கல்வி என்பது...

 தொடக்க கல்வியிலிருந்து உயர்நிலை கல்வி வரை நாம் பின்பற்றும் முறைகள் சரியாகத்தான் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.  கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகின்றோம். அவர்களின் குழந்தைமையைப் பற்றி கவலை கொள்வதே கிடையாது. குழந்தைகள் பள்ளிக்கூடங்கள் சென்று அந்த வயதில் நிறைய கற்றுக்கொள்ளுவார்கள் ஒழுக்கம் வரும் என்பது பெற்றோர்களின் நினைப்பாக உள்ளது. அதனை கல்வி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுகின்றன. 

சிறந்த கல்விமுறை கொண்ட நாடாகவும் மகிழ்ச்சியான நாடாகவும் ஐக்கிய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு பின்லாந்து. இங்கு கல்விக்கட்டணம் கிடையாது. கல்விக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மருத்துவ  பல் மருத்துவ வசதிகளும் செய்து கொடுப்பதுடன் உளவியல் நிபுணர்களும் ஆசிரியர்களும் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துகின்றார்களாம். அத்துடன் மாணவர்கள் ஏழு வயதில் தான் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றனவாம். ஆண்டுக்கு மாணவர்கள்  670 மணி நேரம் பள்ளியில் கற்றலில் ஈடுபடுகிறார்கள். பள்ளியில் சேர்ந்த ஐந்தாண்டுகளுக்கு தேர்வே கிடையாது. அவர்களின் திறன்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. கற்றுக்கொள்ள இயல்பாகவே மாணவர்களுக்கு ஆர்வம் வரவேண்டுமே ஒழிய திணிகக் கூடாது என்கின்றார்கள்.

மாணவர்கள் என்ன கற்க வேண்டுமோ அதனை வகுப்பறையில் கற்கிறார்கள். பள்ளிக்கு வெளியே நண்பர்கள், பிற வேலைகள் என மற்ற முக்கியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்" என்கிறார் மற்றொரு ஆசிரியரான மார்ட்டி மெரி.

விக்கி பள்ளியில் பணியாற்றும் எர்யா ஸ்குன்க் கூறுகையில், "குழந்தைகள் குழந்தைகளாக இருக்க அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டும். வகுப்பறையில் அவர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல, அதன் தரம்தான் முக்கியம்" என்றார். அதிக வீட்டுப்பாடம் இல்லாமல்தான் மாணவர்கள் இங்கு வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.

சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.

 தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர்.

சமநிலை அதிகமுள்ள நாடுகளில், அதிக கல்வியறிவுள்ள மக்கள் இருப்பதோடு பள்ளிப்படிப்பை கைவிடுப்வர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. மேலும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான வருமானம் இடைவெளி குறைந்துள்ள நாடுகளில் உடல் பருமன் நோய் குறைவாகவும், நல்ல மன ஆரோக்கியம் இருப்பதாகவும் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும், பாடம் கற்பிக்கும் முறைக்கும், கற்றுக் கொள்வதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு."

பசி சல்பர்க் கூறுகையில், "சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூக திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது" என்கிறார்.


ஏன் நாம் முயற்சிக்க கூடாது.

நன்றி

https://www.bbc.com/tamil/global-45679949


22 ஆகஸ்டு 2019 இல் விகடனில் வெளிவந்த ஆயிஷா நடராசன் அவர்களின் நேர்காணல்

நன்றி விகடன்

https://www.vikatan.com/government-and-politics/education/educationist-natarasan-talks-about-finland-education

கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உண்மையில், பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்ற நிலையை இந்தியாவில் பின்பற்ற முடியாதா... என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசனிடம் கேட்டோம்.

ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருவது மிக இயல்பானதே. பின்லாந்து நாட்டில் கல்வி தொடங்குவதே மிக ஆரோக்கியமான வயதில்தான். ஆம்! ஒரு குழந்தையின் ஆறு வயதில்தான் முறையான கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால், நமது ஊரில் இரண்டரை வயதிலிருந்தே ஃப்ரி ஸ்கூலுக்குக் குழந்தைகளை அனுப்பத் தொடங்கிவிடுகிறோம். அங்கும் 6 வயதுக்கு முன் ஃப்ரீ ஸ்கூல் இருக்கிறது. ஆனால், அங்கு எந்தப் பாடமும் கிடையாது. இசை, நீச்சல், ஓவியம் போன்ற கலைகளைப் பயிற்றுவிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி. புத்தகங்கள் கிடையாது.

ஆறு வயதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஒரு வருடம் பாடங்கள் கிடையாது. பெரிய அறையில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு, அங்கிருக்கும் விளையாட்டுப் பொருள்களில் விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். அதன்பின், 7 வயதில்தான் பாடங்களே தொடங்குகின்றன. அதிலும் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரேங்க் கார்டு எனும் முறையே கிடையாது. இதை நம் ஊரில் நினைத்துப் பார்க்க முடியுமா? எல்.கேஜியிலேயே முதல் மார்க் குறைந்துவிட்டது எனக் குழந்தையிடம் கோபித்துக்கொள்ளும் பெற்றோர்களே அதிகம். இவ்வளவு பணம் கட்டிப் படிக்க வைக்கிறனே என்று கரித்துக்கொட்டவும் செய்வார்கள்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ரேங்க் கார்டு என்பது மாணவர்களுக்கு இல்லை. உங்கள் பிள்ளைக்கு இந்த வயதில் இந்தந்த திறன்கள் இருக்கவேண்டும். அவற்றில் இருக்கும் போதாமைகளை, பெற்றோரிடம் சொல்வது மட்டுமே நடக்கும். அதிலும் கண்டிப்போ நிர்பந்தமோ இருக்காது. 7 வயது முதல் 16 வயது வரையிலான கல்வி முழுக்க பின்லாந்து நாட்டின் ஃபீனிஷ் மொழியில்தான் அளிக்கப்படுகிறது. இது என்னளவில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். ஏனெனில், தாய்மொழியில் கல்வி கற்கும்போதே அக்கல்வி அர்த்தம் புரிந்துகொண்டு ஆழமாக அம்மாணவரின் மனதில் தங்கும். அதன் தாக்கம்தான், ஐ.நா, நாசா உள்ளிட்ட பல இடங்களில் பின்லாந்து நாட்டினர் தற்போது கணிசமான அளவு இடம்பெற்றுவருகிறார்கள். 7- 16 வயதுக்குரிய கல்வியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலம், பிரெஞ்சு என அம்மாணவரின் விருப்பத்துக்கு ஏற்ப மற்றொரு மொழியைக் கற்க முடியும்.

-16 வயதுக்குள் சர்வதேச அளவிலான மூன்று தேர்வுகளை எழுதிவிடுகிறார்கள். அவற்றை எழுத வைக்கப்படுவதில்லை. அந்தளவுக்குத் திறன்கள் அக்கல்வி முறையில் இருக்கின்றன. மேலும், அக்கல்வி முடிவடையும்போது கொடுக்கப்படும் சான்றிதழ் வெறுமனே தேர்வு வைத்துக்கொடுக்கப்படுவது அல்ல. இந்தக் காலகட்டத்தில், விவாசயம், மெக்கானிக்கல், மின்சாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றி டிப்ளோமா சான்றிதழ்கள் பெற வேண்டும். பின்னாளில் இத்தனை துறைகளில் வேலை வாய்ப்பு இருக்கின்றன என்பதும், ஒரு தொழில் செய்யப்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களை நேரிலும் பழகிக்கொள்ளும் நல்ல வாய்ப்பாக அது அமையும்.

இந்தப் பள்ளிக் கல்வி முடிந்தது, மூன்று வகை பிரிவுகள் படிப்பதற்காக மாணவர்கள் தேர்ந்தெடுக்க முடியும். முதலாவது அகாடமிக் பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பைத் தரும் லூக்கியோ ( Lukio). இதன் வழியே டெக்னாலஜி அல்லாத படிப்புகளான பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் படிக்கலாம். அடுத்தது, அம்மக்யூ குலு ( Ammaqi kolu) இந்தப் பிரிவில் தொழில் கல்வி தொடர்பான பிரிவுகளைப் படிக்கலாம். உதாரணமாக, மூன்று மணிநேரம் பாடம் என்றால், அடுத்த மூன்று மணி நேரம் பொருள்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு நேரடியாகப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இதன்மூலம் படித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், கல்வி இலவசம்தான். மூன்றாவது பிரிவான லிபரல் ஆர்ட்ஸ் என்பது மாணவர்களின் கலைத்திறன்களை வளர்ப்பது. இதில் இசை உள்ளிட்ட 216 பிரிவுகளை வைத்திருக்கிறார்கள். முதல் இரண்டு பிரிவுகளை முடித்தவர்கள் அதன் மேல்கல்விக்காக பல்கலைக்கழகத்தில் சேரலாம். அம்மக்யூ குலு முடித்தவர்களில் பலரும் நேரடியாகத் தொழில் சார்ந்த பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.

பொதுவாக பின்லாந்து கல்வி முறையில் நாம் ரொம்பவே சிலாகித்துச் சொல்லும் அம்சம் ஒன்று உண்டு. ஒரு வகுப்பில் அரையாண்டுத் தேர்வுக்கான பகுதியாக A - Z வரை கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமது ஊரில், அந்தப் பாடப் பகுதியை நடத்திவிட்டுத் தேர்வு முறைக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், வகுப்பின் அனைத்து மாணவர்களும் A - Z வரை புரிதலுடன் கற்றிருப்பார்கள் என்று சொல்லமுடியாது இல்லையா? சில A - Z வரை படித்திருப்பார். சில D யிலேயே நின்றுகொண்டிருப்பர். அதனால், எந்தப் பகுதி ஒரு மாணவருக்குப் புரியவில்லையே அதை அவர் தெரிந்துகொள்ளும் சரியான வாய்ப்பை பின்லாந்து கல்வி முறை அளிக்கிறது.

உதாரணமாக, 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு அல்ஜிப்ரா தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். அல்ஜீப்ரா 6-ம் வகுப்பில்தான் கற்றுத்தரப்படுகிறது எனில், அந்த மாணவர் ஒரு வாரம் இருந்து படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்படிக் கற்றுத்தர ஓர் ஆசிரியர் ஒதுக்கப்படுவார். ஆசிரியர் மட்டுமல்ல, ஒரு மாணவர் பல்கலைக்கழகப் படிப்பு படிக்கும் வரையில் பள்ளியில் ஏதேனும் சந்தேகத்தைத் தீர்க்க அவர் வேண்டும் எனில், அப்பள்ளி அவருக்கு கடிதம் எழுதும். அவர் பல்கலைக்கழகத்தில் விடுப்பு எடுத்து பள்ளி வர வேண்டும். அந்தளவுக்குப் பள்ளியோடு இணைப்பில் ஒரு மாணவரை வைத்திருக்கிறார்கள்.

பின்லாந்தில் பள்ளிகள் என்பது கல்விக் கட்டடங்களாக மட்டுமல்லாமல், மக்களின் பண்பாட்டோடு இணைந்திருக்கிறது. அறுவடைக் காலங்களில் தானியங்களை உலர்த்த பள்ளியைப் பயன்படுத்துவார்கள். அதேபோல வெள்ளக் காலங்களில் ராணுவம் தங்கும் இடமாகவும் இருக்கும். ஊர்த் திருவிழாக் கொண்டாட்டக் களமாகவும் பள்ளிகள் இருக்கும். அதுதான் பள்ளி என்பது நம்முடையது என்கிற ஒரு நெருக்கத்தை அது அளிக்கிறது. இந்த உணர்வை நம் நாட்டில் பார்ப்பது மிகவும் அரிது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று, கல்வி முழுக்க முழுக்க அரசின் வசம் மட்டுமே இருக்கிறது. தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசு இலவசமாகக் கல்வி அளிக்கிறது. மேலும், நான்கு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறுவர் இலக்கிய விழா ஒன்றிற்காக சிங்கப்பூர் சென்றபோது, அங்கு வந்த பின்லாந்து ஆசிரியர்களைச் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் இசை, நடனம் உள்ளிட்ட பல்திறன் கொண்டவர்களாக இருந்தனர். அதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படியான ஆசிரியர்களிடம்தானே இயல்பாக மாணவர்களுக்குத் திறன்களைக் கற்றுத்தர முடியும்.

பின்லாந்து நாட்டின் அருமையான கல்வி முறையை நம் நாட்டிலும் பின்பற்ற முடியுமா என்ற கேள்விக்கு வருவோம்.

இதில் இருக்கும் முக்கியமான சிக்கல் நம் நாட்டின் மக்கள் தொகை. பின்லாந்தை விடவும் சுமார் 40 மடங்கு மக்கள் தொகை கொண்டது நம் நாடு. ஆனாலும் அரசியல்வாதிகள் நினைத்தால் சாத்தியம்தான். அதற்கு அரசு முன் வரவேண்டும். ஏனெனில், பின்லாந்து ஜிடிபியில் 24 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது; ஆனால், நம் நாட்டில் 3 சதவிகிதம் மட்டும்தான். இதை 6 சதவிகிதமாக மாற்றுவதற்கு கோத்தாரி வைத்த கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. தற்போது வெளியான தேசியக் கல்விக் கொள்கை வரைவில் ஜிடிபி 6 சதவிகிதம் பயன்படுத்த தனியாரைக் கல்வியில் ஈடுபடுத்தச் செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுகிறது அரசு.

அடுத்து, பெற்றோரின் மனநிலை மாற வேண்டும். ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் பிரிலியன்ட் என்று இவர்கள் நினைக்கிறார்கள். திறன்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதுமே பிரிலியன்ட் மாணவருக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹோம் வொர்க் அதிகம் கொடுக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்ற மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும். பெற்றோர்களைப் போலவே சமூகம், திறமை உள்ள மாணவர்களைப் பாராட்டுவதற்கு முன் வந்தால் மட்டுமே இங்கே பின்லாந்து கல்வி முறை சாத்தியமாகும். ஏனெனில், பின்லாந்து கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு ஜெ.கிருஷ்ணமூர்த்தி கல்வி நிலையங்கள் இயங்கின. ஆனால், அரசு இம்முறையைக் கையிலெடுத்து மாற்றும்போதே முழுமையான பலன் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்