யசோதரை ஒரு புதினம்

 

            மெய்ஞானம் தேடிக் குழந்தை பிறந்தநிலையில் மனைவியையும் பச்சிளங்குழந்தையும் பிரிந்து சென்ற சித்தார்த்த கௌதமர் பற்றிய பல்வேறு கதைகள் தொடர்ச்சியாகக் வந்துகொண்டுள்ளன. ஆனால் மனைவி யோதரையைப் பற்றியோ சித்தார்த்தன் பிரியும் பொழுது ஏன் உறங்கிகொண்டிருந்தாள் என்பது குறித்து யாரும் சிந்திக்கவில்லை. யசோதரையின் வலிகளை வேதனைகளைப் பற்றி யாரும் கவலை கொள்ளவுமில்லை. பெண்ணும் உடமையாகப் பார்க்கப்பட்ட சமூகத்தில் பெண்ணுக்கான இடம் என்னவாக இருந்திருக்கும்? பெண்கள் வலிகளை வேதனைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய வெளியிலும் கூறக்கூடாது வேறு வகையில் வெளிப்படுத்தவும் கூடாது அது அழகல்ல.

             வோல்கா உருவாக்கியுள்ள யசோதரை அழகுடன் கூரறிவும் பகுத்தறிவும், துணிவும், தெளிவும் வெளிப்படையான பேச்சும், தன்னிலை உணந்து கொள்பவள்.

            கோலியா என்னும் ஊரைச் சேர்ந்த பிம்பானானர் வசிஷ்டை இணையருக்கு மகளாய் பிறந்தார் யசோதை. சிறுவயது முதலே பிற உயிர்கள் மீது அன்பும் வேள்விகளில் கொடுக்கப்படும் உயிர் பலி குறித்த கடும் எதிருப்புணர்வு கொண்டவள். இது குறித்து தன் தந்தையிடம் பேச முடியாது. அன்றைய சூழலில் பெண் எக்கருத்தையும் பகிர முடியாத சூழல். மீறி கூறும் பொழுது அவர்களை மனப் பிறழ்வு கொண்டவர்களாகவே ஆண் உலகத்தால் பார்க்கப்பட்டது. மூத்தப் பெண்களும் இப்படி சிந்திக்கும் பெண்களின் சிந்தனையைத் தடைசெய்தார்களே ஒழிய, அதனை வரவேற்கவில்லை.

            யசோதரை வழக்கமாக தாம் செல்லும் கோவிலில் ஒரு முறை சித்தார்தனைச் சந்திகின்றாள். அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பெண்கள் ஆண்களை ஏறிட்டுக் கூட பார்க்கவே கூடாது என்ற சமுகவிதியை மீறி அவள் சித்தாரத்தனின் பெயரையும் ஊர் குறித்தும் கேட்கின்றாள். அவனைக் காதலிக்கவும் தொடங்கிவிடுகின்றாள்.

            சித்தார்த்தன் சிறு வயது முதற்கொண்டே தத்துவம் பயில்வதும், அது குறித்து அறிஞர்களுடன் உரையாடுவதையும் தன் வழக்கமாகக்க கொண்டவன். கபிலவஸ்த்துக்கு தலைவன் இல்லாமல் துறவு வழி மேற்கொண்டிடுவானோ எனச் சுத்தோதனரும் வளப்புத்தாய் கௌதமியும் வருந்துகின்றனர். இந்நிலையில் யோசோதரைப் பற்றிய செய்தி அறிகின்றனர்.

யசோதரை சித்தார்த்தன் சந்திப்பு தொடந்து நிகழ்கிறது. அவர்களுக்குள் சமூக நிலை மாற்றம் குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. ஒருமுறை சித்தார்த்தன்,

நீ உன்னுடைய வாழ்க்கையை என்னுடன் பகிர்ந்துகொண்டால், உன்னுடைய வருத்தம் உன்னால் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என்று கூறுகிறான். அதற்கு யசோதை அது அதிகரிக்கட்டும் நானும் என்னைச் சோதித்துப் பார்க்கின்றேன். நம்மைச் சுற்றிலும் உள்ள இச்சமுதாயத்தைப் பற்றி நானும் தான் விமர்சிக்கின்றேன். அதன் விழுமியங்களோடு எனக்கும் தான் உடன்பாடு இல்லை. உங்களுடைய விமர்சனக் கண்ணோட்டம் உங்கைள எங்கே இட்டுச் செல்லும் என்று பார்க்க விரும்புகிறேன்.அது என்னை எங்கே அழைத்துச் செல்லும் என்பதையும் காண விரும்புகிறேன். மெய்மை என்ற வார்த்தையைப் பற்றி எனக்குத் தெரியும். அதன் மேலோட்டமா அர்த்தத்தை மட்டுமே நான் புரிந்துகொண்டுள்ளேன். நீங்கள் தேடிக்கொண்டிருக்கின்ற மெய்மை மிகவும் வித்தியாசமானது என்பதை நான் உறுதியா அறிவேன்.  ஆனால் அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் எனக் கூறுகிறாள். தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே உலகத் துன்பம் குறித்த பல்வேறு உரையாடல்கள் நிகழ்கின்றன. சித்தார்த்தன் ஒருமுறை இதையெல்லாம் உன்னால் புரிந்துகொள்ள முடியாது என்கின்றான்.இதனைக் கற்றுக்கொடுப்பதும் என்னைப்போன்ற எளிய மனிதர்களும் புரிந்துகொள்ள கூடிய அளவுக்கு அல்லவா உங்கள் தத்துவம் இருக்கவேண்டும் என மறு மொழி கூறுகிறாள்.

            சித்தார்த்தன் மறக்குடியில் பிறந்து போர்க்கலை கற்காமல் சண்டை வந்தால் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்ற கொள்கை யசோதரையின் தந்தைக்கு உடன்பாடு இல்லை. சுத்தோதனர் யசோதையைப் பெண் கேட்டு வந்தும் குடுக்க விருப்பமில்லாமல் இருக்கிறார் யசோதையின் தந்தை. பிம்பானார் போட்டி வைத்து மணமகனைத் தேர்வு செய்ய எண்ண, யசோதரை மறுத்து தான் ஒரு பொருள் அல்ல சித்தார்தனையே மணப்பெண் என்று உறுதியாக மொழிகிறாள். பாரம்பரியத்தை மதிக்காமல் தன் பெண் எதிர்த்துப் பேசுகிறாளே என இவள் மனநிலைப் பாதிக்கப்பட்டுவிட்டது என்று எண்ணி ஊருக்குத் தெரியும் முன் சித்தார்த்தனுக்கே திருமணம் செய்து வைத்துவிட முடிவு செய்து திருமணம் நிகழ்கிறது.

திருமணத்திற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் சித்தார்த்தனுக்கு  கருத்துக்கு இசைந்தவளாக, தத்துவார்த்த உரையாடகளில் பங்கு கொண்டு தன்னுடைய கருத்தினைத் தெளிவாக கூறுபவளாக, தண்ணீர் பற்றாக குறையின் காரணமாகச் சணைடை மூள இருந்த சமயத்தில் சித்தார்த்தனுக்கு நம்பிக்கைக் கொடுத்து அதனைச் சரிசெய்பவளாக இருக்கின்றாள். தன் தந்தை வீட்டில் நடக்கும் வேள்வியில் உயிர் பலி கூடாது என்று கூறியதால் பைத்தியம் பிடித்தவள் என்ற பட்டதுடன் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறாள். அச்சூழ்நிலையில் சித்தார்த்தனுக்கு உண்மையை உணர்த்தி பெண்களுக்கு சமூகத்தில் என்ன இடம் உள்ளது. அது குறித்து சிந்திக்கின்றீர்களா? என வினவுகிறாள். நீங்கள் உருவாக்க நினைக்கும் உலகத்தில் பெண்களுக்கு சம அளவு பங்கும் இருக்கவேண்டும் அவர்களுக்காகவும் சிந்திக் வேண்டும் என்கின்றாள்.

 கௌதமியும் சுத்தோதனரும் இவர்கள் இருவரும் ஒரே சிந்தனையில் பயணித்தால் வாரிசு இல்லாமல் போகுமே என வருந்துகின்றனர். அவ்வருத்தம் நீக்கும் பொருட்டு குழந்தை உருவாகிறது. குழந்தை உருவானுடன் குடும்ப பந்தத்தில் சிக்கி உலகத் துயர் போக்கும் வழியைக் காண இயலாதே எனச் சித்தார்த்தன் கலங்க. மிக தைரியமாக யசோதை நீங்கள் உலக நன்மைக்காகச் செல்வதை நினைத்து பெருமையே அச்சம் கொள்ளத் தேவையில்லை. குழந்தை பிறக்கும் பொழுது என்னைவிட்டு நீங்கிவிடுங்கள். நான் அறியதவள் போல் துயில்வேன் எனக்கூறுகிறாள். அவ்வாறே சித்தார்த்தன் சென்றுவிடுகிறான். தனது கணவன் பிரிந்த துயர் இல்லாமல் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா எனப் பல கேள்விகள் எழுந்தபொழுதும் எதற்கும் தளராமல் வெளிக்காட்டிக் கொள்ளமல் அவளுக்குரிய கடமைகளைச் செய்து, கௌதமியிடம் மகன் ராகுனை ஒப்படைத்து, புத்தன் வழியில் உலக நன்மைக்காகப்  பணிக்காகத் தன்னை அர்பணித்துக்கொண்டு தானும் புத்தனாக மாறுகிறாள்.

எல்லா நிலைகளிலும் புத்தனுக்கு வழிகாட்டியாகப் பின்னிருந்து இயக்குபவளாகப் பின் தானும் அதுவானவளாகக் காட்டியுள்ளார் வோல்கா. தெலுங்கு மூலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் நாகலட்சுமி சண்முகம். யசோதரையை வேறு ஒரு பரிமாணத்தில் சந்திக்கலாம்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......