நாகலிங்கப் பூ



இயற்கையில் எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா என வியந்து பாடத கவிஞர்களே இல்லை எனலாம்.இயற்கை அழகினைச் சுவைக்கும் பொழுது நம்மை அறியாமல் ஒரு இன்பநிலை எய்துவதை நாம் உணரலாம்.இயற்கையுடன் இரண்டறக் கலக்கும் பொழுது இறைநிலையை அடையலாம்.நம்முடைய சங்க இலக்கியப் புவர்கள் எல்லாம் இயறைகையோடு இயைந்து வாழ்ந்து,அவற்றை எல்லாம் தங்கள் படல்களில் பதிவு செய்தனர்.
நம் முன்னோர் இயற்கையை தெய்வமாகவே வணங்கினர்.இயற்கை அனைத்திலும் இறைவன் வீற்றிருப்பதாகப் பாடுவர் கடுவனிள வெயினனார் என்னும் புவர்.
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள;
நின் தண்மையும் சாயலும் திங்களுள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரியுள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்துல;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவையுள;
நின் தோற்றமும் அகலமும் நீரினுள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்துள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருந்திலுள;
நல்லழிசியார் என்னும் புலவர் பரங்குன்றத்தைக் காணுகிறார்,அதன் இயற்கை அழகில் தோய்த்து போகிறார். குன்றத்தில் நடக்க கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளையும் இயற்கை நிகழ்வகளோடு ஒப்பிடுகிறார்.
ஒரு திறம் பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம் யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம் கண்ணனார் குழலின் கரைபு எழ
ஒருதிறம் பண்ணனார் தும்பி பரத்திசை ஊத
ஒரு திறம் மண்ணார் முழவின் இசையெழ
ஒருதிறம் அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம் பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம் வாடை உளர்வயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம் பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
மாறுமாறு உற்றார்போல் மாறெதிர் கோடல்
மாறட்டான் குன்றம் உடைத்து(பரிபாடல்,17)
பூக்களின் இன்பத்தில் தோய்ந்த கபிலர் 99 வகையான மலர்களைத் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.நப்பூதனார் என்னும் புலவர் முல்லைப்பாட்டில் காட்டில் காணக்கூடிய மலர்களைக் குறிப்பிடுவார்.காயாம்பூ மை போன்ற நிறத்தில் மலர்ந்துள்ளது என்றும், கொன்றை மலர் பொன்துகள்களைச் சொரிவது போல தோன்றுகிறது என்றும் செங்காந்தள் மலர்கள் கைவிரல்கள் விரிந்தன போல்காட்சியளிக்கின்றது எனவும் தமது பாடலில் பதிவுசெய்கின்றார்.
செறியிலை காயா அஞ்சனம் மலர
முறியினர்க் கொன்றை நன்பொன் பால
கோடற் குவிமுகை அங்கை அவிழ
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
நத்தத்தனார் என்னும் புலவர் நெய்தல் நிலம் வழியே செல்கின்றார் அங்கு காணும் மலர்காட்சியைக் கவினுறப் பாடலாக வடிக்கின்றார்.
கடற்கரை சோலையில் உள்ள வெண்மணலில் தாழை மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. அதாழை மலர் அவருக்கு அன்னம் போலக் காட்சியளிக்கிறது.செருந்தி மலர் பொன்னோ என எண்ணி வியந்து போகின்றார். கழிமுள்ளி மலருநீலமணி போன்று மலர்ந்துள்ளதாம்.புன்னை மலர் முத்துப் போல் காட்சியளிக்கிறது.
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டம் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
இன்னும் எத்தனையோ பாடல்கள் நம்முடைய முன்னோர்கள் கவினுறக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இன்று நாம் வாழும் சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது சுருங்கிக் கொண்டு வருகின்றது. முன்பு மக்கள் தொகை குறைவு,அதனால் இயற்கை எங்கு காணீனும் வீற்றிருந்து களிநடனம் புரிந்தது.மனிதனும் அவ்இன்பத்தில் கலந்து கரைந்து வாழ்வை செம்மையாக வாழக் கற்றுக் கொண்டான்,அதனால் நோய்நொடி இல்லாமலும் மனமாசுகள் இன்றியும் நீண்ட காலம் தெளிவாக வாழ்ந்தான். இன்று உலக பரப்பு சுருங்குவது போல மனித மனங்களும் சுருங்கி,இயற்கை அழித்து வீடுகளாக்கி,இயற்கையை அழித்து செயற்கையாக்கி வருகின்றோம்.செயற்கையால் மனதில் தேவையில்லாத உணர்வுகள், நம்மை அழிவு பாதையை நோக்கி அழைத்துச்செல்கிறது.
இயற்கை அழிவால் புவி வெப்பமடைந்து நாம் வாழும் நிலப் பகுதியில் அபாயமான மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது. கரியமில வாயு(CO2 ) மீத்தேன்(CH4),நைட்ரஸ் ஆக்ஸைடு(N2O),எஃப் வாயுக்கள்(F gasses) போன்றவை மிகுதியாகி புவியை வெப்பமடையச் செய்கின்றன.
இதனை தடுக்க நாம் ஒவ்வொருவருக்கும் இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. நாம் சொல்லால் மட்டுமல்லாமல் செயல் படுத்த தொடங்க வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.முதலில் அதனை நேசிக்க கற்றுக் கொண்டால்தான் நம்மால் அதனைப் பாதுகாக்க முடியும் .நம்முடைய சங்க இலக்கியத்தில் வரும் தலைவி புன்னை மரத்தினைத் தனது அக்கா எனக் கூறும் காட்சியைக் காணும் போது இயற்கை படைப்புகள் ஒவுவோனைறையும் நாம் உறவுகளாகக் கொள்ளும் போது அது காக்கப்படுவதோடு நம் மனதும் மகிழ்வடைகிறது.
இப்படி எனக்கு அண்மை காலமாக மகிழ்வளிக் கூடிய ஒரு மரம் நாகலிங்க மரம்.இம் மரம் அண்ணாமல்ப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் அருகே இரட்டையரைப் போல இரண்டு நின்று மணம் பரப்பிக் கொண்டு இருக்கிறன.அண்ணாமல்ப் பல்கலைக் கழகத்திற்கு வந்த நாள் முதல் அதனைப் பார்த்துக் கொண்டு மட்டும் செல்லும் நிலை. கடந்த மூன்று மாதங்களாக பல்கலைக் கழகத்திற்குள்ளாகவே வசிக்கத் தொடங்கிய போது,ஒவ்வொரு நாளும் காலை நடைப்பயிற்சி போகும் போது அதனைக் காண்பதோடு மட்டுமல்லாமல் அதன் பூ பரப்பும் இனிய நறுமணத்தையும் நுகர்தவாறு செல்வேன்.அதனுடைப் பூவை பார்க்கும்போது அத்தனை வியப்பு இறைவன் படைப்பில் எத்தனை விந்தைகள் எனத் தோன்றுகிறது.
அது கொடுக்கும் சுகம் வார்த்தைகளால் வருணிக்கமுடியாது.சுற்றி இதழ்கள் நடுவே இலிக்கம் போன்ற அமைப்பு,மேலே ஆயிரம் தலையுள்ள நாகம் படம் எடுத்து இருப்பது போன்ற காட்சி என்னை ஒவ்வொரு நாளும் சிலிர்க்க வைக்கும். அதன் மொட்டுக்கள் உருண்டை உருண்டையாக மொட்டுகள் போல இருக்கும்.
இம் மரத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் தேடினேன்.இம் மரம் தென்னாப்பிக்காவின் வடப் பகுதி வெப்பவலய அமெரிக்கா,தென் கபிரியன் ஆகியப் பகுதிகளைத் தாயமாக்கொண்டது என அறியமுடிந்து.(விக்கிபீடியா)இது மக்னோலியோபைட்டா என்ற பிரிவையும் கூகியானென்சிஸ் இனத்தையும் சார்ந்தாகக் கூறப்படுகிறது.நான் கண்டு மகிழ்ந்த மரத்தின் ஒருநாள் நிகழ்வை கண்டு மகிழுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்