மலரும் தற்குறிப்பேற்ற அணியும்
கலை ஆக்கங்களுக்கு இயற்கை மூல ஊற்று . இயற்கையை அணுகாமல் எவ்விலக்கியங்களும் சிறப்பு பெறாது.படைப்பாக்கத்தில் இயல்பான வாழ்க்கை சித்திரங்களே உயிரோட்டம் தரவல்லன. இருப்பினும் சில இயற்கை நிகழ்வுகளின் மீது படைப்பாளர்கள் தங்களது கற்பனையை ஏற்றிப் பாடுவதும் உண்டு. அவ்வாறு படப்படுவது தற்குறிப்பேற்றம் என்று கூறுவார்கள். பொதுவாக தற்குறிப்பேற்றத்திற்கு மதுரையை நோக்கி கோவலனும் கண்ணகியும் செல்லும் போது மதுரை கோட்டையில் இருந்த கொடி காற்றில் அசைந்தாடிய இயற்கையான நிகழ்ச்சியைப் புலவர் தன் கற்பனைத் திறத்தால் கோவலன் கண்ணகியை இங்கு வராதீர் என்று தடுப்பது போல் இருந்து என்று புனைந்துரைக்கும் நிகழ்ச்சி எடுத்துக் கூறப்படும்.
சிலப்பதிகாரத்தில் மற்றுமொரு இடத்தில் கண்ணகிக்கு நேரவிருக்கும் பிரிவுத் துன்பத்தை முன்கூட்டியை உணர்ந்த அகழியில் மலர்ந்த கரிய நெடிய குவளை மலரும், ஆம்பல் மலரும் தாமரை மலரும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் பரிவுடன் இரங்கி நின்றனவாம். அதுவும் எப்படி எனக் காட்டுகின்றார் இளங்கோவடிகள் ; அவர்கட்கு இரங்கிய நிலையில் பண்களின் தன்மையோடு தம் பால் முரலுகின்ற வண்டுகளாகிய வாயினாலே அழுது ஏங்கி கண்ணீர் மல்கப் பெற்றுத் தத்தம் கால்களின் நிலைபெறமாட்டாவாய்ப் பெரிதும் நடுங்கி நின்றனவாம்.இதனை சிலப்பதிகாரத்தில்
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையல்மு கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்தனைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்க
எனக் காணப்படுகின்றது.மேலும் மலர்களைப் போர்த்திக் கொண்டு வரும் வையையாறாகிய மெல்லிய நங்கை கண்ணகியின் துன்பத்தை அறிந்து இரங்கி கண்ணீர் வடிப்பது போலவும் காட்சி தருகிறாளாம்.
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பண்மலர் விரிந்து
குருகும் தவளமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கனும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்
வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைப் கொண்டு பன்மல ரோங்கி
எதிர்ரெதிர் விளங்கிய கதிர்ள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறல் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற் குறுவது தான்றிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென.
கருத்துகள்