தமிழ்ச்சொற் கட்டமைப்பு

ஒவ்வொரு மொழியிலும் தனிநிலை,ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை மூன்றும் உள.ஆயினும் இவற்றில் ஏதேனும் ஒன்று மேலோங்கி நிற்கும்.

தமிழ் ஒட்டுநிலையில் பெரிதும் உளது; ஒரு சொல்லின் உறுப்புகளைத் தனித்தனியே பிரிக்கலாம்; பிறகு பிரிந்தவாறே சேர்த்து முன்னைய வடிவை உருவாக்கி விடலாம்.

கூனன் - கூன் + அன்
பாடினான் - பாடு + இன் + ஆன்
எடுத்தான் - எடு + த் + த் + ஆன்
படித்தனன் - படி + த் + த் + அன் + அன்
கண்டனன் - காண் (கண்) + ட் + அன் + அன்
வந்தனன் - வா(வ) + த்(ந்) +த் + அன் +அன்

இவை ஒவ்வொன்றற்கும் தனிப்பொருளும் பெயரும் உண்டு. பகுதி அல்லது முதனிலை, விகுதி அல்லது இறுதிநிலை. அவற்றுடன் இடைநிலை பகுதிக்கும் இடைநிலைக்கும் இடைப்பட்டது சந்தி. காண் - கண் என மாறுவது பகுதி திரிந்த விகாரம். வா - வ எனத் திரிவதும் அது த -ந் ஆவது சந்தி திரிந்த விகாரம். வந்தானில் ஆன் இறுதிநிலை,வந்தனன் என்பதில் அன் + அன் - என இரண்டும் உள. முன்னது சாரியை, பின்து விகுதி இறுதிநிலை.

இத்தகைய சொற்கட்டமைப்பை மாற்றி வர்றான், பாட்றான் ,கேக்குறான், விளையாட்றான் என்றால் உட்பிணைப்பு பிரிக்க முடாயத நிலை அடைகின்றன. அதனால் தமிழ் சிதைந்துவிடும்.

பல மொழிகளில் உட்பிணைப்பு திலையே மிகக் கூடுதல். தமிழில் கொச்சை வழக்கில் இது புகுந்துவிட்டது. தவறு என்பது விளங்கினால், திருத்தமாக, முழுச்சொல்லாகப் பேசுவர், எழுதுவர்.

தமிழிச் சொற்கட்டமைப்பே அதன் இளமைக்கும், என்றென்றும் நிலை பெறுதற்கும் அடிப்படையாகும். இக்கட்டமைப்பு பாடல் வடிவிலும் இலக்கிய வடிவிலும் ஏறியுள்ளதால், தமிழ் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குகின்றது.

(தொல்காப்பியச் சொற்சுவைகள் என்னும் நூலிலிருந்து , தமிழண்ணல்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......