நாழிப்பாசி ஒவ்வொரு வீட்டிலும் பூத்தப்படி…








இந்திய தரத்திற்கு எழுதப்பட்டுள்ள நாவல் எனச் சா. கந்தசாமி அவர்களால் முன்மொழியப்பட்ட சி.எம். முத்துவின் மிராசு நாவல் தமிழ் புனைவாக்க வெளியில் ஒரு காத்திரமான படைப்பு. அவரின் அனைத்துப் படைப்புகளும் தமது சுய சாதிகுறித்து, இருந்தாலும் அதன் பெருமிதங்களை அல்ல அவற்றுள் இருக்க கூடிய உள் முரண்களை, சிடுக்குகளை அப்படமாக வெளிப்படுத்துபவை. மிராசு நாவல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்திலிருந்து தொடங்கி சமகாலம் வரை, கிட்டத்தட்ட   எழுபது ஆண்டுகாலம் ஒரு குடும்பத்தின், ஒரு ஊரின் அவர்கள் பார்வையில் தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த  மாற்றத்தைக் கவனப்படுத்துகிறது.  கீழத் தஞ்சை கிராமத்தில் வாழ்ந்த சேது காளிங்கராய மிராசுவும் அவரைச் சுற்றியிருந்த மனிதர்களும் எவ்வித புனைவுகளும் அற்று அசலாக நம் கண்முன் நடமாடுகிறார்கள்.  இந்த நாவல் அநேக வகையான திருப்பங்களோ கற்பனைக்கும் எட்ட முடியாத மர்ம முடிச்சுகளோ நாயகன் நாயகி போன்ற சம்பிர்தாயமான பாத்திரங்களோ அடுக்கடுக்கான சம்பவங்களோ எதிர்ப்பார்ப்பை நோக்கிய நிகழ்வுகளோ கோர்வைகளோ ஏதுமற்ற நதி அதன் போக்கிற்கு ஓடுகிற மாதிரி நாவல் அதன் போக்கிற்கு செல்கிறது அவ்வளவு மட்டும்தான்.
                 ஊரின், வீட்டின் வரலாற்றோடு அரசியல் வரலாறும், பண்பாட்டு வரலாறும், விவசாய வரலாறும் பின்னிபிணைந்து சொல்லிச் செல்கிறது மிராசு. முத்து தன் சாதியினரின் மேல்சாதிப் பெருமையும் கர்வமும், தமக்குள் இருக்கும் ஆயிரம் பிரிவுகளை நியாயப் படுத்தும் வேஷதாரித்தனத்தையும் அந்த வாழ்க்கையின் மதிப்புகள் சார்ந்தது என்று தன் சாதியினரின் சாதி வெறியை நியாயப் படுத்துவதுமில்லை. சமாதானம் ஏதும் சொல்வதுமில்லை. கடுமையான கண்டனம் தான் தயக்கமின்றி அவர் நாவல்களில் வெளிப்படுகிறது என வெங்கட் சாமிநாதன்  கூறுவது போல மிராசு நாவல் சேது காளிங்கராயரை உயர்த்திப் பிடிக்கவில்லை, ஆனாலும் கால மாற்றத்திற்கு ஏற்ப தம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் தன்மையினைக் கூறுகிறது.
            முத்துவின் படைப்பாக்கம் அவரின் நினைவுகளிலிருந்தும் அனுபவங்களில் இருந்துமே உருவாக்கப்படுகின்றன.  எதற்குமே அவர் தீர்வு கூறுவதில்லை. இப்படி இச் சமூகம் இயங்கிக்கொண்டிருந்தது என்று, அன்று வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை அவர்கள் மொழியிலேயே பதிவு செய்கிறார்.
            நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ந. முருகேசபாண்டியன் அவர்களுடன்  தஞ்சைப் படைப்பாளர்கள் குறித்து உரையாடிக்கொண்டிக்கும் பொழுது, உங்கள் பகுதியில் கறிச்சோறு என்ற மிக முக்கியமான இனவரைவியல் புனைகதை எழுதிய சி.எம். முத்து என்பவர் இருக்கிறாரே உங்களுத் தெரியுமா? என்று கேட்டார். உண்மையில் அதற்கு முன் நான் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தெரியாதே என்றேன். அவர் எழுதியவற்றைப் படியுங்கள் என்று கூறினார். அதன் பிறகு சி.எம். முத்துவின் விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவருடைய கறிச்சோறு, அப்பா என்றொரு மனிதர், ஐந்து பெண்களும் அக்கரஹாரத்து வீடும் என்னும் மூன்று நூல் மட்டுமே எனக்குக் கிடைத்தன. இரண்டு மூன்று நாட்களில் அந்நூலைப் படித்துவிட்டேன். வேறு நூல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. அந்நூல்களை வாசித்தபோது, அட இந்த வாழ்க்கைகுள் நாம் வாழ்ந்திருக்கிறோமே, என்ற உணர்வு ஏற்பட்டது. இவரை ஒருநாள் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியது. எண்ணிய எண்ணம் என்றோ ஒருநாள் நடக்கத்தான் செய்கிறது.  மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. இடையில் அவரின் தொடர்பு முகவரி அல்லது எண் விசாரிப்பேன் ஆனால் கிடைக்கவில்லை. ந. முருகேசபாண்டி அவர்களிடமும், வி. விடுதலை வேந்தன் அவர்களிடமும்  விடாமல் கேட்டதன் விளைவாக அவரின் தொடர்பு எண்ணும் முகவரியும் கிடைத்தது. அவர் பேசியில் அழைத்தால் எடுக்க மாட்டார் என்ற செய்தியும் சேர்த்தே சொல்லப்பட்டது. அனன்யா பதிப்பகர் வியாகுலன் அவர்களைச் சந்திக்க அடிக்கடி வருவார் என்றும் அறிந்தேன். அவருடன் பேசினேன். நான் பேசிய அன்று சென்னையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள இருவரும் சென்னை செல்வதாகவும் அடுத்த வாரங்களில் சந்திப்போம் என்று கூறினார். அடுத்த வாரம் சந்தித்தோம். அவரின் எளிமையான தோற்றமும் இனிமையான, கலங்கமற்ற, வெளிப்படையான பேச்சும்  பிடித்திருந்தது. அதனால் நட்பும் உறவும் தொடர்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......