வடமொழி அறமரபும் தமிழ் அறமரபும்




அறம் என்னும் மேற்கட்டுமானச் சிந்தனைப் போக்கு  வாழ்வின் ஊடாக நிகழும் அகம் புறம் சார் ஒழுங்கு/ ஒழுங்கின்மைகான வரைவை உற்பத்தி செய்து, அது தொடர்பான கதையாடல்களையும் தொன்மங்களையும் விளைவிக்கிறது. அது சார்ந்து மனிதன் தன் வாழ்வில் போக்குகளைத் தீர்மானித்துக் கொள்ள முனைகின்றான். உலகம் முழுதும் இது போன்ற போக்குகள் காணப்படுகின்றன. வடமொழியில் வைதிகம் / அவைதிகம் சாரந்த அறங்கள் உருவாகியுள்ளன. வேதம் தொடர்பான அறங்கள் வைதிக அறங்கள் என்றும் அதற்கு மறுப்பாக எழுந்த சமண, பௌத்த அறங்கள் அவைதிக அறங்கள் என்றும் கூறப்படுகின்றன. தமிழில் சங்க இலக்கியங்களில் வாழ்வியலோடு இணைத்து பேசப்பட்ட அறம் சார் கோட்பாடுகள், பின்னாள் வடமொழி அறங்களை உட்செறித்து ஒர் இலக்கிய வகையாக மாறுகின்றது. வட மொழியில் அறம்சார் அறிவு செயல்பாடுகள் வேதங்களில் காணப்பட்டாலும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வரை பழமொழிகளின் வடிவிலும்(சூத்திம்) அதன் பிறகு எளிய வடிவிலான செய்யுள் நடையிலும் (சுலோகம்) கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தன. இதே நேரத்தில் உரைகளும்(பாஷ்யம்) அதன் பிறகு அது சார்ந்த  தொகுக்கப்பட்ட  ஆராய்ச்சி நூல்களும்(நிபந்த) ஏற்பட்டன.

வடமொழி அறங்கள் குறித்து பி.வி.கானே (1968 - 1975) லிங்கட் (1973) பாட்ரிக் ஓலிவ் (2010) போன்றோர் ஆரய்ந்துள்ளனர். தமிழில் வடமொழி அறம் குறித்து க.த.திருநாவுகரசு, ராஜகௌதமன், ஆ.சிவசுப்பிரமணியம், ஜெயமோகன், ஆ.மாதவன் போன்றோர் பேசியிருந்தாலும் ழுழுமையாக வடமொழி அறம் குறித்த உரையாடலை நிகழ்த்தவில்லை.


இங்கு வடமொழியில் தர்மம் என்னும் சொல்லாடல் எந்த கருத்தியலுக்கான திறப்பாக அமைந்துள்ளது. என்பதையும், தர்மம் மரபு வழியாக, தனி மனித, சமூக, அரசியல், சடங்கு போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த/ மேற்கொள்ள வேண்டிய முறைமைகளை எடுத்துரைக்கப்பட்ட திறன் குறித்த  உரையாடலாகவும், வைதிக வைதிகமல்லாத மதங்களின் தாக்கம் தமிழில் உட்செறித்துக் கொண்ட நிலையினையும் பற்றிய உரையாடலாக அமைகின்றது.

தர்மம் – சாஸ்திரம் – நீதி – அறம்
     தர்ம்ம் என்னும் சொல்லாடல் ரிக் வேதத்தில் 67 இடங்களில் பயனபடுத்தப்பட்டுள்ளதாக பேட்ரிக் ஓலிவ் குறிப்படுகின்றார். பின்னால் பிராம்மணங்களிலும், உபநிடதங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளில் தர்ம வேள்வி சடங்கு முறைகளுக்கான சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மீமாம்சம் வேதங்களைத் தர்மங்கள் என்று கூறுகின்றது.  தர்மம் நடவடிக்கையைக் குறிப்பது என்றும் கூறப்பட்டது.   பின்னால் பௌத்தம் வாழ்க்கை நடைமுறை நெறி சார்ந்த அனைத்துக்குமான சொல்லாகவும் மோட்சத்தை அடையும் வழியையும் கூறும் சொல்லாகவும் இச்சொல்லை எடுத்துகொள்கிறது. வேள்வி சடங்கு முறைகளைக் கூறும் கல்ப சூத்தரா வாழ்க்கைச் சடங்கு முறைகளைக் கூறும் க்ருக சூத்திரா, உயர்த பண்பாடுகளைக் கூறும் ஸ்ரவுத சூத்திரா இவைகளில் தர்மம் என்னும் சொல் சடங்கு முறைகளைக் குறிக்கப்பயன்பட்டிருக்கின்றன. பின்னால் ஸ்மிருதிகளைத் தர்ம சாஸத்திரங்கள் என இணைத்து காத்தாயனா பேசுகின்றார். நீதி என்னும் சொல் கி.பி இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வழக்கிற்கு வருகின்றது. தர்மம் என்பது சமூக இயங்கு நிலையை வறையறுப்பது என்றும் நீதி வாழ்க்கைக்கான நெறியை வறையறுப்பது என்றும் கூறப்பட்டது. தமிழில் இவ்விரு சொற்களையும் இணைந்த அறம் என்னும் சொல்லாடலாக பயன்படுத்தப்ட்டுள்ளது.
    
வடமொழி இலக்கியங்கள்
       வடமொழி இலக்கியம் என்பது வேத இலக்கியத்தில் இருந்து தொடங்குகின்றது. வேதத்தில் காணப்படும் மந்திரங்களின் தொகுப்பு ஸம்ஹிதை எனப்படும். வேத்திற்கான விளக்கம் பிராம்மணங்கள். அவை வசன நடையில் அமைந்திருக்கும். அவற்றின் முதல் பகுதி மந்திரங்களின் பொருள், இரண்டாம் பகுதி வானப்பரஸ்தர்களின் தர்மத்தைக் கூறும் பகுதி ஆரண்யம் என்றும் மூன்றாம் பகுதி மாணவன் ஆசிரியரிடத்து மோட்சம் பெறும் வழியை அறிவது உபநிஷத் என்றும்  அழைக்கப்படுகின்றது. வேதங்களுக்கு  ஆதாரமாக இருப்பவை சிக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்கதம், ஜோதிஷ்யம், கல்ப சூத்திரம் என வழங்கப்படுகின்றது. பின்னால் தோன்ற கூடிய அனைத்து நூல்களும் இதற்கு விளக்கங்கள் கூறுவனவாகவே அமைகின்றன. பொதுவாக வைதீக தர்மத்தை அறியப் பயன்படும் நூல்கள்.  வேதங்கள் - 4;அங்கங்கள் – 6; மீமாம்ஸை(பட்ட, பிராபகர) இரண்டும் சேர்த்து -1; நியாயம் – 1; தர்மசூத்திரங்கள்  - 1; ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் இவையெல்லாம் சேர்த்து 1. இவற்றைப் பதினான்குவித்தை என்று கூறுவதாக பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார் குறிப்படுவார். ஆக தர்மத்திற்கான வித்து வேதவேத்திலிருந்து தொடங்கி பின்னால் விரிந்த நிலையில் பேசப்படுகின்றன. வேதத்தில் இருந்து தான் தர்ம சாஸ்திரங்கள் உருவாகியுள்ளன என்பதை,
வேதத்தை சுருதி என்றும் தர்மசாஸ்திரத்தை ஸ்மிருதி என்றும் அறியத்தக்கது. அவ்விரண்டையும் விரோதமான தர்க்க சாஸ்திர யுத்தியைக் கொண்டு ஆக்ஷேபிக்க கூடாது அவற்றினாலே தருமம் விளங்குகிற தல்லவா.(2;10)
என்று மனுவும் உறுதிப்படுத்துகிறது. தர்ம சூத்திரங்கள், தர்மசாஸ்திரங்கள் என்பவை சட்டநூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிக்ள என்று அழைக்கப்டுகின்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று பி.வி கானே குறிப்பிடுகின்றார். பொதுவாக 18 ஸ்மிருதிகள் என்றும் கூறப்படுகின்றன.
1.        ஆங்கிரச ஸ்மிருதி
2.        வியாச ஸ்மிருதி
3.        ஆபஸ்தம்ப ஸ்மிருதி
4.        தக்ஷ் ஸ்மிருதி
5.        விஷ்ணு ஸ்மிருதி
6.        யக்ஞவல்லிய ஸ்மிருதி
7.        லிக்கிட ஸ்மிருதி
8.        சம்வர்டா ஸ்மிருதி
9.        ஷ்ங்க ஸ்மிருதி
10.     ப்ரகஸ்பதி ஸ்மிருதி
11.     அட்ரி ஸ்மிருதி
12.     காத்யாயனா ஸ்மிருதி
13.     பராஸ்ஹரா ஸ்மிருதி
14.     மனு ஸ்மிருதி
15.     அஸ்கனஸா ஸ்மிருதி
16.     ஹரிதா ஸ்மிருதி
17.     கௌதமா ஸ்மிருதி
18.     யமா ஸ்மிருதி


சுருதிகள் அடிப்படையான பிரபஞ்ச தரிசனத்தை முன் வைக்கும் நூல். ஸ்மிருதிகள் என்பவை வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்துபவையாகும், சமூக சட்டங்களை வகுத்துரைப்பதாகும். வேதம் உபநிடதம், பிரம்மசூத்ரம் சுருதிகள் என்று அழைக்கப்டுகின்றன. மனு போன்றவை ஸ்மிருதிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்மிருதி பற்றி பிரிட்டானிக்கா தகவல் களஞைசியம்,
ஸ்மிருதிகள் பகவானிடமிருந்து வெளிவந்த்தாக்க கருதப்படும் வேதங்ளைப் போல இல்லாமல் மனித நினைவாற்றலின் அடிப்பதையில் உருவான ஹிந்துகளின் புனித சாஸ்திரம். வேதயிலக்கியத்தை விவரித்து,கருத்தாய்வு செய்து,வகைப்படுத்த ஸ்மிருதி உதவுகின்றது. வேத இலக்கியத்தை விட குறைவான அதிகாரத்தை உடையது என்று கருதப்பட்டாலும் அதிகம் பரவலான  அளவில் அறியப்பட்டதுள்ளது. வழக்கத்தில் இந்த சொல் கல்ப சூத்திரங்கள், புராணங்கள், பகவத்கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவை உள்ளிட்ட, சட்டத்தையும் சமூக நடத்தையையும் சார்ந்த நூல்களைக் குறிக்கிறது. என விளக்கம் அளிக்கின்றது.
இந்து மதத்தின் கொள்கைபடி சுருதிகள் முழுதன்மையான விஷயங்களை முன்வைப்பவை ஆகவே அவை காலச்சார்ப்பு கொண்டவை அல்ல. ஆனால் ஸ்மிருதிகள் காலச்சார்ப்பு கொண்வை. விவாத்திற்கு உரியவை. ஸ்மிருதிகள் சுருதிகளின் ஞான தரிசனங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பல நூல்களில் மகாபாரதம், இராமயாணம் என்னும் இரு இதிகாசங்களையும் ஸ்மிருதிகளாக அதாவது நெறிநூல்களாக எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. தர்சாஸ்திரங்கள்,
நித்திய கருமங்கள்
ஆசாரம்
விவகாரம்
பிராய சித்தம்
இராச தர்மம்.
வருணாசிரமம்
அக்நி கார்யம்
விரதம்
ஆகியன தொடர்பாக விதிமுறைகளைக் குறிப்பிடுகின்றன. ஸ்மிருதிகளில்   முக்கியமானதாகக் கருதப்பட்டது மனு ஸ்மிருதி இது மனுஸம்ஹிதை மாணவ தர்ம சாஸ்திரம் எனவும் அழைக்கப்படுகின்றது. மனுவுக்கு முன் கி.மு நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதஞ்சலி தர்ம சூத்திரம் குறித்து பேசுகிறார். பின்னால் காத்யாயனா தர்மசாஸ்திரம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். அபஸ்தம்பா, கௌதமா, பௌதயானா, வசிஷ்டா போன்றோர் அவர்களுக்கு முன் இருந்த 17 முனிவர்களின் குறிப்புகளை மேற்கோள்களாக்க கொண்டு தருமசாஸ்திரங்களை உருவாக்கினர். முன்பிருந்த ஆக்கங்களில் இருந்து உருவாக்கினார்களே ஒழிய புதினா முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஹாரிட்டா முன்பிருந்த முரண்களுக்கான விளக்கம், கூறிய முறைகளில் வேறுபட்டு கூறும் போக்கினைக் கடைபிடித்தார். அபஸ்தம்பா வேதம் பயிலும் மாணவர்களுக்கும் , கிரகஸ்த பிராமணியர்களுக்கான வாழ்க்கை முறை, சடங்குமுறைகள், வேதங்கள் பயின்று முடித்தவர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள், அரச ஆட்சிமுறைகள் நீதி முறைகள் போன்றவை குறித்து பேசுகின்றது. அபஸ்தம்பா பிராமணர்களுக்கான வாழ்க்கை முறையை பற்றியே பேசுகிறாரே ஒழிய  வேறு இனத்தாரைக் குறித்து பேசவில்லை. இருபிறப்பாளர் குறித் கருத்தியலையும் ஆசரம வாழ்க்கை முறையையும் முன் வைக்கின்றார். பின்னால் மூன்று வருணத்தாருக்குஉரியதாகபேசப்படுகின்றது.

கௌதமா மற்றும் பௌத்தயானா ஆசிரம முறைகளைக் குறித்து பேசாமல் இல்லற வாழ்க்கை முறை பற்றியும் பிராமணர் அல்லாத பிற வருணத்தாரையும்  அவர்களுக்கான கடமையையும்  தவம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையையும் பேசுகின்றன. கௌதமா கூறும் சட்டம், சட்டம் சார்ந்த வழிமுறைகள் மனுவுக்கு ஆதாரமாக இருந்தது. பௌத்தயான மற்றும் வசிஷ்டா பிராமணியர்கள் வாழக்கூடியப் பகுதியை புண்ணிய பூமி  என்று கூறி அவற்றிற்கு ஆரியவர்த்தா என்னும் பெயரினைக் குறிப்பிடுகின்றனர். ஆபஸதம்பா ,பௌத்தயான கல்ப சூத்திரத்தில் கூறப்பட்ட பகுதிகளை விரித்துக் கூறுகின்றது. கௌதமா, வஷிட்டா கல்ப சூத்திரத்தில் இருப்பவற்றையும் தமது கால சமூக நடத்தைகள் வாழ்க்கை முறைகளையும் இணைத்து கூறுகின்றது. மனு இந்திய அரசியல் அமைபில் சமூக அமைப்பில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய நூல் இந்நூல் முன்பிருந்த வேத முறைகளை உள்வாங்கியும்,  சம கால நடைமுறைகளை வெளிப்படுத்தும் நூலாகவும் பிராமணியத்தை உயர்த்தி பிடிக்கும் காணப்படுகின்றது..
மனுவால் கட்டளை மனுவால் கட்டளை இடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே ஏனெனில் அவர் வேத சாரமும் உணர்ந்த பிரம்ம ஞானி.(2. 7)
வேத சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான்.(2.8)

மனு ஒருவர் என்றும் பலர் என்றும் மரபு வழியாக வரக்கூடிய இனத்தைக் குறிக்கும் என்றும் கூறப்படுகின்றது. மனு சாஸ்திரம் மனு என்பவர் எழுதியதால் மனுசாஸ்திரம் என்று அழைக்கப்பட்டாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கார் குறிப்பிடுகின்றார். இந்நூலின் காலம் கி.மு 200 க்கும் கி.பி 200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும்,கி.மு170க்கும் 150 க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்காரும் கருதுகின்றனர். கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ்.சர்மா கருதுகிறார்.

சுயாவாம்பு மநுவான பிரம்மனிடம் முனிவர்கள் சென்று சான நிறையும் வல்லமையும் செல்வமும் வீறும், திறனும், ஒளியும் பெற்றுத் திகழும் பெருமானே. நால் வருணத்தரும் மற்றோரும் கடைப்பிடிக்கத் தக்க அவரவர் செயல்கள், கடமைகள் எமக்கு உணர்துவீராக என்று வேண்ட, பிரம்மா இவ்வுலகம் உருவான முறையையும் நாராயணன் என்ற பரம்பொருள் குறித்தும் தோற்றம் குறித்தும் கூறிவிட்டு பின் எமது குமாரரான பிருகு முனிவர் முனிவர்களை நோக்கி கூறியசெய்திகளே மனு சாஸ்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேத பிராமணன் நம்பிக்கை துரோகம் செய்து,மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான்.அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேத வேள்விகள் , பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பிராமணர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி பாதுகாக்கும் மனு தர்மம் உருவாகயுள்ளது.






கணவன் துராசாமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோகனாயிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது(மனு 5;154)
கணவன் சூதாடுகிறவனாகயிருந்தாலும்,குடியனாகவிருந்தாலும்,நோயாளியாகவிருந்தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம்,துணிமணிகள்,படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதமு நீக்கி வைக்க வேண்டியது.(9;78)
பாலியமாக விருந்தாலும் யவ்வமாக விருந்தாலும் வார்த்திபமாக விருந்தாலும் ஸ்திரீகள் தன்தன் வீடுகளில் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.(மனு;5;147)
பாலியத்தில் தகப்பனின் ஆஞ்ஞையிலும்,யவ்வனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும்,கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதே யல்லாது, ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்க கூடாது.(மனு;5;148)
பெண்கள் விபச்சாரப்பான்மையுடையவர்கள் என்பதாக மிகமிகக் கீழ்தரமாகக் கொச்சைப்படுத்துவதில் மஹா
மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும்(மனு 2;213)
தாய்,தங்கை,பெண் இவர்களுடன் தனியாய் ஒன்றாய் உட்காரக் கூடாது(மனு,2;215)

மாதர்களின் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்(மனு9 ;15)
மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்றன(மனு 9;19)
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்(மனு,9;14)
ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையை உண்டு பண்ணலாம்(மனு 9;52)
பிள்ளையில்லாமல் அந்த குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போது அந்த ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஆகியவர்களுடன் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது.(மனு,9;59)

கணவன் புத்திரனில்லாமல் இறந்து போனால் மனையாள் கணவனின் தோத்திரமுள்ள ஒரு புருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக்கொண்டு, அப்புத்திரனுக்குக் கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிட வேண்டியது.(மனு 9;190)

பிராமணன் பிறவிச் சிறப்பாளன்;தேவரும் மதிக்கத் தக்கவன்; மனிதன் உயர்ந்தவன்;தேவமந்திரமே அவன் உயர்வுக்குக் காரணம் எனவே அவன் முடிவுபடி நடக்க(மனு 11;84)
அரசன் பிராமணர் அறிவுரை கேட்பது நன்று. அது ஆக்கம் தரும்.அவர்களின் முடிவிற்கும் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்(மனு7;37)
வைதீகமாயிருந்தாலும் லவுதீகமாயிருந்தாலும் அக்நியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ, அப்படியே பிராமணன் தகப்பன் மரியாதையையும் சத்திரன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது(மனு 2;135)









ஆப்தசம்பா  கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
கௌதமா கி.மு இரண்டாம் நூற்றாண்டு(தொடக்கம்)
பௌத்தயானா கி.மு.இரண்டாம் நூற்றாண்டு (மத்திய இறுதி)
வஷிட்டா கி.மு முதலாம் நூற்றாண்டு
மனு கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
யக்ஞவல்யா கி.பி நான்காம் நூற்றாண்டு
நாரதா கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
பிரகஸ்பதி கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டு
விஷ்ணு கி.பி. ஏழாம் நூற்றாண்டு
காத்யாயனா  கி.பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டு
பராஷர ஏழாம் எட்டாம் நூற்றாண்டு
வைஷ்ணவாம்  ஏழாம் எட்டாம் நூற்றாண்டு
பயன்பட்ட நூல்கள்
1.        சிவசுப்பிரமணியன் ஆ, மனுசாத்திரம் ஒரு அறிமுகம், www.thiruvalluvar.in/2007/02/blog-post
2.        சுப்பிரமணிய சாஸ்திரியார் பி.எஸ், சங்க நூல்களும் வைதிக மார்க்கமும், யுனைட்டெட்      பிரிண்டஸ் லிமிடெட் அச்சுக்கூடம், 1951
3.        திருநாவுகரசுக.த, திருக்குறள் நீதி இலக்கியம்,சென்னைப் பல்கலைக்கழகம், 1971.
4.        மாதவன்.சு முனைவர், தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், செம்மொழி பதிப்பகம், 2008
5.        ராஜ்கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், விடியல் பதிப்பகம்,2008
6.        வீரமணி.கி(ஆய்வுரை ) மனுதரும சாஸ்திரம்(1919 பதிப்பில் உள்ளபடி), திராவிட கழக வெளியீடு,2005
7.        பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம், தொகுதி மூன்று
8.        HINDUISM AND LAW : AN INDRODUCTION PAPER DHAMASASTRA : A TEXTUAL HISTORY BY PATRICK OLIVELLE,  CAMBRIDGE UNIVERSITY PRESS,2010.

கருத்துகள்

VALLALAR இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமிழில் மனு சாஸ்திரம் நூல் கிடைக்குமா? என்பதனை தெரியப்படுத்தினால் பயனடைவேன். எனது மின்னஞ்சல் முகவரி TMRAMALINGAM@HOTMAIL.COM

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்