சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு (சிறப்பாய்வு - உறையூர்)
தமிழக ஊர்ப்பெயர் ஆய்வுகள் , 1. ஊர்ப்பெயர் புனைவுகளை ஆதரித்துப் பொருள் கூறுதல். 2. ஊர்ப்பெயர் புனைவுகளைக் கட்டுடைத்து அறிவார்ந்த நிலையில் விவாதித்தல். என இரண்டு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக 18 ஆம் நூற்றாண்டில் கோட் பிரைடுவில் ஹெல்ம் லெய்ப்னிஷ் என்பவர் இடப்பெயராய்வை ஒரு அறிவியல் துறையாகத் தோற்றுவித்தார். இத்துறை வரலாறு, மொழியியல் துறைகளில் அசைவுகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இடப்பெயராய்வு உலகளவில் கவனப்படுத்தப்பட்டு, மேற்கண்ட இரண்டு நிலைகளில் உலகளவிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடப்பெயர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன . வள்ளலார்(1828-1874) ஊர்ப்பெயராய்வில் விருப்பம் காட்டினார் என்றாலும் பெரிதாக ஈடுபடவில்லை. 1946 இல் வெளியான ரா. பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் என்னும் நூல் படிப்பதற்குச் சுவையாக இருப்பினும் ஆய்வு தொய்வுடையதாக அமைந்துள்ளது. (2008:206). திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தலபுராணங்களிலும் ஊர்ப்பெயர் பற்றிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் அக்காரணங்கள் புராண புனைவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ...