கலித்தொகை – பதிப்புகள்



வாய்மொழியாக செவிவழிப் பகரப்பட்டுப் பின்னர் கல்வெட்டுக்களிலும் சுவடிகளிலும், செப்பேடுகளிலும் பதிவு செய்யப்பெற்ற,நம்முடைய பழைமையான ,நூல்கள்,பிரதிகள், கருத்துருக்கள், மேலை நாட்டவரின் வருகைக்குப் பிறகே அச்சில் வலம் வரத்துவங்கின. அச்சுக்கலை, காலனிய ஆட்சிக் காலத்தில்,கிறித்துவ மதப் பாதிரியார்களால் தொடங்கப்பட்டது என்றாலும்,சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. அச்சுக்கலை 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றப்பொழுதும், 19 ஆம் நூற்றாண்டில் தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டு 20 –ஆம் நூற்றாண்டில் செழித்து, படர்ந்து, வளர்ந்து, பல்வேறு புதுமைகளையும் தொழில் நுட்பங்களையும் கொண்டு இலங்குகின்றது.

அச்சுக் கலையின் வரவினால் தமிழ் பதிப்புலகம் ஓலைச்சுவடியில் இருந்த நூல்களைச் செப்பம் செய்து பதிப்பித்தல். புதிதாக நூல்கள் எழுதப்பட்டுப் பதிப்பித்தல் என இரு தளங்களில் செயல்படத் தொடங்கின.அச்சுப்பதிப்பு இருதளங்களில் இயங்கிய போதும் நம்முடைய பழைமையான இலக்கியங்களைப் பதிப்பிப்பதில் சிலர் தான் ஆர்வம் காட்டினர். அவர்களுள் உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ஆறுமுகநாவலர் போற்றோரைக் குறிப்பிடலாம். இவர்களால் பதிப்பிக்கப்பெற்ற பமையான இலக்கியங்களுள் கலித்தொகை காலம் தோறும் எத்தனைப் பதிப்புகளைக் கண்டுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கலித்தொகை பதிப்பினை நோக்கும் போது மூலம் மட்டும் பதிப்பித்தல்,மூலத்தோடு பழைய உரையினைப் பதிப்பித்தல், மூலத்தோடு பழைய உரைக்கு விளக்கம் கூறி,பாடவேறுபாட்டினை ஆய்ந்து பதிப்பித்தல், புத்துரைக் கண்டு மூலத்தோடு பதிப்பித்தல் என்னும் வகையில் பதிப்பித்திருப்பதைக் காணலாம்.


பதிப்புலகில் தமக்கெனத் தனிமுத்திரை பதித்த ஆறுமுக நாவலர் அவர்கள் 1860 இல் திருக்கோவையார் என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டப்போது,அந்நூலின் இறுதியில் மேலும் தாம் வெளியிடப்போகும் நூலின் பட்டியலைத் தருகின்றார்.அவற்றுள் கலித்தொகையையும் குறிப்பிடுகின்றார் .ஆனால் அவர் அந்நூலைப் பதிப்பிக்கவே இல்லை.
மூலத்தோடு பழையுரையினைப் பதிப்பித்தல்1887 ஆம் ஆண்டு அறிஞர் சி.வை.தாமோதரன் அவர்கள் நச்சினார்க்கினியர் உரையுடன்,கலித்தொகையை அச்சுப்பதிப்பில் வெளியிட்டார். இதுவே நமக்குக் கிடைத்துள்ள அச்சு முதற்பதிப்பாகும்.


இவர் கலித்தொகையைப் பதிப்பிப்பதற்கு, யாழ்பாணத்து வி.கனகசபைப் பிள்ளை,திருமண கேசவ சுப்பராய முதலியார்,மயிலை இராமலிங்க பிள்ளை, புதுவை நயனப்ப முதலியார்,ஆறுமுக நாவலர்,திருவாடுதுறை ஆதினம்,புதுச்சேரி நெல்லித்தோப்பு சொக்கலிங்கம் பிள்ளை பேர்த்தி, தஞ்ஞை சரஸ்வதி மகால், திண்டிவனம்,சென்னை பிராசிய கிரந்த மண்டபம் ஆகிய இடங்களில் சுவடிகளைப் பெற்று ,அவற்றை ஆய்ந்து பாடபேதங்களைக் களைந்து நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார்.


இப் பதிப்பின் பதிப்புரை முப்பத்து நான்கு பக்கங்களைக் கொண்டது . அவ்வுரையில் பிற பதிப்பாளர்கள் என்ன நோக்கத்திற்காக பதிப்பிக்கின்றார்கள் என்பதையும் தாம் என்ன நோக்கத்திற்காக பதிப்பிகிறார் என்பதனையும் குறிப்பிடுகின்றார்.

இலக்காலத்தில் புத்தகங்களைத் தேடிப் பரிசோதித்து அச்சியற்றும் வித்துவான்களோ தமக்குப் பொருள் வரவையே கருதி விரைவில் விலைபோகும் விநோத நூல்களையும் பள்ளிக்கூடங்களுக்கு உபயோகமான பாடப்புத்தகங்களையும் சர்வகலாசாலையாரால் பற்பல பரீக்ஷைகளுக்கு ஏற்றபடுத்தப்பட்ட போதனா பாகங்களையுமே அச்சிடுகின்றனர்.சரஸ்வதியின் திருநடனம் சொலிக்கப் பெற்றனவாகிய சங்கம் மரீஇய நூல்கள் சிதைந்தழியவும் அவைகளில் அவர்களுக்குச் சற்றேனும் திருட்டி சென்றிலது.இதனைக் கண்டு சகிக்கலாற்றாது மனநொந்து அழிந்து போகும் சுவடிகளை இயன்ற மட்டும் தேடி அவற்றுள் தமிழ் பேரிலக்கிய மாகியங்களைப் பதிப்பித்ததாகவும்,சுவடிகள் எல்லாம் பிரித்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு உடைந்து இருந்ததாகவும் ,அவற்றை செப்பம் செய்து பதிப்பித்தாக் கூறுகின்றார்.


இவர் பதிப்புரையில் கணப்பெறும் செய்திகளைக் காணும்போது ,பலர் பழைய நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம்கொள்ளாமல் இருந்த நிலையையும்,பொருளை நோக்கமாகக் கொண்டு வருவாய்க்குரிய நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தையும் அறியலாம்.அதனோடு ஒரு நூலைப் பதிப்பிக்கும் போது அதனைத் தெளிவாகவும் சிறப்பாகவும் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் அவரிடத்து இருந்ததையும் அறியமுடிகின்றது.


பழைய உரைக்கு - விளக்க உரையுடன் பதிப்பித்தல்

சி.வை.தாமோதரன் கலித்தொகையைப் பதிப்பித்தப் பிறகு ,1924 இல் இ.வை அனந்தராமையர் நச்சினார்கினியர் உரையுடன்,சில விளக்க உரையுடனும் ,பாடவேறுபாடுகளைச் சுட்டியும் ஒரு பதிப்பினை வெளியிடுகின்றார். பதிப்புரையில் , இப்பதிப்பு வெளிவருவதற்கான காரணத்தை எடுத்துரைக்கின்றார்.
கலித்தொகைப் பதிப்பு நச்சினார்க்கினியர் உரையுடன் 1887 –ஆம் ஆண்டிலே அறிஞர் சி.வை.தாமோதரன் பிள்ளையால் வெளியிடப்பெற்றிருந்தும்.இப்புதிய பதிப்பு வேண்டி தென்னை? என்னும் எண்ணம் பலருக்கும் உண்டாதல் இயல்பு.ஆனால் புதிய புதிய செப்பங்களும், திருத்தங்களும் கிடைக்கும் போது புதுப்புது பதிப்பு வெளிபடுதல் இன்றியமை யாததே என்பதை அறிஞர் எவரும் ஏற்றுக்கொள்ளவர். இல்லையேல் அத் திருத்தங்கள் வாளா ஒழிந்துவிடும் அன்றோ!


ஸ்ரீமான் சி.வை.தாமோதரன்பிள்ளை அவர்கள் பதிப்பித்த கலித்தொகையை ஊன்றி படிக்கும் காலத்தில் பலவிடத்து மூலமும் உரையும் செய்திகளும் பொருந்தாமை கண்டு பல்வேறு வழிகளில் மிக முயன்று அவற்றின் உண்மைகளை அறிந்து அமைத்துக் கொண்டேன். அவற்றுட் சிற்சில பிரஹ்மஸ்ரீ மஹா மஹாபாத்தியாயர் உ.வே. சாமிநாதையரவர்களுடன் நான் வேறு நூலாராய்ச்சி செய்யுங் காலத்தில் அவர்களிடம் சொல்லும் படி நேர்ந்தன.அவற்றைக் கேட்ட பொழுது அவர்கள் இவ்வரிய விஷயங்களை விளங்கும்படி குறிப்புக்கள் எழுதி நீங்கள் இந்நூலைப் பதிப்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் படி கலித்தொகையினை மூன்று பகுதிகளாக பதிப்பித்துள்ளார்.


1924 –ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் பாலை, குறிஞ்சிக் கலிகள் அடங்கிய முதல் தொகுதியும்,1925 –ஆம் ஆண்டு சூன் திங்களில் மருதம்,முல்லைக் கலிகள் அடங்கிய இரண்டாம் தொகுதியும் ,1931 –ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் நெய்தற்கலியும் சொற்குறிப்பு அகராதியும் அடங்கிய மூன்றாம் தொகுதியும் வெளிவந்தன.
இப் பதிப்பில் 4000-க்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புக்கள் உள்ளன.இவ்விளக்கங்களை காணும் போது,இவர்தம் ஊன்றிய நோக்கையும் உலையா உழைப்பையும் நிலைபெறக் காட்டும் சான்றுகளாக இவை மிளிர்கின்றன.


இ.வை.அனந்தராமையர் பதிப்பிற்குப் பிறகு 1943 – இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் நச்சினார்கினியர் உரையுடன் இளவழகனார் எழுதிய ஆராய்ச்சி முன்னுரை உரைவிளக்கத்துடன் பதிப்பித்துள்ளது. இப்பதிப்புரையில் முதற்பதிப்பு பாகனேரித் தனவைசிய இளைஞர் தமிழ் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பெற்றன என்றும் அன்னாரிடமிருந்து உரிமைபெற்று இப்பதிப்பைக் கழகம் வெளியிட்டுள்ளது என்றும் கூறப்பெற்றுள்ளன.இதன் மறுபதிப்பினை 2007 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

புத்துரைக் காண்டல்

மூலத்தை மட்டும் படித்து பொருளுணர்ந்த காலம் இருந்தது.அதன் பிறகு ஒரு காலக்கட்டத்தில் மூலத்தோடு உரையும் வேண்டியதாயிற்று, உரை பழைமையான போது ,உரையினைப் புரிந்துகொள்ள அதற்கும் விளக்கம் தேவைப்பட்டது.இன்றைய சூழலில்,அதனையும் எளிமைப்படுத்தி,தமிழுலகிற்கு வழங்கவேண்டும் என்ற வேணவாவினால், பழைய உரைகள், விளக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாக்க கொண்டு ,கலித்தொகைக்குச் சில புத்துரைகள் தோன்றின.


தை.ஆ.கனகசபாபதி என்பார் பாலைக்கலிக்கு மட்டும் புத்துரையொன்று இயற்றி வெளியிட்டுளதாக சைவசித்தாந்த கழகப் பதிப்பில் காணப்பெறுகின்றது.அவர் எழுதிய உரை எந்த ஆண்டு வெளிவந்து என்பதை அறியமுடியவில்லை. இ.வை.அனந்தராமையர் பதிப்பிற்குப் பிறகு வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது.
1958 – இல் வள்ளுவர் பண்ணை ஆசிரியர் குழு தெளிவுரை,குறிப்புரை,திணை, துறை ,உள்ளுறை விளக்கங்களுடன் ஒரு கலித்தொகைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் பதிப்பாசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார். இந்தூலின் உரிமையார் ந.பழனியப்பன் அவர்கள் அவரது உரையில் இந்நூல் பதிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுகின்றார்.


சங்க கால மக்களின் வாழ்வியல் கண்ணாடியை அனைவரும் எளிய முறையில் பெற்று,படித்துத் துய்க வேண்டும்,என்னும் பேரெண்ணத்தோடு,அதற்கான ஒரு பதிப்பை வெளியிட வேண்டும் என்று எண்ணினேன்.அதற்கு என் வள்ளுவப் பண்ணை ஆசிரியர் குழுவினர் இசைந்தனர். குறுகிய காலத்தில் மிகச் சிறந்த முறையில் திணை,துறை,உள்ளுரைகளின் விளக்கங்களோடு,தெளிவுரைக் குறிப்பு எழுதி உதவினர். அதனைத் தமிழ் மக்களுக்கு அளிக்கும் உயரிய மரபுமுறை மாறாத முதல் மலிவுப் பதிப்பாக வெளியிட்டுத் தந்துள்ளேன்.


இதனை அடுத்து 1958 - இல் புலியூர் கேசிகன் அவர்கள் உரை எழுதி பாரி நிலையம் ஒரு பதிப்பினை வெளியிட்டுள்ளது.அந்நூல் பல மறுபதிப்புக்களையும் கண்டுள்ளது. இதன் முன்னூரையில் புலியூர் கேசிகன் அவர்கள் ,
அனைவரும் எளிதிற் கலித்தொகையைக் கற்று இன்புறுவதற்கு உதவியாகத் தெளிவுரை அமைப்பு ஒன்றை எழுதி வெளியிட வேண்டும் என்று எண்ணினேன்.அது 1958 மார்ச்சில் முதல் முதலாக வெளிவந்தது. பலரின் வரவேற்றபையும்,பாராட்டையும் பெற்றதெனப் பதிவு செய்துள்ளார்.


புலியூர் கேசிகன் உரையினைத் தொடர்ந்து 2003 இல் கோவிலூர் மடம் சங்க இலக்கியம் முமுமைக்கும் உரையாசிரியர்களைக் கொண்டு உரை எழுதி மூலமும் உரையும் வெளியிட்டுள்ளனர். கலித்தொகைக்கு சுப.அண்ணாமலை அவர்கள் உரையெழுதி யுள்ளார்கள். பதிப்பாசிரியர்கள் முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப.அண்ணாமலை.
இதன் பதிப்புரையில் பாடலின் மூலபாடம் முன்புள்ளவற்றில் சிறந்த பாடம் எனக் கருதத்தக்கது எடுத்தாளப்பெற்றுள்ளது.சொற்களைப் பிரித்து விளக்கும்படி பதிப்பிக்கும் போது,அசையும் சீரும் சிதையாமல் அமைக்கப்பெற்றுள்ளன.பாடலின் கட்டமைப்பு நன்கு புலனாகுமாறு,சொற்பிரிப்பு அமைகிறது.குற்றியலுகரம் பிரித்துப் பதிப்பிக்கும் போது அடைப்புக் குறி இடப்படவில்லை. இன்னபா, இன்ன சீர்கள் என்பவை புலப்படவும்,அவ்வமைப்பிற்கு உட்படுமளவு சொற்பிரித்தும், இவை பதிப்பிக்கப் பெற்றுள்ளன. பழைய மரபு பதிப்பு முற்றிலும் கடினமானத்.புதிதாகப் பிரித்துப் பதிப்பித்தவர்களோ,யாப்புக் கட்டமைப்புத் தோன்றாத அளவு மிகுதியாக எளிமை கருதிப் பிரித்துப் பதிப்பித்தனர்.இவை இரண்டிற்கும் இடைப்பட்டதான, எளிமையும் கட்டமைப்பும் உள்ள பதிப்பு இவென இப்பதிப்பிற்கான காரணத்தைக் கூறுகின்றனர்.


2004 –இல் நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி)லிமிட்டும் சங்க இலக்கியம் முழுமைக்கும் புத்துரைக்கண்டு உரையும் மூலமும் வெளியிட்டுள்ளனர். கலித்தொகைக்கு முனைவர். அ.விசுவநாதன் அவர்கள் உரை வரைந்துள்ளனர். தலைமைப் பதிப்பாசிரியர்கள் முனைவர் அ.மா.பரிமணம், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியம்.


பழைய உரைகள் கற்பதற்குக் கடினமாக அமைந்துவிட்ட காரணத்தினால்,மூலம் பழையுரை ஆகியவற்றின் சிறப்பு,சிறிதளவும் சிதையாமல் அறிஞர் பெருமக்கள் உரை வரைந்துள்ளனர்.உரைகள் புத்துரையாகவே அமைகின்றன,மூலத்தின் சிறப்பு உரையில் மிளிர்கிறது.பலபுதிய நுண்ணிய கருத்துக்களையும் உரையாசிரியர்கள் தத்தம் உரைகளில் ஆங்காங்கே எடுத்துச் செல்லுகின்றனர்.பழைய உரையாசிரியர்கள் குறிப்புக்கள் மிகுதியும் தருவர்.இவ்வுரைகளில் உரையாசிரியர்கள் அருஞ்சொற்களுக்கும் சிறப்பிடம் தந்துள்ளனர்.
2007 இல் தமிழ்மண் அறக்கட்டளை செவ்விலக்கியக் கரூவூலம் என்னும் தலைப்பில் சங்க இலக்கியம் முழுமையும் உரையுடன் பதிப்பித்துள்ளது.கலித்தொகைக்கு சக்தி சுப்பிரமணியம் எழுதிய உரையினைப் பதிப்பித்துள்ளது.இவருடைய உரை காட்சிவிளக்கம் போல் அமைந்து,கதையினைப் படிப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தும்.


ந.சி கந்தையாபிள்ளையும் கலித்தொக்கைக்கு புத்துரைக்கண்டுள்ளார். இவ்வுரையும் கதை கூறும் போக்கிலேயே காணப்பெறும்,இதனையும் தமிழ்மண் அறக்கட்டளைப் பதிப்பித்துள்ளது.
மூலம் மட்டும் மர்ரே பதிப்பகம் கலித்தொகை மூலத்தினை மட்டும் வெளியிட்டுள்ளது. எஸ்.வையாபுரிபிள்ளை புலவர் வரிசையில் மூலத்தை மட்டும் தொகுத்து வெளியிட்டுள்ளார். இதில் கலித்தொகைப் பாடல்களும் அடங்கும். நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி)லிமிட்டும் மர்ரே பதிப்பினை அடிப்படையாக் கொண்டு சங்க இலக்கிய மூலத்தை மட்டும் பதிப்பித்துள்ளது.


2008-இல் சங்க இலக்கியம்,தமிழ் செவ்வியல் இலக்கியம் என்னும் தலைப்பில் மணிவாசகர் பதிப்பகம் ச.வே.சுப்பிரமணியனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சங்க இலக்கியம் முழுதொகுப்பையும் வெளியிட்டுள்ளது.
மின் பதிப்புக்கள்

அச்சுகளில் பதிப்பிக்கப்பெற்ற நிலை மாறி இன்று நூல்கள் எல்லாம் மின்பதிப்புகளாக வெளிவரத் துவங்கிவிட்டன. உலகெலாம் நிறைந்து காணப்பெறும் தமிழரகள் அனைவரும் பயன் துய்க்கும் வகையில் இணையத்தில் சங்க இலக்கியங்கள் மின்னூல்களாகப் பதிப்பிக்கப்பெற்று வருகின்றன.

http://www.chennailibrary.com/ettuthougai/kalithogai.html/
http://www.tamilnation.org/literature/ettuthoksi/mpzz/htm/

போன்ற இணையத்தளங்களில் கலித்தொகை முலம் கிடைக்கின்றது.ஆனால் உரைகள் இன்னும் மின் நூல்களாகத் தொகுக்கப்பெறவில்லை.உரைகள் அனைத்தும் தொகுக்கப்பெற்று மின் நூல்களாக வந்தால் தமிழுலகத்திற்றகுப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

• அச்சுப்பிரதியில் நமக்கு கிடைத்துள்ள முதல் கலித்தொகைப் பதிப்பு 1887-இலு சி.வை.தாமோதரன் அவர்கள் பதிப்பித்த பதிப்பாகும்.

• அதனைத் தொடர்ந்து கலித்தொகை பல பதிப்புகளைக் கண்டுள்ளது

• பதிப்புகளை நோக்கும் போது பழைய உரையுடன் பதிப்பித்தல்,பழைய உரைக்கு விளக்கம் எழுதி பதிப்பித்தல்,பழைய உரைகளை அடிப்படையாக் கொண்டு புத்துரை காண்டல்,மூலநூல் பதிப்பித்தல் என்ற வகையில் பதிப்பித்திருப்பதைக் காணமுடிகின்றது.

• இன்றைய தேவைக்கு ஏற்ப கலித்தொகை மின்னூலாகவும் பதிப்பிக்கப் பெற்று இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. கலித்தொகை மூலம் மட்டுமே மின்னூலாகவுள்ளது உரைகளும் தொகுக்கப்பெற் வேண்டும்.

• நம்முடைய பழைமையான இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்ற இலக்கியங்கள் எல்லாம் அச்சில் பதிப்பிக்கும் பொழுது,அவற்றைப் பதிப்பித்தவர்கள் தரமுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டு ,பல்வேறு பிரதிகளை ஒப்பீடு செய்து, பாடவேறுபாடுகளைக் களைந்து ,சிறந்தைத் தேர்ந்து பதிப்பித்துள்ளதையும் அறியமுடிகின்றது.


பயன்பட்ட நூல்கள்
1 . செவ்விலக்கியக் கருவூலம்,தமிழ்மண் அறக்கட்டளை
2 . கலித்தொகை ,கோவிலூர் மடம் பதிப்பு
3 . கலித்தொகை ,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
4 . கலித்தொகை,சைவசித்தாந்த பதிப்பு
5 . கலித்தொகை , பாரிநிலையம்
6 . கலித்தொகை ,வள்ளுவப் பண்ணை
7 . புதியபுத்தகம் பேசுகிறது,தமிழ் புத்தகவுலகம்,1800-2009
8 . தமிழ்நூல்களில் பாடவேறுபாடு,அண்ணாமலைப் பலைகலைக்கழகம்.
9.சுவடிக்கலை,இரா.இளங்குமரன்,சைவசித்தாந்தம்

கருத்துகள்

Admin இவ்வாறு கூறியுள்ளார்…
பல பயனுள்ள விடயங்களை அரிந்துகொள்ளக்கூடியதாக
இருந்தது பகிர்வுக்கு நன்றிகள்
அருமையான பதிவு .......

உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சந்ரு........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி உலவு.காம்......
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு!!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா....
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு.

எனது ஒரு வேண்டுகோள், முடிந்தால் செய்யுங்கள், நான் இன்னும் சில கல்லூரி பள்ளி ஆசிரியர்களிடமும் சொல்லி உள்ளேன்.

மாணவர்களை தமிழ் நூல்களை கட்டுரைகளை இணையத்தில் கொண்டு சேர்க்க சொல்லுங்கள்.

For assignments, projects, Internal marks assignements u can give them the work to enter all tamil literature works in the net (may be in your university website or in wikipedia or in TN Govt website. This will be an useful source (asset) for the coming generation.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ராம்ஜி அவர்களே.உங்கள் கருத்து வேண்டுகோள் அல்ல நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை...தமிழ் மாணவர்கள் வர தயங்குகின்றார்கள்.எல்லாம் பொருளாதாரத்தோடு தமிழ் கல்வியில் கணினியை,இணையத்தை இணைக்க மறுக்கிறது கல்வி நிறுவனங்கள்.தமிழ் மாணவர்களுக்கு ஒரு பாடம் இணையம் சார்ந்து இருந்தால் நலமாக இருக்கும்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்