சங்க வாழ்வு
நம்முடைய பழமையான சங்க இலக்கியம் எத்தனையோ அக வாழ்வியல் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.அச்செய்திகள் எல்லாம் நம் வாழ்வை வளப்பமாக்கும் என்பதில் ஐயமில்லை.
நற்றிணையில் முதல் பாடல் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து,செல்லக்கூடிய சூழல் வருகிறது,தலைவன் பிரிந்தால் தலைவி வருந்துவாளே என்று தோழி ,தலைவன் உன்னை விட்டு பிரியக் கருதுகிறான் என்று கூறுகிறாள்.தலைவியோ தலைவன் அப்படி செய்பவன் இல்லை.என்று கூறி அவன் புகழ் பாடுகிறாள்.
என்னுடைய தலைவன் சொன்ன சொல் தவறாதவர்.என்றும் இனிமைப் பண்பு கொண்டொழுகும் உயர்ந்த மாண்பினர்.என்னை விட்டு பிரியவேண்டும் என்று ஒரு போதும் அவர் எண்ணியது இல்லை.அவர் என்மேல் மிகுந்த அன்புடையவர்.அவருடைய நட்பு எப்படி போன்றது தெரியுமா?
சிறந்த தாமரை மலரினை அணுகி ,அதில் உள்ள தேனினை எடுத்த வண்டு ,உயர்ந்த சந்தனமரத்தில் கட்டினால் எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதனைப் போன்றது அவருடைய நட்பு.
இந்த உலகம் நீரில்லாமல் அமையுமா?முடியாது அல்லவா.அது போல்தான் அவரில்லாமல் நான் மிகுந்த துன்பத்திறக் ஆட்படுவேன் என்பதனை அறிந்து,என்னை விட்டு பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிடுவார் என்று கூறுகிறாள்.
நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிபுஅறி யலரே
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே
-------------கபிலர்
இந்தப் பாடலில் தலைவன் நட்பு மிகச் சிறந்து உண்மையானது என்பதைக் கூற தலைவி,சிறந்த தாமரை மலரில் எடுத்து ,உயர்ந்த சந்தனமரத்தில் கட்டப்பட்ட தேனினை உவமையாகக் கூறுகிறாள்.மலைத்தேன் மிகச் சிறந்தது என்பது நமக்குத் தெரியும்,அது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து என்பதும் அறிவோம்.அது போல தலைவியின் பசலை நோய்க்கும் அவன் மருந்தாக விளங்குகிறான் என்றும் கூறலாம்.
தலைவன் பிரிந்து செல்ல வேண்டி கட்டாயம் ஏற்படுகிறது.அப்படி தலைவன் பிரிந்து சென்றாலும் அவன் போகும் வழிகளில் ,காணக்கூடிய விலங்கினங்களின் அன்பு செயல்களைக் கண்டு மீண்டும் திரும்பி வருவான் என்று தோழி கூறுகின்றாள்.
காட்டு வழியே தலைவன் செல்லும் போது அங்கு ஆண் ,பெண் யானைகள் காணப்பெறும்.
யானைக் குட்டிகளும் இருக்கும்.அவற்றிற்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் நீர் அருந்த செல்லும் போது,குட்டிகள் முன் சென்று இருக்கம் குறைந்த நீரை கலக்கும்,ஆண் யானை தன்னுடைய தாகத்தைத் தீரத்துக்கொள்ளாமல் தன்னுடைய துணையாகிய பெண் யானைக்கு ஊட்டிவிடும்.
இன்னொருபுறம் செல்லும் போது அழகிய புறாக்கள் ,வெயிலின் கொடுமையிலிருந்து தன் துணையைக் காக்க ஆண்புறா தன்னுடைய சிறகினை விரித்து,அந்நிழலில் பெண் புறாவை இளைப்பாற வைக்கும்.
ஆண் மான்கள் தன் துணை வெயில் வாடுவதைப் பார்த்துப் பொறுக்காமல் தன் நிழலில் இளைப்பாறச் செய்யும்,இந்நிகழ்வுகளை எல்லாம் உன் தலைவன் பார்க்காமல் இருப்பானா ,கண்டிப்பாக பார்ப்பான்,விலங்குகளே இவ்வளவு அன்போடு தன் துணையைக் காக்கும் போது நாம் இப்படி பிரிந்து வந்துவிட்டோமே என வருந்தி ,விரைவில் திரும்பி வந்து விடுவான் எனத் தோழி தலைவியிடம் இயம்புகின்றாள்.
அடிதாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால்,
கடியவே -கனங்குழாஅய் ! காடு என்றார்;அக்காட்டுள்
துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடிஊட்டி,பின் உண்ணும்,களிறு எனவும் உரைத்தனரே
இன்பத்தின் இகந்து ஓரீஇ,இலைதீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அக்காட்டுள்
ஆன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்ததை
மென்சிறகால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே.
கல்மிசை வேய் வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடு என்றார்;அக்காட்டுள்,
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்து அளிக்கும் ,கலை எனவும் உரைத்தனரே
(கலித்தொகை,பாலை,39)
கருத்துகள்