உடன்போக்கு

உடன் போக்கு என்பது இப்பொழுது ஒடிபோய்விட்டார்கள் என்று சொல்லகிறோம் அல்லவா அதுதான். சங்க இலக்கியத்தில் உடன்போக்கு என்று கூறுகிறார்கள்.இதோ கலித்தொகையில் ஒரு பாடல், காதலித்த இருவர் ஓடிபோகின்றார்கள்,அவர்களை எண்ணி அவர்கள் குடும்பம் வருந்துகிறது,ஆனால் இது தவறில்லை இதுதான் உலகியல் என எடுத்துக்காட்டுவது போல் அமைந்துள்ளதைப் பாருங்களேன்.

ஒர் பெண்ணும் ஆணும் காதல் வயப்பட்டனர்.அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.பெண் வீட்டில் காவல் அதிகமாக இருந்தது.இந்நிலையில் என்ன செய்வது என்று இருவரும் சிந்தித்தார்கள்.இதற்கு ஒரே வழி வீட்டை விட்டுச் செல்வது தான் எனக் காதலன் கூறி ,நீ உன் வீட்டையும் உன் உறவுகளையும் விட்டு வருவாயா?என்று கேட்கிறான்.
நீ இருக்கும் இடம் தான் எனக்கு சொர்க்கம்,நீ இல்லாமல் இருக்கும் இடம் நரகமாக அல்லவா இருக்கும் என்று கூறுகின்றாள்.


உடனே தலைவன் நீயோ பெரிய இடத்துப் பெண் நாம் செல்ல இருப்பதோ பாலை நில வழி உன்னால் வரமுட்டியுமா?என வினவுகிறான்.

உன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் போது பாலை நிலம் கூட எனக்கு சோலைவனமாக அல்லவா இருக்கும் உன்னுடன் இருந்தால் எந்த துன்பமும் இன்பமாக அல்லவோ இருக்கும் என்று கூறுகிறாள்.

வீட்டில் அனைவரும் நன்றாக உறங்கும் விடியற்காலையில் செல்லலாம் என முடிவு செய்து,ஒருநாள் விடியற் காலையில் எழுந்து படுக்கையில் படுத்திருப்பது போன்று தலையணையை வைத்து அதன் மீது போர்வையைப் போர்த்திவிட்டு யாராவது பார்த்தால் தூங்குவது போல் நினைத்துக் கொள்ளட்டும் என்று வைத்து விட்டு.

அடிமேல் அடிவைத்து மெள்ள நடந்து வந்து,கொல்லைபுற வாயிலின் அருகே நின்று,யாராவது முழித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று பார்க்கின்றாள்.அனைவரு நன்றாக குறட்டை விட்டு தூங்குகின்றனர்.கதவினைத் திறக்கும் போது யாரவது முழித்துக் கொள்வார்களா என ஐயுற்று இருமிப் பார்க்கின்றாள் யாரும் முழிக்கவில்லை உடனே கதவினை மெள்ள திறந்த கொண்டு வெளியே வந்து கதவை முடிவிட்டு ,சிறைப் பட்ட கைதி சுதந்திரம் அடைந்தது போன்ற மகிழ்ச்சியில் வெளியேறுகிறாள்.

அங்கு அவளுக்காக அவளுடைய காதலன் காத்துக்கொண்டு இருக்கிறான்.இருவரும் நன்றாக விடிவதற்குள் இவ்வூரைக் கடந்து விடவேண்டுமென விரைந்து அவ்விடத்தை விட்டு செல்கின்றனர்.

பொழுது புலர்ந்து,கோழிகள் கூவின,ஞாயிறு தனது பொன்னிற கதிர்களைப் பரப்பினான்,வீட்டில் உள்ள அனைவரும் எழுந்தனர். ,பெண்ணைக் காணவில்லையே எனத் தேடத்தொடங்குகின்றனர், ஒரு வேளை வெளியில் சென்றிருப்பாள் வந்து விடுவாள் என்று எண்ணினர்.

நேரம் சென்றது அவளைக் காணவில்லை வீட்டில் உள்ளோருக்கு ஒன்றும் புரியவில்லை.அவளின் தோழியிடம் சென்று அவள் எங்கே என்று கேட்கிறார்கள்.அவளும் எனக்குத் தெரியாது என்று கூறுகிறாள்.
அவள் காதலனுடன் தான் ஓடியிருக்க வேண்டுமென செவிலித்தாய் கூறிகின்றாள்.ஓடி போய்விட்டாளா? என மயங்குகிறாள் அவளுடைய தாய்.வீட்டில் உள்ள அனைவருக்கும் இச் செய்தி தெரிந்து விடுகிறது.

செவிலி தாய் இச் செய்தி ஊர் முழுதும் பரவும் முன்னர் அவர்களைத் தேடிப் பிடித்து யான் அழைத்து வருகிறேன் எனக் கூறி அவர்களைத் தேடிப் புறப்படுகின்றாள்.

அவள் பல இடங்களில் தேடிப்பார்க்கின்றாள்.தேடிகொண்டு போகும் போது வழியில் கூட்டமாக வருகின்ற பெரியவகளைப் பார்க்கின்றாள் .அவரிடத் ஐயா இந்த வழியே ஒரு பெண்ணும் ஆணும் சென்றதைக் கண்டீர்களா? எனக் கேட்கின்றாள்.மேலும் அவள் ஓடிப்போனதால் எங்களுக்குப் பெரிய அவமானமாக உள்ளது,இனி ஊரில் தலைக்காட்டமுடியாது,எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு ஓடிவிட்டாள் எனக் கூறி புலம்புகின்றாள்.

பெரியவர் அம்மா! ஏன் இப்படி புலம்பி தவிக்கின்றீர்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் அவள் செய்ததில் என்ன தவறு இருக்கிறது.

நல்ல மணம் உள்ள சந்தனமரம் மலையில் விளைகின்றது .அது மலையில் விளைவதால் மலைக்கா பயனபடுகிறது இல்லையே? அதனை அரைத்து யார் பூசிகொள்கிறார்களோ அவர்களுக்குத்தானே பயன்படுகிறது.

முத்து கடலில் பிறந்தாலும், அது கடலுக்கா பயன்படுகிறது இல்லையே? அதனை யார் கோர்த்து அணிந்து கொள்கிறார்களோ அவர்களுக்குத் தானே பயனபடுகிறது.


வீணையில் இருந்து இசை எழுகிறதே?அது வீணைக்கா பயன்படுகிறது இல்லையே?அதை யார் கேட்கிறார்களோ அவர்களுக்குத்தானே மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

அதுபோல தான் உங்கள் வீட்டுப் பெண்ணும்.வயது வந்த பெண் விரும்பி தானே சென்று இருக்கிறாள் போனால் போகட்டும் தவறு என்ன இருக்கிறது. உலகியல் இதுதானே !
உங்கள் வீட்டுப் பெண் செய்து சரிதான்.எனக் கூறி ஆறுதல் படுத்திவிட்டு,

அக்காதலர் இருவரையும் வழியால் நாங்கள் பார்த்தோம்,நன்றாக வாழுமாறு வாழ்த்தினோம் என்று கூறி ,அவர்கள் நன்றாக வாழ்வார்கள் நீங்கள் கவலை இல்லாமல் வீட்டிற்குச் செல்லுங்கள் ,என அப்பெரியவர் கூறுகின்றார்.அவளும் வீடு திரும்பினாள்.

இதோ அந்த பாடல் படித்து இன்றபுறுங்கள்.

எறித்தரு கதிர் ஏந்திய குடை நீழல்,
உறித் தாழ்ந்த கரகமும்,உரை சான்ற முக்கோலும்,
நெறிப்படச் ணுவல் அசைஇ,வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

வெவ் இடைச் செல்ல மாலை ஒழுக்கத்தீர் இவ்இடை
என் மகள் ஒருத்தியும்,பிறன் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்து தாம் அறி புணர்ச்சியர்,
அன்னார் இருவரைக் காணீரோ?பெரும!

காணேம் அல்லேம் கண்டனம் கடத்தினை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறிர்.

பலவுறு நறுஞ் சாந்தம் படுப்பவருக்கு அல்லதை
மலையுள்ளே பிறப்பினும் ,மலைக்கு அலைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவருக்கு அல்லதை,
நீருள்ளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால்,நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவருக்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும்,யாழ்ஃக்கு அவைதாம் என்செய்யும்
சூழுங்கால்,நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே.

என வாங்கு

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அழகான பாடல்........
எளிமையான விளக்கம்...
சரியான படங்கள்..........
தமிழர் மரபுகளை எடுத்தியம்பும் இது போன்ற கட்டுரைகள் தொடர்ந்து எழுதுங்கள்...
மிகவும் நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள்!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துரைக்கு நன்றி குணா.
"உழவன்" "Uzhavan" இவ்வாறு கூறியுள்ளார்…
 அக்காலத்திலேயே இப்படியொரு முற்போக்குச் சிந்தனையா... நல்ல பாடல் நல்ல விளக்கம்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க உழவன்,அக்கால மக்கள் நல்ல முற்போக்குச் சிந்தனையுடன் தான் வாழ்ந்து இருக்கின்றார்கள்.உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி.
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
முக்கோலும் கரகமும் ஏந்திய அந்தணப் பெருமான் மிகப் பொருத்தமான மூன்று எடுத்துக்காட்டுகளால் அன்னையின் துயரத்தைப் போக்கியிருக்கிறார். அருமையான பாடலும் விளக்கமும். நன்றி.
கோவி.மதிவரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்.தமிழ்நலம் சூழ்க
உடன்போக்கு என்பதற்கும் உடன்கட்டை என்பதற்கும் பொருள் என்ன? தயவு கூர்ந்து விளக்குங்கள்
RAGUNATHAN இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவு நன்று...அப்படியே மடலேறுதல் பற்றியும் எழுதுங்க கல்பனா
Sirah இவ்வாறு கூறியுள்ளார்…
வீனையும் யாழும் ஒன்ற?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......