தனித்தமிழ் இயக்கமும் நீலாம்பிகை அம்மையாரும்

நீலாம்பிகை மறைமலையடிகளின் மகள்; இளமையிலேயே தந்தையிடம் தமிழைக் கற்றுப் புலமை பெற்றவர். தனித்தமிழியக்கத்தை மறைமலையடிகள் தோற்றுவிக்கத் தூண்டுதலாக இருந்தவர். மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையெனில் அவ்வியக்கதின் முதல் தொண்டர் நீலாம்பிகை. தந்தையின் தனித்தமிழ் இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்ற நிலையில் அறியப்படுகிறார்.
                      தனித்தமிழ் தோற்றம் குறித்து மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையாரும், மகன் மறை திருநாவுகரசும் தம் நூல்களில் பதிவுசெய்துள்ளனர். ஒருநாள் அடிகளும், அடிகளின் மூத்தமகள் நீலாம்பிகை அம்மாயாரும் தம் மாளிகைத் தோட்டத்தில் உலாவும் போது அடிகள் இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த திருவருட்பாவின் திருமுறையிலுள்ள,
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிருமறந் தாலும்
          உயிர் மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
                                    நமச்சிவாயத்தை நான்மற வேன்.
என்ற பாடலைப் பாடினார்கள், அவ்வளவில் அடிகள், நீலா இப்பாட்டில் தேகம் என்ற வடசொல்லை நீக்கி, அவ்விடத்தில் அதற்கு விடையாக யாக்கை என்ற தமிழ் சொல்லிருக்குமானால், அவ்விடத்தில் செய்யுள் ஓசை இன்பம் பின்னும் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதால் தமிழ் தன் இனிமை குன்றுகிறது. அத்துடன் நாளடைவில் தமிழில் கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அப்பிறமொழிச் சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம்மருமை தமிழ்ச்சொற்கள் மறைந்துவிடுகின்றன. இவ்வாறே அயல்மொழிச் சொற்களை ஏராளமாக நம்மொழியில் கலந்து ஆண்டதால் நூற்றுக்கணக்கான வட சொற்களும், அயல்மொழிச் சொற்களும் தமிழில் கலந்தன. அதனால் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் மறைந்தே போயின என்று கூறினார்கள் அதுகேட்ட மகள் நீலாம்பிகை தந்தையாரைப் பார்த்து, அப்படியானால் இனிமேல் நாம் அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும். அதற்கான முயற்சிகளைக் கைவிடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வமுடன் கூறினார். மகளின் அன்பும் அறிவும் கலந்த வேண்டுகோளை ஏற்ற தந்தையார், சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப்பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் எனவும் தாம் நடத்திய ஞானசாகரம் என்னும் வெளியீட்டை அறிக்கடல் எனவும் சமரச்சன்மார்க்க நிலையம் என்ற தம் மாளிகைப் பெயரைப் பொதுநிலைக் கழகம் எனவும் மாற்றினார். அத்துடன் தம்பி திருஞான சம்பந்தத்தை அறிவுத் தொடர்பு என்றும், மாணிக்கவாசகத்தை மணிமொழி என்றும்  சுந்தரமூர்த்திக்கு அழகுரு என்றும், தங்கை திரிபுரசுந்தரிக்கு முந்நகரழகி என்றும் தமிழ்ப்பெயர்களைச் சூட்டி அழைத்தார். அடிகளும், மகளும் எழுதும்போதும், பேசும்போதும் இவை தமிழா அயல்மொழியா என்று ஒவ்வொரு சொல்லையும் சீர்த்தூக்கிப் பார்த்துச் சற்றும் வழுவாது தனித் தமிழில் எழுதியும் பேசியும் வந்தனர்.
            மேற்கண்ட நிகழ்வு குறித்து, தனித்தமிழியக்கத்தின் தோற்ற நிகழ்ச்சி சுவாரசியமானதாகவும், நாடகபாணி நெறிபட்டதாகவும் அமைகின்றது எனக் கருதும் சிவத்தம்பி, மறைமலையடிகள் இத்தகைய நாடக நிலைப்பட்ட முறையில் தனித்தமிழியக்கத்தைத் தோற்றுவித்தாரென்று கூறுவதிலும் பார்க்க, பல காலமாக உள்ளத்துள் அறிவுசெல் நெறியில் கருவிட்டு உருப்பெற்று வளர்ந்து வந்த ஒரு கருத்து மேற்குறிப்பிட்ட சம்பவம் காரணமாக இயக்கப் பரிமாணம் பெற்றது எனக் கூறுவதே பொருத்தமானதாகும் என்று முடிவு செய்கிறார்(2003,81).  இவருடைய கூற்று தனித்தமிழ் இயக்கம் குறித்த சிந்தனை அடிகளாரின் பாவியிருந்தாலும், இயக்கமாக உருப்பெறுவதற்கு நீலாம்பிகை அம்மையாரிடம் அடிகளால் நிகழ்த்திய உரையாடலும் காரணம் என்பதை அறியமுடிகிறது.
            பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளங்களை மீட்டெத்தல், பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த சாதி மறுப்பு, பெண் விடுதலை, பார்ப்பனியத்துக்கு எதிராக கிளர்ந்த தென்இந்திய நலவுரிமை சங்கம்,  என பல்வேறு அசைவியக்கங்கள் ஊடாடிய தமிழ் சூழலில், தமிழ், சைவம் என்னும் பின்னணியில் வரும் மறைமலை அடிகள் தம் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பாகப் பெண்களை எவ்வாறு உருவாக்கினார் என்பது ஆராயப்படவேண்டியது. மறைமலையடிகள் மகள்கள் சிலர் இருந்தாலும்,   தனித்தமிழ் இயக்கம் சார்ந்து எழுத்தும் பேச்சுமாகச் செயல்பட்டவராக அறியப்படுபவர் நீலாம்பிகை அம்மையார் மட்டுமே. 
தமிழ்ப்பணிகள்
நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள்
1.    முப்பெண்மணிகள் வரலாறு
2.    பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
3.    ஜோன் ஆப் ஆர்க்
4.    எலிசபெத் பிரை பெருமாட்டி
5.    மேனாட்டுப் பெண்மணிகள்(தொகுதி-1)
6.    மேனாட்டுப் பெண்மணிகள்(தொகுதி-2)
7.    பழந்தமிழ் மாதர்
8.    பட்டினத்தார் பாராட்டிய மூவர்
9.    நால்வர் வரலாறு
10.  வடச்சொல் தமிழகர வரிசை
11.  ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
12.  தமிழ்மொழியும் தமிழ்நாடு முன்னேறுவதெப்படி?

மேற்கண்ட நூல்களைக் கீழ்க்கண்டவாறு பொருளடிப்படையில் பகுத்துக்கொள்ளலாம்.
·         வடமொழியை மறுத்து, வடசொற்களுக்கு  நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்குதல்.
·         தனித்தமிழின் தேவையைக் குறித்து எழுதுதல்
·         சமயம் சார்ந்த எழுத்துக்கள்
·         பெண் விடுதலை இயக்கமும் அது தொடர்பாக மேலைநாட்டுப் பெண்களைத் தமிழ் பரப்பிற்கு அறிமும் செய்தல்.
என்னும் நிலைகளில் நீலாம்பிகை அம்மையார் தம் எழுத்துகளை அமைத்துக்கொண்டார். தமிழ் புலமையோடு ஆங்கிலப் புலமையும், சமசுகிருத புலமையும் ஒருங்கே பெற்றதால், மணிப்பிரவாள நடையில் அமைந்த தமிழ்மொழியை, தந்தையாரோடு இணைந்து தூய்மையாக்கம் செய்தல் என்பதை முதன்மை பணியாகக் கொண்டு செயல்பட்டார். அவ்வாறே எழுதியும் பேசியும் வந்தார்.
நீலாம்பிகை அம்மையார் 1925 ஆம் ஆண்டில் தனித்தமிழிக் கட்டுரைகள் என்னும் நூலை முதன்முதல் வெளியிட்டார். அப்போது அவருக்கு அகவை 22. இதிலடங்கிய கட்டுரைகள் எல்லாம் அம்மையாரின் 16 முதல் 22 அகவை வரையில் நிகழ்ந்த ஆண்டுகளில் எழுதப்பட்டதாகும். எழுதப்பட்ட அக்காலத்திலேயே அக்கட்டுரைகள், திராவிடன், தேசாபிமானி, ஆனந்தபோதினி, ஒற்றுமை, தமிழ்நாடு முதலிய செய்தித் தாள்களிலும், திங்கள் வெளியீடுகளிலும் வெளிவந்துள்ளன. அந்த நூலில், கல்வியுந் தாய்மாரும், ஒழுங்கான கல்வி, கற்றலில் கேட்டலே நன்று, நாகரிகமும் மொழி வளர்ச்சியும், தனித்தமிழ் பாதுகாப்பு, தமிழைப்பற்றி வினாக்களுக்கு விடை, தமிழில் வடமொழி கலத்தலாகாது, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டாயக் கல்வி, நாவலந் தீவின் பழைய குடிகள், பெண்மக்களின் அறிவும் ஆண்மையும், உயிர்போன உடம்பை என்செய்வது? இறந்தோர் வீட்டிற்குச் செல்வோர்களும் அவ்வீட்டினரும், பெண்பாலர்க்கே கொல்லாமை முதன்மையாம், திருக்காளகத்திக் காட்சி, சைவமாதரும் சைவமும் என்னும் பதினைந்து கட்டுரைகளை இருக்கின்றன (நீலாம்பிகை அம்மையார்,பக்.67). இவற்றுள் தனித்தமிழ்ப் பாதுகாப்பு, தமிழைப் பற்றிய வினாக்களுக்கு விடை, தமிழில் வடமொழி கலத்தல் தகாது ஆகிய மூன்று கட்டுரைகளும் தனித்தமிழ் கொள்கை விளக்குவன. பிற கட்டுரைகள் அனைத்தும் தனித்தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வியின் தேவையைக் குறித்து, தாய்ப்பாலில்லாமல் ஆவின்பால் குடித்து வளருங் குழவி எந்நேரமும் நோய்வாய்ப்பட்டும், உரத்தோடு வளராமலும் இருப்பதைக் காண்கிறோம். தாய்மொழிக் கல்வி நன்கு பயிலாத மாணவர் மாணவரியர்களுக்கு மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் உண்டாகா. மற்ற எம்மொழியையும் அவர்களால் பயனுற பயிலவும் முடியாது. (த.த.மு.எ.ப.3) என்கிறார்.
நீலாம்பிகை அம்மையாரின் தனித்தமிழ் பணியில் மிகச் சிறந்தது அவருடைய வடசொற்றமிழ் அகர வரிசை (1937). இவ்வகரவரிசையில் ஏறத்தாழ 7000 வடச்சொற்களும், அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்களும் தொகுத்துக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முன்னுரையில்,
எழுநூறு ஆண்டுகளாக நந்தண்டமிழ் மொழியில் ஏராளமான வடசொற்கள் பல வந்து புகுந்தபின் பழந்தமிழ் சொற்களில் பல வழங்காதொழிந்தன. தமிழிற்கலந்து அது தன்னை முற்றும் வேறுபடுத்தும் வடசொற்களை இப்போதே நாம் தடைசெய்யாவிடின், தமிழ் தன்னிலை கெட்டு வேறு மொழிபோலாகு மென்பதற்கு ஒரு சிறிதும் ஐயமில்லை. வேறு நாடுகளிற் குடியேறிய தமிழ் மக்கள் தம் தமிழ் மொழியினைப் பாதுகாவாமல் திரித்து வழங்கியதோடு, வடமொழிச்சொற்களும் மிகுதியாகத் தமிழிற் கலக்க இடந்தந்தமை யினாலேதான், தமிழ்மொழி யொன்றே தன்னிலை திரிந்து மலையாளம் கன்னடம், தெலுங்கு முதலான பல வேறு மொழிகளாயிற்று. தமிழின்கண் வடசொற்கள், இவைதாம் தமிழ்ச்சொற்கள் எனத் தமிழ் மக்களிற் பெரும்பாலார் பிரித்தறியக்கூடாதவாறு அவை தலைமயங்கிக் கிடக்கின்றன. ஆகவே, இக்காலத்துத் தமிழ் மக்களிற் பெருந்தொகையினர் வடசொற்களையுந் தமிழ்ச்சொற்களையும் பிரித்தறிய முடியாதவர்களாகித், தாமெழுதுங் கட்டுரைகளிலும் நூல்களிலும் வடசொற்களைச் சேர்த்து எழுதியும், அவற்றைத் தமிழ்ச் சொற்களாகவே பிழைப்படக் கருதியும், தமிழின் தூய்மையும் இனிமையும் பழமையும் கெடுத்து விடுகிறார்கள் என இவ்வகரவரிசையின் தேவை குறித்து விரிவாகப் பதிவுசெய்கிறார்.
பெண்களுக்குத் தாய்மொழி கல்வியின் சிறப்பை உணர்த்தி, மேலைநாட்டுப் புரட்சி பெண்கள் வரலாறுகளை மொழிப்பெயர்த்து, தனித்தமிழில் எழுதுகிறார். இப்பணி பெண் விடுதலை உரிமை முன்னெடுக்கப்பட்ட அன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆங்கில அறிவோடு தமிழ் அறிவும் தேவை என்பதை,
பெண்கள் தங்கள் கற்கும் ஆங்கிலக் கல்வியோடு தாய்மொழிக் கல்வியும் உடன் சேர்த்து கற்று, அவ்விரண்டு கல்வியிலும் அறிவு நிரம்பிக், கடவுளிடத்தும் பேரன்புடையராய்த், தம் தமிழ்மொழி கொள்கை ஆகிய இவைகளின் உண்மைகளைப் பிறநாட்டினருக்கும் அறிவுறுத்தித் தாமும் பேரறிவாளர்களாய்த் திகழ்வார்களானால் மட்டும் பெருநன்மையுண்டாம். (முப்பெண்மணிகள் வரலாறு,பக்.7) என எழுதுகிறார். ஆனால் இரு கல்விகளிலும் இலக்கணப் பயிற்சி பள்ளிகளில் கற்பிக்கப்படாமல் உள்ள நிலையினைச் சுட்டிக்காட்டுகிறார். தனித்தமிழ் கட்டுரை என்னும் நூலில் பக்கம் 15 இல் பள்ளிக்கூடங்களில் நமக்கு தமிழ்க் கல்வியினையும் ஆங்கிலக் கல்வியினையும் போதுமான இலக்கணக் கல்வியின்றிக் கற்பிக்கின்றார்களாகலின், நாம் பல ஆண்டுகள் முயன்று பள்ளிக்கூடத்தில் இருமொழிகளையுங் கற்றாலும் கூட, நாம் ஒரு மொழியில் கூட ஆற்றல் அற்றவராகளா யிருக்கிறோம் என்று எழுதிகிறார்.
பெண்கல்வி குறித்து அடுப்பூதும் பெண்பாலர்க்கு நூற்கல்வி வேண்டாமென்று தாய்மார்கள் சிலர் கூறுகிறார்கள். இது முற்றும் பேதமையாகும் உலகத்தில் எல்லாத் தொழிலிலும் மேலதாய் விளங்கும் தொழில் அடிப்பூதி அமுது சமைத்து அதனால் உடம்பை பாதுகாத்து நாவுக்கு இனிமைத் தருவதாகும். பலகாலமும் உணவும் சுவையோடு செய்யக் கற்றுக்கொள்ளுதலும் ஒரு கல்விதான். ஆயினும் நூற்கல்வியோடு சேராதாயின் சமைத்தற்கல்வி சிறிதும் சிறப்படையாது. நூற்கல்வியுடன் சமைத்தற் கல்வி சேருமாயின், பூவோடு கூடிய நார் அப்பூவின் நறுமணத்தை அடைதல் போல அதுவும் ஒளிவுற்றுப் பொலியும். நூற் கல்வி கற்றவர்களுக்கு எல்லா தொழிலிலும் அவர்களின் அறிவு முனைந்து நின்று விளங்கும் எனப் பதிவு செய்கிறார்.
படித்த தாய்மார்க்கும் படிக்கும் மாணவிகளுக்கும் சமயற்றொழிலும் கட்டாயமாகத் தெரிந்திருத்தல் வேண்டும். படித்த பெண்கள் வீட்டு வேலைகளை அசட்டை செய்வதால் உடல் வலுவின்றியிருப்பதுடன். ஏழை எளியவர்களின் வருத்தங்களை உணர்கிறார்களில்லை (த.த.மு.எ.ப.25). ஆங்கில நாகரிகத்திற்கு அரசியாயமைந்த விக்டோரியா அரசியாரே தம் பெண்மக்களைச் சமைத்தற்றொழில் வீட்டுவேலைகளிற் பழகினமையை உற்றுநோக்குவார், பெண்கள் வீட்டு வேலை தெரியாமல் ஆண்மக்களைப் போல் வளர்த்தல் ஆங்கில நாகரிகமென்று சொல்ல முந்துவரோ?(மே.பெ.ப.48)
பெண்கள் படிக்கவேண்டும் எனப் பேசும் அம்மையார் வீட்டு வேலை பெண்ணுக்குரியதாகவே பார்க்கிறார். அதற்கு மேலைநாட்டு நிகழ்வை எடுத்துக்காட்டி விளக்கமும் தருகிறார்.
நீலாம்பிகை அம்மையார் திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் இருநிலைகளிலும் தனித்தமிழ் சார்ந்து இயங்குவதற்கான சூழல் வாய்த்தது. அவரின் காதல் கணவர் திருவரங்கனார் 1920 இல் திருநெல்வேலியில் சைவசித்தாந்தம் நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் நிறுவினார். அந்நிறுவனத்தின் வழி வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி இதழில் தனித்தமிழ்த் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய குழந்தைகளுக்கு, சுந்தரம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை. பிச்சம்மை, மங்கையர்கரசி, திருநாவுகரசு என்று பெயர் சூட்டியுள்ளார்.
பெண்கள் மாநாடும் - பெரியாரும்
தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு சென்னையில் 13.11.1938 இல் சென்னை ஒற்றைவாடை அரங்கில் நடைபெற்றது. நீலாம்பிகை அம்மையார் இம்மாநாட்டின் தலைவராகவும் உடன் தரும்பாம்பாள் அவர்களும் இணைந்து பணியாற்றினர். இம்மாநாட்டில் தமிழ்நாடுந் தமிழும் முன்னேறுவது எப்படி? என்னும் தலைப்பில் பொழிவாற்றியும், ஈ.வெ.இரா. அவர்களின் தன்னலங் கருதா ஈடு இணையற்ற பெருந்தொண்டைக் கருதி அவருக்குப் பெரியார் என்ற சிறப்பு பட்டம் வழங்கத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது அது முதல், பெரியார் என்று அழைக்கப்பட்ட அவர் சொல்லிலும் எழுத்திலும் வழங்குபொதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரிலேயே அழைத்திட அம்மாநாடு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......