இடப்பெயர்களின் தோற்றம்
மனிதகுலம் தோன்றிய காலத்திலேயே பெயர்களும் தோன்றியிருக்க வேண்டும். எனவே மனித இனத்திற்குரிய பழமை பெயர்களும் உண்டு. ஒருவன் இயற்கையில் தான் கண்ட உயிரினங்களை, பொருட்களை இடங்களைப் பிறருக்குத் தெளிவாகவும் குறிப்பாகவும் உணர்த்தும் பொருட்டு அமைத்துக் கொண்ட முறையே பெயரமைப்பாகும். இடப்பெயர்களும் இவ்வாறே தோன்றியிருத்தல் வேண்டும்.
ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து வேறுபடுத்தி ஆட்பெயரையும், ஒரு இனத்தை இன்னொரு இனத்திடமிருந்து வேறுபடுத்த இனப்பெயரையும், ஒரு பொருளை இன்னொரு பொருளிடமிருந்து வேறுபடுத்த பொருட்பெயரையும் வழங்கியதைப் போன்று நிலத்தின் ஒரு பகுதியை இன்னொரு பகுதியிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, இடப்பெயர்களை அமைத்துக்கொண்டனர் எனலாம். மலை, குகை, காடு, ஆறு, குளம், குன்று, பள்ளம் என இயற்கையில் வேறுபட்டிருந்து நில அமைப்புக்கேற்ப இடங்களை வேறுபடுத்தி அறிந்தபின் ஆரம்பகால மனிதன். பின்னர் மனித இன ஒரு குழுவாக, சமூகமாக ஆங்காங்கே ஒரு பகுதியில் சிறிது காலம் வாழத் தொடங்கிய பின்னர் குடியிருப்புகளும், பெயர்களும் தோன்றியிருக்க வேண்டும்.
மக்கள் தொகையை அதிகரிக்கவே, மனிதன் புதிய புதிய குடியிருப்புகளை அமைத்து அவற்றிற்கு புதுப்புதுப் பெயரையும் அளிக்கின்றான். இம்முறை இன்றும் தொடர்ந்து வரும் ஒன்றாகும். ஒரே பெயரால் அறியப்பட்ட ஒரு பரந்த நிலப்பகுதிக்குள் பல்வேறு இடப்பெயர்களும் தோன்றுவதற்கு இதுவே காரணம் எனலாம். மக்கள்தொகை பெருகப் பெருக புதிய குடியிருப்புகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். இந்நிலையில் மனிதகுல வரலாற்றின் தொடர்ச்சியாக சில செய்திகளை இடப்பெயர்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இடப்பெயர்களின் முக்கியத்துவம்
பெயர்கள் என்பது வெறும் வார்த்தைகளல்ல. அவற்றுள் புராண இதிகாசச் செய்திகள், நம்பிக்கைகள், வரலாறு, பழக்க வழக்கங்கள் இவையெல்லாம் பொதிந்து காணப்படுகிறது. அயோத்தி, குருஷேத்திரம், துவாரகை போன்ற இடப்பெயர்கள் இராமாயண. மகாபாரத இதிகாசச் செய்திகளை உணர்த்துகின்றன. கங்கை கொண்ட சோழபுரம் முடிவைத்தான் ஏந்தல், விழஞான இராஜேந்திர சோழ பட்டணம் போன்ற இடப்பெயர்களில் வரலாற்றுச் செய்திகள் அடங்கியிருக்கக் காணலாம். புதியதாக அமைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெரும்பாலும் கடவுள் பெயர்களை வழங்கியிருக்கக் காணலாம். அரசர்களின் நினைவாக அழகிய பாண்டிபுரம், வீரபாண்டிய மங்கை மாநகரம் சேரமான் தேவி போன்ற பெயர்களை காணலாம். தலைவர்கள் பெயர்களாக காந்திபுரம், ஜவஹர் நகர் போன்ற பெயர்களும், தமிழ்நாட்டில் பெரியார் மாவட்டம், முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம், அண்ணா மாவட்டம் என முன்பு அரசியல் தலைவர் பெயர்களை சூட்டியிருந்தது காணத்தக்கது.
பழங்காலத்தில் மரம், செடி, கொடி, பறவை, விலங்குகள், நீர்நிலைகள் இவற்றின் அடிப்படையில் பெரும்பான்மையான இடங்கள் பெயர் பெற்றன. அக்கால மக்கள் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த நிலையினையே இத்தகைய பெயரமைப்புகள் காட்டுகின்றன. தற்காலத்தில் இந்நிலை மாறி வருகிறது. இவ்வாறு காலந்தோறும் பெயரமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனின் பண்பாட்டு, நாகரிக வளர்ச்சியினைக் காட்டுகிறது.
இடப்பெயராய்வின் பயன்
இவ்வாறு பழமையின் எச்சங்களாகவும், புதுமையின் கண்ணாடி களாகவும் விளங்கும் இடப்பெயர்களை ஆய்வதன் மூலம் வரலாறு, பண்பாடு, மொழியியல் ஆகிய துறைகளுக்கு ஏற்படும் பயன்கள் பலவாகும். பழங்காலச் சாசனங்கள் இலக்கியங்கள் இவற்றில் காணப்படும் இடப்பெயர்களை ஆராய்தல். தற்காலத்தில் வழக்கத்திலிருக்கும் பெயர்களை ஆராய்தல் ஆகிய இரு நிலைகளில் இடப்பெயர்களை ஆராயலாம். பழங்காலச் சாசன இலக்கியங்களில் இடம்பெறும் இடப்பெயர்களை ஆராய்வதன்மூலம் அக்கால மக்களின் பண்பாடு, வரலாறு போன்றவற்றை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். ஒரு நாட்டின் பழங்கால நில அமைப்பு, அக்காலத்தில் வழங்கிவந்த இடப்பெயர்கள் காலந்தோறும் எவ்வெவ்வாறு உருமாற்றம் பெற்றுள்ளன என்பதையும் பழங்காலப் பெயர்களை ஆய்வதன் வழியாக அறிந்து கொள்ளலாம். மேலும், அக்கால மொழிநிலை காலந்தோறும் ஒரு மொழியில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளவும் இவ்வாய்வு துணைசெய்யும்.
- கேரள இடப்பெயராய்வு
- நயினார்
பிஎச்.டி. ஆய்வேடு
கேரளப் பல்கலைக்கழகம்
கேரளா
கருத்துகள்