உலகப் பெருந்தமிழர் பேராசிரியர் பி.விருதாசலனார்

 






தலைநாள் போன்ற விருப்பினர்

கல்பனாசேக்கிழார்

 

            வாடா … வாடா … எப்படிடா இருக்க என்று  உள்ளன்பு ததும்ப கூறும் சொற்கள். பாசாங்ற்ற புன்னகை. கம்பீரமான உருவம் , உடல்  மொழி,  சிம்மக் குரல் மொழி. குழந்தை மனம். பண்பின் உரு. வாழ்நாளில் சேகரித்த அறிவுசார் வாழ்வியல் அனுபவங்கள். மரபு இலக்கண இலக்கியங்களையும் -- நவீன இலக்கியங்களையும் கேட்டார் பிணிக்கும் வகையில் எடுத்துரைத்தல்.  கேளாதாரும் விரும்பும் அறிவாற்றல்.  இருமொழிப் புலமை. தமிழ் மொழிப் பற்று அதற்கான செயலாக்கம். தமிழ் , திராவிட  கருத்தியல் வழி உலகப் பார்வை  நோக்கியதாகவே தன் எண்ணம் செயல் வாழ்வு  அனைத்தையும் அமைத்துக்கொண்டவர் ஐயா முனைவர் பி. விருதாசலனார் அவர்கள்.

            காவிரிகரையினிலே பிறந்து வாழ்க்கையே போராட்டமாக இருப்பினும் தடை கடந்து தானும் வளர்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து, தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான மொழியை வளர்தெடுத்த பன்முகஆளுமை பேராசிரியர் பி. விருதாசலனார்.  ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தைப் போராடி தமிழில் மாற்றி அமைத்தமை, பல்கலைக்கழகப் பட்டங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்று செயல்படுத்தியமை, கல்விசார் பேரவை, ஆட்சிமன்றம், திட்டக் குழு போன்றவற்றில் உறுப்பினராகச் செயல்படுபட்டு 120 க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியமை. பணி ஓய்வு தொகையில் தமிழ்ப் புலவர் கல்லூரி நிறுவியமை என்பன அவற்றுக்குச் சான்று பகர்வன.

` அவர்களிடம் பயின்ற எண்ணற்ற மாணவர்களுள் நானும் அடக்கம்.  ஆனால் கல்லூரியில் இணைந்து பயிவில்லை. தனியாக நேரடியாக இறுதி காலம் வரையிலும் கற்க கூடிய வாய்ப்பு பெற்றவள்.  ஐயா அவர்களிடம் கற்ற மாணவர்கள் ஐயா இலக்கணம் இலக்கியங்களைக் கற்பிக்கும் முறையினைக் கூறுவதைக் கேட்டு, அவர்களிடம் குறிப்பாக சிலப்பதிகாரத்தைப் படிக்கவேண்டுமென்று விருப்புற்றேன். காலம் கனிந்தது.  என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் வழியாக ஐயாவை அணுகினேன். தடை கூறவில்லை.  அவர்களுக்கு வெவ்வேறு பணிச்சுமைகள் இருந்த பொழுதும் கற்பிக்கும் விருப்போடு உடனே இசைந்தார்கள். மாலை வேளையில் வெண்ணாற்றங் கரைதனிலே சிலப்பதிகாரத்தைச் செவிமடுக்கம் வாய்ப்பினைப் பெற்றேன். சிலப்பதிகாரம் முழுதும் மனனமாக சொற்களின் அழகு குன்றாமல் இசையோடு கூறி அதற்குரிய விளக்கங்களை எடுத்துரைப்பார்கள். விளக்கும் பொழுது சங்க இலக்கியங்களில் குறிப்பாகப் புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களில் இருந்தும் பாரதிதாசன் பாடல்களிலிருந்தும் மேற்கோள்கள் கொடுத்துக்கொண்டே செல்வார்கள். இன்றைய சூழலோடு ஒப்பிட்டும் கூறுவார்கள். பாடங்கள் மட்டுமின்றி வாழ்க்கைக்கான நெறிகளையும் நீண்ட வாழ்க்கைப்ப்பாதையில் எதிர்கொள்ள வேண்டி சிக்கல்கள் அதனைத் தீர்க்கும் வழிமுறைகள், சக மனிதர்களைப் புரிந்துகொண்டு வாழும் முறையியையும் பாடத்தின் ஊடே கூறிக்கொண்டே வருவார்கள்.

வெண்ணாற்றங்கரையில் உருவாக்கியுள்ள ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் முகப்ப்பில் மலர்செடிகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு வண்ண மலரினையும் பார்த்து நம்மைப் பார்த்து அப்பூக்கள் எப்படிச்  சிரிக்கின்றன பார் எத்துணை அழகு எனக் கூறி வியந்து கவிதை கூறுவார்கள் எனக்கு எட்டுத்தொகை பத்துப்பாட்டு பாடியப் புலவரைக் கண்முன் காண்பதுபோல இருக்கும்.       அவர்களிடம் உரையாடும் பொழுதெல்லாம் மாணவர்களின் நலம் குறித்தும், இன்றைய மொழி பயன்பாடு குறித்துமான உரையாடல்கள் மிகுதியாக இருக்கும்.  மாலை நேரத்தில் பாடம் கேட்கச் செல்லும் பொழுது அவர்களுக்குப் பிடித்த விரால் மீன் குழம்பும் இட்டவியும் எடுத்துக்கொண்டு போனால் சிறு குழந்தையின் மகிழ்வோடு  உண்ணும் முறையறிந்து விருப்பத்தோடு உண்டுவிட்டு நன்றாகவுள்ளது எனக் கூறிய படியே வெண்ணாற்றங்கரையில் சலசலவென நீரெழுப்பும் இசையோடு  சிலப்பதிகாரத்தை எனக்கு விளக்கும் காட்சியும் அடடே செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்… என்னும் பாரதிதாசன் வரிகளை கணீரெனக் கூறும் சிம்மக் குரலும் கண்முன் விரிந்து கொண்டே இருக்கிறன.

           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......