சங்க காலத்தில் வழங்கிய சமஸ்கிருதச் சொற்கள்






 


தொல் தமிழ்ச் சமூக, அரசியல், பொருளாதார, வாழ்வியல் சார் இயங்கியலை அறிந்துகொள்ள தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் இன்று புதிய தடத்திற்கு வழி வகுத்தாலும், தமிழ் சமூக வரலாற்றைக் கட்டமைப்பதற்கு,/புரிந்து கொள்வதற்கு அடிப்படையாக இருப்பன,   கி.பி.ஐந்தாம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்ட பாட்டும் தொகையு மாகிய சங்க இலக்கிய நூல்களாகும். இந்நூல்கள் உருவான காலத்தே சமஸ்கிரதமும் அதன் வழி தோன்றிய பாலி, பிராகிருதம்,  ஆகிய  மொழியில் உள்ள சொற்கள் ஊடுறுவத் தொடங்கிவிட்டன என்பர். தொல்காப்பியர், சொற்களின் வகைகளைக் கூறும் பொழுது, இயற்சொல், திசைசொல், திரிசொல், வடச்சொல் என்றும்,
              "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே."
என வட சொல் தமிழில் கலந்தற்கும் இலக்கணம் கூறுகிறார். தொல்காப்பியரின் காலத்துக்கு முன்னேயே கி.மு. 4ஆம் நூற்றாண்டை ஒட்டியே ஆரியத் தாக்கம் தமிழ்நாட்டில் மெதுவாக வளரத் தொடங்கியிருக்கும் என்பர் கே.கே பிள்ளை.  கி.பி.600க்குப் பின்னர்தான் வடமொழிக்கலப்பு இருக்கவேண்டும் என்றும் மொழியாய்வுகள் கூறுகின்றன. சங்க நூல்களும் வைதீக மார்க்கமும் என்னும் நூலில் பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியார் சங்க இலக்கியம் வைதீக மரபினை உள்வாங்கி செயல்பட்டுள்ள நிலையினை எடுத்துக்காட்டுகிறார். மேலும் அனவரதம் விநாயகம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, சுனித்குமார் சாட்டர்ஸி, எம்.பி.எமனோ, பரோ, எஸ்.வைதியநாதன், அ.காமாட்சி போன்றோர் பழங்கால இலக்கியங்களில் வட மொழிகளின் தாக்கம் இருப்பது குறித்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். மொழியியல் சார்ந்த ஆய்வுகள் சங்க இலக்கியம், தொல்காப்பியிம் ஆகியவற்றுள் இடம் பெற்றுள்ள வட மொழிகள் குறித்து பல்வேறு கருத்தியல்களை முன் வைக்கின்றன. வடமொழி தமிழில் ஊடுறுவ தொடங்கிய அதே நேரத்தில் சமஸ்கிருத மொழியும் தமிழ் மொழியிலிருந்து பல சொற்களைப் பெற்றிருப்பதை,
சமக்கிருத மொழி, பிறமொழிகளோடு ஒப்பிட்டு நன்கு ஆராயப்பட்டுள்ளது. சமக்கிருத மொழி பிறமொழிகளுக்குச் சொற்களை உதவியது போலவே பிறமொழியிலிருந்து சொற்களை இரவல் பெற்றிருக்கின்றதென்றும், மத்திய காலச் சமஸ்கிருத்தில் நூற்றுக்கு இருபதைந்து விழுக்காடு உள்நாட்டு மொழிச்சொற்கள் காணப்படுகின்றனவென்றும், வேதகாலத்திலேயே பலத் தமிழ்சொற்கள் வேத பாடங்களிற் சென்று ஏறியுள்ளனவென்றும் அச்சொற்கள் இவை என்றும் ஆராய்ச்சி வல்லார் காட்டியுள்ளனர். என்பர் பி.டி.சீனிவாச ஐயங்கார்.

ஆக எந்த மொழியிலும் பிற மொழி கலப்பு என்பது தவிர்க்க முடியாதது. பெரும்பான்மை பெயர்ச் சொற்கள் மட்டுமே அந்தந்த மொழி ஒலிப்பிற்கேற்ப மாற்றம் அடைந்து அம்மொழிகளில் வழங்கப்படுகிறன. பொதுவாகச் சங்க இலக்கியநூற்களுள் சமஸ்கிருதத்தில் வழங்கிய பெயர்ச்சொற்கள் தமிழ்மொழியின் ஒலிப்புக்கேற்ப மாற்றப்பட்டு பயன்படுத்தப் பட்டுள்ளன என்றும், அவற்றுள் இயற்கை, துணி, ஆபரணம், வண்ணம், இடம், அரசன், இளவரசன், அரசன் பெயர்கள், அரசவை, சமூகம், இல்வாழ்க்கை, பொருளாதாரம், மதம், கல்வி, மனித உணர்வுகள் போன்ற சொற்களுக்கு வட மொழிப் பெயர்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறுவர். இச்சொற்கள் கடன் பெற்ற சொற்கள் என்றும் கூறப்படுகின்றன. வடமொழியிலிருந்து தமிழ் மொழிக்குப் பெறப்பட்டுள்ள இச்சொற்கள் என்னென்ன வகையான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன என்று  வரலாற்று மொழியியல்  நோக்கில் ஆராயும் பொருட்டு, சங்க இலக்கியங்களை முழுமையாக எடுத்துக்கொள்ளாமல் நற்றிணையில் இடம்பெற்றுள்ள சமஸ்கிருதச்சொற்கள் மட்டுமே இவ்வாய்வுக்கு   எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன.
சங்க இலக்கியம் பல்வேறு  மரபுகளை உள்வாங்கி பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூலாகும். இந்நூல்களின் காலம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. வரலாற்று அடிப்படையில் அகராதியை உருவாக்கியிருக்கும் சாந்தி சாதனா குறுந்தொகையை முதலிலும், நற்றிணையை அடுத்தும் கூறுகிறது. இவ்விரண்டு நூல்களிலும்  வடமொழிச் சொற்கள் ஏறத்தாழ நூற்றுக்கு மேல்  இருக்கின்றன. ஆனால் கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்களில் இதனைவிட கலப்பு எண்ணிக்கை கூடுகிறது. காலப்போக்கில் சமயங்களின் பரவல் அது சார்ந்து செயல்பட்ட நிறுவன பிரச்சாரத்தின் விளைவு, அதிக வடமொழியினரின் வரவு, அதிகார மையமாகச் செயல்பட்ட நிலை போன்றவற்றால் அதிகமான வடமொழிக் கலப்பு தமிழில் உருவாகின.
பொதுவாக ஒருமொழியில் இன்னொருமொழித் தாக்கம்/கடன் பெறுதல் நிகழ்த்துவதற்கான காரணத்தைப் பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்.

1.        ஆட்சி அதிகார மையமாக திகழ்தல்.
2.        அறிவியல் சிந்தனை / மாறுபட்ட அறிவு மரபு அதற்கு ஏற்ற சொல்லை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் அல்லது அதற்கு ஏற்றார்ப் போலக் கலைச் சொல்களை உருவாக்குதல்
3.        ஒரு மொழி உயர்வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொழுது, அது மிக உயர்வான மொழியாக கருதி அனைவரும் அறிந்துகொண்டு பயன்படுத்தத் தொடங்குதல்.
4.        சொல்லின் தொனி அதனுள் பொருளாழம் இருப்பதாக நினைத்தல்
5.        சமயங்களின் தாக்கம்.
6.        பல மொழி மக்கள் கூடி வாழ்தல், வணிக நிமித்தமாக வருபவர்களின் மொழியை அறிந்து கொள்ளுதல்.


தமிழகத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதான வடமொழி  இராமயண –மஹாபாரத (கி.மு.1400- கி.மு.750) காவ்ய காலத்தில் வடமொழியினர் மெல்ல தமிழகத்துக்குள் பரவி நிலைபெறத் தொடங்கினர். அந்நிலையில் அவர்கள்  பயன்படுத்திய மொழியும் தமிழில் உறவாடத் தொடங்கின. இக்காலத்தே வேங்கடத்திற்கும் வடக்கிருக்கும் நாடு வட மொழி வயப்பட்டு, நாளடைவில் மாறி, தெலுங்கு, கன்னட மொழிகள் பெற்றதாக மாறியது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழகம் எல்லை பெற்றது. "வேங்கடத் தும்பர் மொழி பெயர் தேயம்" ஆதலின், அங்கு வழங்கப்பட்ட வடமொழியையும் வடமொழிக் கலப்பு பெற்ற தெலுங்கு-கன்னட மொழிகளையும், தமிழகத்தே வழக்காறு கொண்ட வடமொழியையும் கண்ட தொல்காப்பியர் வடமொழியைத் தமிழ் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் முறையைக் கூறுகின்றார் .

இந்தியாவில் வழங்கும் சமஸ்கிருதம் பாரசிக வேதம் எழுதப்பட்டுள்ள பழைய பாரசீக மொழியும்  ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் இந்தோ- ஐரோப்பிய மொழிகளும் பழைய ஒரு மொழியில் இருந்து பிறந்தவை எனக் கொள்ளப்படுகின்றன. இம்மொழிக் கூட்டங்கள் இந்தோ ஐரோப்பியம் எனப்படும். தமிழில் காணப்படும் சமஸ்கிருத  சொற்களைச் சமஸ்கிருதம் என்று துணியும் முன் அவை மற்றைய இந்து – ஐரோப்பிய மொழியிகளிலிருக்கின்றனவா என்று ஆராய்ந்தறிதல் வேண்டும். இவ்வகை ஆராய்ச்சி இன்னும் நடைபெறவில்லை. இவ்வாறு ஆராயப்படும் வரை சங்க இலக்கியங்கள், திருக்குறள், தொல்காப்பியம் முதலிய நூல்களிற் காணப்படும் ஆரியம் எனப்படும் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே கொள்ளப்படுதல் வேண்டும் என்று கூறுவாரும் உளர். பின்னால் பல்வேறு மொழியியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சமஸ்கிருதமும் பிற மொழிகளில் வழங்கியச் சொற்களை இரவல் பெற்று கையாண்டு வந்தது என்று பரோ, எமனோ போன்றவர்கள் கூறுவர். மேலும் மொழியியல் அறிஞர்கள் சங்க இலக்கியங்களில் வட மொழிச் சொற்கள் காணப்படுவதையும்  ஆராய்ந்துள்ளனர். சங்க இலக்கியங்களில் 200 மேற்பட்ட சமஸ்கிருத சொற்கள் கலந்துள்ளதாக தன்னுடைய  நூலில் எஸ். வைதியநாதன் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் நற்றிணையில் 107 வட மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. அச்சொற்கள் தமிழ் மொழிக்கு ஏற்றார் போல மாற்றம் பெற்று காணப்படுகின்றன.
‘அம் இணைந்து உருவாதல்

அத்தம் – adhvan
அரவம் – rava
கலாவம் - kalãva.
கலிங்கம் – kalinga


ஐ – இணைந்து உருவாதல்

அவை – sabhā
காலை -  kāla
சடை – jatā
திசை – dìśā
பலகை - phalaka
ஒலியனோ அசையோ உருவாதல்

பலி – bali
அரிமா – hari
 தெய்வம் – deva
புதல்வன் - putra

ஒலியனோ அசையோ கெடல்

கள் – kalyā
அத்தம் - adhvan



மொழிக்கு முதல் சகரம் ,ரகரம் கெடல்

அந்தி – sandhi
அமையம் - samaya
அவை – sabhā
அரக்கு – rakta
அரசு – rājaņ
அரவம் - rava


மாற்றமின்றி உருவாதல்

குமரி – kumari
தூது - tûtu
பங்குனி- phagguni
பாணி – pāņi
மணி – maņi
மதி – mati
மது - madhu
மாயா – māyā


ர்  -  ழ் ஆதல்

அமிழ்து – amŗta
அமுதம் - amŗta


ப - வ ஆதல்
தவம் – tapas
உருவம் – rūpa
கூவல் – kūpā

ப – ம ஆதல்

படிவம் - padima

ஸ – ச மாற்றம்

சகடம் - śakata

அம் – ஷ ஆதல்

பக்கம் – paksa

ய – க ஆதல்

நியமம் - nigama

ஸ்ரீ – திரு

திரு – srí

சங்க இலக்கியங்களில் 200 மேற்பட்ட சமஸகிருதச் சொற்கள் கலந்துள்ளன. குறிப்பாக நற்றிணையில் 100 மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன. இச்சொற்களை தொகுத்து நோக்கும் பொழுது வட மொழிச்சொற்கள் தமிழ் மொழிக்கு ஏற்றார் போல மாற்றம் பெற்று வந்திருப்பதைக் காணமுடிகின்றது. மொழியியல் ஆய்வாளர்கள் தமிழ் மொழியில் காணப்படும் சொற்களைக் கடன் சொற்கள் என்று கூறமுடியாது ஒரு மொழிக்குடும்பத்தில் இருந்து சமஸ்கிருதம், தமிழ் போன்ற மொழிகள் பிரிந்து இருக்க வேண்டும், அப்பொழு பயன்படுத்திய சொற்கள் அந்த மொழி சுழலுக்கு ஏற்றார் போல மாறியிருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கின்றனர். இன்றைய சூழலில் கணினியின் வரவால் பல மொழி சொற்களை உள்ளீடு செய்து ஒப்பிட்டு ஆராயக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. உலக மொழிகள் அனைத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் அவற்கிடையே உள்ள பொதுமைக் கூறுகளை இனங்காண முடியும்.

பயன்பட்ட  நூல்கள்
.
1.        மகாதேவன் கதிர்(உ.ஆ),நற்றிணை,கோவிலூர் மடாலயம், 2003
2.        சுப்பிரமணிய சாஸ்திரியார் P.S.,சங்கநூல்களும் வைதிகமார்க்கமும்,யுனைடெட் பிரிண்டர்ஸ், 
3.        சீனிவாச ஐயங்கார்.பி.டி., தமிழர் வரலாறு(கி,பி.600 வரை), தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2007.
4.        EVA WILDEN, Word Index of  Naŗŗiņai volume III,Tamilmann Patippakam, Chennai,2008
5.        Vaidyanathan S., INDO – ARYAN LOANWORDS IN TAMIL, RAJAN PUBLISHERS, MADRAS,1971.



பின்னிணைப்பு
1.        அகில்(பெ)                                    agaru (282)
2.        அத்தம்(பெ)                     adhvan (6,26,37,107,111,126,162,164,174,198,212,252,274,279,
286,316,329,397)
3.        அந்தி(பெ)                                           sandhi (238,343)
4.        அமிழ்து(பெ)                                     amrta (230)         
5.        அமுதம்(பெ)                      (65,88)
6.        அமையம்(பெ)                                 samaya (157,224,279,305)
7.        அரக்கு(பெ)                                        rakta (25,118,193,341)
8.        அரசு(பெ)                                            rajan (346)
9.        அரைசர்(பெ)                                     raja (291)
10.     அரவம்(பெ)                                       rava (85,114,144,257,308)
11.     அரிமா(பெ)                                        hari (112)
12.     அவை((பெ)                                       sabha(90, 167, 400)
13.     அன்னம்(பெ)                                    hamsa(73,356)
14.     இமயம்(பெ)                                      Himalaya(356)
15.     இமையம்(பெ)                                 Himalaya(369)
16.     உரு(உ)                                               rupa(34,192,299
17.     உருவு(பெ)                                                         82,193,201,237      
18.     உருவம்(பெ)                                                     192,390
19.     உருவின(5வி)                                                  86           
20.     உலகம்(பெ)                                      ulaka (1,22,46,196,226,237,327,337,348,366)
21.     உலகு(பெ)                                                         139,164,240
22.     ஏதம்(பெ)                                            hetu (173)
23.     ஏது(பெ)                                               hetu (145)
24.     ஏமம்(பெ)                                           ksema(133)
25.     கங்கை(பெ)                                       ganga(189,369)
26.     கடாஅம்(பெ)                                    kata(18,103)
27.     கணம்(பெ)                                         gana(4,15,101,111,138,197,230,248,254,353,358,369)
28.     கணி(பெ)                                            gani(373)
29.     கம்பலத்து(                                        kampalam(24)
30.     கம்மியன்(பெ)                                  karmanya (94,313,363)
31.     கலாவ(11வி)                                      kalava (264,265)
32.     கலிங்கம்(பெ)                                   kalinga(20,90,380)
33.     கவளம்((பெ)                                     kavala (360)
34.     கள்                                                        kalya(35,293,323,344,380,392)
35.     காமம்(பெ)                                         kama(23,35,39,64,79,94,126,152,185,187,223,232,266,287,
335,353,369,378,389)
36.     காமர்
37.     காமரு
38.     காமுறு
39.     கால்(பெ)                                            Kala(30,72,209,210,210,230,255,297,319,393)
40.     காலை(பெ)                                        kala (5,22,30,44,56,57,72,115,118,123,124,130,
164,209,223,242,243,256,264,266,296,337,346,384)
41.     குணம்(பெ)                                        guna (291)
42.     குணன்(பெ)                                       guna
43.     குமரி(பெ)                                          kumara(54)
44.     கூவல்பெ)                                          kupa(41,210)
45.     கேதம்(பெ)                                         kheda(173)
46.     சகடம்(பெ)                                        sakata(4)
47.     சடை(பெ)                                           jata(141)
48.     சதுக்கம்(பெ)                                    catuhka(319)
49.     சாடி(பெ)                                             jhari(295)
50.     செத்து(11வி)                                      citva(35,178,248,249,344)
51.     தண்டு(பெ)                                         danda(142,260)
52.     தவசியர்((பெ)                                   tapasvin(141)
53.     தவம்(பெ)                                           tapas(226)
54.     தானை(பெ)                                       sena(18,150,387)
55.     திசை(பெ)                                           disa
56.     திரு(பெ)                                              sri(8,39,62,108,143,160,167,201,250,255,258,269,399)
57.     திலகம்(பெ)                                       tilaka(62)
58.     தூண்(பெ)          
59.     தூது(பெ)                                             tutu(5,165,167)
60.     தெய்வம்(பெ)                                   deva(9,185,201)
61.     தேஎம்(பெ)                                         desa(315,351,398)
62.     நாகம்(பெ)                                          naga(37)
63.     நாகரிகர்(பெ)                                    nagarika(355)
64.     நாவாய்(பெ)                                      nau(295)
65.     நிதி(பெ)                                               nidhi(16)
66.     நியமம்(பெ)                                       nigama(45)
67.     நிரையம்(பெ)                                  niraya      (236,329)
68.     நீல்(பெ)                                               nila(4,45,163,199,215,345,348,382)
69.     நீலம்(பெ)          
70.     நுகம்(பெ)                                           yuga (58)
71.     நெதி(பெ)(16;8)                                 niti(16)   
72.     பக்கம்(பெ)                                         paksa(98)
73.     பகடு(பெ)                                            brhat(290,340,381,395)
74.     பங்கு(பெ)                                           paku(196)
75.     பங்குனி(பெ)                                     phalguni(234)
76.     படிவம்((பெ)                                      padima(272)
77.     பருவம்(பெ)                                      paruva(99,218,238,246,248,364)
78.     பருவத்த(11வி)
79.     பலகை(பெ)                                       phalaka(30,177)
80.     பலி(பெ)                                              bali(73,198,251,281,293,322,343,358,367)
81.     பளிங்கு(பெ)                                      phalika(196)
82.     பாசம்(பெ)                                          pasa(12)
83.     பாணி(பெ)                                          pani(142)
84.     பிச்சை(பெ)                                        bhiksa(300)
85.     பிண்டம்(பெ)(11வி)                         panda(26,116)
86.     புதல்வர்(பெ)                                     putra(40,161,166,221,250,269,355,370,380)
87.     பூதம்(பெ)(நற்,192;8-9)                 bhuta(192)
88.     பேழை((104,347)                             pela(120)
89.     பையுள்                              payyaula (209,241,343)
90.     மண்டிலம்(பெ)(நற்,67,375)       mandala(67,69,117,152,187,375)
91.     மணி(12வி)(நற்,92)                        mani(8,10,17,28,54,78,92,112,133,159,166,171,184,191,208
214,221,231,234,239,242,244,245,255,264,269,293,302,316,337,339,344,357,366,399)
92.     மத்தம்(பெ)(நற்,12)                        matha(12,84)
93.     மதன்(பெ)                                          mada(6,8,94,97,244,268)
94.     மதி(பெ)(நற்,122,316)                     mati(99,122)
95.     மது(பெ)                                              madhu(178)
96.     மனம்(பெ)                                          manas(275,330)
97.     மனத்தர்(பெ)                                                     (24)
98.     மனத்த                                                                 (262)
99.     மனத்தேம்                                                          (212)
100.  மாதிர                                                   mahadisa (347)
101.  மாயா(4வி)(நற்,103)                      maya(201)
102.  மாலை                                                 mala(90,93,269,377)
103.  யாமம்(பெ)(நற்,132;9)                  yama(22,36,129,132,159,178,199,229,241,261,262,303,333,335,353,378)
104.  வங்கம்(பெ)(நற்,189,341)             vahya(189,258)
105.  வஞ்ச(ம்)                                            vamsa(150)
106.  வண்ணம்(பெ)(நற்,148;1)             varna(71,148,273)
107.  வாரணம்(பெ)(நற்,21;8)                                varana(121,297,389)




              

கருத்துகள்

mkmuthamilmandram இவ்வாறு கூறியுள்ளார்…
Superb

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்