வீரபத்திர இராமாயணக் கும்மி

 கதையாடல் மரபு என்பது சமூக அடையாளம். பாரத கண்டத்தின் ஆதி காவியமாக இராமாயணம் முன்வைக்கப்டுகிறது. இக்காவியம் பெருங்கதையாடல் மரபினை கொண்டது.  அப்பெருங்கதையை இந்திய நிலப்பரப்பில், ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு மாறுபாடுகளுடன்,  கதை கரு மாறுபடாமல் ஆனால் தங்களுக்குத் தேவையான வடிவங்களில் உருவாக்கியுள்ளனர்.

அந்த வகையில் ஒக்காநாடு கீழையூர் பகுதியில் வாழ்ந்த வீரப்பத்திர வாத்தியார்(1798 - 1832 ) சரபோஜி மன்னர் காலத்தில் இராமாயண கதை முழுவதையும் நாட்டுப்புற  கும்மி வடிவில் எழுதி  அப்பகுதியின் கதைச்சொல்லியாகவும் திகழ்ந்துள்ளார்.

தொடக்கத்தில்,
சக்கரை முக்கனி தேனுடனே - ருசி
      தானுமே ஆகவும் தான் படைக்கும்
ஒக்கநாடன் வீரபத்திரன்நான் - இதை
      ஓதுவேன் கும்மிக்கு ஒப்பனையாய் 

என்னும் பாடலுடன் தொடங்குகிறார். சுவடிகளில் இருந்த பாடல்களை,  பல இடங்களில் தேடி எடுத்து முனைவர் பேராசிரியர் ச.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அதனை செம்மைப்படுத்தி தொகுத்து இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார்கள்.

வீரபத்திரன் கும்மியிலிருந்து சில பாடல்கள்.

சீதையை கண்டு வந்த அனுமன் இராமனிடம் கூறும் பொழுது கம்பர்

கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உளதுயரும் என்று அனுமன் பன்னுவான்

இதனை கும்மியாக

கண்டேன் கண்டேனெங்கள் தாயாரையும் - நானும்
    கண்டேன் கண்டேனென்று சுவாமிமுன்னே
கண்டேன் கண்டேனென்று சேனையோடும் - வந்து
    காலில் விழுந்தாரே தானனுமான்


இராமன் போரின் போது இன்று போய் நாளை வா என்று கூறுகிறான். அப்பொழுது எதற்கும் அஞ்சாத இராவணன் சீதை இச்செயல் கண்டு நகைப்பாளே என அஞ்சி வருந்துகிறான் இதனை கம்பர்

வான்நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிரத்தோளான்
நான்நகு பகைஞர் எலாலம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த
சானகி நகுவாள் என்றே நாணத்தால் சாம்புகிறான்.

கும்மியில்

ஞானப்பரனுக்குத் தோற்றுவிட்டே - இப்போ
      ராவணன் தானும் வந்தானாமென்றே
சானகி சொல்லி நகைப்பாளென்றே - அவன்
     தானும் அதுக்கஞ்சி போகலுற்றான்.

இவருடைய கும்மில் பல உவமைகள் காணப்படுகின்றன.

1. கோத்த மீன் போல
2. தாளடி வைக்கோலைப் போல
3.பல்லிடும் வாழைப் பழமது போல
4. கைப்பிள்ளைக் காரிகள் ஆனவர்க்கே பசி காணும் போல
5. மாடொடு கொட்டிலில் பிள்ளையும் போல
6. தட்டியே தூங்கிடும் பிள்ளைக்கும் ஒரு தாலாட்டுப் போல
7. கொள்ளைமாடோட்டி அடைப்பவர் போல
9. குட்டி மறிக்கும் இடையனைப் போல
10. ஈக்கடி மாடுபோல

கருத்துகள்

பழனி இவ்வாறு கூறியுள்ளார்…

"வீரபத்திர இராமாயணக் கும்மி" இந்த புத்தகம் யாருடைய பதிப்பகம் என்று தெரிந்தால் தெரிவிக்கவும் நன்றி....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்