இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்


இரண்டாம் ஆண்டு நான்காம் பருவம்
19ITAMC41 – சங்க இலக்கியமும் செம்மொழி வரலாறும்




திணை
முதற்பொருள்( நிலம், பொழுது)
உரிப்பொருள்
கருப்பொருள்(தெய்வம், மக்கள்)
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்தும்
கூடலும் கூடல் நிமித்தமும்
முருகன் (தெய்வம்)
குளிர் காலம்
முன்பனி (பெரும் பொழுது)
யாமம் (இரவு 10 முதல் 2 மணி வரை) சிறு பெழுது
குறவன், குறத்தி (மக்கள்)
முல்லை
காடும் காடு சார்ந்தும்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
திருமால்
கார்காலம்
மாலை (முன்னிரவு 6 முதல் 10 வரை)
ஆயர், ஆய்ச்சியர்
மருதம்
வயலும் வயல்சார்ந்தும்
ஊடலும் உடல் நிமித்தமும்
இந்திரன்
ஆறு பெரும் பொழுதுகளும்
வைகறை (பின்னிரவு 2 முதல் 6 வரை)
உழவர், உழத்தியர்
நெய்தல்
கடலும் கடல் சார்ந்தும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
வருணன்
ஆறு பொழுதுகளும்
எற்பாடு (பிற்பகல் 2 முதல் 6 வரை)
பரதர், பரத்தியர்
பாலை
மணலும் மணல் சார்ந்தும்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
கொற்றவை
எயினர், எயிற்றியர்
இளவேனில், முதுவேனில், பின்பனி
நண்பகல் (பகல் 10 முதல் 2 வரை)
குறுந்தொகை


நல்ல குறுந்தொகை எனப் புலவர்களால் பாராட்டப்பட்டது. குறுந்தொகை என்பதற்கு குறும் பாடல்களைக் கொண்ட தொகை அல்லது தொகுப்பு என்று பொருள் படும்.  தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் தொகுப்பித்தவர் பூரிக்கோ. 400 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். கடவுள் வாழ்த்து பெருந்தேவனார் என்பவர் பாடியுள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகத்திணைப் பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்களின் அடிவரையறை 4 முதல் 8, நேரிசை ஆசிரியப்பாவினால் ஆனது. ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் பத்து உள்ளன. உவமையாலோ, தொடராலோ அல்லது சிறப்பு அடைமொழியாலோ பெயர்பெற்ற புலவர் எண்ணிக்கை 19. குறுந்தொகையில் வருணனை குறைவு. முதல், கருப் பொருள்களை விட உரிப்பொருளுக்குச் சிறப்பிடம் தரப்படுகிறது. உள்ளுறை இறைச்சி அளவாக அமைந்துள்ளன.
குறுந்தொகைப் பாடல்கள் உலகத் தரமுடையவை. உலகிலுள்ள எவ்வளவு சிறந்த காதல் பாடல்களுடன் ஒப்பிட்டு அதன் சிறப்பை உணரலாம். பல சான்றோர்களால் அதிகம் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டது இந்நூல் ஆகும். இலண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வண்டியில், உலகிற் சிறந்த குறும் பாடல்களை, அந்தந்த மொழி வடிவிலும் ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் அச்சடித்து வைக்கும் பழக்கம் உள்ளது. பிறகு இப்பாடல்கள் மண்ணுக்கடியில் மலரும் பாக்கள் என்று தொகுத்து அச்சுவடிவம் பெறுமாம். அங்கு யாயும் யாயும் என்று தொடங்கும் 40 வது குறுந்தொகைப் பாடல் பொறிக்கப் பட்டுள்ளது சிறப்பாகும்.


திணை  - நெய்தல்
125. தலைவி கூற்று
வரைவு நீடித்த  பொழுது தலைமகள் தோழிக்கு கூறுது போல சிறைபுறத்து இருக்கும் தலைவன் கேட்குமாறு கூறுவது.
இலங்குவளை நெகிழச் சாஅய் யானே
உளெனே வாழி தோழி! சாரல்
தழைஅணி அல்குல் மகளிர் உள்ளும்
விழவுமேம் பட்டென நலனே, பழவிறல்
பறைவலம் தப்பிய பைதல் நாரை
திரைதோய் வாங்குசினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு கண்மா றின்றே.
                                                            – அம்மூவன்
                                                                                                                            
விளக்கம்
தோழி! யான் எனது விளங்கும் வளையல்கள் நெகிழும்படி மெலிந்து இங்கு உயிருடன் இருக்கின்றேன். மலைப் பக்கத்தில், தழையுடை அணிந்த அல்குலையுடைய மகளிர்களுக்குள், விழாப் போலச் சிறப்பு மிக்க என் பெண்மையழகு பழைய மிடுக்கையுடையதும் பறக்கும் வலிமையை இழந்ததுமாகிய துனபமிகு வயதான நாரை, அலை வந்து பொருந்துமிடத்தில் வளைந்திருக்கும் மரக்கிளையில் தங்கியிருக்கும் படியான குளிருந்த கடற்கரைத் தலைவனால் என்னை விட்டு மாறித் தலைவனிடம் சென்றுவிட்டது. (யான் அழகை இழந்துவிட்டேன் விரைந்து திருமணம் செய்யவில்லை என்றால் உயிர் வாழமாட்டேன்)
உள்ளுறை
வயதான நாரை, அலை வந்து மோதும் போதும் மரக்கிளையில் இருந்து தானாக வரும் மீன்களை மட்டுமே தின்று உயிர் வாழும். தலைவன் தானாக வந்து ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உயிர் வாழ்வது இயலாது எனத் தலைவி கூறுவதாக அமைவது.
128.தலைவன் கூற்று
தலைவன் தன்னிடம் கூற்றமில்லை என்று உணர்த்திய பிறகும் தலைவி ஊடலைக் கைவிடாது நீட்டித்தல்.

குணக்கடல் திரையது பறைதபு நாரை
திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர்இரைக்கு அணவந் தா அங்குச்
சேயள் அரியோள் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே
-       பரணர்   

விளக்கம்
            நெஞ்சே! கிழக்கேயுள்ள கடல்லையின் பக்கத்தில் இருந்து பறத்தல் வலிமை தப்பிப்போன கிழட்டு நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையானது மேற்குக் கடற்கரையிலுள்ள தொண்டி நகரின் ஆறு கடலொடு கலக்கும் முன்துறையில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவுக்கு ஆசைப்பட்டுத் தலையை மேலே தூக்கி, அண்ணாந்தாற் போல, நம் விருப்பிற்கு, எட்டாத தூரத்திலுள்ளவளும் எளிதில் அடைய முடியாத அரியவளுமான தலைவியை அடைய எண்ணுகிறாய்! நீ துன்புறுதற்கான ஊழ்வினையை உடையாய்! எனவேதான் இவ்வாறு அரியதை நினைத்துத் துன்புறுகிறாய்!
  177. தோழி கூற்று
          கிழவன் வரவு உணர்ந்து தோழி கிழத்திக்கு உரைத்தது
கடல்பாடு அவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென்று அன்றே;
மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்றுஅவர்
வருவர்கொல் வாழி தோழி! நாம்தம்
புலப்பினும் பிரிவுஆங்கு அஞ்சித்
தணப்புஅரும் காமம் தண்டி யோரே?
-       உலோச்சன்

விளக்கம்
            தோழி! கடல் ஒலி அடங்கி, கடற்கரைச் சோலை ஒளி மங்கி, கடல் துறையிலுள்ள நீர்நிறைந்த கரிய கழிகளில், பூக்கள் கூம்பிப் பொலிவு அழிந்தது. ஊர் நடுவே மன்றத்தில் உள்ள பனையின் மடலில் கூடுகட்டி வாழும் அன்றிலும் நள்ளிரவாதலின் மிக மென்மையாகக் கூவும். முன்பு நாம் அவரைப் புலந்து ஊடி விலகினாலும், சிறிது நேரமும் அங்குப் பிரிதலை அஞ்சி, தமது நீங்குதற்கரிய காமத்தை நம்மை அலைத்தும் பெற்றுத் துய்த்த நம் காதலர், இனியும் பிரிந்திரார். இன்று அவர் நம்மைத் தேடி வருவார் போல் தோன்றுகிறது.

303. தோழி கூற்று
            தலைவியைக் காவலில் வைத்ததைத்(இற்செறிப்பு) தலைவனுக்கு அறிவித்து திருமணம் செய்துகொள்க எனத் தோழி வற்புறுத்துவது.

கழிதேர்ந்து அசைஇய கருங்கால் வெண்குருகு
அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியில் துஞ்சும் துறைவ!
தொல்நிலை நெகிழ்ந்த வளையள் ஈங்குப்
பசந்தனள் மன்என் தோழி என்னொடும்
இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழல்
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
 -       அம்மூவன்
கடற்கரைக் கழிகளில் மீன் உணவைத் தேடி உண்டு தங்கிய, கரிய கால்களையுடைய வெள்ளை நிற நாரை, கடலோரக் கரையிலுள்ள தாழை மரங்களில் குழுமி, பெரிய கடற்கரையின்கண் மோதி உடையும் அலை ஓசையில் உறங்கும் தலைவ! என்தோழி என்னுடன் இனிய பூங்கொத்துகளையுடைய புன்னை மரத்தின் புள்ளி நிழலில், பொற்கோடுகளையுடைய நண்டுகளை ஆட்டி விளையாடிய அக் காலத்திலேயே, பழைய நிலை மாறி நெகிழ்ந்த வளைகளை உடையவளாய், ஈங்கு மிகுந்த பசலையை உடைய மேனியளாயினாள்!

397 . தோழி கூற்று

வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.

நனைமுதிர் ஞாழற் சினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
தாய்உடன்று அலைக்குங் காலையும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினள்என் தோழி!
தன்உறு விழுமம் களைஞரோ இலளே
-       அம்மூவன்

அரும்பு முதிர்ந்த ஞாழல் மரத்தினது, மீன் முட்டை போன்ற திரண்ட பூக்களை, கீழேயுள்ள நெய்தலின் பெரிய மலர்களின் மீது பெய்து நிரப்புவது போல ஊதைக்காற்று வீசித்தூற்றும் வலிய கடற்கரைத் தலைவ! தாய் சினந்து அடிக்கும் பொழுதும் வாழ்விட்டு அம்மா என்றே கூவி அழும் குழந்தையைப் போல, நீ இன்னாதவற்றைச் செய்தாலும் இனிதாகத் தலையளி செய்தாலும் என் தோழி, உன் எல்லைக்கு உட்பட்டவள்; தனக்கு நேரும் துன்பத்தைக் களையக் கூடியவர்களாக வேறு யாரும் இல்லாதவள்.

  
நற்றிணை
           எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது.  இத்தொகுப்பு ஒன்பது அடி முதல் பன்னிரண்டடி வரையில் உள்ள நானூறு அகவற்பாக்களைக் கொண்டது.  இப்பாடல்கள் உயர் தத்துவங்களைக் கொண்டுள்ளன. சான்றோர் செல்வம் என்பது தன்னுடன் சேர்ந்தோர் தம் துன்பத்தை அறிந்து அதனைப் போக்குவதற்குரிய வழிகளைக் காண்பது ஆகும். வேகமாக ஊர்திகளிலே செல்வதும் தன்னிடம் வேலை செய்வதற்கு ஏராளமாக வேலை ஆட்களை வைத்திருப்பதும் செல்வம் இல்லை என்பது போன்ற பண்பாட்டுக் கூறுகள் காணப்படுகின்றன. இத் தொகுப்பை உருவாக்கியவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
குறிஞ்சி பாடல்கள்

206. தோழி கூற்று
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

துய்தலைப் புனிற்றுக்குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடுஅலைக் கொண்டன ஏனல் என்று,
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇ
செவ்வாய்ப் பாசினம் கவருமின்று அவ்வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்கென
எந்தைவந்து உரைத்தன னாக அன்னையும்
நல்நாள் வேங்கையும் மலர்கமா, இனிஎன
என்முகம் நோக்கினாள்; எவன்கொல்? – தோழி
செல்வாள் என்றுகொல்? செறிப்பல் என்றுகொல்?
கல்கெழு நாடன் கேண்மை
அறிந்தனள் கொல்?  அஃது அறிகலென் யானே.
-       ஐயூர் முடவனார்
தோழி! தினைக்கதிர் குலைகள் முற்றிப் பால் கொண்டு தலை சாய்த்து நிற்கின்றன. கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தினைத் கதிர்களைக் கொய்து கொண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை ஓட்டும் பொருட்டுப் புனத்திடையே சென்று கவண் கற்களைக் கொண்டு எறிந்தும் தட்டையினால் அடித்தும், கூடியுள்ள கிளிகளை விரட்ட வேண்டும். அதற்காக நீ செல்க என்று தந்தை கூறினார். அது கேட்ட தாய் திருமண நன்னாளைக் காட்டுகின்ற வேங்கை விரைவில் மலரட்டும் என்று கூறி என் கண்களை உற்றுப் பார்த்தனள். அதற்கு என்ன பொருள்? தினைப் புனைத்தைக் காப்பதற்காகச் செல்க என்று பொருளா? தலைவனுடன் உறவு கொண்டதை அறிவேன் என்று பொருளா? உன்னை வீட்டுக்காவலில் வைப்பேன் என்று பொருளா? எனக்குத் தெரியவில்லை என்று தோழி கூறினாள்.
217. தலைமகள் கூற்று
தலைமகள் வாயில் மறுத்தது.

இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்தொறும் பொலியும், கதழ்வாய் வேழம்
இருங்கேழ் வயப்புலி வெரீஇ, அயலது
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்
பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன்
நனிபெரிது இனியன் ஆயினும் துனிபடர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்புசேண் அகல நீந்தி
புலவி உணர்த்தல் வன்மை யானே.
-       கபிலர்
தோழி! புகழ் மிகுதிப்படும்படியாக வாழ்கின்ற செல்வமானது நாளுக்கு நாள் வளரும். வேகமாகச் செல்லக்கூடிய யானை ஒன்று, கரு நிறத்தை உடைய புலியைக் கண்டு அஞ்சி அந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்றது. யானை தன் கோபம் தணியுமாறு வேங்கையின் அடிமரத்தைக் குத்திக் தனது பெரிய கோபத்தைத் தணித்துக் கொண்டது. அத்தகைய குன்றுகளுக்கு உரியன் நம் தலைவன். அவன் செய்த செயலை எண்ணி மனம் வருந்தி ஊடல் கொண்டுள்ளேன். நான் கொண்ட ஊடலைத் தெளிவிக்கக் கருதி என்னிடம் வந்துள்ளாய். தலைவன் புலவி நீங்கப் பணிவு காட்டும் வன்மையை உடையவன் என்பதை நீ காண்பாய் என்று தலைவி கூறினாள்.
304. தலைவி கூற்று
வரையாது நெடுங்காலம்  வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.

வாரல் மென்திரைப் புலவுக்குரல் மாந்தி
சாரல் வரைய கிளையுடன் குழீஇ
வளிஎறி வயிரின் கிளிவிளி பயிற்றும்
நளிஇருஞ் சிலம்பின் நல்மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாயஎன்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறோலோன் மார்பே.
-       மாறோகத்து நப்பசலையார்.
தோழி! தினையின் நீண்ட மெல்லிய கதிர்களைக் கிளிகள் தின்னும்; தின்ற பின்னர் மலைசாரலில் உள்ள பாறைகளின்மீது அமர்ந்து கொண்டு ஒலி எழுப்பும்; அவை ஒன்றையொன்று கூவி அழைக்கும். அத்தகைய மலையிடத்து வாழ்கின்ற மலை நாட்டவன் நம் தலைவன். அவன் என்னைக் கூடினான் ஆயின். நல் அழகு உடலில் தோன்றும். அவன் என்னை விட்டுப் பிரிந்தான் ஆயின் பொன் போன்ற என் மேனி பசலை பூத்த அழகு அழிந்து போகும். ஆதலினால் நம் தலைவனுடைய மார்பானது அசுணமாவைக் கொல்பவரின் கை போல உள்ளது. அசுணமா என்னும் விலங்கு இன்னிசையை அறிந்து மயங்கும் தன்மை வாய்ந்தது.அவ்விலங்கனைக் கொல்ல விரும்புகிறவர்கள் நல்ல இசையை எழுப்புவர். அதனைப் பொறாமல் பாறையில் வீழ்ந்து அவ்விலங்கு இறந்துவிடும்.
334. தோழி கூற்று
தோழி இரவுக்குறி முகம் புக்கது.

கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை
பெருவரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்குகழை ஊசல் தூக்கி வேங்கை
வெற்புஅணி நறுவீ கற்சுனை உறைப்பக்
கலையொடு திளைக்கும் வரையக நாடன்
மாரி நின்ற ஆர்இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து, ஒருவேல் ஏந்தி
மின்னுவசி விளக்கத்து வரும்எனின்
என்னோ தோழிநம் இன்உயிர் நிலையே?
-       ஐயூர் முடவனார்
தோழி! நம் மலையக நாடன் எத்தகைய ஊரில் இருக்கிறான் தெரியுமா? அவனுடைய ஊரில் இருக்கிற கரிய விரல்களைக் கொண்ட மந்திக் கூட்டமானது மலைப்பக்கத்தில் உள்ள அருவியில் நீராடி மூங்கில்களின் முனையைப் பற்றிக் கொண்டு ஆடும். அப்பொழுது அத்தகைய மந்திகள் ஆண் குரங்குடன் கூடும். இத்தகைய மலையிலே வசிக்கிறவன் நம் தலைவன். அவன் மாரிக்காலத்தில் மழைபெய்துகொண்டிருக்கும் பொழுது நடு இரவிலே கையினில் வேல் ஏந்தியவனாக மலைப் பகுதியின் சிறிய வழியிலே மின்னல் மின்னும் வெளிச்சத்தைக் கொண்டு வழி அறிந்துகொண்டு வருகிறான். நம்மைக் காண்பதில் தலைவன் பெரு விருப்பம் உடையவனாக இருக்கிறான். இந்நிலை நீடிக்குமானால் நம்முடைய இன்னுயிர் என்னவாகும் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுடைய ஆர்வத்தை நீ உணர்ந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன்.
383. தோழி கூற்று
தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.

கல்அயற் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென வயப்புலி
புகர்முகம் சிதையத் தாக்கி, களிறுஅட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனைஇருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்புஉடன்று இரிக்கும் உருமோடு
ஓங்குவரை நாட! நீ வருத லானே.
-       கோளியூர் கிழார் மகனார் செழியனார்

உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்த தலைவனே! நீ தலைவியிடம் அன்பு பாராட்டுவது போல நடந்து கொண்டாலும் உண்மையிலேயே அன்பு உடையவன் இல்லை. மலையின் சரிவில் வேங்கை பூத்துக் காணப்படுகிறது. அவ்வேங்கை மலர்களின் மாலை போன்ற பெண் புலிக்குட்டிகளை ஈன்றுள்ள பெண்புலி பசியாலே வாடி வருந்தியதாக, அதனைத் தெரிந்து கொண்ட ஆண் புலி இரை தேடி வரப் புறப்பட்டது. ஒரு ஆண் யானையை முகத்திலே தாக்கிக் கொன்று வீழ்த்தியது. வெற்றிக் களிப்பால் அந்தக் காட்டிலே உரத்த குரலில் முழக்கமிட்டது. அச்சமிகுந்த அந்த இரவு நேரத்தில் இடியோசையால் கலங்கிய பாம்பு மிகவும் கோபம் கொண்டு நீ வருகின்ற வழியில் தங்கியிருக்கும், அத்தகைய மலைப் பாதையின் வழியாக நீ வருகிறாய். எங்கள் கவலையைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் நீ வருகின்ற காரணத்தால் எங்கள் பால் காதல் உள்ளவன் இல்லை என்று தோழி கூறினாள்.



ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு – கடைச்சங்க நூல், எட்டுத்தொகையுள் ஒன்று. காதல் ஒழுக்கத்தைப் பாடும் அகநூல். அதன்கண் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசையில் திணைக்கு நூறு வீதம் ஐந்து திணைக்கும் ஐநூறு பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஐந்து திணைகளையும் ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்று ஐந்து திணைகளைப் பாடியுள்ளனர்.

ஓரம்போகியார்

வேழப்பத்து
            மருத நிலத்து கருப்பொருள்களுள் வேழம் என்ற கருப் பொருள் பத்துப் பாடல்களிலும் பயின்று வருவதால் இப்பகுதி வேழப்பத்து என அழைக்கப்பெறுகிறது. வேழம் என்பது நீர் நிலைகளில் ஓங்கி வளர்கின்ற தட்டை போன்ற ஒருவகை பயிராகும். இது உள்ளீடில்லாத பயிராதலால் கரும்பு, மூங்கில் ஆகியன போலப் புல் வகையில் அடங்கும். இது வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்துப் பயிர். தனை வேழக் கரும்பு என்றும் கொறுக்கச்சி என்றும் வழங்குவர். இதனை இக்காலத்தார் கொறுக்கந்தட்டு என்பர்.

17. தலைவி கூற்று
 தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்றான். இவ்வாறு நடப்பது ஆடவரின் இயல்பு தானே! இதற்கு ஏன் நீ மனம் வருந்துகிறாய் என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது.

  புதல்மிசை நுடங்கும் வேழவெண்பூ
விசும்படு குருகில் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடம்கெழு நெஞ்சே.

                        தான் வளர்ந்து நிற்கும் புதரின் மேலே அசைகின்ற வேழத்தின் வெண்மையான பூக்கள் கருமையான வானத்தின் மீது பறக்கும் வெள்ளைக் குருகு போலத் தோன்றும். அத்தகைய இயல்பினையுடைய ஊரனாகிய நம் தலைவன் புதுப்புதுப் பரத்தைப் பெண்களின் மீது மோகமுடையவன் என்பதை அறியாது மடமை மிகுந்த என் நெஞ்சம் அவனை நினைந்து மெலிந்து போகிறது.

18 தலைவி கூற்று

            பரத்தையிடம் வாழ்ந்த தலைவன் அவளைவிட்டுப் பிரிந்து தலைவியிடம் வந்து, இனி பிரியமாட்டேன் என்று உறுதி கூறித் தலைவியைச் சேர்ந்தான். பிறகு பரத்தையிடம் பிரிந்தான். அங்கிருந்து வரலாமா என்று கேட்டு விட்டதூதுவர்களாகியவாயில்களுக்குத் தலைவி கூறும் செய்தி.

இருஞ்சாய் அன்ன செருத்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்துமலர் அன்னென் கண்அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.

கரும் கோரயைப்போலத் தோன்றும் செருந்தியுடன் சேர்ந்த வேழம் கரும்பு போலக் கழனிகளில் காற்றினால் சுழன்று அசையும். அத்தகைய கழனிகள் நிரம்பியூரனாகிய தலைவன் முன்பு வந்து சேர்ந்த போது இனிபிரியேன் என்று கூறினான். பின்பு மலர் போன்ற என் கண்கள் மழை பொழியுமாறு பிரிந்தான்.

புனலாட்டுப் பத்து
            புனலாடுதல் பொருளாக எழுந்த கூற்றுக்களை உள்ளடக்கிய பாட்டுகளின் தொகுதியாதலால் இது புனலாட்டுப் பத்து எனப் பெயர் பெற்றது
.
          71. தலைவி கூற்று

            தலைவன் பரத்தையர்களோடு புனல் விளையாடினான். அதனைக் கேள்விக்பட்டுத் தலைவி ஊடல் கொண்டாள். தலைவன் புனல் ஆடவில்லை என மறுத்த போது தலைவி சொல்லியது.

சூதார் குறுந்தொடிச் சூரம நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே

            சூதாடும் காய் போன்ற மூட்டுவாய் அமைந்தது தோளில் அணியும் குட்டையான தொடி. வளைவை உடையது நெளி வளையல், தொடியும் வளையலும் அணிந்தவள், நீ விரும்பும் காதல் பரத்தை. அவனைத் தழுவியபடி நேற்றுதான் நீராடினாய் என்று ஊரார் கூறுகிறார்கள். ஊர் வாயை அடைக்க முடியுமா? சூரியனின் ஒளியை மறைக்க முடியுமா?

75. தோழி கூற்று
            பரத்தையோடு புனலாடிஇட்டு வீடு திரும்பிய தலைவன் தான் ஆடவில்லை என்று மறுத்தான். அதற்குத் தோழி வாயில் மறுத்துக் கூறியது.

பலர்இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்
அலர்தொடங் கின்றால் ஊரே மலர
தொல்நிலை மருதத்துப் பெருந்துறை
நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே.

            மகிழ்நனே! பெருந்துறையில் நீ ஒருத்தியோடு நீராடினாய், இல்லை என்று நீ மறுத்தாலும் அதனைக் கண்டவர் பலர். அதனால் அந்நிகழ்ச்சி ஊர் வாயுள் புகுந்து அம்பலமாயிற்று.

எருமைப்பத்து
இப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமையாகிய மருத நிலக் கருப்பொருளே சிறப்பித்துக் கூறப்படுவதால் இப்பகுதிக்கு எருமை பத்து எனப் பெயரிடப்பெற்றது. எருமையின் ஆணினைக் கடா, போத்து, ஏறு எனவும் பெண்ணினை நாகு, பெடை எனவும் சான்றோர் வழகினர்.

வாயில்கள் கூற்று
தலைவன் பரத்தையர் பலருடன் பழகுவதைப் பொறுக்காத தலைவி, தலைவன் வீடு திரும்பிய போது அவனை ஏற்றுக்கொள்து அறிந்த வாயில்கள் தமக்குள்ளே பேசியது.
 
96. அணிநடை எருமை ஆடிய வள்ளன்
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்குங்
கழனி யூரன் மகனிவள்
பழன வூரன் பாயலின் துணையே.

            அழகிய நடையினை உடையது எருமை. அது உழக்கிய சேற்றில் நீலமணி போன்ற நிறமுடைய நெய்தலும் ஆம்பலும் தழைத்து வளரும் கழனிகளை உடைய ஊரனின் மகள் தலைவி. இவள் பழனங்களை உடைய ஊரனாகிய தலைவனின் படுக்கைக்கு இனிய துணைவி ஆயினாள்.

           

 அகநானூறு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூறு பதிமூன்றடிச்சிறுமையும் முப்பத்தோரடிப் பெருமையும் உடைய பாடல்களைக் கொண்டது. அகநானுற்றுப் பாடல்கள் மூன்று பிரிவுளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1- 120 பாடல்கள் களிற்றுயானை நிரை என்றும் 121 – 300  பாடல்கள் மணிமிடை பவளம் என்றும் 301 – 400  பாடல்கள் நித்திலக்கோவை என்றும் பெயரிடப்பெற்றுள்ளன. 400 பாடல்களுள் 1,3,5,7,9… என அமைந்துள்ள பாடல்கள் பாலைத்  திணையாகவும் 2,8,12,18… என வரும் பாடல்கள் குறிஞ்சித் திணையாகவும் , 4,14… என வரும் பாடல்கள் முல்லைத் திணையாகவும், 6,16…என வரும் பாடல்கள் மருதத் திணையாகவும், 10,20… என வரும் பாடல்கள் நெய்தல் திணையாகவும் அமைந்துள்ளன. இந்நூலைத்தொகுத்தவர் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

பாலைத் திணைப் பாடல்கள்

147. தலைவி கூற்று

தலைவன் வினைவயிற் பிரிந்தமையைத் தோழி, தலைவியின் பாற் சென்று கூறினாள். அதற்கு அவள் தோழிக்குத் தன் கருத்தினைக் கூறியது.

ஓங்குமலை சிலம்பின் பிடவும் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
ஊன்பொதி அவிழாக் கோட்டுஉகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர்அளைப் பிணவுப் பசி கூர்ந்தென
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவுஅயர்ந் திசினால் யானே பலபுலந்து
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய்,
தோளும் தொல்கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே.
-       ஔவையார்

தோழியே நம் தலைவன் பிரிந்தமையால் யாவற்றையும் வெறுத்தேன்; உண்ணாத வருத்தத்தால் உயிர் போகும் அளவு உடல் மெலிவுற்றேன்; என் தோள்களும் பழைய அழகு கெட்டன; பிரிந்த தலைவரது பிரிவிற்கு இரங்கி யான் கொண்ட நோய்க்கு வேறு மருந்து இல்லாமையால் செய்வதறியாது செயலற்றுப் போனேன்.
            பெண் புலியானது உயர்ந்த மலையின் பக்கத்து மலையின்கண் பாறையின் பிளப்பாகிய குகையில் முடுக்கிலே பிடவுடன் மலர்ந்த வேங்கையின் மணங்கமழும் பூவுடன் கூடிய தழையை வேறு வேறாக வகுத்து வைத்தாற் போன்ற, தசையின் மூட்டம் விரியாத வளைந்த நகத்தினையுடைய குட்டிகள் மூன்றினை ஒருசேரப் பெற்றெடுத்தது. அதனால் வலுவிழந்து ஓய்ந்து போனபெண்புலி பசி மிக்கதாக, அதன் பசியைப் போக்கக் கருதிய புள்ளிகள் விளங்கும் பிளந்த வாயையுடைய ஆண்புலி, அறல்பட்ட கொம்பினையுடைய ஆண் மானினது குரலினைக் கூர்ந்து கேட்கும். அத்தகைய கவர்த்த வழிகளைக் கொண்ட கடந்து செல்லுதற்கரிய நெடிய காட்டிலே, தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதி என்பவளைப் போல, யானும் என் தலைவனைத் தேடிச் செல்வதற்குப் பெரிதும் விரும்பினேன்.

303. தலைவி கூற்று

பொருள் ஈட்டி வரும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்தான்; பிரிவாற்றாது வருந்திய தலைவி தவப் பெரிய காம வேட்கை கொண்டு, தன் நெஞ்சிற்குக் கூறியது.

இடைபிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து
பேஎய் கண்ட கனவின், பல்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்,
மறம்மிகு தானை, பசும்பூண், பொறையன்
கார்புகன்று எடுத்த சூர்புகல் நனந்தலை
மாஇருங் கொல்லி உச்சித் தாஅய்
ததைந்துசெல் அருவியின் அவர்எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன்
உரைசால் வண்புகழ்ப் பார பறப்பின்
நிரைபறைக் குழீஇயினம் காலைப் போகி,
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பின் ஆகி, பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு
வருவர்என்று உணர்ந்த, மடம்கெழு நெஞ்சம்!
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
வறல்மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கணநிரை மணியின், ஆர்க்கும் சுரன்இறந்து,
அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின், யானே.
-        ஔவையார்

            நம்மிடையே நிகழ்ந்தவற்றைப் பிறர் அறிதல் கூடாது என்று அஞ்சி, பேய் தான் கண்ட கனவினைக் கூறாதது போன்று நாமும் கமுக்கங்களைப் பிறர் அறிய வெளிப்படுத்தாது மறைக்கிறோம். இருப்பினும் காதல் மிகுதியை மறைத்தல் இயலவில்லை. வென்றிதரும் வேலினையும், மறம் செறிந்த படையினையும், பசும்பொன்னாலான பூண்களையும் உடைய சேரனது கொல்லிமலை அளக்கலாகா அளவும் தோற்றமும் உடையது. தெய்வங்கள் விரும்பி வாழும் அகன்ற இடத்தை உடையது. அம்மலையின் உச்சியில் படிந்தாடும் மேகம் பெருமழையைப் பெய்தமையால், குதித்து ஓடி வரும் அருவியின் ஒலியினைப் போல தலைவர்பால் கொண்ட காதல் அலராகி வெளிப்படுமாறு நம் தலைவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றார்.
            வள்ளல் பாரி தம்முடைய அறவினையே பற்றுக் கோடாகக் கொண்டு பரிசிலர் வருவாராயின் அவர்களுக்கு மலைபோலும் களிறுகள் பலவுடன் நல்ல அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுப்பவன். கைவண்மை செய்தலைக் கடமையாகக் கொண்டவன். பலரும் போற்றிக் கூறும் வானளாவிய புகழினை உடையவன். அவனது பறம்பு மலையில் நிரலாகப் பறத்தலையுடைய குருவிக் கூட்டம் காலையில் பறந்து சென்று முற்றிய நெற்கதிர்களைக் கொண்டு வந்து தரும்பொருட்டு அக்கதிர்கள் உள்ள இடங்களைத் தேடித்திரிந்து ஞாயிறு மறைய, துனபம் தரும் மாலைப் பொழுதில் கதிர்களைக் கொய்து கொண்டு மீண்டு வரும். அதுபோல, நம் தலைவரும் பொருளீட்டிக் கொண்டு குறித்த பருவத்தில் மீண்டு வருவார்என்று எண்ணிய அறியாமையையுடைய நெஞ்சமே! நினது ஐயத்தை விட்டு அவர் வாரார் என்று தேற்றமாகத் தெளிந்து கொள்வாயாக!
            வற்றல் மரங்களிலே பொருந்தியுள்ள சிளவீடு என்னும் வண்டுக், உப்பு வணிகருடைய கூட்டமாகச் செல்லும் எருதுகளின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஒலியினைப் போல ஒலிக்கும். பாலை நிலத்தைக் கடந்து, நீர் வற்றும் பொழுது அதிலுள்ள மீன் நீருள்ள இடத்துக்கு மூண்டு சென்றாற் போல, யானும் எம் தலைவர் சென்றவழி செல்லுதற்குத் துணிந்தவிட்டேன்.

371.தலைமகன் கூற்று

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றான். சென்றவன் இடைச்சுரத்துத் தன் தலைவியை நினைந்து அவள் நிலையை தனியனாய் அத்தம் நீந்தும் எம்மினும் என்னாகும் எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

அவ்விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை
செவ்வாய்ப் பகழி, செயிர்நோக்கு ஆடவர்
கணைஇடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளி,
குறுநெடுந் துணைய மறிபுடை ஆட
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை
மேய்பதம் மறுத்த சிறுமையொடு, நோய்கூர்ந்து
நெய்தல்அம் படுவில் சில்நீர் உண்ணாது,
எஃகுஉறு மாந்தரின் இண்ந்துகண் படுக்கும்,
பைதுஅற வெம்பிய பாழ்சேர் அத்தம்,
எமியம் நீந்தும் எம்மினும் பனிவார்ந்து
என்ன ஆம்கொல் தாமே தெண்நீர்
ஆய்சுனை நிகர்மலர் போன்ம் – என நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதுஆர் கூந்தல்நம் காதலி கண்ணே?
                                                  எயினந்தை மகன் இளங்கீரனார்


நெஞ்சே! நாணேற்றிய வலிமை பொருந்திய  வில்லினையும், குருதியாற் சிவந்த வாயினையுடைய அம்பினையும், செங்கண்ணாற் கோவித்துப் பார்க்கும் பார்வையினையும் உடைய மறவர்கள் அம்பு கொண்டு எய்தமையால் பெண்மான் இறந்துபட்டது. அத்துன்பத்தை உணராத குட்டிகள் தன் பக்கத்தில் விளையாடித் திரிய, முறுக்குண்ட கொம்பினைஉடைய ஆண்மான் தன் காதல் மிக்க பிணையினை நினைத்து வருந்தி மேயும் தன் உணவினை வெறுத்தது. களர் நிலத்துக் குழியில் தேங்கி நின்ற சிறிதளவு நீரையும் பருகாது, அம்பு தைக்கப் பெற்ற மக்களைப் போன்று பெரிதும் வருந்திக் கண்ணயர்ந்து கிடந்தது.
            மலர்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டுகள் ஒலிக்கின்ற மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய நம் தலைவியின் கண்கள், அருஞ்சுரம் கடந்து செல்லும் நாம் அடையும் துன்பத்தைக் காட்டிலும், நீர் ஒழுகப் பெற்று எத்தகைய துன்பத்தை அடையுமோ?



கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவுதாழிசைதனிச்சொல்சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம்.

104 . முல்லைக்கலி
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
5
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
15
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்;
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின்
20
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான் வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு
25
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி;
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
30
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு;
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தாளை
35
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்;
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன்
40
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்;
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று,
45
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகல் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும்
மீளி மறவனும் போன்ம்
50
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர்,
55
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ;
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,
60
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ;
பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு;
நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்,
65
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்;
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல்,
70
'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்;
நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த
75
ஊராரை உச்சி மிதித்து;
ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே.

கீழே உள்ள இணைப்பில் விளக்கம் உள்ளது.



புறநானூறு
     புறவாழ்வு பற்றி முழுமையாகக் கூறும்  நூல்கள் புறநானூறு , பதிற்றுப்பத்து என்பன. புறநானுறு நானூறு பாடல்களைக் கொண்டது. அவற்றுள் இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை.  புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப்படாலை பெருந்தேவனார் பாடியுள்ளார். 153 புலவர்கள் பாடியுள்ளனர். தமிழர் நாகரிகம், பண்பாடு, அரசியல், தொண்டு இன்னவை அறிய அரிய கருவி நூல் புறநானூறு.

66. நின்னினும் நல்லன்
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன்மருக
களியியல் யானைக் கரிகால் வளவ,
சென்று அமர் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.
   பாடியவர் -  வெண்ணிக் குயத்தியார்
   பாடப்பட்டவர் – சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை – வாகை - வெற்றி
துறை – அரசவாகை – அரசனது வெற்றி
   குளிர்ந்த பெரிய கடலில் பருவக்காற்றை அறிந்து கப்பல் செலுத்திக் கடலாட்சி புரிந்த வலியவன் வழியில் வந்தவனே. செருக்கும் இயல்புடைய யானைகளைக் கொண்ட கரிகால் வளவனே. நின் வலிமை தோன்றப் போரில் வெற்றி கொண்டவனே. நிறைந்த வருவாயை உடைய வெண்ணிப் போர்க்களத்தில் உண்டாகிய முதுகுப் புண்ணுக்கு வெட்கி வடக்கிருந்து புகழ் உலகம் எய்திய சேரலாதன், உன்னினும் வெற்றி நலம் வாய்ந்தவன் அல்லனோ?

83.அச்சமும் நாணமும்
அடிபுனை தொடுகழல் மை அணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போல் பெருவிதுப் புறுக என்றும்
ஒருபால் படாஅ தாகி
இருபால் பட்டிம் மையல் ஊரே.
பாடியவர் –பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டவர் – சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி
திணை – கைக்கிளை – ஒரு தலைக் காதல்
துறை – பழிச்சுதல் – பரிசில் பெற வந்தவன் , புரவலனை வாழ்த்துதல்

     காலில் அணிந்த வீரக்கழலையும் கரிய தாடியையும் உடைய காளைபோன்றவன் பொருட்டு, என் வளையல் கழலுதற்கு யான் என் தாய்க்கு அஞ்சுவேன். அவன் வலிய தோளைத் தழுவுவதற்குக் கூடிய கூட்டத்திற்கு நாணம் கொள்வேன்; எப்போதும் ஒரு தன்மைத்து ஆகாமல் இரு தன்மையதாய் உள்ள இம் மயக்க மிக்க ஊர், என்னைப் போல் அஞ்சி நடுக்கம் கொள்வதாக.

140. தெளியாத நடை
தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்,
வளைக்கை விறலிர் படப்பைக் கொய்த
அடக்கின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வெண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே.
பாடியவர் – ஔவையார்
பாடப்பட்டவர் – நாஞ்சில் வள்ளுவன்
திணை – பாடாண் – ஒருவரின் புகழ், வலிமை, கொடை, அருள் சிறப்பித்துக் கூறுவது
துறை – பரிசில் விடை -  பரிசில் பெற வந்தவன் பெற்றாலும், பெறாவிட்டாலும் விடைபெறுதல்.
    அகன்று பரந்த பலா மரங்களையுடைய நாஞ்சில் மலைத் தலைவன் மெய்யாகவே மடையன்; செவ்விய நாவையுடைய புலவர்களே, வளையல் அணிந்த கையை உடைய விறலியர் தோட்டத்தில் பறித்த கீரைக்கு இடு பொருளாக நாங்கள் சில அரிசியை வேண்டினோம்; அவன் பரிசிலருக்கு வழங்கும் தகுதி அறிதலால் எம் வறுமையைப் பாராமல் தன் மேம்பாட்டை ஆராய்ந்து இடம் சூழக் கொண்ட மலைபோன்ற தொகு யானையை அளித்தான். ஆதலால், ஒருவற்கு ஒன்றைக் கொடுக்கும் போது அத்தகைய ஆராயாக் கொடையும் உண்டு போலும்; பெரியவர்கள் தாங்கள் செய்தற்குரிய கடமையைத் தெரிந்து செய்யார் போலும்.
  
 187. மண்ணின் மதிப்பு
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
பாடியவர் – ஔவையார்
திணை – பொதுவியல் – எல்லாத் திணைக்கும் பொதுவான செய்தியைத் தொகுத்துக் கூறல்.
துறை – பொருள்மொழிக்காஞ்சி – உயிருக்கு நலம் செய்யும் இம்மை மறுமை கடமைகளை எடுத்துக் கூற்றுவது.
   நீ ஓரிடத்து நாடாகவும் ஓரிடத்துக் காடாகவும் ஓரிடத்துப் பள்ளமாகவும் மேடாகவும் உள்ளாய் எவ்வாறாயினும் நல்லோரும் செயல் வல்லோரும் அவ்விடத்தில் உள்ளனராயின் அவ்விடத்தில் நீயும் நல்லதாக உள்ளாய்; நிலமே வாழ்வாயாக.

226. பரிசில் பெறு கூற்றம்
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்டேர் வளவற் கொண்ட கூற்றே.
பாடியவர் – மாறோகத்து நப்பசலையார்
பாடப்பட்டவர் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை – பொதுவியல்
துறை – கையறுநிலை – இறந்தவரின் சிறப்பைப் பாடுவது.
  மனத்தின் கறுவு கொண்டாவது, வெளிப்பட வெகுளி கொண்டாவது நேரிலே நின்றாவது கூற்று, வளவனைக் கொன்று தப்பியிராது.  மனதில் கறுவுகொண்டாவது, வெளிப்பட வெகுளி கொண்டாவது  நேரிலே நின்றாவது கூற்று வளவனைக் கொன்று தப்பியிராது. பாடுவர் போல வந்து வணங்கிப் பாராட்டி இரந்து கொண்டு பெற்றிருக்க வேண்டும், பொன் மாலையையும் வலிய போரில் வெல்லும் படையையும் திண்மையான தேரையும் உடைய வளவன் உயிர் கொண்ட கூற்று.

  232. கொள்ளாதோன் கொள்வானோ
 இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நாரரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே
பாடியவர் – ஔவையார்
துணை – பொதுவியல்
துறை – கையறுநிலை
பாடப்பட்டவர் – அதியமான் நெடுமான் அஞ்சி

  அவனை இல்லாமல் கழியும் காலையும் மாலையும் இல்லாமல் போட்டும்; யான் வாழும் நாளும் பயனில்லாமையால் அதுவும் ஒழியட்டும். நடப்பட்ட கல்லில் மயில் தோகையைச் சூட்டி அரிக்கப்பட்ட கள்ளைச் சிறிது கலத்தில் ஊற்றி வைக்கவும் கொள்ளவானோ? கொள்ளான். பக்கம் உயர்ந்து விளங்கும் மலையமைந்த நாட்டுடன் கொடுக்கவும் கொள்ளாத அவன்.

271. மைந்தன் மலைந்த மாறு
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த
கடுங்குரல் நொச்சிக் கண்ணார் கரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலை யாகவும் கண்டனம்; இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்து கொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே
பாடியவர் – வெறிபாடிய காமக்கண்ணியார்
திணை – நொச்சி – மதிலை காக்கும் வீரர்கள் சூடிய பூவைப் புகழ்வது.
துறை – செருவிடை வீழ்தல் – அகழியையும் காவற்காட்டையும் காத்து நின்ற வீரர்கள் வெற்றி தந்து இறந்த சிறப்பு.

     நீர் நீங்குதல் இல்லாத நிலத்தில் இருந்த கருநிறப் பூங்கொத்துடைய நொச்சியின் அழகிய தழை மகளிரின் அழகிய இடையில் தழையுடையாக இருக்கவும் கண்டோம். முன்னே. இப்பொழுது அச்சம் தரும் குருதியில் கலந்து உருவம் மாறித் துண்டாகிக் கிடந்த நொச்சி மாலையை ஊன் என்று எண்ணி பருந்து எடுத்துக் கொண்டு போகவும் யாம் கண்டோம்; வீரத்தை விரும்பும் இளையவன் அதனை அணிந்திருந்ததால்.

278. படுமகன் கிடக்கை
நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெருதுவந்தனளே.
பாடியவர் – காக்கை பாடினியார் நச்செள்ளையார்
திணை – தும்பை – பகைவரோடு போரிட தும்பைப் பூச்சூடிச் செல்லுதல்.
துறை – உவகைக் கலுழ்ச்சி – வீரபுண் கண்டு மனைவி அல்லது பெற்றோர் மகிழ்ச்சி கண்ணீர் வடித்தல்

     நரம்பு தெரிய வாடிய மெல்லிய தோளையும், தாமரைத் தண்டு போன்ற இடையையும் உடைய முதியவள் ஒருத்தி, தன் சிறுவன் படைகண்டு அஞ்சிப் புறந்தந்து மாண்டான் என்று உண்மை அறியார் பலர் வந்து சொல்ல வலிய போர் கண்டு அஞ்சி என்மகன் இறந்தான் என்பது உண்மையானால், அவன் பாலுண்ட என் மார்பை அறுத்தெறிவேன் யான் என்று சினந்துரைத்து, வாறைக் கையில் ஏந்திப் போர்க்களம் சென்று அங்கே இறந்து கிடக்கும் வீரர் பிணங்களைப் பெயர்த்துப் பெயர்த்துப் பார்த்து வருபவள், மார்பில் புண்பட்டு வேறுவேறாகத் துண்டு பட்டுக் கிடக்கும் தன் மகன் கிடப்பினைக் கண்டு அவனைப் பெற்ற நாளில் கொண்ட உவப்பினும் பெரிதும் உவகை கொண்டாள்.

279. மூதின்முல்லை
கெடுக சிந்தை கடிதிவன் துணிவே
மூதின்மகளிர் ஆதல் தகுமோ
மேனாள் உற்ற செருவிற்கு இவன் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்பு உற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே.
பாடியவர் – ஒக்கூர்மாசாத்தியார்
திணை – வாகை
துறை – மூதின்முல்லை – மறவருக்கு அல்லாமல் அம்மறக் குடிப் பெண்டிருக்கும் அமைந்த வீரம்.
  இவள் எண்ணம் கெடுக. இவள் ஊக்கம் கடுமையானதே. இவள் முதுகுடிப்பெண் என்பது தகும். முன்னாளில் ஏற்பட்ட போருக்கு இவள் தந்தை சென்று யானையை வீழ்த்தி அக்களத்திலே இறந்தான். நேற்று நிகழ்ந்த போருக்கு இவள் கணவன் சென்று பெரிய ஆன் கூட்டத்தை மீட்டுத் தந்து அங்கே இறந்தான். இன்றும் போர்ப்பறை கேட்டு விருப்பமுற்றவளாய் ஈடுபட்டு வேலைக் கையிலே தந்து வெண்பட்டினை உடுத்திவிட்டு உலர்ந்த தலைக்கு எண்ணெய் தடவி அவ் ஒருமகனை அல்லது இல்லாத இவள் போர்க்களம் நோக்கிச் செல்க என்று விடுக்கின்றாள்.

290. ஓலைக்குடைபோல் காத்தல்
இவற்கு ஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற் றியானை இயல்தேர் குருசில்
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை
எடுத்தெறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்தெறி குறட்டின் நின்றுமாய்ந் தனனே;
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே.
 பாடியவர் – ஔவையார்
திணை – கரந்தை
துறை – குடிநிலை உரைத்தல் – பழமையும் வீரமும் மிக்க குடியின் வரலாற்றைச் சொல்லுதல்.

   கள்ளை இவனுக்கு முன்னே தந்து பின்னே நீ உண்பாயாக சினங்கொண்டு போரிடும் யானைக் கூட்டத்தையும செயல்திறன் மிக்க தேர்களையும் உடைய தலைவனே. உன் தந்தையின் தந்தைக்கு இவன் தந்தையின் தந்தை மோதியழிக்கும் போரில் கண்ணை இமையாமல், தச்சனால் ஆர்க்காலைச் சேர்த்து ஊன்றப்பட்ட குடம்போலப் பகைவர் எறிந்த வேல்களைத் தான் ஏற்று நின்று இறந்தனன். வலிய போரத்திறம் அமைந்த வீரனாகிய இவனும் மழை பெய்யும் போது அதனை ஏற்றுக் காக்கும் பனை ஓலைக் குடையைப் போலப் பெருமானே, உன் மேல் வரும் வேலைத் தன் இடையே நின்று ஏற்பான் ஆதலால்.












கருத்துகள்

ஜானகி.இராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
மிகநீண்ட இடைவெளிக்கப்பிறகு bloggerக்கு வந்தேன். எனது பக்கத்தை மீட்டெடுத்துப் புதுப்பித்தேன். தோழமை என்னும் பெயரில் எனது பக்கத்தைத் தொடங்கி வைத்தது நீங்கள்.அதனை தற்போது ஜானகி.இராஜா என்னும் பெயரில் புதுப்பித்துள்ளேன். இனி தொடர்ந்து எழுதிட வேண்டும் எனத் திட்டம்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
மகிழ்ச்சி வாழ்த்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்