ஏறுதழுவுதல்........


சங்க மக்களின் வீரவாழ்வினை எறுதழுவுதலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.வீரம் செறிந்து,கட்டுப்பாடின்றி திரியும் இளம் வயதுடைய,வலிமையான காளையினை அடக்குவதே ஏறுதழுவுதல் எனப்படும் .இப்பொழுது வழக்கத்தில் கூறுகின்றோமே சல்லிக்கட்டு அதுதான் ஏறுதழுவுதல் எனப்படும்.வீறுமிக்க காளையினை அடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை 'ஏறுகோடல்' என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.காளையாகிய ஏற்றினை அடக்க முற்றபடுங்கால் ஏற்படும் துன்பங்களைப் பொருட்படுத்தாது,காளையின் மீது பாய்ந்து தன் வலிமையால் அடக்குவதாதலின்,இடர் மிகுந்த அச்செயல் அவ்வீரனுக்கு அவனது வீரத்தைப் புலப்படுத்தும் செயலாக அமைவதனால் அதனைத் தழுவல் என்னும் சொல்லொடு சேர்த்து ஏறுதழுவுதல் என்று பழந்தமிழர் கூறினர்.இது பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

சங்க இலக்கியங்களைப் பார்க்கும் போது ஏறு தழுவுதலில் முல்லை நிலத்து வாழ்ந்த ஆயர் மரபில் வந்த இளைஞர்கள் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளமையைக் காணலாம்.இலக்கண நூல்களும் முல்லை நில மக்களின் தொழில்களுல் ஒன்றாக ஏறுதழுவுதலைக் குறிப்பிட்டுள்ளன.

முல்லை நில ஆயர் மக்கள் தம் குடிப்பெண் பருவம் எய்திய போது,தம்மிடமுள்ள ஒர் காளைக் கன்றினை அவள் பொருட்டு ஊட்டசத்தான உணவுகளைக் கொடுத்து வளர்ப்பார்கள்.பெண் திருமண வயது வரவும் காளைப் பருவம் எய்திய நிலையிலும் ,அக்காளையை அடக்கும் வீரனுக்கே ஆயர் மகள் மணம் செய்விக்கப்பெறுவாள்.பொதுவாக காளையை அடக்குபவனை ஆயர் குலபெண்கள் மணப்பவர்கள் என்றாலும் ,சங்க இலக்கியத்தினை நோக்கும் போது காதல் கொண்ட ஆண்மகன் பெரும்பாலும் காளையினை அடக்க முன்வருவதும்,அந்த பெண் எப்படியாவது தன் காதலன் வெற்றிபெற வேண்டுமென வேண்டுவதையும் காணலாம்.

ஏறுதழுவுதலில் ஏற்றபடும் துன்பங்களுக்கு அஞ்சிப் பின்வாங்கும் இளைஞர்களைக் காதலித்தவள் கூட ஏற்க மறுப்பாள் என்பதனை ' கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என வரும் இலக்கியப் பகுதியின் மூலம் அறியலாம்.

எட்டுத் தொகை நூல்களுல் கலித்தொக்யிலுள்ள முல்லைக்கலியில் மட்டுமே ஏறு தழுவுதல் தொடர்பான குறிப்புகள் காணப்பெறுகின்றன. அப்பகுதியில் இடம்பெறும் 17 கலிபாடல்களுள் 7 பாடல்களில் ஏறுதழுவுதல் செய்தி இடம்பெற்றுள்ளன.இப்பாடல்களின் வழி ஏறு தழுவுதல் ஓர் ஊர்விழாவினைப் போன்று நடைபெறுவதைக் காணமுடிகின்றது.காரி,வெள்ளை முதலிய பல நிறங்களில் அமைந்த ஏறுகள் கொம்புகள் சீவப்பெற்று ஏறு தழுவுவதற்குரிய களத்திற்குச் செலுத்தப்பெறுகின்றன.அவை அக்களத்தினுள் புகுவது மேகங்கள் ஒருங்கே திண்டு காணப்பெறுவது போல இருக்கின்றன.

உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிய புரிய புகுந்தனர் தொழூவு..(கலி,104-16,17)

தலைவியர் ,தோழியர் முதலியோர் தங்கள் காளைகளை அடக்க முற்றபடுவோரின் வீரச்செயல்களைத் தனி இடங்களில் இருந்து காணுகின்றனர்.

ஏறு தழுவுதலைத் தொடங்கும் முன் பறைகளை அடித்து முழங்கிப் பேரொலி எழுப்புகின்றனர்.வீரர்கள் காளைகளை அடக்க முற்படுகின்றனர்.சில காளைகள் தம்மை தழுவ முற்படும் வீரர்களைத் தம் கொம்புகளால் குத்திக் குடல் வெளியே வரும்படி செய்து விடுகின்றன.இக்காட்சியினைத் தலைவிக்குத் தோழி காட்டுகின்றாள்.

நோக்கஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் கோட்டிடைக் கொண்டு
குலைப்பதன் தோற்றம் காண்.

காளைக்கும் வீரர்களுக்கும் நடந்த ஏறுதழுவல் முடிவுற்ற களக்காட்சி
எழுந்தது துகள்
ஏற்றது மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர்
என்று அழகுற வருணிக்கப்பெற்றுள்ளது

ஏறு தழுவல் முடிந்த பின்னர்ப் பெணகளும் ஆண்களும் குரவைக் கூத்தாடுகின்றனர்.அப்பொழுது பாடப்பெறும் பாடல்களில் ஏறு தழுவி வென்றோரை ஆயமகள் மணப்பதும்,ஏறு தழுவ மறுப்பவன் காதலனாக இருந்தாலும் அவனை மறுப்பதும் முதலிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தலைவியல் காதலிக்கப்பெற்ற வீரன் ஏறு தழுவி வெற்றிப்பெற்று,காதலித்தவளைக் கைப்பிடிக்கின்றான்.அவ்வாறு ஏறுதழுவிய வீரனை மணந்த ஆயமகள் நெய்,மோர் விற்கச்செல்லும் போது,இவள் கணவன் ஏறு தழுவி வென்றவன் என்று மற்றவர்கள் கூறக்கேட்டதை எண்ணி மகிழ்ந்து,அப்புகழுரையே தாம் பெற்ற செல்வங்களில் மிகப்பெரிது எனப் போற்றுகின்றாள்.

சங்க இலக்கியத்தில் முல்லை நில மக்கள் மட்டும் கொண்டிருந்த ஏறு தழுவல் பிற்காலத்தில் எல்லா நில மக்களுக்கும் உரியது என்னும் மாறியது.
இப்பொழுது காதலுக்காக இல்லாமல் விர விளையாட்டாக மட்டும் சில இடங்களில் ஏறுதழுவல் என்னும் சொல்லாட்சி மறைந்து மஞ்சி விரட்டு,சல்லி கட்டு,மாடுபிடி என்று சொற்களில் பொங்கல் பண்டிகையின் மாட்டுப் பொங்கலன்று பொதுவாக விழாவாக நடைபெறுகின்றது.

ஏறு தழுவல் இங்கு நடைபெறுவது போலவே ஸ்பெயின் நாட்டிலும் நடைபெறுவது குறிப்படத்தக்கது.

கருத்துகள்

ரங்குடு இவ்வாறு கூறியுள்ளார்…
சங்க கால ஏறு தழுவுதலுக்கும், தற்கால ஏறு தழுவுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

அந்தக் காலத்தில் ஒரு பெ ண்ணை மணக்க விரும்புபவன் அவள் வளர்த்து வரும் காளையை அடக்கித் தன் வீரத்தைக் காண்பித்தான். அவள் மீது விருப்பம் இல்லாதவன் அந் தக் காளையை அடக்க முயன்ற தில்லை.

மேலும், ஒரு பெண்ணை 10 ஆண்கள் விரும்பினாலும் எல்லோரும் திமு திமு வென்று ஒரே மாட்டை விரட்டிச் சென்றதில்லை.

ஸ்பெயின் நாட்டில் இன்றும் ஒரு காளையை ஒரு வீரன் தான் ஒரு சமயத்தில் எதிர் கொள்கிறான்.

தற்போது மஞ் ஜு விரட்டு என்று 20 , 25 பேர் ஒரு காளையை விரட்டுவது கேலிக் கூத்தாகும். அதை நடத்த நமது தலைவர்கள் அ னுமதி வாங்குவது அவர்களின் அறியாமையை க் காட்டுவதாகும்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்குடு அவர்களே.கால மாற்றத்திற்கு ஏற்ப சில மாறிகொண்டு தான் இருக்கின்றன.
முன்பு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுவதற்கான நடைபெற்ற ஏறுதழுவல் இப்பொழுது பொழுது போக்காகிவிட்டது....
நீங்கள் கூறுவது போல் இதனை வரையறை படுத்தலாம்.

ஸ்பெயின் நாட்டில் காளையை அடக்கியவுடன் அந்த காளையைக் கொன்று விடுகின்றார்கள்.ஆனால் இங்கு அப்படி யில்லை.....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்பெயின் நாட்டில், காளையை அணு அணுவாக கொல்வர்.. அதுக்கும் இங்கு நடக்கும் ஏறு தழுவலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
senthil இவ்வாறு கூறியுள்ளார்…
Hi.. is it possible for you to write an english version of the same..

pls read the below article about the same..

http://vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=3232

and this blog on reality check..
http://realitycheck.wordpress.com/2014/05/22/the-jallikattu-ban-is-a-tragedy-and-must-be-reviewed

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......