காவேரி........



தஞ்சை பகுதியில் பிறந்து காவேரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவள் என்றாலும் காவேரியின் அழகை,அதன் வனப்பை ரசித்ததில்லை.அண்மையில் திருவையாறு செல்லவேண்டியிருந்து,சிதம்பரத்தில் இருந்து சென்றதால்,பாபநாசம் கணபதி அக்ரகாரம்,கபிஸ்தலம் வழியாக மகிழ்வுந்தில் சென்றோம்.அப்பகுதியை அதுவரை நான் பார்த்தில்லை.காவேரி கரையின் ஓரேமாகவே செல்லும் அந்த சாலையின் இருமருங்கும் வேலி வைத்துப் போல தென்னை, ஒரு பக்கம் காவேரி மறுபக்கம் பச்சைக் கம்பளத்தை விரித்துப் போன்று பசுமை செழித்து கொழுத்திருந்தது.பார்க்க பார்க்க பரவசமாய் இருந்து.இத்தனை நாள் இப்பகுதிக்கு வரவில்லையே என்று ஏக்கமாகவும், வருத்தமாகவும் இருந்து.அப்பகுதியைப் பார்த்தில் இருந்து காவேரி செல்லும் பகுதிக்கெல்லாம் காவேரி கரையின் ஓரேமாகவே சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் எழுந்தது.

காவேரியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிய போது,சைவசித்தாந்து காவேரி வளம் என்னும் நூலினையும் தி.ஜானகிராமனும் சிட்டி அவர்களும் இணைந்து நடந்தாய் வாழி காவேரி என்னும் நூலினையும் எழுதியுள்ளதை அறிந்தேன்.சைவசித்தாந்ததில் கேட்டபொழுது அந்நூல் இல்லை என்று கூறினார்கள். நூலகத்தில் தேடிபார்த்தேன் கிடைக்கவில்லை.திருச்சி அள்ளுரில் தவச்சாலை அமைத்திருக்கும் செந்தமிழ் அந்தணர் புலவர் இளங்குமரன் ஐயா அவர்கள் தன்னிடம் சைவசித்தாந்தம் வெளியிட்ட நூல் இருப்பதாகக் கூறினார்கள். நடந்தாய் வாழி காவேரி இல்லை என்றார்கள்.திருச்சிக்குச் செல்லும் போது அவர்களிடம் நூலினைப் பெற்று படிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

சென்ற வாரம் தஞ்சை சென்றிருந்தேன் ,அப்பொழுது தஞ்சையில் உள்ள அகரம் புத்தகம் நிலையம் சென்றேன்.அங்கு நடந்தாய் வாழி காவேரி நூலினை மறுபதிப்பாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுருந்தைக் கண்டு,மகிழ்ந்து வாங்கினேன். வாங்கிகொண்டு சிதம்பரம் வந்த பிறகு அந்நூலினை ஒரே நாளில் படித்து முடித்தேன்.

நான் எதிர்பார்த்த செய்திகள் மிகுதியாக இல்லை என்றாலும் ஒரளவு காவேரியினைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்து.காவேரிக்கு புகழ்மாலையினை மட்டும் சூட்டுவதை விடுத்து ,அக்கரையோரம் வாழும் மக்களின் பண்பாட்டுக்கூறுகளை இன்னும் பதிவு செய்திருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்த்து.

அந்நூலில் பல நல்ல விடயங்களும் உண்டு.அவர்களுக்கு ஆந்திராவில் உதவிய சிறுவனின் அன்பு,திருச்சி அருகே அனாதை ஆசிரமம் வைத்து நடத்தி,நன்கொடை வாங்காத பண்பு அவர்களின் கவனிப்பு இப்படி பல கூறலாம்.

அந்நாலின் இறுதியில் காவேரி எங்கு தொடங்கி ,தன் கிளைகளை எங்கெல்லாம் அனுப்புகிறாள் ,அவள் இறுதியில் எங்கு கலக்கிறாள் என்ற செய்தியினைக் கூறக்கூடிய நாட்டுபுற பாடல் ஒன்றினைப் பதிவுசெய்துள்ளார்கள்.

அம்புயன் மால் தேடறிய திருவை
யாற்றில் நிதம் அறம் வளர்த்தாள்
அம்பிகைதான் அருளாலே பெருக்கம்
அணிந்துவரும் காவேரி

அம்பரம் தொடுசைய மலையில் நிலைபெற்று
அகத்திய மாஹாமுனி கடத்தினில் உதித்து
அண்டர்புக ழும்பிரம்ம குண்டமதில் வந்து
அறியொணாப் பாதாள நெறியில் அலைந்து
திண்புவியி லேராம நாதபுரம் கூடி
திருவேண்டிச் சென்றுருந் திரர் அடியைநாடி
ஸ்ரீரங்கப் பட்டிணத் திருபால் நிகழ்ந்து
ஸ்ரீகண்ட நரசிங்க புரமதில் இணைந்து
வம்புபெரு கும் யானைக் குந்திமலை துன்னி
மாதேவ புரம்சிவ சமுத்திரம் மன்னி
மாநிலத் துயரும் பவானியை அடித்து
வாஞ்சை யுடனீரோடொ டூஞ்சலூர் உற்று
முன்புகொடு முடிவந்து நெருவூ ரருகில் சார்ந்து
மோதிவரு கின்ற அமராவதியைத் தேக்கி

முக்கூடல் மாயனூர் அயிலூரைத் தாக்கி
செம்பொன் வளரும் கிருஷ்ணராஜபுர மண்டி
திருவேங்கி மலை கடம்பர் கோவில் தாண்டி
சிறுகுமணி முசிரி பாலத் துறையில் வாய்த்து
செய்யகுண சேகரமந்த தண நல்லூர் பார்த்து

பண்புபெருகும் திருச் செந்துறை மருங்கி
பார்புகழும் திருவாசி மாதலம் நெருங்கி
பரவுமிசை திருவரங்கம் கேசரை வணங்கி
பகரும் உறையூர் திரிசிபுரம் இணங்கி

அன்புபெருகும் கஜாரண்யம் மதித்து
அகிலாண்டவல்லி நாயகனடி துதித்து
அருகுறும் தோகூர் கல்லணையிற் பொருந்தி
அன்னமுதவும் கோயிலடியிற் றிருந்தி

தென்புடனே ஐராவ தேச்வரம் மேவி
திருக்காட்டுப் பள்ளி சாத்துப் பிள்ளையார் கோவில்
செம்புமக ராஜபுரம் கடு வெளியிற் சென்று
தேசமகிழும் திருநெய்த்தான் மதில் நின்று

அன்புடன் திருவை யாற்றப்பனைக் கண்டு
அறம்வளர்த்தாள் உத்தரவு பெற்றுக் கொண்டு
அரியகணபதி அக்ரஹார மதில் ஊக்கி
ஆடுதுறை நோக்கிக் கபிஸ்தலம் விளக்கி

தன் பெருகுமர விந்தபுர மேவி தியாக
சமுத்ர முனையாள்புரம் நெருங்கி நலமாக
சாமிமலை முருகனை யிறைஞ்சியுள் மகிழ்ந்து
தரணி புகழ் திருவலஞ்ஞுழியிற் புகுந்து

கும்பகோணம் கஞ்சனூர் திரிபுவனமும்
கூடியிடை மருதூரில் வாசஞ்செய் தினமும்
குலவுமக ராஜபுரம் திருக்கொடி காவல்
குத்தாலம் மல்லியம் கொரநாடி தாவிச்

சம்பூரணமாக மாயூரத்தில் நண்ணி
ஜகதீசனைப் பணிந்து தியானம் பண்ணி
தனபேர் விளங்கும் நகரத்தில் மகிழ்ந்துள்ளம்
சங்கமும் வந்து கடல் கூடியது வெள்ளம்

ஏலேலோ

கருத்துகள்

தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ..! நூல் அறிமுகத்திற்கு நன்றி..!
ஆயில்யன் இவ்வாறு கூறியுள்ளார்…
//சிதம்பரத்தில் இருந்து சென்றதால்,பாபநாசம் கணபதி அக்ரகாரம்,கபிஸ்தலம் வழியாக மகிழ்வுந்தில் சென்றோம்.அப்பகுதியை அதுவரை நான் பார்த்தில்லை.காவேரி கரையின் ஓரேமாகவே செல்லும் அந்த சாலையின் இருமருங்கும் வேலி வைத்துப் போல தென்னை, ஒரு பக்கம் காவேரி மறுபக்கம் பச்சைக் கம்பளத்தை விரித்துப் போன்று பசுமை செழித்து கொழுத்திருந்தது//

அந்த சாலையில் (அகலமான சாலையாக இல்லாவிட்டாலும் கூட) மிக அழகான வயல்வெளிக்காட்சிகள் மாந்தோப்புகள் பூந்தோட்டங்கள் கடந்து செல்வது மனதுக்கு மிகவும் பிடித்த விசயம் ! விடுமுறைகளில் கண்டிப்பாய் மயிலாடுதுறை - திருவையாறு சாலை பயணம் இருசக்கரவாகனத்தில் தவற விடுவதேயில்லை :)

காவிரி பொங்கிச்செல்லும் காலங்களில் - பார்க்க, ரசிக்க கொடுப்பினை வேண்டும் :)
ஆயில்யன் இவ்வாறு கூறியுள்ளார்…
//குத்தாலம் மல்லியம் கொரநாடி தாவிச்

சம்பூரணமாக மாயூரத்தில் நண்ணி
ஜகதீசனைப் பணிந்து தியானம் பண்ணி
தனபேர் விளங்கும் நகரத்தில் மகிழ்ந்துள்ளம்//

எங்க ஊரேய்ய்ய் :))
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
nalla pakirvu
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான் ஆயில்யன் அதனை இப்பொழுது தான் உணர்ந்தேன் மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டும் இடம்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....
உங்கள் ஊர் பற்றி கூறியவுடன் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி....எழுத்தில் தெரிகிறது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி சேகரன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்