திருக்குறள் உரை வேற்றுமை நூற்பதிப்பும்: மறுபதிப்பின் தேவையும்

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் உலகறியச் செய்வது இப் பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த குறிக்கோள்  என 1929 இல் நடைபெற்ற ஆளவை மன்ற துவக்க உரையிலும், அண்ணாமாலைச் சர்வ கலாசாலையின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் சிந்திப்பேன். தமிழ் நாடெங்கும் தமிழிசை முழங்க வேண்டும் என்பது எனது ஆவல் என 25. 03. 1944 வெளியிட்ட அறிக்கையிலும் அண்ணாமலை அரசர் தமது நோக்கத்தை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனபடி செய்லபட்டார். 1929 இல் உருப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் முதன்மை கொடுத்து அத்துறையில் வல்லுநர்களைப் பணியில் அமர்த்தி, கற்பித்தலும் ஆய்வும் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் தனித் தமிழ் இயக்கங்கள் வலுவாக இருந்த பின்னணியையும், திராவிட இயங்கங்கள் முன்னெடுத்த தமிழ் நூற்களையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்திய முறைமை, அதன் தொடர்ச்சியாக தமிழ் குறித்த சிந்தனை, தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை உலக வளத்தோடு ஒப்பிட்டு நோக்க வேண்டி தேவை எழுந்தன. குறிப்பாக திருக்குறளை உலகப்பொதுமறையான கட்டமைத்து, புலமை தளத்தில் மட்டுமல்லாமல் பொதுவெளியில் பரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. திராவிட இயக்கப் பின்னணியில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணாவின்  ஆட்சி காலத்தில் 1968 இல் இரண்டாம் உலத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆய்வுக்கென்று ரூபாய் 3 இலட்சம் வைப்பு நிதியாக நல்கப்பட்டு, திருக்குறள் ஆய்விருக்கை அமைக்கப்பட்டது. 1968 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் 1970 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழியல் துறையில் திருக்குறளை இடைக்கால இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்றன. இவ்விருக்கையில் ஆய்வு பணிபுரிந்த பேராசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்  மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், பெரும் புலவர் க. அருணை வடிவேல், வித்துவான் க.. வேங்கடராமையா, முனைவர் மு. கோவிந்தசாமி இவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் இரா. சாரங்கபாணி ஆகியோர். இவ்வாய்வகத்தின் வழி 13 ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் பேராசிரியர் இரா. சாரங்கபாணியாரின் நூல்கள் ஐந்து. திருக்குறள் உரைவேற்றுமை என்னும் நூல் மூன்று நூற்களாக பதிப்பிக்கபெற்றது. அந்நூற்பதிப்பு செய்லபாடு குறித்தும், அப்பதிப்பின் தேவையைக் குறித்தும்  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் (1925 – 2010)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையின் மாணவர்(1947 – 1949). சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை கற்றுத் தெளிந்த புலமையர். .சுப. மாணிக்கனாரின் நெருங்கிய தோழமை, அவரின் அறிவு பாய்சலுக்குக் கூர்தீட்டியது.  அழகப்பா கல்லூரி பேராசிரியர்(1949 – 1979) பணி அதற்கு வாய்ப்பாக அமைந்தது. பணிநிறைவுக்குப் பிறகு மூன்றாண்டுகள் உயராய்வு நடுவனத்தின் இயக்குநராக செயல்பட்டார். 1982 – 1986 காலகட்டதில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் இலக்கியத் துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராப் பணியேற்று சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் (இரு தொகுதிகள்) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் திருக்குறள் இருக்கையின் சிறப்பு நிலைப் பேராசிரியராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள்(1988 – 1994) திருக்குறள் ஆய்வினை நிகழ்த்தியுள்ளார். தமது இறுதி காலம் வரை தமிழ் சார்ந்த சிந்தனையிலேயும், ஆய்விலேயும் திளைத்தார்.
திருக்குறள் இருக்கை வழி  ஆய்வு நூல்கள் வெளிவந்த நூல்கள்
1.   திருக்குறள் பொருளகராதி – 1973
2.   காப்பியங்களில் திருக்குறள் – 1974
3.   வள்ளுவரும் கம்பரும் – 1975
4.   திருக்குறள் பிற உரையாசிரியர்கள் – 1975
5.   பரிமேலழகர் – 1978
6.   வள்ளுவத்தில் மெய்ப்பொருள் சுவடுகள் – 1980
7.   திருக்குறளும் தமிழ் பாரத நூல்களும் – 1980
8.   பரிப்பெருமாள் உரையும் உரைத் திறனும் - 1983
9.   தெய்வப் பனுவல்களில் திருக்குறள் – 1983
10.  திருக்குறள் இயல் – 1984
11.  பெரிய புராண வரலாறுகளும் முதுமொழி வெண்பாக்களும் - 1999

பேராசிரியர் இரா. சாரங்கபாணியாரின் ஆய்வு நூல்கள்
1.   திருக்குறள் உரை வேற்றுமை அறத்துப்பால் – 1989, பொருட்பால் – 1992, காமத்துப்பால் – 1992
2.   வள்ளுவர் வகுத்த காமம் – 1994
3.   சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் – 1999

திருக்குறள் உரை வேறுபாடு - சிந்தனை மூலம்
திருக்குறள் உரைவேறுபாடு என்னும் நூல் தோன்றுவதற்கான சூழல் குறித்து  1989, 1992 இல் வெளிவந்த திருக்குறள் உரைவேற்றுமை அறத்துப்பால், பொருட்பால் நூற்களில் குறிப்பாக சுட்டிச் செல்லுகிறார். 1992- இல் பதிப்பித்த திருக்குறள் உரை வேற்றுமைகாமத்துப்பால்  நூலின் நூன்முகத்தில் விவாகக் கூறியுள்ளார்.
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய போது முதுகலை வகுப்பிற்குத் தொல்காப்பியம், சங்கவிலக்கியம், திருக்குறள் ஆகியவற்றை பயிற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் தலைமையில் 20 ஆண்டுக்கு மேலாகப் பணிபுரியும் பேறு பெற்றேன். அவரும் நானும் நாள்தோறும் மாலையில் உலாவச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர் நம் துறை ஆசிரியர்களுள் எவரேனும் ஒருவர், திருக்குறளுக்கு இதுகாறும் வெளிவந்துள்ள உரைவேறுபாடுகளைத் தொகுத்து, தக்க உரை எது எனக் காரணங்காட்டி முடிபுரைத்துத் திருக்குறள் உரைவேற்றுமை என்னும் பெயரில் நூல் எழுதலாம் என்று கூறினார். அப்பணியை நானே மேற்கொள்கிறேன் என்றுரைத்துத் தொடங்கினேன். நான் தொகுத்து வைத்திருந்த திருக்குறள் உரைவேற்றுமைகளையும் எழுதிய முடிநிலை கருத்துக்களையும் பார்த்துச் செப்பம் செய்து தந்தார்கள். அவ்வுரை வேற்றுமை நூலில் எல்லா குறள்களும் இடம்பெறவில்லை. அறத்துப்பாலில் 217, பொருட்பாலில் 487, காமத்துப்பாலில் 196, குறள்களே வேற்றுமையுடையவனாக தேர்தெடுக்கப் பெற்றன. பல ஆண்டு முயற்சியின் பயனாக உரை வேற்றுமை அறத்துப்பால் 1957 ஆம் ஆண்டிலும், பொருட்பால் 1960 ஆம் ஆண்டிலும், காமத்துப்பால் 1964 ஆம் ஆண்டிலும் காரைக்குடி செல்வி பதிப்பகத்தின் வழி வெளிவந்தன.
.மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் திருக்குறள் உரைவளம், திருப்பனந்தாள் காசிமடம் வழி வெளிந்த திருக்குறள் உரைக்கொத்து, அறிஞர் கி.வா.ஜகநாதரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி போன்ற பழைய உரைகளின் தொகுப்புகளாக இலங்கின. அதன் பிறகு மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் ஆராய்ந்து வெளியிட்ட திருக்குறள் உரைக்களஞ்சியம் பதினாறு புதிய உரைகளோடு உரைவேற்றுமைகளைக் குறிப்பாகச் சுட்டி செல்கின்றது. இந்நிலையில் பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி பொழுது திருக்குறள் வேற்றுமை நூல் செல்வி பதிப்பகத்தின் வழி வெளிவந்திருந்தாலும், முழுமையாக பெற்றதாக இல்லை. அதன் பிறகு வெந்துள்ள உரைகள், மொழிப்பெயர்புகள், விளக்கங்கள் ஆகிவற்றோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய தேவையும் இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக திருக்குறள் சிறப்புநிலைப் பேராசிரியராக பணியேற்றது அதற்கு ஒரு நல்வாய்வாக அமைந்தது.
உரைவேறுபாடு பதிப்பு செயல்பாடு
50 உரையாசிரியர்களின் உரைகள் அவை வேறுபடும் உரையிடங்களின் எண்ணிக்கை, 50 உரைநடை நூல்களில் திருக்குறளுக்குக் கூறப்பட்டுள்ள விளக்கம், அவற்றுள் உரை வேறுபடும் இடங்களின் எண்ணிக்கை, இலக்கிய நூல்கள் 5, கட்டுரை 4, மொழிப்பெயர்ப்பு 7, வெளிவராத எழுத்துரை 4, கேட்ட உரை 2 இவற்றுள்  உரை வேறுபடும் இடங்கள் அவற்றின் எண்ணிக்கை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
உரைவேற்றுமைக் காரணங்கள்
1.    பாடவேறுபாடு
2.   சொற்பிரிப்பு
3.   கொண்டுகூட்டு
4.   காலமரபு
5.   இலக்கணவேறுபாடு
6.   தொகைப்பெயர் விளக்கம்
7.   ஒரு சொல்லுக்குப் பல பொருள்
8.   நயம் கூறல்
9.   விளக்கங் கூறல்
10.  பிற இலக்கியச் செய்திகளைப் புகுத்துதல்
11.   கதையைப் பொருத்தல்
12.  கொள்கை முனைப்பு
என 12 காரணங்களைக் அடிப்படையாகக் கொண்டு உரைகள் வேறுபடும் இடங்களைச் சுட்டிகாட்டி, அவை வேறுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, குறளுக்குப் பொருத்தமான உரையை முடிநிலையாக உரைக்கின்றார். மேலும் ஆய்வுக்குரிய நிலையில் இருக்கும் உரைகளையும் சுட்டிச் செல்கின்றார்.இயல்புடைய மூவர்( குறள்,41) இயல்புடைய மூவர் யார் எனப் பல உரையாளர்கள் உரை கண்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து நோக்கிய பேராசிரியர் இயல்புடைய மூவர் மூவேந்தரா? இளையர், முதியர், பெண்டிரா? அன்றி வேறு மூவரா? என்பது மேலும் ஆய்விற்குரியது( திருக்குறள் உரைவேற்றுமை, அறத்துப்பால், பக்.86) என கடந்துசெல்கிறார். சில இடங்களில் பரிமேலழர் உரை குறளுக்குப் பொருந்தி வராதமையை எடுத்துக்காட்டி பிற உரைகள் அக்குறளுக்குப் பொருந்துவதையும் முடிநிலையாக உரைக்கின்றார். அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை(குறள்,49) இக்குறளின் முடிநிலையில்,

இக்குறளில் வரும் அஃது என்னும் சுட்டு முன்வந்துள்ள இல்வாழ்க்கையைச் சுட்டுவதே அமைவுடை தன்றி, வருவித்துரைக்கும் துறவறத்தைச் சுட்டுவதாகக் கூறும் பரிமேலழகர் உரை அமைவுடைய தாகாது. பிறன் பழிப்ப தில்லாயின் நன்று என்பதில் அமைந்த பிறன் என்பது துறவியைச் சுட்டும் தொடர்பின்மையானும் துறவறத்தானைப் பழிக்காமல் என்னும் பொருளுக்குப் பிறர் பழிப்ப தில்லாயின் எனப் பாடமிருக்க வேண்டும். அங்ஙன மின்றிப் பிறன் பழிப்பதில்லாயின் என இருத்தலானும் இராமலிங்கம் பிள்ளை உரை பொருந்தாமை யறிக. துறவறத்தாரால் பழிக்கப்படாமை நன்று என ஒரு சாராரைக் கருதி எழுதும் உரையினும் பொதுநிலையாக எல்லோருக்கும் பொருந்த உரைத்த உரை நன்று. இவ்வகையில் இக்குறளுக்கு மணக்குடவர் உரை தகுவதாகும். பிறன் பழிப்பது என்பதற்குத் திரு.வி., வை.மு.கோ ஆகியோர் தரும் விளக்கங்கள் உளங்கொள்ளத் தக்கன.
என குறளுக்குப் பொருத்தமான உரை இதுவென எடுத்து உரைக்கின்றார். நூல்முழுதும் சார்பு தன்மை இல்லாமல் நடுநிலையோடு முடிநிலை கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு.
திருக்குறள் உரை வேற்றுமை நூற்பதிப்பின் தேவை
       அறிவுச்சூழலில் விதந்து பேசப்பட்ட நூல் திருக்குறள் உரைவேற்றுமை. ஆய்வுலகிற்குத் தேவையான நூல். இந்நூல் இன்று கிடைக்காத நிலையில் இருக்கின்றது. செம்மொழி நூல்களுள் ஒன்றாக திகழும் திருக்குறளின் தேவையும் அது சார்ந்த ஆய்வுகளும் இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றுள் பயன்படுத்தப்பட்டுள்ள உரைகளோடு அதன் பிறகு வெளிவந்துள்ள திருக்குறள் குறித்த சிந்தனைகளையும் புதிய மாற்றங்களையும் இணைத்து காணவேண்டிய நிலையும் இருப்பதால். இந்நூல் மறுபதிப்பாக வெளிவந்தால் ஆய்வுலகிற்கு நன்மை பயப்பதாய் அமையும்.
நிறைவாக
·         பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் அண்ணாமலைப் பல்கைலக்கழக திருக்குறள் இருக்கையின் வழி  5 ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
·         அவற்றுள் திருக்குறள் உரைவேற்றுமை என்னும் நூல் முக்கியத்துவம் வாய்ந்த்து.
·         நடுநிலையோடு பிற உரைகளை ஒப்பிட்டு உரைவேற்றுமையை முடிநிலையாக உரைத்துள்ளார்.
·         இன்றைய நிலையில் இந்நூல் கிடைக்கவில்லை. மறுபதிப்பாக வெளிவந்தால் ஆய்வுலகிற்குப் பயனுள்ளதாய் அமையும்.


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
முயற்சி வினையாக்கும்.
முயலலாம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
முயற்சி வினையாக்கும்.
முயலலாம்.
C.Rajendiran, Founder ,www.voiceofvalluvar.org இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான ஆய்வுக் கட்டுரை

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரிடம் கூறியுள்ளேன்..

தமிழக அரசுக்கு தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பாக, ஒருகடிதம் எழுதுமாறு வேண்டுகோள் வைத்துள்ளேன் ...

சென்னைப் பல்கலைக் கழகம் , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் .... மூன்று திருக்குறள் ஆய்விருக்கை வெளியீடுகளும் தடையின்றி கிடைக்க வேண்டும்.. மேலும் ஆய்வுகள் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வையுங்கள்.

மூன்றும் செயலிழந்து, பொலிவிழந்து மூடிக் கிடக்கின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்