குறளின்பம்..........

காமத்துப் பாலில் ஒரு குறள்

துனியும் புலவியும் இல்லாயின் காமங்
கனியுங் கருக்காயும் அற்று.(1306)


இக்குறளுக்குப் பரிமேலழகர் முதிர்ந்த காலமாகிய துனியும் இளைய கலமாகிய புலவியும் இல்லையாயின்,காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.
அதாவது மிக முதிருந்த இறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமையாது ஆதலின்,துனியில்லை யாயின் கனியற்று என்றும் கட்டிளமைத்தாய காய் நுகருச் செவ்வித்து அன்றாகலின் புலவி இல்லை யாயின் கருக்காயற்று என்றும் கூறினான்.இவ்விரண்டும் வேண்டும் என்று கூறியவாறு என்று பொருள் கூறுகின்றார்.
இக்குறளுக்கு பரிபெருமாள் இது தலைமகள் புலவி நீட்டித்தவழி துனி இல்லையாயின் பழம் போலும் இனிமை தரும்;புலவி இல்லையாயின் காய் போல துவர்க்கும் ஆதலால்,இஃது உணர்தற்கு நல்லளவு என்று கூறியது என்று விளக்கம் தருவர்.

பரிதியார் துனியும் புலவியும் இல்லாத காமம் பழத்தைப் போன்று காயைத் தின்றதற்கு ஒக்கும் என்று உரைகாணுகிறார்.

பழைய உரையாசிரியர் ஒருவர் துனியும் புலவியும் உண்டாயின் காமம் கனி போல சுவைக்கும்.துனியும் புலவியும் இல்லையாயின் காமம் இளங்காய் போலச் சுவை இல்லாமை பெறும் என்றும்,
புத்துரை ஆசிரியர் இரா.சாரங்கபாணி முதிர்ந்த பூசலாகிய துனியும் அளவாகிய புலவியும்
இல்லாவிட்டால் காமமானது முறையே கனியும் இளங்காயும் போன்றிருக்கும்.துனி இல்லாதாயின் காமம் கனிபோல இனிக்கும்.புலவி இல்லாதாயின் காமம் காய் போலத் துவர்க்கும்.ஆகவே,துனி கூடாது,புலவி வேண்டும் என்பது கருத்து என்று பொருள்காணுகின்றனர்.

குறளில் புலவி,ஊடல்,துனி என்னும் மூன்று சொல்லாட்சிகள் காணப்பெறுகின்றன.இச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் சிறு வேறுபாடு உண்டு.

உழவு அதிகாரத்தில் நிலத்தைப் பற்றி கூறும் வள்ளுவர்,

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் (1039)


(நிலத்துக்குரியவன் நாள்தோறும் சென்று பார்த்து உரியதைச் செய்யாமல் சோம்பி இருந்தால்,நிலமகள் அவன் மனைவியைப் போல வெறுத்துப் பின் பிணங்குவாள்)

என்று கூறுவதில் இருந்து புலத்தல் என்பதற்கும் ஊடல் என்பதற்கும் சிறு வேறுபாடு உண்டு என்பதை அறியலாம்.

(இல்லறத்தில் இணையருக்கு இடையே ஏற்படும் சிறுசிறு கோபங்களில்-
புலத்தல் முதல் நிலையையும்,ஊடல் அடுத்த நிலையையும் குறிக்கும்.

புலத்தலின் அடுத்த நிலை ஊடல் ,ஊடலின் அடுத்த நிலை தான் துனி.
வாழ்க்கையில் புலத்தலும் ஊடலும் தேவை ஆனால் துனி இருக்க கூடாது.துனி சிலர் வாழ்க்கையில் ஏற்படுவதால்தான் விவாகரத்து வரை செல்கின்றது.
வள்ளுவர் ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்பர் ஆகையால் வாழ்க்கை துணையர்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் ஊடல் வரை செல்லலாம் ஆனால் துனியாக மாற கூடாது.)

இவற்றை நோக்கும் போது பரிமேலழகர் போன்ற உரையாசிருயர்கள் முதிர்ந்த காலமாகிய துனியும் இளை காலமாகிய புலவியும் இல்லாயாயின் என்று பெருள் கொள்ளுகின்றனர் .இங்கு கருக்காய் என்பதற்கு இளைய துவர்க்கும் நிலையில் இருக்கும் காய் என்று கொள்கின்றனர்.
புத்துரையாசிரியர் இரா .சாரங்கபாணி கூறம் விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது.
துனி இல்லாயின் வாழ்க்கை கனி போல இருக்கும் .புலவி இல்லாயின் கருக்காய் போல இருக்கும் என்னும் விளக்கம் இக்குறளுக்குப் பொருத்தமாகவுள்ளது.
அதாவது துனி இல்லையாயின் காமத்தில் கனி அற்று ,புலவி இல்லாயின் காமத்தில் கருக்காய் அற்று என்பதாகும்.

('கருக்காய்' என்பதற்கு இப்பொழு கூறுகிறோமே நெல்லில் உள்ளீடு இல்லாமல் இருக்கும் பயன்றற நெல்லை அதனைக் கூட கூறலாம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்