உலாவின் வளர்நிலை

தமிழ் இலக்கிய உலகு காலந்தோறும் பல்வேறு இலக்கிய வகைகளைக் கண்டுள்ளது. அவற்றுள் சிற்றிலக்கியங்கள் காலத்துக்கு ஏற்றார் போல பாடுபொருள்,வடிவம்,சுவையுணர்வு போன்றவற்றில் மாற்றம் பெற்று வந்துள்ளன.தொல்காப்பியர் காலத்தில் அரும்பிய இச் சிற்றிலக்கியங்கள்,நூற்றாண்டு தோறும் அரும்பி, பல்வேறு வண்ண மலர்களாக மலர்ந்து மணம் பரப்பி வருகின்றன.அவ்வாறு மலர்ந்த சிற்றிலக்கிய வகைகளைப் தொண்ணூற்றாக கூறுவர் படிக்காசுப் புலவர்.இதனை இவர் பாடிய பல்லவராயன் உலா என்னும் நூலில் ,

“தொண்ணுற்றாறு கோலப்ர பந்தங்கள்”

என்று குறிப்பிடுவதில் இருந்து அறியமுடிகின்றது.இவருக்குப் பின் தோன்றிய வீரமா முனிவரும் தமது தொன்னூல் விளத்திலும்,சதுரகராதியிலும் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களையே வரையறைப் படுத்துகின்றார்.பிரபந்த மரபியலும்,

“பிள்ளைக் கவிமுதல் புராண மீறாத்
தொண்ணூற்றாறு எனும் தொகையாம்”

இவ்வரையறை இயம்புகின்றது.ஆனால் பின்னால் தோன்றிய பாட்டியல் நூல்கள் பலவும் தம்முள் வேறுபாடு கொண்டுள்ளன.சிதம்பரம் பாட்டியல் அறுபத்திரண்டு எனவும், இலக்கண விளக்கப் பாட்டியல் அறுபத்தெட்டு எனவும் பிதபந்த தீபிகை தொண்ணூற்றேழு எனவும் சிற்றிலக்கியங்களின் வகைகளைக் கூறுகின்றன. இவற்றை நோக்கும் போது சிற்றிலக்கியங்கள் காலந்தோறும் பலவேறு வளர்நிலைகளையும், வேறுபாடுகளையும் கண்டுள்ளதை அறியமுடிகின்றது.

இவ்வாறு சிற்றிலக்கிய வகைகளுள் மாறுபட்டு இருந்தாலும் உலா என்னும் சிற்றிலக்கிய வகை பண்டு தொட்டே இருந்துள்ளமையைத் தொல்காப்பியத்தின் மூலம் தெளியலாம். தொன்மை வாய்ந்த சிற்றிலக்கிய வகையான உலா இலக்கிய வகை காலம் தோறும் இலக்கிய உலகில் வளர்ந்து வந்துள்ள நிலையை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உலா இலக்கணம்
நகர வீதியில் இறைவனோ,தலைவனோ தங்களுக்குரிய வாகனங்களில் வலம் வருவர். அவ்வாறு வலம் வரும்போது பெண்கள் அவர்கள் மேல் காதல் கொள்வதாகக் கூறிக் கதை அமைக்கும் ஒரு சிற்றிலக்கிய வகை உலா என அழைக்கப்பெறுகின்றது.உலா என்ற பெயரில் பெரும்பாலும் வழங்கப் பட்டாலும் ,பவனி,பவனியுலா,உலாப் புறம்,உலாமாலை எனவும் வழங்கப்பெறுகின்றன.

உலா என்னும் சொல் அகநானூற்றில் ‘நாளுலா எழுந்த கோள்வல் உளியம்’ (81;1) என நாளும் விடியற்காலை எழுந்து உலா வரும் விலங்கைக் குறிக்கப் பயன் படுத்தப் பெற்றுள்ளது.உலா என்னும் சொல்லாட்சி நடமாடுதல் என்னும் பொருளில் வந்துள்ளமையைக் காணலாம்.
வாழ்வியல் இலக்கணம் வகுத்த தொன்மை வாய்த தொல்காப்பியம், புறத்திணையியலில் பாடாண்தினையைப் பற்றி விளக்கும் போது,

“ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமை யான”

என உலாவுக்கான வித்தினை இடுகின்றது.இதன் பிறகு தோன்றிய இலக்கண நூல்கள் உலாவிற்கான இலக்கணத்தை வரையறுக்கின்றன.

பன்னிருப்பாட்டியலில் பொய்கையார் ,
“பாட்டுடைத் தலைவ னுலாப்புற வியற்கையும்
ஒத்த பாமத் தினையாள் வேட்கையும்
கலியொலி தழுவிய வெள்ளடி யியலால்
திரிபின்றி நடப்பது கலிவெண்பாட்டே”(241)
எனவும்,வெண்பா பாட்டியலில் குணவீர பண்டிதர்,

“திறந்தநெரிந்த பேதை முத லெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்று-அறைந்தகலி
வெண்பா வுலாவாம்.”

எனவும்,சிதம்பரம் பாட்டியலில் பரஞ்சோதியார்,

“குழமகனை அடையாளம் கலிவெண் பாவால்
கூறியவன் மறுகணையக் காதல் கூதேழ்
எழிற் பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்று
இயன்மங்கை பத்தொன்பான் மடந்தை யையைந்
தழகவரிவை முப்பதோஃர் தெரிவை நாற்பா
னாம்வயது பேரிளம் பெண் முதலாயுள்ளோர்
தொழவுலாப் போந்த துலாத் தலைவன் பேர்க்குத்
தொடையெதுகை யொன்றிலின்ப மடலாச் சொல்லே”(37)

எனவும்,வைத்தியநாத தேசிகர் இலக்கண விளக்கத்தில் ,

“குழமகனைக் கலிவெண் பாக் கொண்டு
விழை தொல் குடிமுதல் விளங்க வுரைத்தாங்
கினைபுனை நல்லா ரிவர்மணி மறுகின்
மற்றவன் பவனி வரவேழ் பருவ
முற்றாமா னார்தொழப் போந்த துலாவாம்.”(97)

எனவும்,பிரபந்த திரட்டு,

“பேதைமுதல் லேழ் பருவப் பெண்கள் மயக்கமுற
ஓதுமறு குற்றானெள் வேலோனென்-றேதம்
அறக்கலி வெண்பாவி னாக்க லுலாவாம்
புறத்தசாங் கந்தாங்கிப் போற்று.”

எனவும்,பல்வேறு இலக்கண நூல்கள் கூறுவதில் இருந்து உலா இலக்கியங்களின் வளர்ச்சிக்கேற்ப இலக்கணங்களும் காலந்தோறும் சிறுசிறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ள நிலையினைக் காணமுடிகின்றது.

உலா இலக்கியத்தின் வளர்ச்சியைக் காப்பிய இலக்கியத்திலும், பக்தி இலக்கிய காலத்தில் காணமுடிந்தாலும்,தனி ஒரு இலக்கியமாகப் பிற்காலத்தில் முழுமைபெற்றது எனலாம்.

உலாவை முதனிலை,பின்னிலை ஏழு என இரு பகுதியாகப் பகுத்துக் காட்டும் பன்னிருப்பாட்டியல். முதனிலையில்,தலைவனின் குடிநெறி மரபும்,கொடையும், பள்ளி யெழுச்சிக்குப் பின் நீராடல்,நல்லணி அணிதல் ஆகியன நிறைவுற்றுக் களிற்றின் மேல் ஊர்ந்து வீதிவுலா வருதலும் அமைகின்றன.

பின்னிலை ஏழில் அவ்வுலாத் தலைவனைக் கண்டு உருகும் எழு பருவ மகளிரைச் சார்ந்தும், அவர்கள் விளையாடக் கூடிய சிற்றில்,பாவை,கழங்காடல், அம்மானையாடல், ஊசல், கிளிக்குச் ணொலற்கயிற்றல், யாழ்மீட்டல், புனலாடல்,பொழில் விளையாடல்,முதலிய பொழுதுப்போக்குச் செயல்களும் அமைந்து காணப்பெற வேண்டுமென அவிய சூத்திரத்தால் அறியமுடிகின்றது. (பன்னிருப் பாட்டியல், 234)

இறைவனைத் தவிர பிற தலைவனோ,அரசனோ,யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாற்பத்தெட்டுக்குள் வயது இருக்க வேண்டுமெனப் பன்னிருபாட்டியல் கூறுகின்றது. தலைவன் சிறு குழந்தாயாகவும் இருக்கலாம் எனப் பிரபந்தமரபியலும்,தலைவன் மிக்க இளம் பருவத்தினராக இருக்க வேண்டுமென முத்துவீரியம்மும், பிபந்தலீலையும் கருதுகின்றன. தொன்னூள் விளக்கம் தசாங்கம் பாடல்களையும் உலாவின் கூறாகக் கொள்கின்றது.

இறை உலா
திருக்கைலாய ஞான உலா
நமக்கு கிடைத்துள்ள உலா நூல்களுள் காலத்தால் முந்தியது ஆதி உலா என்னும் பெயரால் வழங்கப்பெறும் திருக்கைலாய ஞான உலாவாகும்.இந்நூலை ஆக்கியோன் சைவ நாயன்மார்களுள் ஒருவராய சேரன் பெருமாள்.இந்நூலினை கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும்,கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கூறுவர்.ஆனால் கல்வெட்டறிஞர் சதாசிவ பண்டாத்தார் போன்றோர் வலிமையான சான்றுகளுடன் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக நிறுவியுள்ளனர்.

இந்நூல் உலாவின் இலக்கணங்களுடன் பொருந்தி ,பாட்டுடைத் தலைவனாகிய இறைவனின் திருப்புகழைப் பாடி பரவுகிறது.இதன்பிறகு பல்வேறு வகையான உலா நூல்கள் தோன்றியுள்ளன. கடவுள் தொடர்பாக தோன்றிய உலா நூல்கள் பெரும்பாலும் சிவனைப் பற்றியே எழுந்துள்ளன.திருக்கைலாய உலா,திரூவாரூர் உலா, திருப்பூவண்ணநாதர் உலா,திருகாளத்திநாதர் உலா,சங்கர நயினார் கோயில் சங்கரலிங்க உலா,தேவை உலா, திருவெங்கை உலா, மதுரைச் சொக்கநாத உலா, தஞ்சை பெருவுடையார் உலா, ஏகாம்பரநாதர் உலா, ஆளுடைபிள்ளையார் திருவுலா மாலை,திருவிடைமருதூர் உலா, திருக்கடவூர் உலா,திருவானைக்கா உலா,தில்லை உலா போன்ற பல உலா நூல்கள் சிவனைப் பாடி எழுந்துள்ளன.
முருக கடவுளைப்பாடியும் உலா நூல்கள் தோன்றியுள்ளன.திருவலஞ்சி முருகன் உலா, சிவசுசுப்பிரமணியக்கடவுள் திருமுகவுலா,சேயூர் முருகன் விழா, குன்றக்கடி சண்முகநாதர் விழா போன்றவையாகும்.
கடவுள் தொடர்பாக எழுந்துள்ள பெரும்பான்மையான நூல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன.வைணவம் தொடர்பான உலா நூல்கள் ஏதும் அறிப்படவில்லை.அது தொடர்பான உலா நூல்கள் எழுதப்படவில்லையா ,இல்லை எழுதப்பட்டு கிடைக்கவில்லையா,ஏன் எழுதப்படவில்லை ஆராயத் தக்கதாகும்.
மானுட உலா
இறைவன் மீது மட்டும் பாடப்பட்டு வந்த உலா பாடல்கள் ,மக்களுள் சிறந்தவர்களையும் பாடலாம் எனப் பாடி நமக்கு கிடைத்த முதல் நூல் மூவருலா என்னும் நூலாகும் . இந்நூல் விக்கிரம சோழன்உலா,குலோத்துங்க சோழன் உலா,இராச இராச சோழன் உலா என மூவர் மீதும் தனித்தனியாக ஒரே புலவரால் பாடப்பட்டுத் தொகுக்கப் பெற்றதால் மூவர் உலா என அழைக்ப் பெறுகிறது.
மூவருலாவைப் பாடிய புலவர் ஒட்டக்கூத்தர் ஆவர்.இந்நூலுல் தலைவன் பெருமை, பள்ளி எழுதல், நீராடி அலங்காரம் கொள்ளுதல்,பட்டத்து யானையின் மீது உடன் வருவோர் சூழ வீதி உலா கொள்ளுதல்,உலா காட்நியைக் கண்ட எழு பருவ மகளிரின் காதற் புலம்பல் முதலிய செய்திகள் முறையாக உரைக்கப்பெற்றுள்ளன.
மூவருலாவை அடியொற்றி சங்கர சோழன் மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து சங்கரசோழன் உலா என்ற நூல் பாடப்பட்டுள்ளது.இந் நூலின் ஆசிரியர் யாரென அறிமுடியவில்லை.மூவருலா பாடிய ஒட்டக்கூத்தரே இந்நூலை அருளினார் என்று கூறுவாரும் உளர்.

மட்டாருந் தென்களந்தைப் படிகாசன் என்னும் புலவர் புக்கோட்டைப் பகுதியைச் சார்ந்த வையத்தூர் பகுதியை ஆண்ட சிவந்தெழுந்த பல்லவராயன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு சிவந்தெழுந்த பல்வராயன் உலா படைத்துள்ளார்.
கயத்தாற்றில் ஆட்சிப் புரிந்த மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அந்தகக் கவிவீரராகவ முதலியார் கயத்தாற்று உலா என்னும் நூலைப் பாடியுள்ளார்.

இந்நூற்றாண்டில் ஆ. கு. ஆதித்தனார் என்னும் புலவர் பெருமகனார் இன்றும் நம்மிடையே நினைவில் வாழ்ந்துவரும் அரசியல் வித்தகர் காமராசரைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு காமராசர் உலா என்னும் நூலினைப் படைத்துள்ளார்.உலா நூலுக்குரிய நெறியுடனும் சொற்சுவையும் , பொருள் சுவையும் மிளிர ,கற்போர் உளம் கொள்ள தக்க வகையிலும் படைத்துள்ளார்.
நிறைவு
உலா நூல்கள் பெரும்பாலும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டே பாடப்பட்டுள்ளன.பின்னர் மனிதருள் சிறந்தாரைப் பாடும் மரபும் ப்பெறுகின்றது. தொன்மை வாய்ந்த உலா இலக்கிய வகை இருபதாம் நூற்றாண்டிலும் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்