தமிழ் - உறவுகளின் மொழி
உறவு என்னும்
பெயர்ச்சொல்லுக்கு அடைதல், தொடர்பு (பிணைப்பு), நட்பு, சுற்றம், அன்பு, விருப்பம் என்னும்
பொருள்கள் உள்ளன[1].
மனித வாழ்க்கைக்கு உறவு என்பது அடிப்படை. ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லை என்றால் வாழ்க்கை
இல்லை. குடும்ப உறவு, உற்றார் உறவினர், சுற்றத்தார் உறவு, சமூகத்தோடு கொள்ளும் உறவு,
இனம், மொழி கடந்த உறவு என விரிந்து மானுடம் இயக்குகிறது.
உறவு என்பது
அன்பின் வெளிப்பாடு, பண்பின் செயற்பாடு. நல்ல உறவு முறைகளும் நல்ல உணர்வு முறைகளுமே
ஆறறிவு உருவத்தை மனிதனாக்கும். மனித வாழ்க்கையில் உறவுகள் காலங்களை எல்லாம் கடந்து
நிற்கின்றன. தொடர்புகள் நிலைக்க ஒன்று பிறிதொன்றுடன் தொடர்பில்லாமல் வாழ்தல் இயலாது.
ஒன்று பிறிதொன்றைச் சார்ந்து வாழ வேண்டும். அந்த சார்பு நிலையில் ஒழுங்கு அமைய வேண்டும்
அதுதான்
மனித உறவு.
உயர்திணை
என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை
என்மனார் அவரல பிறவே[2]
நாகரீக காட்டாற்று
வெள்ளத்தில் நீந்தி திளைத்த மனிதக்கூட்டம், பண்பாடு என்னும் கரைகளை மெல்ல மெல்ல உருவாக்கி
உறவுகளைச் சீர்படுத்தி வாழத் தொடங்கினர். அவர்களே உயர்திணை எனப் போற்றப்பெற்றனர்.
தமிழ் மொழி
பேசும் தமிழ் நிலப்பரப்பில் உருவான தொல் தமிழ் இலக்கியமான பாட்டும் தொகையும் என்று
அழைக்கப்பெறும் சங்க இலக்கியம் மனித உறவுகள் குறித்து நுட்பமாகப் பேசியுள்ளது.
தமிழ் மரபு வாழ்வை அகம், புறம் எனப் பகுத்தது.
அக நூல்கள் இல்லற வாழ்வின் முன்பின் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் பொழுது தலைவன், தலைவி,
தோழி, செவிலித்தாய், நற்றாய், பாங்கன், பாங்கி
ஆகியோரின் உறவு நிலைகளை விளக்குவதாகவும் அமைந்துள்ளன. பல்வேறு நிலைகளில் மக்கள்,
சமுதாயத்தோடு கொள்ளும் உறவுகளைப் புற நூல்கள் எடுத்துரைக்கின்றன.
புறப்பாடல்களில்
ஔவையார்- அதியமான், பாரி – கபிலர், குமணன் - பெருஞ்சித்திரனார் ஆகிய புலவர்களுக்கு
இடையே இருந்த நட்புறவும், புலவர்கள் உரிமையுடன் அரசர்களை அறநெறி பால் செலுத்த அறம்
உரைத்ததும், அதனை அரசர்கள் செவிமடுத்தும் அவர்தம் பாடல்களின் வழி அறியமுடிகிறது. ஔவையார்
நெடுமான் அஞ்சியை, யாழோசை தருவதுபோல இசையின்பம் தராது, காலத்துடன் பொருந்தி வராது,
பொருளும் அறிய இயலாது ஆயினும் தந்தையர்க்குத் தம் புதல்வன் மழலையை இன்பமுடன் ஏற்பர்.
என்னுடைய வாயிலிருந்து வரும் சொற்களும் அத்தனைமைத்தே, பகைவர்தம் காவலையுடைய மதிலை அரண்
பலவற்றை வென்ற நெடுமான் அஞ்சியே நீ என் சொற்களை அவ்வாறு அருள் செய்கிறாய்[3] எனப்
பாடியதுடன் புலவர்களும் இரவலர்களும் எப்பொழுது வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் சற்றும்
முகம் கோணாமல் முதல் நாள் சென்ற போது வரவேற்றது போன்றே வரவேற்று விருந்தோம்பும் பண்பும்
வாழ்தலுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்து அனுப்பும் பண்பும்[4] உடைய
நல்லுறவு நிலவியுள்ளது. பறம்பு மலையாண்ட பாரியைப் பகைவர்கள் அழித்து பறம்பு மலையைக்
கையகப்படுத்திய பிறகு கபிலர் பாரியின் மகளிரைக் காக்கும் பொறுப்பினை ஏற்று அவர்களுக்கான
வாழ்கைகயை உருவாக்கிக் கொடுத்ததும் பாரியை நினைந்து பாடிய கையறு நிலைப் பாடல்களும்[5] அவர்களுக்கிடையே
இருந்த ஆழமான உறவினை வெளிப்படுத்துகிறது.
பாணாற்றுப்படைகள்
பரிசில் பெற்றோர் பரிசில் பெற வேண்டியோருக்கு வழிகாட்டியதைக் கூறுகிறது. சிறுபாணாற்றுப்படையில்
நல்லியக்கோடனின் சிறப்பையும் அவனது வள்ளல் தன்மையையும் எடுத்துரைத்த பாணர்கள் நல்லியக்கோடனின்
ஊர் வெகு தூரத்தில் இருக்கும் என்று அயர்ந்து
விடாதீர்கள். அயர் மூதூர் சேய்த்தும் அன்று; சிறிது நணியதுவே[6]
கொஞ்சம் பக்கத்தில் தான் உள்ளது என்று வழிப்படுத்துகின்றனர். மனித உறவுகளுக்கு இன்றியமையாதது
தம்மைப் போல் பிறரையும் நேசிக்கும் பண்பு ஆகும். மதுரைக்காஞ்சியில் உலக நிலையாமையை
எடுத்துரைத்து மனித உறவுகளை மதிக்க வேண்டிய தேவையை மாங்குடி மருதனார் தலையானங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துரைக்கின்றார். நரிவெரூஉத் தலையார் இளமையும் முதுமையும் உறுதி ஆகையினால் உறவினைப்
பேணுவதற்கு நல்லது செய்யவில்லை என்றாலும் தீமை செய்யாமல் இருங்கள் என்கின்றார்[7]. இதனினும்
உச்சமாகக் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறுகிறார்.
மேலும்[8] மொழி
இனம் வேறுபட்டிருந்தாலும் மனம் ஒன்றினால் மனித உறவுகள் சிறக்கும்[9]
ஆண்
பெண் உறவு
அக வாழ்வில் ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய உறவு குறித்துப் பேசுகிறது சங்க இலக்கியம்.
எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தான்மர்ந்து
வரூஉம் மேற்றாகும்[10]
இன்பம் என்ற பாலியல் விழைவான
காதலடைதல் உயிரியற்கை என்றாலும் பொதுமையிலிருந்து
சமூக நலனுக்கு உகந்ததாகவும் வாழ்வியல் முறைகளை வரையறுத்துக் கொண்டது மனித இனம். மனித
இனம் குடும்பமாகவும் சமுதாயமாகவும் கூடி உறவு கொண்டு வாழ அடிப்படையாக அமைந்தது பாலுறவேயாகும்.
இதற்கு அடிப்படை காதலுறவு இதனை, காதல் என்பது உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசி
என்று கூறுவார் வ.சுப. மாணிக்கனார். இது ஆற்றல் மிக்கது; உட்சார்பும் உளச்சார்பும்
கொண்டது;விளக்கலாகாத சிக்கலும் நுண்மையும் கொண்டது. மனித வாழ்க்கையின் தலைமை கூறுகளில்
ஒன்றாகத் திகழக்கூடியது. தமிழ் புலவர்கள் காதலைப் பிறவிதோறும் தொடரும் புனிதமனதோர்
உறவாகவே கருதினர். காதலர் தம் களவுக்கான மனவுணர்வுகளையும், போராட்டங்களையும் அப்போராட்டத்தில்
அவர்கள் வெற்றிப் பெற துடிக்கும் துடிப்பினையும் சங்கப் புலவர்கள் நன்கு உணர்ந்து விளக்கியுள்ளனர்.
ஆண் பெண்ணின்
உடல் வனப்பில் ஈடுபடுவது போல்,பெண் ஆடவனின் உடல் வனப்பில் மிகுதியாக ஈடுபாடு கொள்ளாது,
பண்பு நலன்களை ஆணிடமிருந்து எதிர்பார்க்கின்றாள் என்று சங்க இலக்கியம் காட்டுகிறது[11]. பெண்
தனக்கான இணை வலிமையானவனாகவும் பண்புள்ளவனாகவும் தன்னை வைத்துக் காக்க கூடியவனாகவும்
இருப்பதையே விரும்பியுள்ளாள். பொருளாதாரம் இரண்டாம் நிலைபட்டதாகவே எண்ணப்பட்டுள்ளது.
காதல் என்பது
இரண்டு உயிர்களின் கூட்டுறவு; ஒன்றின்றி மற்றொன்று வாழ முடியாது எனவேதான் காதலைப் பிரிவரிதாகிய
தண்டாக்காம் என்று கூறினர்.
ஒரு பெண்ணிடத்து
மனதைப் பறிகொடுத்த ஆண், தன் காதலியால் தனக்கேற்பட்ட காதல் நோயைத் தீர்க்கும் மருந்து
அவளைத் தவிர பிறரில்லை என்கின்றான்.
அருந்துயர்
அல்லல் தீர்க்கும்
மருந்து
பிறிதில்லையான் உற்ற நோய்க்கே.
தன்னெஞ்சம்
தன் காதலியோடு இறுகப் பிணிக்கப்பட்டு விட்டதென்றும், அதனை விடுவிக்க யாராலும் முடியாதென்றும்,
தன்னுடைய இன்னுயிர் தன் காதலியின் கையிலுள்ளதென்றும் ஒரு தலைவன் கூறுகிறான்[12]. தன்னைக்
குறியிடத்துக் கண்டு மீண்டு செல்லும் தலைவியுடன் தன் நெஞ்சமும் சென்றுவிட்டதாக ஒருவன்
கூறுகிறான்[13]தன்னுடைய
நெஞ்சம் தலைவியிடம் அடிக்கடிச் சென்று அல்லலுறும் பறவையின் நிலையோடு ஒப்பிடுகிறான்
ஒருவன்[14]காதலன்
தன் காதலியாற் பெறும் இன்பத்தினைக் கிடைத்தற்கரிய பேறாக நினைத்து மதிக்கின்றான். அவளை
ஒருநாள் புணரப்பெறின் அதன் பின் அரையாள் வாழ்க்கையும் தனக்குத் தேவையில்லை என்கின்றான்[15]இன்னொருவன்
சீறும் புயலுக்கும் சிதறும் மழைக்கும் எறியும் இடிக்கும் ஈடுகொடுத்து என்றும் நிலை
பெற்ற கொல்லிப்பாவை போலத் தன் காதலி தன்னெஞ்சில் நிலை பெற்றதாகக் குறிப்பிடுகின்றான்.
பெண்ணின் உறவினை வேண்டி காதலிக்கும் காலத்து செல்லுவதற்கரிய மலை வழியில், கடுமழை, வல்லிடி,
சூறைக்காற்று, சூறும் புலி, மதம்கொண்ட யானை, புற்றகழும் கரடி, ஈர்ப்புடைய முதலை, காட்டாற்று
வெள்ளம், இன்ன பிற இடையூறுகளைத் தாண்டிகாண வருகின்றான்.
அதேநேரத்தில் ஒரு பெண் காதலை நினைத்து தானுறும்
துயரைத்தினையும் அலக்கழிப்பினையும் பின்வருமாறு அடுக்கிக் கூறுகிறாள்.
பெருங்கல்
நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற
அன்னை அமரா நோக்கமும்
வடந்தை
தூங்கும் வருபனி அற்சிரச்
சுடர்கெழு
மண்டிலம் அழுங்க ஞாயிறு
குடகடல்
சேரும் படகூர் மாலையும்
அனைத்தும்
அடூஉ நின்ற நலிய உஞற்றி[16]
தலைவன் நெடுநாள் வாராத
நிலையில் தன் அறிவும் உள்ளமும் தலைவன் பாற் சென்றுவிட்டமையால் தன் உடம்பு வறிதாகிக்
கிடைப்பதாகக் கூறுகிறாள். தலைவியின் உள்ளம் தலைவனைச் சுற்றியே சுழல்கிறது. தன்னெஞ்சம்
தலைவன்பால் சென்று அங்கேயே தங்கிவிட்டதாகக் கூறுகிறாள். கூகை குழறினும் குரங்கு தாவினும்
நடுங்கும் தன் நெஞ்சம் செறிந்த இருள் கொண்ட மலைவழியே நோக்கிச் சென்றுவிட்டாக ஒருத்தி
குறிப்பிடுகின்றாள்[17]
திருமணமான
பெண்களை இல்லாள், மனையோள்,மனைகெழு மடந்தை, இல்லுறை மகளிர் என அழைக்கப்பெறுகின்றனர்.
மனைவியால் காதலர், அவர், என்னை என்ற பெயர்களால் குறித்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு
இடயே ஏற்படும் மன முரண்பாடு ஊடல் எனப்படும். இதனைப் புலவி என்றும் கூறப்பெறுகிறது.
குடும்பத் தலைவன் தான் செய்த பிழையை உணர்ந்து வாயில் வேண்டி நிற்றலையும் தலைவி வாயில்
மறுத்துப் பேசுவதையும் அதே நேரத்தில் தலைவனின் பணிந்த மொழிகளைக் கேட்டு சினம் தணிந்து
ஏற்றுக்கொள்ளுவதும் நிகழ்கின்றது. மனைவி என்பவள் கணவனின் சொல்லின் மீது நம்பிக்கை வைத்தலும்
அவன் வறுமையுற்றாலும் தந்தை வீட்டுச் செல்வத்தினை மனத்தாலும் கருதாது வறுமையிற் செம்மை
காத்தலும், கணவன் வீட்டு எளியப் பொருட்களையும் தாய் வீட்டு அரிய பொருளினும் மேலானதாகக்
கருதுதலும், கணவனுடைய இன்பத்தில் மட்டுமின்றித் துன்பத்திலும் துணையாக இருத்தலும்,
விருந்தனர் கண்டபோது ஊடலை வெளிப்படுத்தாது கணவனொடு ஒன்றுபட்டு நிற்றலும் கணவனுடைய சுவையறிந்து
உணவாக்கிப் படைத்து அவன் மகிழ்வது கண்டு தான் மகிழ்தலும் பிறவும் பெண்களின் பண்புகளாகக்
கருதப்பெற்றன.
குழந்தை உறவு
சங்க இலக்கியத்தில் போற்றப்பெற்றது. அவரவர் சமூகப் பொருளாதார நிலைக்கேற்ப குழந்தை வளர்ப்பு
அமைந்துள்ளது. குழந்தை பருவத்தில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் செவிலித்தாய்
பேணினாள். எனினும், குமரப் பருவம் வந்துற்றபின்னர் ஆண்களோடு செவிலிக்குள்ள தொடர்பு
அற்றுப் போகவும், குமரிப் பெண்களோடு அவளுக்குள்ள உறவு முன்னிலும் நெருக்கமாக அமைந்துள்ளது.
பெண்ணின் அறிவையும் ஒழுக்கத்தையும்
வளர்ப்பதில் செவிலித் தாய்க்குப் பெரும் பங்குண்டு எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
காதலிக்கும்
காலத்தில் மகளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் தாய் காதலனுடன் ஊரைவிட்டுப் போனபின்பு முற்றிலும் மாறி போன மனநிலையில் காணப்படுகிறாள். தம் பெண்ணின்
மென்மையையும் அவர்கள் பிரிந்து செல்லும் வழியில் படக்கூடிய துன்பங்களையும் ஒப்பிட்டுப்பார்த்து கலங்கும் தாய்மார்களும், மகள் செல்லும் வழி துன்பமின்றி
நல்வழியாக இருக்க வேண்டும் அறிந்த மக்களையும் கொண்டதாக இருக்கவேண்டும் என விழையும்
தாய்மார்களும் தன் பெண்ணை மணக்கோலத்தில் கண்டு மகிழும் வாய்ப்பிழந்தமைக்கு வருந்தும்
தாயும், மகளை இழந்த பின் உயிரோடு வாழ்தலையே வெறுக்கும் தாய்மார்களும் தம் பெண்களை வைத்து
விளையாடிய பொருட்களையும் வளர்த்த கிளிகளையும் வயலைக் கொடியையும் இழைத்த வண்டலையும்
காணும் பொழுதெல்லாம் கலங்கியழும் தாய்மார்களையும் காணமுடிகிறது. பெற்றோர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள்
பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பதற்கான கண்டிப்புகள் இருந்தாலும் தங்களுக்கான வாழ்க்கை
துணையை அவர்கள் தேர்ந்தெடுத்த பொழுது பாசத்திற்கு கட்டுப்பட்டு அவர்களை வாழ்த்தவே செய்கின்றார்கள்.
சங்க இலக்கியத்தில் தலைவிக்கும் தோழிக்கும்
இடையே இருக்கக் கூடிய உறவு என்பது ஆகச் சிறந்த உறவாக அமைந்துள்ளது. தலைவியை அனைத்து
நிலைகளிலும் ஆற்றுப் படுத்துபவளாகத் தோழியே அமைந்திருக்கிறாள்.
நமக்கு கிடைத்திருகக்
கூடிய தமிழ் மொழியின் தமிழ் மக்களின் வாழ்வியல் விழுமியங்களைப் பதிவு செய்துள்ள சங்க
இலக்கியம் மனித உறவுகளுக்கு முதன்மையிடம் கொடுத்து அகம் புறம் என வகுத்துத்துள்ளது.
புறத்தில்
நாட்டை ஆளும் மன்னன் தான் ஆளும் மக்களோடும் பிற அரசர்களோடும் உறவுகளை எப்படி பேணுவது
என்பது குறித்துப் புலவர்கள் பேசியுள்ளனர். உலக நிலையாமை எடுத்துக்காட்டி அவர்களை நற்செயல்
பால் செலுத்தியுள்ளனர். புலவர், பாணர், அரசர் இவர்களுக்கிடையே நல்லுறவு நிலவியுள்ளது.
தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டுமென்ற விழைவும் சக மனிதர்களோடான நட்புறவுடனும்
வாழ்ந்துள்ளனர்.
அகத்தில்
காதல் வயப்படும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழக்கூடிய உறவில் அவர்கள் எதிர்கொள்ளும்
மனச் சிக்கல்களும் அதனை கடக்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் கூறப்பெறுகின்றன. பொதுவாக
ஆண் பெண்ணின் புற அழகைக் காண்பதும் பெண் அவனின் புறத்தோற்றத்துடன் அவனின் திறமையைப்
பார்த்தே அவனுடனான காதல் உறவை உறுதிசெய்கிறாள்.
காதல் கொள்ளும் பெண்ணினுடைய தாயின் மனநிலை தொடக்கத்தில்
கண்டிப்போடு இருந்தாலும், அவர்கள் பிரிந்து சென்றபொழுது ஆணவக் கொலைகள் எல்லாம் இல்லாமல்
அவர்களை வாழ்த்தக்கூடி மரபு இருந்துள்ளது. நற்றாயின் உறவை விட செவிலித் தாயின் உறவு
வலுவானதாக அமைந்திருக்கிறது.
தமிழ் மொழியில்
தோன்றிய சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை மனிதன் வைத்துள் வாழ்வாங்கு
வாழ மனித உறவுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டே
உள்ளன. ஆகையினால் தமிழ் உறவுகளின் மொழியாக அமைந்துள்ளது என்று கூறுவது மிகையல்ல.
[1] உறவு(பெயர்ச்சொல்)
என்னும் சொல்லுக்கு அடைதல்: தன் கடைத் தோன்றி
என் உறவு இசைத்தலின்(புறம்,395,24) தொடர்பு: ஒழுக்கம் இல்லார்க்கு உறவு உரைத்தல் இன்னா(இன்னா
நாற்பது,34) நட்பு: மறை உளான் கழற்கு உறவு செய்ம்மினே (திருஞானசம்பந்தர் 1.96.5) சுற்றம்:
ஊனூள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே (திருஞான சம்பந்தர், 2.49.7) அன்பு:
நண்ணார் அமர்ந்து உறவு ஆக்குமின்கள்(திருஞான சம்பந்தர்,3.107.4) என்னும் பொருளினை வரலாற்று
முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதியும் ( இரண்டாம் தொகுதி,பக்.442) சுற்றம், நட்பு, விருப்பம்
என்னும் பொருளினைத் தமிழ்லெக்ஸிகனும் (முதல்
தொகுதி பக்.481) சொந்தம், தொடர்பு, பிணைப்பு
என்னும் பொருளினைத் தருகிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் (பக்.158) தருகின்றன.
[2] தொல்காப்பியம், சொல்லதிகாரம்,
கிளவியாக்கம், நூற்பா: 1
[3] புறநானூறு,
பாடல் எண்: 92
[4] புறநானூறு,
பாடல் எண்: 101
[5] புறநானூறு,
பாடல் எண்: 114
[6] சிறுபாணாற்றுப்படை:
202
[7] புறநானூறு,
பாடல் எண்: 195
[8] புறநானூறு,
பாடல் எண்: 192
[9] மொழிபல பெருகிய
பழீதீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
பட்டினப்பாலை: 216-217
[10] தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல்,
[11] தட்சிணாமூர்த்தி.
அ., சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், பக்கம்: 49
[12] நற்றிணை,
95: 8-10
[13] நற்றிணை,
204: 8-1
[14] நற்றிணை,
358: 3-7
[15] குறுந்தொகை,
280
[16] அகநானூறு,378:
11-16
[17] குறுந்தொகை,
153
கருத்துகள்