அடியார்க்கு நல்லார்

சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய சான்றோருள் ஒருவராவார். உரை சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் இவர் வரலாற்றினை ஒரளவு உய்த்துணரச் செய்கின்றன. இவர் நிரம்பர் என்னும் ஊரினர் என்பதையும், இவருக்கு நிரம்பையர் காவலன் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதையும், இவரை ஆதரித்து உரை செய்வித்தவர் பொப்பண்ண காங்கேயர் கோன் என்பதையும் அப்பாடல்களால் அறியலாம். இவ்வுரையாசிரியர் அடியாருக்கு நல்லான் என்றே அப்பாடல்களில் குறிப்படப்பட்டுள்ளார். நிரம்பையர் காவலர் என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் விசயமங்கலத்தின் அண்மையில் உள்ளதென்றும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் கூறுவர்.

திருஞான சம்பந்தர் தம் தேவாரப் பாடலில் சிவபெருமானை அடியார்க்கு நல்லார் என்னும் பெயரால் அழைக்கின்றார். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் சைவ சமயத்தை சார்ந்தவர் என்பது ஒரு சாரார் கருத்தாகும். உரையாசிரியர் சிவபெருமானை இறைவன் என்றே சுட்டுவதையும் துறவறம் யோகம் ஆகிய சொற்களின் உரைகளில் சைவச் சமயக் கருத்துக்களை விரித்துரைப்பதையும், பிறவா யாக்கைப் பெரியோன் என்னும் அடிக்கு என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன் என்று பொருள் கூறுவதையும் இக்கொள்கையர் தம் கருத்துக்குச் சான்றாகக் கொள்வர்.

அடியார்க்கு நல்லார் சமயச் சமயத்தைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அவர் குறிப்பிடும் மூன்று அதிசயம், மூன்று ஆகமம், எண்வகை கன்மங்கள், எண் குணங்கள், பஞ்ச நமசுகாரம் என்று சமணர்களால் வழங்கப்படும் பஞ்சமந்திரம் , பஞ்சபரமேட்டிகள் பற்றிய கருத்துகள் யாவும் அச் சமயத்தைச் சார்ந்தவை என்றும், அவற்றை உரையாசிரியர் விரிவாகவே சொல்லிச் செல்கிறார் என்றும் இக்கருத்துடையார் கூறுவர். மேலும், ஆதியில் தோற்றத்து அறிவினை வணங்கி என்னும் அடி இரையில் அருகதேவன் பலபடப் பாராட்டப்படுகின்றார் என்றும், பெருமகன் என்னும் சொல்லுக்கு அருகதேவன் என்று பொருள் கூறி, திருமொழியை அவன் அருளியச் செய்த ஆகமம் எனக் குறித்து இறைனூலிற் கூறிய விரதம் தப்பாமை என்பதால், இருகதேவனை இறைவன் என்றே கூறுகின்றர் என்றும் சுட்டித் தம் கருத்தை வலியுறுத்துவர்.மேலும் இதனாற் சொல்லியது நமது தரிசனத்துக கடியப்பட்டவற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க வென்றதாம் என்றும் இதனாற் சொல்லியது உயிர்க்கொலை புகாமற் பரிகரிக்க வென்பதாம் என்றும் உரையாசிரியர்கள் சமண சமயக் கொள்கைகளை உணர்ந்து எழுதுவதையும், மேற்கோள்காட்டச் சமணசமய நூல்களையே மிகுதியும் கையாளுகின்றார் என்பதையும் இக்கொள்கையர் தமக்குச் சான்றாக எடுத்துரைப்பர்.


அடியார்க்கு நல்லார் உரையில் இளம்பூரணாரும் அரும்பதவுரையாசிரி யரும் இடம்பெறுகின்றனர். இவ்விருவர்தம் காலமும் கி.பி.11 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்றபட்டது எனக் கருதப்படுகின்றது. மேலும், இவர் உரையில் கலிங்கத்துப் பரணி பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. இப் பரணிக்கொடண்ட குலோத்துங்கன் காலம் கி.பி. 1070- 1120க்கும் பிற்பட்டது என்று கொள்ள இடமுண்டு. இவருடைய வருணம் சமயம் காலம் ஆகிய இவற்றுள் ஒன்றும் புலப்படவில்லை ; ஆனாலும் நச்சினார்க்கினிய ரால் மறுக்கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள்கையாக இருத்தல் பற்றி, இவரது காலம் நச்சினார்க்கினியர் காலத்துக்கு முந்தியதாக இருக்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது என்பர் உ.வே. சாமிநாதையர். இவரது காலம் கி.பி 14 – ஆம் நூற்றாண்டு எனக் கொள்வாரும்
உண்டு.

நன்றி வாழ்வியற்களஞ்சியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்