சிலேடை நயம்..

பண்டைய புலவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அதிக சிலேடை நயம் ததும்ப பேசிக்கொள்ளுவது உண்டு .அதனைக் கேட்போருக்கு முதலில் புரியவில்லை என்றாலும் ,அதன் பொருள் தெரிந்த பின்பு அப்பொருளினைச் சுவைத்து மகிழ்வர்.

ஒருமுறை யாழ்பாணத்துப் புலவரும் உரைநடையின் தந்தை என்று சிறப்பிக்கப்படுபவருமான ஆறுமுக நாவலர் அவர்கள் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை(உ.வே.சா வின் ஆசிரியர்)
அவர்களை மதுரையில் சந்தித்தார்.அப்போது இருவரும் அளாவி மகிழ்ந்தனர்.மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணக்கருடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர்.அது பனிக்காலம்.பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையை நோக்கி ஐயா பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.

உடனே பிள்ளை அவர்கள் ஆம் என்று கூறாமல்.நான் பனிக் காலம் நல்லது என்பேன் என்றார்.
மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற பிள்ளை அவர்களோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறார்களே ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்க பிள்ளை அவர்க்ள நான் ஆறுமுக நாவலர் அவர்கள் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார்.
பனிக்கு ஆலம் மிகவும் நல்லது என்றேன் நான்.ஆலம் என்றால் விடம் தானே!இப்பனிக் கொடுமைக்கு விடம் நல்லது என்பது தானே என் உரை என்றார்.


ஒரு எளிய உரையாடலுக்குள் இத்தனைப் பொருள் பொதிந்துள்ளதா என்று மாணவர்கள் வியந்தார்களாம்.பாருங்கள் நம் புலவர்களின் சிலேடைத் திறமையை எண்ணி எண்ணி வியக்கும் படி உள்ளதல்லவா.

கருத்துகள்

பழமைபேசி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த இடத்தில், விடம் என்றால் சுக்கு நீர்! பனிக்கொடுமைக்கு விடம் நல்லது, இதமாக இருக்கும் என்றாகிறது....

பகிர்வுக்கு நன்றிங்க!
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழின் வளம் வியப்பிற்குரியது. அருமையான விளக்கம். நன்றி
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
பகிர்வுக்கு நன்றி
தீபாவளி வாழ்த்துகள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த இடத்தில், விடம் என்றால் சுக்கு நீர்! பனிக்கொடுமைக்கு விடம் நல்லது, இதமாக இருக்கும் என்றாகிறது....//



வாங்க பழமை வணக்கம்.

விடம் என்பதற்கு அகராதி அதிரைவிடம்,எத்து,காய்ச்சுப்பு,தாமரைநூல்,தேள்,நஞ்சுநீர்,பரஸ்திரீ,கமனம்,பாஷாணம்,மலை,சுக்கின் தோல்,வச்சநாபி,நீர்,தூர்த்தத் தன்மை,மரக்கொம்பு,விடலவணம்,கேடுவிளைவிப்பது என்று பொருள் கூறுகின்றது.இதில் சுக்கின் தோல் என்று விடத்திற்குப் பொருள் கூறுவதால்,பொதுவாக இஞ்சி,இஞ்சி காய்ந்த சுக்கின் தோலினை உணவில் சேர்க்க வேண்டும் என்றால்,தோலினை நீக்கிவிட்டு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பர்.அந்த நிலையில் சுக்கு நீர் என்று பொருள் வராது.விடம் என்பதற்கு நஞ்சு என்று பொறுள் கொள்வதே பொருத்தமாக அமையும்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன் தீபாவளி கொண்டாடுவது இல்லை..
நமக்கு பொங்கல் தான்.
அன்புடன் நான் இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவரே நீங்க சொல்வதும் சரித்தான்...

ஆனால் "ஆலம் என்றால் பனி" என்று சொல்ல கேட்டிருக்கிறேன்...அதனால்தான் ஆலங்கட்டி மழை என்றும்.குற்றாலம் என்றும் குறிப்பிடுவதாக கேள்விப்பட்டேன், இது சரியா?
நர்சிம் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆலம் என்பதற்குப் பல பொருள் உள்ளது.அம்பு கூடி,ஈயம்,ஒருமரம்,கலப்பை,நஞ்சு,நீர்,பாம்பின் நஞ்சு,புன்கு,மலர்ந்தபூ,மழு,மழை,மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர்,மாவிலக்கு,கருப்பு நிறம்,ஆலமரம் .இந்த இடத்தில் ஆலம் என்றால் நஞ்சு என்றே பொருள்.இடம் நோக்கிப் பொருள் கொள்ள வேண்டும்.
நீர்கட்டி அதாவது ஆலம் மழைஎன்று கூறுவதில்லை ஆலங்கட்டி மழை என்று தானே கூறுகின்றோம்.ஆலம் கட்டி என்றால் நீர்கட்டி நீர் கட்டியானால் பனிதானே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்