மிட்டாய் தாத்தா

 


புன்னகைத் தவழும் முகம். மழலை மொழி. தெளிவான பேச்சு. காண்பவரை வாழ்த்தும் வாய்மொழி. தள்ளாட்டம் இல்லா சொல்லாட்டம். தீர்க்கமான கண்கள்.முதுமையின் ரேகை புறத்தில் மட்டுமே. உழைப்பை நம்பி வாழும் மனிதர்  உழைத்துப் பெற்றதைப் பிறருக்கு உதவும் மனம் என வாழ்ந்து வரும் 121 வயதான மிட்டாய் தாத்தா என்ற முகமது அபுசலி அவர்களை 28.08.2025 அன்று தஞ்சாவூர் மானம்பூச்சாவடி ஆடக்காரத் தெருவில் சந்தித்தேன்.

             இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பர்மாவைக் கைபற்றிய பொழுது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அந்த காலக்கட்டத்தில் தன் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பின்களையும் படையினர்  தம் கண் முன்னே வெட்டிக் கொன்ற நிலையில் இவர் தப்பித்து அந்தமான் கப்பலில் தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.

            தஞ்சாவூர் வந்தடைந்த பொழுது அவருக்கு 50 வயது. மிட்டாய் செய்யும் தொழிலைக் கற்றுக்கொண்டு தன் வாழ்நாள் முழுதும் அத்தொழிலையே மேற்கொண்டதால் மிட்டாய் தாத்தா என அழைக்கப்பெறுகிறார்.. இவர் தஞ்சை சுற்றியிருக்க கூடிய பல ஊர்களுக்குத் திருவிழா காலங்களில் சென்று அங்கேயே தங்கி மிட்டாய் செய்து  விற்பது வழக்கம். அவ்வாறு எங்களூருக்கு(ஒக்கநாடு கீழையூர்)  என் அம்மா சிறு வயதாக இருந்த பொழுது, என் ஆத்தாவீட்டின் திண்ணையில்                     ( சிமெண்ட் திண்ணையாக இருந்தது ஒரு காரணம் அத்துடன் எங்கள் ஆத்தா ஊருக்கு வருபவர்களுக்கு இருக்கும் உணவைப் பகிர்ந்து கொள்பவர்) மிட்டாய் செய்வதற்குப் பயன்படுத்தி கொள்ளவார்  அங்கிருந்து பக்கத்து ஊர் , திருவிழா போன்ற காலங்களில் சில நாள்கள் தங்கியும் விற்பனை செய்துவந்துள்ளார். நான் சிறு வயதாக இருந்த பொழுதும் அங்கு வந்து தங்கி மிட்டாய் செய்துள்ளார். அப்பொழுது ஜவ்வு மிட்டாயும் செய்வார். நாங்கள் அவர் தயாரிக்கும் மிட்டாயை வேடிக்கைப் பார்த்து உதவியும் செய்வோம்.

            மிட்டாய் தாத்தாவைப் பற்றி இணையக் காணொளியில் சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த நாளிலிருந்து பழைய நினைவுகள் கிளர்த்தன. அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அன்று தற்செயலாக வேறு பணி நிமித்தமாகத் தொல்காப்பியச் சதுகத்திலிருந்து  புதிய பூசந்தையில் பூ வாங்கிக்கொண்டு கிழவீதிக்கு ஆடக்காரத் தெரு வழியாகச் செல்ல நேர்ந்தது. அவ்வழியில் அவரின் வீட்டின் முன்பு அவரின் பதாகை கண்டேன். உடனே காரை நிறுத்திவிட்டு பார்க்கச் சென்றேன். அங்கு ஒரு அம்மாள் கிட்டத்தட்ட 25 தேங்காயை உடைத்துத் துருவிக்கொண்டிருந்தார். தாத்தா கட்டில் அமர்ந்திருந்தார். வாய்நிறைய மலர்ந்த முகத்துடன் வாங்க வாங்க என  அன்புடன் அழைத்தார்.

            தாத்தாவுடன் கிட்டத்தட்ட அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவரிடம் ஊரைப்பற்றியும் அங்கு மிட்டாய் செய்ததைப் பற்றியும் கேட்டேன். நினைவில் இருப்பதாகச் சொல்லி, அவர் பர்மாவிலிருந்து தமிழகம் வந்த கதையைக் கூறினார். பேசிக்கொண்டிந்த நேரத்தில் ஒருவர் தேங்காய் வாங்க வந்தார். தாத்தா ஒரு தேங்காய் 35 ரூபாய் என்றார். வந்தவர் குறைத்துக் கொள்ளும் படிக்க கேட்டார். கறாராக 35 ரூபாயிலிருந்து ஒரு  ரூபாய் குறைக்கமாட்டேன் என்றார். வாங்க வந்தவர் ஐந்து தேங்காய் வாங்கி சென்றார்.

            அங்கு தேங்காய் துருவி கொண்டிருந்தவர் தாத்தா தேங்காய், மிட்டாய் வியாபாரம் மற்றும் பிறர் தரும் தொகையைச் சேர்த்து  அரிசி மூட்டை வாங்கி அப்பகுதி மக்களுக்கு டோக்கன் போட்டு அரிசி வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவையான துணிமணிகளையும் உதவிகளையும் செய்வார் என்று கூறினார். அத்துடன் தேங்காய் மிட்டாயை இன்று வரை அவரே செய்து வருகிறார். உதவிக்கு யாரையும் வைத்துக்கொள்வதில்லை. சில வேளைகளில் மிட்டாய் செய்து அனாதை இல்லம் முதியோர் இல்லம் சென்று கொடுத்து வருவார் என்றும் காலையில் பறவைகளுக்கு தானியங்கள் போடுவதும், மாடு, ஆடு, நாய்களுக்கு தண்ணீர் வைப்பதையும் வழக்கமாகச் செய்து வருவதாகவும் கூறினார்.

            அவருக்குத் தேவையான உதவிகளைச் சுற்றி இருப்பவர்கள் செய்கின்றனர். அவருக்கான மதியவுணவினைக் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தஞ்சையிலுள்ள ஆரியபவன் உணவகத்திலிருந்து கொடுக்கப்படுவதாகக் கூறினார். மிட்டாய் மாலை ஆறுமணிக்குத் தாயாராகும் என்றார். மாலையில் அம்மாவை அழைத்துக்கொண்டு பார்க்கச் சென்றேன். அம்மாவுக்கு அத்துணை மகிழச்சி அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு. மிட்டாய் வாங்கிக்கொண்டு வந்தோம்.

 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்