கருத்தரங்கம்
கடந்த வாரம்(5,6-6-2009)அன்று தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் ,மலேசியாவில் இருந்து தமிழ் இலக்கிய படைப்பாளர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்தில் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் பங்களிப்பினைப் பற்றிய கட்டுரைகள் வழங்கப்பெற்றன. மலேசியா ,சிங்கப்பூர் படைப்பாளர்கள் 41 பேர் இக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.5-ஆம் திகதி காலை பத்து மணிக்கு விழா தொடங்கப்பெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழத் துணைவேந்தர் விழாவினைத் தொடங்கி வைக்க மு.மேத்தா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மு.மேத்தா அவர்கள் கவிதையின் இன்றைய நிலையினைக் குறித்து மிக அழகாவும் ஆழமாகவும் விளக்கினார்.மேலும் மலேசியா,சிங்கப்பூர் எழுத்தாளர்கள் மரபுகவிதைகளை விட்டு இன்னும் வெளிவரவில்லை புதுக் கவிதைகளையும் அவர்கள் படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இக்கருத்தினை மறுத்து புதுக்கவிதைகளை அங்குள்ள படைப்பாளர்கள் படைக்கின்றனர் என்று கூறினர்.
தமிழ்நாட்டில் உள்ள முத்துப்பேட்டை என்னும் ஊரில் இருந்து சிங்கப்பூர் சென்று,மிகப் பெரும் தொழில் அதிபராக விளங்க கூடிய மரியாதைக்குரிய முஸ்தபா என்ற மாபெரும் மனிதர்
,தமிழை ஆதரிக்கும் நோக்கில் 20 இலக்கம் ரூபாய் வைப்பு நிதியாக வைத்து,தமிழுக்கு அருந்த தொண்டாற்றிய கோ.சாரங்கபாணியார் அவர்களின் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை தொடங்கி,அதன் வழி ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூர் ,மலேசிய எழுத்தாளர்களைக் கொண்டு கருத்தரங்கம் நடைபெற வழிவகை செய்துள்ளார்.
தமிழுக்கு அவர் செய்துள்ள பணி வணங்குவதற்குரியது. வெளிநாடுகளுக்குச் செல்லும் பலர் தமிழையும் தமிழ்நாட்டையும் மறந்து இருந்துவிடுகிறார்கள்.அவர்களுக்கு மத்தியில் இவர் தமிழுக்கு செய்துள்ள ,செய்து கொண்டு இருக்கும் பணி அளப்பரிது.
5-ஆம் திகதி மாலை மலேசிய,சிங்கப்பூர் நாடகக் கலைஞர்களால் இராசராசன் என்னும் வரலாற்று நாடக்ம் நடத்தப் பெற்றது. அடுத்த நாள் மலேசிய ,சிங்கப்பூர் படைப்பாளர்களின் சிறந்த படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று,கரிகாலன் விருது வழங்கப்பெற்றது.
மலேசிய எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் அவர்கள் எழுதிய 200 ஆண்டுகால மலேசிய இந்தியர்கள் என்ற நூலுக்கும்,சிங்கப்பூர் எழுத்தாளர் பார்தென்றல்.முருகனடியார் அவர்கள் எழுதிய சங்கமம்(மரபுகவிதை தொகுப்பு) என்னும் இரண்டு நூல்களைத் தேர்ந்தெடுக்கப் பெற்று,அவர்களுக்குக் கரிகாலன் விருது வழங்கப்பெற்றன.
நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் திரு பழனிமாணிக்கம் ,வணிவரித்துறை அமைச்சர் திரு உபயதுல்லா,மு.மேத்தா,சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோர் கலந்து கொண்டனர்.மத்திய அமைச்சர் தனது உரையில் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களோடு,இங்குள்ள படைப்பாளர்களும் கலந்துகொள்ளும் போது இலக்கிய வளரச்சி இங்கும் அங்கும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதனை அறியமுடியும்,ஆகையால் அடுத்த ஆண்டில் இருந்து ,இம்முறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி