நினைவலை - 1

 

ஆரம் பொருந்திய

சிறு வெண் பல்லி போலத் தன்னொடு

சுரம் பல வந்த எமக்கும் அருளி,

 

1991 இல் திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பயின்றேன். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் அருகேயுள்ள ஒக்கூர் என்ற ஒக்கநாடு கீழையூர் சொந்த ஊர் என்பதால் கல்லூரியின் உள்ளியங்கும் விடுதியில் தங்கி பயின்றேன். முதலாமாண்டு இரண்டாம் பருவத்தின் தொடக்கத்தில் ஜூலை மாதம் மதியம் 12 மணியளவில் வீட்டிலிருந்துந்து எனக்கொரு தந்தி வந்தது. கிளம்பியிருக்கவும் மாலை அழைத்துச்செல்ல வருகிறேன். என்ற செய்தி மட்டும் இடம்பெற்று இருந்தது. எனக்கு மிகவும் பதட்டமாகிவிட்டது. வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா என்று அழுதேவிட்டேன். என் தோழிகள் அவ்வாறு எதுவும் இருக்காது கவலை கொள்ளாதே என்று தேற்றினார்கள். நான் தங்கியிருந்த விடுதிக்கு சாமூண்டிஸ்வரி என்று பெயர். அதன் விடுதி காப்பாளர் நாகலட்சுமி அம்மையார் . அன்று மாலை என் தந்தையார் வந்தார். நாளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று கூறினார். நான் இப்பொழுது ஏன் திருமணம் வேண்டாமே என்று கூறினேன். விடுதி காப்பாளரிடம் இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள் அப்பாவிடம் கேட்டதற்கு முதன்முறையாகப் பெண்பார்க்க வருகிறார்கள். அதுவும் மாப்பிளை மருத்துவராக இருக்கிறார், பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளட்டும் என்று கூறியுள்ளார். விடுதி காப்பாளர் என்னிடம் போய் பார்த்து வா மறுப்புச் சொல்லாதே மாப்பிளை மருத்துவர் என்று கூறுகிறார்கள் என எடுத்துக்கூறினார். என் தந்தைக்கு மிகப் பிரியமானவள் நான். என் அப்பா எனக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதுமே உண்டு. கட்டுப்பெட்டித் தனங்களோடு (குறிப்பாகப் பெண் பிள்ளைகள் )அன்றிருந்த எங்கள் கிராமத்தில் பெண்பிள்ளையான எனக்கு சிறு வயது முதற்கொண்டே மிதிவண்டி, இருசக்கர வாகனம் , மகிழ்வுந்து அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். எதனையும் வெளிப்படையாக மன உறுதியுடன்  பேசுவதற்குப் பயிற்றுவித்தார்கள். எந்த சூழலையும் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை வளர்த்தெடுத்தார்கள். நான் தம்பி, தங்கை மூவர். மூவரையும் எந்த வேறுபாடும் காட்டமல் வளர்த்தவர் அப்பா. ஆண் பெண் என்ற பேதம் பார்த்தில்லை. ஆண் வேலை பெண் வேலை எனப் பிரித்துச் சொல்லியது இல்லை. தன்னம்பிக்கையோடு எதனையும் எதிர்கொள்ள பழக்கியிருந்தார்கள். எங்களுக்கு எது தேவையென உணர்ந்து செய்யக்கூடிய தந்தை என் எதிர்காலம் குறித்து சிந்திருப்பார்களே நான் தயங்குவது சரியில்லை என்ற முடிவுடன் அப்பாவுடன் கிளம்பிவிட்டேன். இதற்கு முன்பே அப்பா என்னிடம் ஒருமுறை நீ யாரையாவது காதலிக்கின்றாயா? அப்படி ஏதேனும் இருந்தால் சொல் என்று கேட்டார். என் அப்பா காதலுக்கு எதிரியில்லை. கேட்டதற்கு காரணம் நான் ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது நிறைய காதல் கடிதங்கள், சில தொந்தரவுகள் எல்லாம் இருந்தன. அனைத்தையும் எப்பொழுதும் என் குடும்பத்தாரிடம் பகிர்ந்துவிடுவேன் குறிப்பாக என் அப்பாவிடம் அனைத்தையும் கூறிவிடுவேன். அப்படியான ஒரு சூழலை எங்கள் குடும்பம் எங்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருந்தது. காதலிப்பது தவறு, காதல் உணர்வே எனக்கு ஏற்படவில்லை என்பது அல்ல என் குடும்பம் எனக்கு கொடுத்திருந்த சுதந்திரம், என் மீதான நம்பிக்கை, உணர்வுகளைக் கட்டுப்படுத்த பழக்கியது. விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்த அடுத்த நாள் பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வந்தார்கள். என்னைப் பார்த்தார்கள் பிடித்துள்ளது என்று கூறினார்கள். உனக்குப் பிடித்துள்ளதா என்று குடும்பத்தார் கேட்டபொழுது உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று கூறினேன். அன்று தான் மருத்துவர் மு.சேக்கிழார் அவர்களைச் சந்தித்தேன் M.B.B.S மட்டுமே முடித்திருந்தார். தனித்தெல்லாம் நான் பேசவில்லை. என் ஆத்தா (அம்மாயி) ஜாதகம் எதுவும் பார்க்கவில்லை. மாப்பிளை வீட்டாரை வரச்சொல்லி பிடித்துவிட்டது என்று கூறிவிட்டீர்களே என்று ஆதங்கப்பட்டார்கள். என் ஆத்தாவிற்கு ஜாதகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. என் அப்பா நாத்திகவாதி அவருக்கு எப்பொழுதும் நம்பிக்கை இருந்தது இல்லை. என் அம்மாவிற்கும் இந்த சம்பந்தத்தில் உடன்பாடு இல்லை. இருப்பினும் என் அப்பா மாப்பிளையை, தஞ்சாவூர் கும்பகோண சாலையில் அமைந்துள்ள வயலூருக்குப்  முதல்முறையாகப்  பார்க்கச் சென்ற பொழுது மதியவுணவிற்குப் பிறகு வெறும் தரையில் கைலியைக் கைட்டிக்கொண்டு  ஒய்வு எடுத்துக்கொண்டிருந்துள்ளார். அவரிடம் பேசிய பொழுது தெளிவான எதார்த்தமான பேசியுள்ளார். ஒரு மருத்துவர் இவ்வளவு எளிமையாக இருக்கின்றாரே நம் பெண்ணைக் காலம் முழுதும் நன்றாகப் பேணுவார் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. அவ்வூரில் விசாரித்த பொழுதும் அவரைப் பற்றி நன்றாகவே கூறியுள்ளனர். அவர்களின் சொந்த ஊர் அதுவல்ல. என் மாமனார்  சுகாராரத்துறை அதிகாரியாக இருந்தால் வெவ்வேறு இடங்களுக்குப் பெயர்ந்து திருமானூரில் வீடுகட்டி வாழ்ந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்ற பொழுது, இவரிடம் சிகிச்சை பெற வந்த ஒருவரின் மூலமாக வயலூரில் வயலும், மனையும் வாங்கியுள்ளார். அதன் பிறகு குடும்பத்தை திருமானூரிலிருந்த வீட்டை விற்றுவிட்டு வயலூருக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்களின் பூர்வீகம் சிதம்பரம் கவரப்பட்டுக்கு அருகேயுள்ள வடுகத்திருமேடு.

(அதற்கு முன் மன்னார்குடி கும்பகோணம் சாலையில் உள்ள கல்விக்குடி என்னும் ஊரில் இவர்கள் மூதாதரையர் இருந்துள்ளனர். அவர்களின் முன்னோர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை சாலையால் உள்ள பாப்பாநாடு எனக் கூறப்படுகிறது. வடுகத்திருமேட்டில் என் கணவரின் முன்னோர் வணங்கிய வீட்டுச்சாமி இடம் இன்றும் உள்ளது.அவர்களின் குலசாமியான வீரனார் கல்விக்குடியில் உள்ளார். மற்றொரு குலசாமியான ஆதியப்பசாமி பாப்பாநாடு அருகே உள்ள கல்யாணவோடையில் உள்ளார்)

            அப்பா மாப்பிளையை முதலில் பார்த்த கணத்திலே பிடித்துப்போய்விட பெண் பார்க்க வரச்சொல்லிவிட்டார்கள்.( எங்கள் ஊருக்கு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டில் அவருடைய மூன்றாவது தங்கையைத் திருமணம் செய்து  தந்துள்ளார்கள். அவரின் நாத்தனார் கணவர் எனக்கு முறைக்கு தாத்தா வேண்டும் அவர் வழியாக வந்த வரன்) இப்படியாக அம்மாவிற்கு முழு விருப்பம் இல்லாத பொழுதும் நிச்சயம் செய்ய முடிவு செய்யப்பட்டு அடுத்த மாதமே நிச்சயம் முடிந்தது. நிச்சயம் முடிந்த நிலையில் சென்னையில் உள்ள ஸ்டாலின் மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படிப்பதற்கான அனுமதி கடிதம் வந்தது. உடனே அப்பா திருமணத்தை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து நடத்தலாம் நீங்கள் மேற்படிப்பில் சென்று சேருங்கள் என்று கூறினார்கள். அப்படியே அவர்களும் சேர்ந்தார்கள். இடையில் மாதத்துக்கு ஒருமுறை என்னைச் சந்திக்க ஊருக்கு வருவார்கள் காலையில் வந்தால் மாலை திரும்புவார்கள். நீண்ட நேரம் என்னுடன் உரையாடிக்கொண்டு இருப்பார்கள். தைரியமான பெண் என்றாலும் அவர்களுடன் உரையாடும் போது ஒரு அச்சம் இருந்துகொண்டே இருக்கும். (இதற்கிடையில் என் படிப்பு நிறுத்தப்பட்டது, இடைப்பட்ட காலத்தில் உள்ளூரில் உள்ள சொந்தங்கள் பெண்ணை உள்ளூரில் இருக்கும் எங்களுக்கு கொடுக்காமல் எங்கிருந்தோ வந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டுமா என்ற சிக்கல்கள் பல எழுந்தன. என் மனதை மாற்றும் முயற்சிகளும் நடந்தேறின. அவர் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்குக்கூடச் சென்று விட்டேன். அப்பொழுது அவர்கள் கூறியது நீ திடமாக ஒரு முடிவினை எடு உனக்கு எது சரியாக இருக்கும் என்பதைத் தேர்ந்துகொள் என்று கூறினார். அதன் பிறகு நான் சிந்தித்தேன் அவர் என்னிடம் பழகிய பேசிய முறைகளையெல்லாம் சிந்தித்தேன் அவரின் நிதானம் பக்குவமாக எடுத்துரைக்கும் பாங்கு, தனக்குத் துணையாக வரப்போகின்றவளைப் புரிந்துகொண்ட தன்மை, எளிமை அவரைத் திருமணம் செய்துகொள்வது என உறுதியாக இருந்தேன்) 09.02.1992 இல் எங்கள் திருமணம் எங்கள் ஊரில் தெருவடைச்சு பந்தல் போடப்பட்டு சுற்றுப்பட்டு அத்தனை கிராம இன மக்களும் வேறுபாடின்றி கலந்துகொண்டு சமபந்தி உணவு பறிமாறபட்டு மிக விமரிசையாக எங்கள் திருமணம் நடந்தேறியது ( திருமணத்திற்கு 10,000 பத்திரிக்கை அடிக்கப்பட்டது. அத்தனையும் கொடுக்கப்பட்டது. அவ்வளவு மக்களும் வந்தனர். எனக்குச் செய்யப்பட்ட சீர்களைப் பார்த்து அப்பொழுது வியந்ததோடு இவ்வளவு செய்து செல்வம் தன்பெண்ணை யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுக்கிறாரே ஊள்ளூரிலேயே திருமணம் செய்யது இங்கு உள்ள ஒருவனின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கலாமே என்ற கோபம் சொந்தங்களுக்கெல்லாம். இதனால் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. என் கணவரின் எளிமையான தோற்றத்தைப் பார்த்து மருத்தவரே இல்லை என்றது எங்கள் கிராமம். அதற்காகவே படிப்பு முடிந்த பிறகு ஆறு மாத காலம் எங்கள் ஊரில் மருத்தவமனை திறந்து சிகிச்சை பார்த்தார். அப்பொழுது வயதான பாட்டி ஒருவர் மிகவும் முடியாமல் அழைத்து வந்து காப்பாற்றி விட்டார் அதிலிருந்து கைராசி மருத்துவர் என்ற பெயர்) திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்குச் சென்றேன்.சென்னைக்கு அவருடன் நான் செல்ல வில்லை அம்மாவீட்டிலும் இங்கும் மாறி மாறி இருந்தேன். அவர்கள் வாரவாரம் வந்து செல்வார். இப்படியாக இரண்டு ஆண்டுகள் கடந்தன. இடையில் ஊரில் கேட்கப்படும் வழக்கமான கேள்விகள் எழுந்தன. குழந்தைக்காக மருத்துவரிடம் காட்டலாம் என்ற பொழுது என கணவர் மறுத்துவிட்டார். இயல்பாக இருந்தால் இருக்கட்டும் இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிட்டார்.    

            1998 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறையில் பணியில் சேர்ந்தார். நானும் சிதம்பரம் வந்து சேர்ந்தேன். என் மனநிலை தேவையில்லாது நேரத்தைப் போக்குவதையும் எண்ணிய என் கணவர் படிக்கச் சொன்னார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் படித்து என்ன செய்யப்போகிறாய் வேண்டாம் என்று கூறினார்கள். இவர் உறுதியாக நின்று படிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். எனக்கும் மாற்றம் வேண்டும் என்று தோன்றியதால் இளங்கலை கணினி  தொலைதூரக் கல்வியில் பயிலத்தொடங்கினேன். அந்த வகுப்பில் தமிழ் எடுத்த பேராசிரியர் மு. பழனிப்பன் அவர்கள் எடுத்த தமிழ்ப்பாடம் பிடித்து குறிப்பாக இலக்கணம் பிடித்து தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் கணவரிடம் இதனைக் கூறிபொழுது உன் விருப்பம் உனக்கு எது தோன்றுகிறதோ அதனை செய் என்று கூறினார். அதனோடு நிற்காமல் தமிழ்த் தொடர்பான நூல்களை எல்லாம் வாங்கி கொடுக்கத் தொடங்கினார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாமாண்டு இணைந்து படித்தேன். இலக்கியங்களைப் படிக்க பேராசிரியர் இரா. சாரங்கபாணி, பேராசிரியர் பி. விருதாசலம், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஆகியோரிடம் திருக்குறள், சங்க இலக்கியம், காப்பியம் போன்ற தொன்மை இலக்கியங்களையும் இலக்கணத்தை பேராசிரியர் வெ. பழனியப்பன் அவர்களிடம் குருகுலக் கல்விமுறையில் பயிலத்தொடங்கினேன். அதற்கு மிகப்பெருந்து துணையாக இருந்ததோடு என்னோடு இணைந்து அவரும் படிக்கத் தொடங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்