தேன் சிட்டும் சில முட்டைகளும்
தம்பிக்குப்
பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிறகு, போன்சாய் ஆல மரத்தைச் சீர் செய்ய வேண்டும் என்ற
எண்ணத்துடன் புலர்ந்தது அன்றையக் காலை பொழுது. வீட்டின் முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றுமாக இரண்டு போன்சாய்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட பத்தாண்டுகள்
கடந்த மரங்கள். அன்று காமராசர் பிறந்தநாள்.
சிட்டுக் குருவிகளின் சிணுங்கல்களும் தவிட்டுக் குருவிகளின்
ஆராவாமும், கிளிகளின் கொஞ்சல்களும், செம்போந்துவின் முணுமுணுப்பும், காக்கைகளின் கரைதலும்,
குயில்களின் கூவலும், அணிகளின் கீரீச்சிடலும் பரிதியன் கதிர்கள் சாரளத்தின் இடுக்குவழியேஎன்னவரின் புகைப்படத்தில்
பரவ விட்டிருந்த காலை இளம் பொழுதில் போன்சாய் மரத்தைச் சீர் செய்யத் தோட்டத்துக் கத்திரிக்கோலை
எடுத்தேன். வீட்டின் பின்புறம் இருந்த போன்சாய் ஆலமரத்தின் வளர்ந்த கிளைகளை வெட்டி
எடுத்தேன். வெட்டிய இடத்திலிருந்து பால் வடிந்து கொண்டே இருந்தது. வீட்டின் முன்புறம்
உள்ள செடியை ஒழுங்குப்படுத்த கத்திரியுடன் செடியருகே சென்றேன். சீர் படுத்தினேன். அந்நேரத்தில்
அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மா போன்சார் மரத்திற்கு அருகே
இருக்கும் சிறிய வெட்சி பூச் செடியையும் வெட்டிவிடச் சொன்னார். நானும் அதனை வெட்டியெடுத்தேன்.
அப்பொழுது விஜயும் (நாய்க்குட்டி) அங்கிருந்தான். அவன் வேகமான என்னைத் தாண்டி வந்து
தரையிலிருந்தை நக்கத் தொடங்கினான். அப்பொழுதுதான் கவனித்தேன். அது தேன்சிட்டுக்களின்
முட்டைகள் என்று. மனம் பதற வெட்டியச் செடியை எடுத்துப் பார்த்தேன். அதில் அழகான தேன்சிட்டுவின்
கூடு இருந்தது.
கிட்டத்தட்ட
நான்கு முட்டைகள் இருந்திருந்தன. நான் கவனமில்லாமல் வெட்டிவிட்டதை எண்ணி வருந்தினேன்.
அம்மா சொன்னவுடன் வெட்டிவிடேன். வழமையாக அந்த இடத்தில் சிறு குருவிகள் கூடுகட்டுவதுண்டு.
அந்த நினைவு இல்லாமல், கூடுகள் ஏதேனும் இருக்கிறதா என்று ஆராயாமல் வெட்டிவிட்டேன்.
என்னுடைய
நோக்கம் போன்சாய் ஆலமரத்தை வெட்டவேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் அம்மா கூறியதால்
வெட்டினேன் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொள்வதா? அவர்கள் தான் கூறினார்கள் என்றால் நீ ஆராய்ந்து பாராமல்
வெட்டியது குற்றம் தானே என்று என் மனம் கேள்வி எழுப்பியது. மறக்க முயன்றேன். இரண்டு
நாள் கழித்து கனவில் என் கூடு எங்கே என்ற குரல் என் காதில் ஒலித்தது.

கருத்துகள்