பசியோடுயிருக்கிறார்கள்
மௌனமாகயிருக்கிறார்கள் எல்லாவித தளைகளையுடைய மதத்தால் நிரப்பப்பட்டுள்ளார்கள். மூகமூடியணிந்துள்ளார்கள்
கடிவாளமிடப்பட்டுள்ளார்கள் அடையாளம் தெரியாதபடி
சிதைக்கப்படுகிறார்கள் அடிக்கப்படுகிறார்கள்
அண்மையில்
நிகழ்ந்த இரு நிகழ்வுகள்
முன்பனிக் காலத்தில் குளிர்ந்த காற்றும் பனிப்பொழிவும்
மிகுந்த டிசம்பர் இறுதியில் மாமா ஒருவர் இயற்கையெதினார். எங்களூர் பக்கம் இறந்தவர்கள்
வீட்டில் ஓராண்டு முழுதும் நல்ல நாள்களைக் கொண்டாமாட்டார்கள். உறவினார்கள் சுற்றத்தார்
அன்றைய தினத்தில் இறப்பு நிகழ்ந்த இல்லத்திற்குச் சென்று வருவது வழக்கம். அவ்வாறு பொங்கல் விசாரிப்புக்கு நானும் அம்மாவும் மாமா வீட்டிற்குச் சென்றிருந்தோம். அந்த
அத்தைக்கு கிட்டத்தட்ட 75 வயதுக்கு மேல் இருக்கும். அவர்களோடு உரையாடிய போது அவர்கள் பேசிய சில விடயங்கள் என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. மாமா இறந்த முப்பது நாளும் வீட்டின் முன்னுள்ள தாழ்வாரத்திலே படுத்திருந்ததாகக்
கூறினார். நல்ல பனிக்காலம் ஊதைக்காற்று அதிலேயே படுத்துள்ளார். ஏன் நீங்கள் வீட்டுக்குள்
படுக்கலாமே என்று கேட்ட பொழுது ஐயோ எப்படி படுப்பது அது என் கணவருக்குச் செய்யும் பாவம்
இல்லையா? என்று பதறினார். அத்துடன் ஊரார் என்ன சொல்வார்கள் என்று விசனப்பட்டார்.
மற்றொரு
நிகழ்வு தோழி ஒருவரின் துணைவர் தவறிய இறப்பு
நிகழ்வு ஒன்றிற்குச் சென்றிருந்த பொழுது, கணவன் இறந்த நிலையில் துயரத்துடன் அவர் இருந்தபொழுது
சடங்கு என்ற பெயரில் பிணத்தைத் தூக்கும் முன் அவருக்கு மஞ்சள் பூசி, பொட்டிட்டு பூ
வைத்து கையில் வளையல் அணிவித்து கொடும் துன்பங்களை விளைவித்த செய்தியைக் கேள்விபட்டேன்.
கண்ணாடி வளையலை உடைக்கும் பொழுது தோழியின்
கையில் வளையல் குத்தி இரத்தம் வரத் தொடங்கியது. ஏன் இந்த சமூகம் இப்படி பெண்களை கொடுமைப்படுத்துகிறது.
சடங்கு என்ற பெயரில் மேலும் மேலும் பெண்களை ஒடுக்குகிறது என்று அங்குள்ளவர்களிடம் கோபமாகக்
கேட்டேன். பலர் முன்னோர்கள் செய்தார்கள் அதனால் செய்கின்றோம் என்றார்கள். படித்தவர்களும் அடக்கம். அத்துடன் சிலர் நாங்கள் எதனையும்
மறுத்து கூறமுடியாது என்றார்கள். இத்தனைக்கும் படித்து வேலை பார்க்கும் பெண்கள். ஆண்களும்
கூட இதனைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால் என்னுடைய தோழியும் அவருடைய அக்காவும் அவருக்கு நடக்கவிருந்த 15
ஆம் நாள் காரிய சடங்குகளை மறுத்து அவர் இயல்பில் இருப்பது போலவே
இருக்கிறார். ஊராரின் வாய்கள் முணுமுணுத்தாலும் ( பெரும்பாலும்
பெண்கள்தான் பேசுவது) சிறிது காலத்தில் அடங்கிவிடும். பொருளாதார சுதந்திரம்
தான் அவரை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வைத்துள்ளது என்பதும் கவனிக்கத்
தக்கது.
படித்தவர்கள் கூட இதுபோன்ற இடங்களில் மௌனமாய் கடப்பது வலிக்கத்தான்
செய்கிறது. பேச வேண்டிய இடத்தில் பேசுவது தானே கற்றோருக்கு அழகு…
கருத்துகள்