உயிரற்ற உயிர்கள் (நடுநிசி எல்லைகள்)
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வடக்கே நிகழ்ந்த
வன்கொடுமைகளை அபுனைவாகவும் புனைவாகவும் வாசித்துள்ளேன். காஷ்மீர் பகுதியில் தாக்குதல்
குறித்தும் அவ்வபொழுது பார்ப்பதும் படிப்பதும் உண்டு. இந்திய நிலப்பரப்பின் தன்மையை,
மக்களின் பண்பாட்டை உணர்வுகளைப் பற்றி எதுவும் அறியாதவர்களால் உருவாக்கப்பட்ட எல்லைகளில்
வாழும் மக்களின் துயரார்ந்த வாழ்நிலையை அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின்
அடிப்படை வாழ்வில் சிக்கல்களுக்கான சட்டப்பூர்வமாக விளக்கங்களை அளித்து நேசத்தோடு உடன்
பயணித்து அவர்களின் கதையை அவர்களின் குரலாகவே ஒலிக்கச் செய்துள்ளார் சுசித்ரா விஜயன்.
இதற்காக இந்திய எல்லை 9000 மைல் 2013 இலிருந்து கிட்டத்தட் எட்டு ஆண்டுகள் பயணித்துள்ளார்.
பயணத்தின் ஊடாக அவர் கேட்டக் கதைகள் இந்தியாவைப் பற்றி அண்மை காலத்தில் கட்டியெழுப்படுகின்ற
கருத்தாக்கத்தை அசைக்கின்றன.
200 ஆண்டுகால காலனிய ஆதிக்கத்தின்
துயரத்தைவிட சுதந்திரம் கிடைத்து எல்லைகள் பிரிக்கப்பட்ட பிறகு எல்லையோர மக்களின் அடிப்படை
வாழ்வாதரமே திக்குத்தெரியாமல் இருண்டதாக மாறுகிறது. அவர்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும்
கதைகள் இந்தியாவை நாம் இதுவரை அறிந்த பக்கத்திலிருந்து எதிரான மற்றொரு பக்கத்தைத் திறந்து
காட்டுகிறது.
இந்நூலுக்கு முன்னுரை
வழங்கியுள்ள ரொமிலா தாப்பர் அவர்கள் கூறும் எல்லைப் பகுதிகள் ஒரு காலத்தில் வேறுபட்ட
கலாச்சாரங்களின் ஒருங்கிணைவு உருவாகும் இடங்களாகவோ, சந்திப்பு மையங்களாகவோ கலாச்சாரம்
பறிமாற்றம் நிகழும் இடமாகவோ இருந்தன. நவீன எல்லைகள் தீவிரவாதமும் வன்முறையும் செழிக்கும்
குறுகிய பாதைகளாகிவிட்டன என்னும் கூற்றினை இந்நூலிலை வாசிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும்
உணரமுடிகிறது.
ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான்
எல்லை, இந்திய –வங்கதேச எல்லை. இந்திய – சீன எல்லை, இந்திய – மியாமர் எல்லை, இந்தியா
– பாகிஸ்தான் எல்லை ஆகிய எல்லைப்பகுதிகளில் இருக்கும் மக்களின் குரலற்றவர்களின் குரலாகவோ
சாட்சி சொல்பவளாகவோ இல்லாமல் அந்த மண்ணை சேர்ந்த தகவலாளிப் போர் பேரரசின் குரல்களாக
இருப்பதைப் பதிவு செய்கிறார் சுசித்திரா விஜயன்.
ஆப்கானிஸஃதான் – பாகிஸ்தான்
எல்லையில் உள்ள சர் ஹவ்ஸாவில்13, 14, வயதினர் கையில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் அலைவது பற்றி அங்கு வாழ்ந்து வரும் மஸ்ஊதை என்பவர் தனிமையைக் கண்டு அஞ்சுபவன் போர்வீராக இருக்கவே
முடியாது என்கின்றார் அவரின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டனர்
தந்தை ரஷ்யாவை எதிர்த்துப் போராடினார். இப்பொழுது யாரை எதிர்த்துப் போரிடுகிறோம் என்பது
அறியமுடியவில்லை எங்கிருந்தோ வருகிற அதிகாரத்தின் குரலுக்கு செயல்படும் போர் வீரனாக
இல்லாமல் பிசினேஸ்மேனாக இருக்கிறோம் என்று அவர் கூறும்பொழுது எந்த நோக்கமும் அற்று பணத்திற்காக எதற்கு? ஏன்? யாரை? என்னும் சிந்தனையும்
இல்லாமல் யாருடைய கட்டளைக்கோ அடிப்பணிந்து செயலாற்றும் கூட்டத்தை நினைத்து மனம் பதைக்கின்றது.
இந்திய வங்க தேச எல்லையில்
ஒரு தெருவில் இரு மருங்கிலும் இருக்கும் வீடுகள் இருநாட்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
அந்தப் பகுதியில் பள்ளி படிக்கும் பத்து வயது சிறுமியின் பள்ளிப் பையைத் திறந்து சோதனைச்
செய்வதும் அதற்குக் காரணங்களாகப் பெண் குழந்தைகளும் பெண்களும் மின்விசிறி, ரேடியோ,
பாட்டரி, பால்பவுடர், தேன், சர்க்கரை, உப்பு, அரிசி, இருமல் மருந்து, விதைகள், கருத்தடை
மாத்திரைகள் சில சமயம் வெறும் பச்சை மிளகாய் போன்ற பொருட்களைக் கடத்தி செல்வதாக அவர்களைக்
கண்காணிப்பதும் சோதனைக்கு உட்படுத்துவதும் எல்லைப்புற காவலர்களால் மேற்கொள்ளப் பெறுகிறது.
காஸின் என்பவர் எல்லை பிரிக்கப்பட்ட பொழுது
எங்க கண்முன்னே எங்க வீடெல்லாம் ஒவ்வொண்ணா காணாம போச்சு என்று கூறுகிறார்.
குரிகிராம் மாவட்ட அனந்தபூரில்
எல்லையில் இருக்கும் பெலானி என்னும் பெண் அவ்வூர் குழந்தைகளுக்கு எல்லை குறித்து அச்சமூட்டும்
தொன்மாக மாறியுள்ளார். பெலானி கதை மிகத் துயரமானது,
அவர் திருமணம் செய்துகொள்ள எல்லையைத் தாண்டும் பொழுது துணி மாட்டிக்கொண்ட பயத்தில் கூப்பாடு போட்டுள்ளார் அப்பொழுது எல்லை பி.எஸ்.எப். காவலரினால் சுடப்படுகிறார். அந்தப் பெண்
நான்கு மணிநேரம் உயிருக்குப் போராடி தண்ணீர் கேட்டும் குடுக்காமல் வேலியிலேயே பல மணி
நேரம் தொங்கிக்கொண்டே இருந்து இறந்துவிடுகிறார். அப்பகுதியில் பெலானியின் கதை சிற்சில்
மாற்றங்களுடன் உலவிக்கொண்டே இன்றும் உயிர்புடன் இருக்கின்றது.
நவகாளியிலிருந்து சேர்ந்த
ஹெரீஃப் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தந்தை அப்துல் ஹஃபீஸ் கார்தார் இந்தியாவில் இந்தியாவுக்காகத்தான்
தன் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். சில வருடங்கள் முன்புவரை தன்னோட இடமாக, தன்னோட
மண்ணா இருந்த இடத்துல தன்னோட சகோதர்களையே எதிர்த்து விளையாட வேண்டியிருந்தது என்று கூறுவது
பிரிவினையினால் ஏற்பட்ட வலியை உணரமுடிகிறது.
ஜல்பாய்குரி என்னும் ஊர்
வர்த்தகத்திலும் மாட்டுச் சந்தையிலும் வெற்றி பெற்ற ஊர் இன்று கம்பிவேலியால் முற்றுகையிடப் பட்டு ஒளி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. அப்பகுதியில் யாருமற்ற நிலப்பரப்பில் வாழும்
அலியின் கதை ஆகவொண்ணா துயருடையது. எல்லைக்கோடு அவரின் வீட்டுக்கு அருகே. அங்கு நிறுவப்பட்டுள்ள
மின்னொளி உழிழ்வினால் துக்கமின்மை மனப்பிழ்வு எனத் தலைகீழாக மாறுகிறது. அவருடைய நண்பர் அவரின் நிலையைக் கண்டு ஜன்னல் முழுவதும்
அடர் வண்ண அட்டைகளைக் கொண்டு அடைக்க இருளுக்குத் தன்னை ஒப்புக்கொண்டதுன் அவருடைய மனைவி கே குடியுரிமை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு
பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்திய எல்லைக்கோடுகளை ஒட்டியுள்ள சுமார் 111 மாவட்டங்களைச்
சேர்ந்த 15 கோடி மக்களின் அநேகருக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே
செல்லும் ஒவ்வொரு முறையும் அம்மக்கள் சந்திக்கும் இன்னல்களும் தொல்லைகளும் துயர எல்லைக்கு
அப்பாற்பட்டவை இப்பகுதியின் குடிமக்களுக்கு அவர்களுடைய மரபுரிமையை உறுதி செய்யும் ஆதாரங்களோ
ஆவணங்களுக்கோ, அவர்கள் இருப்பு மட்டும் போதுமானதாக இல்லை.
குடியுரிமைப் பெறுவதற்குப்
பல துயரங்களைக் கடக்கவேண்டியுள்ளது. 75 வயதான ஃபலுமியா குடியுரிமை பற்றி இங்க இருக்குற மக்களுக்கு என்னையும் நான் எந்த இடத்தைச்
சேர்ந்தவங்கறதும் தெரியாது கோர்ட் ஒத்துக்குமா? யாருகிட்ட போய் ஆதாரத்த கேட்குறது?
எங்கம்மா செத்துப்போய் அறுபது வருஷம் ஆச்சு என்னை வளர்த்தவங்களும் உயிரோட இல்லை பத்தாயிர்
ரூவா சேர்த்து வக்கீல் புடிக்கிறதெல்லாம் கஷ்டம் கூறுகிறார். குடியுரிமை பெற சிறையிலிருந்தும்
சிலர் விரக்கதியால் தற்கொலை, மனழுத்தம், விஷ மருந்து அருந்தி இறப்புகள் எனத் தொடர்கிறது.
குவஹாத்தி பகுதியில் வசிக்கும்
ராஷ்மினாரா பிரம்புத்திரா, பராக் நதிகள் ஒவ்வொரு மழைக்கும் ஊரை விழுங்க அதனால் குடிமையுரிமை போன்ற அடையாள அட்டைகள் இழப்பும் குடியுரிமை பெறுவதில் உள்ள சிக்கல்களும், ஏமாற்றப்படுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. குடியுரிமை அட்டை இல்லாத நிலையில் வெளிநாட்டவர்
எனக் கைது செய்யப்படுவதும், அவருடைய குழந்தைகள் அம்மாவை சிறைக்கு அழைத்துச் சென்றாதால் மிக பயந்து சிரிப்பதை மறந்து, திரும்பவும் அம்மாவை அழைத்துச் சென்று விடுவார்களோ
என்ற அச்சத்திலேயே வாழ்வைக் கழிக்கின்றனர்.
இந்தியா – மியான்மர் எல்லையிலுள்ள
நாகலாந்து இந்தியாவில் காவல்துறையினரின் இருப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் நாகலாந்தும்
ஒன்றெனக் கூறப்பெறுகிறது. உலகின் மிக நெடிய வரலாறு கொண்ட மோதல்களின் நிகழிடம் நாகலாந்து
சுதந்திரத்திற்குப் பிறகு தனிநாட்டுக்கான முதல் குரல் ஒலித்தது நாகலாந்திலிருந்துதான்.
அங்கு வன்முறைகள் தலைமுறை கடந்தும் தொடர்வன. அங்கு சாயங்காலம் அக்கம் பக்கம் ஆளுங்க கூடி
உக்கார்ந்து பேசும்போது வேறென்ன பேசுவோம்னு நினைக்கிறீங்க எங்க வீட்ல மூணு ஆளு போய்ட்டாங்க?
உங்க வீட்ல நாலா? என அவர்கள் இயல்பாக பேசுவது நம்மை உறைய வைக்கிறது. மேலும் அவர்கள்
உங்க ஊருக்குப் போய் எங்க படங்களைக் காமிச்சி அவங்க எதிர்காலத்துக்காக எங்க நிகழ்காலத்தை
இழந்தோம்னு சொல்லுங்க என்று கூறுவது தூக்கத்திலும் துரத்துகிறது.
80 வயதான இயா என்ற பெணமணி
20 வயதில் இந்திய இராணுவத்தால் கூட்டுப் வன்புணர்வு செய்யப்பட்டு, அவ்வூரில் யாரும்
திருமணம் செய்து கொள்ள மறுத்தும் புறக்கணிக்கப்பட்டும் தனியாக வாழ்ந்து வரும் கொடுமை
ஒருபுறமென்றால், நோபில் ஹுசைன் என்பவர் 1983 இல் நடைபெற்ற கலவரத்தில் நெல்லியைச் சுற்றியிருந்த
14 கிராமங்களில் 350 குழந்தைகள் கொல்லப்பட்டு ஒரே குழியில் புதைக்கப்படும் பொழுது ஒரு
குழந்தை சிறிது அசைய அவனைக் காப்பாற்றினர். அச் சிறுவன் அப்துல் ரஷீத் என்னும் பெயருடன்
இன்றும் நடமாடும் நடுகல்லாக இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை
குறிப்பாகக் காஷ்மீர் சிக்கல் தீராத்துயர். அங்கு சட்டத்திற்குப் புறம்பான முறையில்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் வன்முறையைப் பயன்படுத்தவும் அரசு அனுமதிக்கிறது. அந்த தண்டனையிலிருந்து விளக்கும்
அளித்துவிடுகிறது. ஆகையினால் போலி என்கவுண்டர்கள் இயல்பாகிவிட்டன. கஷ்மீரில் மரணம்,
அழிவு, காணமல் போவது ஆகியவை முடிவில்லா காட்சியாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே
இருக்கின்றன.
ஹிலாலைப் பற்றிய கதை அவனுடைய மதம், நம்பிக்கை, அவன்
தோற்றம் இதெல்லாம் அவன் இறப்புக்கு காரணம் என்கிறனர். அண்மையில் ஏப்ரல் 24 இரவு
2025 காஷ்மீரைச் சேர்ந்த பானு என்பவரது இல்லத்தில் வெடிகண்டு இருந்தாகவும், அவரது மூத்த
மகன் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வருகிறார். அவரது கணவரும் இரண்டு
மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல காஷ்மீரில் ஒன்பது வீடுகள் தகர்க்கப்பட்டும்
2000 பேர் கைது செய்யப்பட்டிருகின்றனர்.
கஷ்மீர் நண்பர் ஒருவர்
நூலாசிரியரிடம் எங்களிடமிருந்து அனைத்தையும் பிடுங்கிக்கொள்வதில் அவர்கள் உறுதியாக
இருக்கும் போது போராடுவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும். சுதந்திரம் கிடைக்கும்
வரை போராடுவோம் என்று கூறுவது நம் மனங்களில் முத்திரைக் குத்தி வைத்திருக்கும் சில
இலகத்தொடங்குகிறன.
பிரிவினை காரணமாக அமிர்தசரசிலிருந்து
பாகிஸ்தானுக்கும் பிரிந்த சென்ற நடாஷா என்பவரின் பாட்டி இந்திய நினைவுகளை மறக்க முடியாமல்
பாகிஸ்தானில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்பதும், அவை தடை செய்யப்பட்ட
போதும் திருட்டு கேசட்டுகளை வாங்கி வைத்துக்கொள்வதும திரைப்பட பாடல்களை மனப்பாடம் செய்வதும்
விழாக்களில் பாடுவதும் ஆடுவதும், அடிப்பட்ட நடிகர் அமிதாப்புக்காக பிராத்தனை செய்வதும்.
இளம் நடிகரான அமீர்கானை ஆசையாக என்னோட அமீர் ஃகான் என்று சொல்வதும் அவர் பால்யத்தை
பல தலைமுறைகள் வாழ்ந்த மண்ணின் பண்பாட்டினை தமது நினைவடுக்குகளில் புதுமைப்பித்தன்
செல்லமாளில் ஊரைப் பற்றிப் பேசுவது கஞ்சா போன்ற போதை எனப் பேசுவது போல மீண்டும் மீண்டும்
பதிய வைத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்த யத்தணிக்கொண்டே இருப்பதைக் காணமுடிகிறது.
அதிகாரிகளின் பார்வையில்
பெரும்பாலும் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
படிப்பறிவற்ற பின்தங்கிய வறுமை நிறைந்த, சுலப வழியில் கிடைக்கும் பணத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்
படையினருடன் விரோத போக்கு கடைப்பிடிக்கப்பட்டவர்கள் அவங்க தண்ணி அடிக்க மாட்டாங்க,
அதுக்குத்தான இருமல் மருந்து குடிக்கிறார்கள் என்ற கருத்தே உள்ளது.
கோட்வாலி கேட் பார்க்க வந்த தம்பதிகள் நுழைவாயில்
என்ற புரிதல் கூட இல்லாமல் பாரத் மாதாகி ஜே என்று கூறிக்கொண்டு, நம் ஜவான்களுக்கு வீர
வணக்கம் பிரிவினையில் இழந்ததை நம் வீரர்கள் மீட்டுத் தருவார்கள் என உணர்ச்சிப் பொங்க
காமிராவில் கூறிக்கொண்டு இந்து கோயில்களைக் கொள்ளையடித்து அதன் மேல் முஸ்லிம்கள் எழுப்பிய
கோட்டை எனக் கூறுவது வெறுப்புணர்வின் தூண்டலெனலாம்.
பிரசாந்த் என்பவர் நூலாசிரியரிடம்
முப்பது வருடத்திற்கு முன் இந்த வேலி கிடையாது.
எழுபது வருடத்திற்கு முன் இந்த எல்லை கிடையாது. நூறு வருடத்திற்கு முன் இந்தியாவே கிடையாது.
வேலியைச் சுட்டிக்காட்டி கூறுவதும், நூலாசியரே மனித வரலாறு முழுவதும் இது போன்ற சுவர்களும்
வேலிகளும் தோற்றே வந்திருக்கின்றன. பண்டைய ஏதென்ஸின் சுவர்கள், கான்ஸ்டாண்டி நோபிளின்
சுவர்கள், சீனப்பெருஞ்சுவர் ஆகிய அனைத்தும் தோற்றே வந்திருக்கின்றன. இருபத்தெட்டாண்டுக்கு
மன் பெர்லின் சுவரும் இடிந்து விழுந்தது. இதற்கு முன் வீழ்ந்த சுவர்களைப் போல, இந்த
வேலியும் ஒருநாள் வீழும் எனக் காவல்படை வீரர் பீமிடம் சொல்ல நினைத்தேன் என்பதும் அனைத்தும் மாற்றத்திற்கு
உட்பட்டதே என்ற உணர்வு அதிகாரத்தில் இருப்போரின் எண்ணத்திற்குள் ஏறவேண்டும் என்ற ஏக்கம்
பிறக்கிறது.
என் என்பவர் நாங்க வாழ்ந்த
வாழ்க்கை எங்க இழப்பு எங்க தேவைகள்னு எதைப் பற்றியும் யாரும் கேட்டதில்லை கேள்வி
கேட்பதும் இல்லை. இத்தனை வருடங்களில் என்னுடைய கடந்த காலத்தை நான் பேசுறது இதுதான்
முதல்முறை எனச் சுசித்ரா விஜயனிடம் கூறுவது அவர் எல்லைகோட்டின் அருகில் வசிக்கும் மக்களிடம்
எத்துணை கரிசனத்தோடும் நியாயத்தோடும் நடந்துகொண்டர் என்பதை உணரமுடிகிறது.
இந்நூலை வாசித்து முடித்தவுடன்
தென்னகப் பகுதியில் எத்துணைப் பாதுகாப்புடன் இருக்கிறோம். அதே நேரத்தில் நம்முடைய சமகாலத்தில்
வாழக்கூடிய எல்லைக்கோட்டுக்கு அருகில் வசிக்கும் மக்களின் நிலை என்னுள் பல்வேறு
வினாக்களைக் கிளர்த்துக்கொண்டே யிருக்கின்றன.
சுசித்ரா விஜயன் தன் ஆன்மாவிலிருந்து இந்த நூலினை எழுதியதாக் கூறுவது மிகையில்லை. அதனை ஞான. வித்யா தமிழ் மொழிப்பெயர்ப்பினால் நம்மை உணரச் செய்கிறார். நவீன இந்தியாவின் இன்னொரு முகத்தை நாம் காண மறந்த முகத்தை நுட்பமாக எழுதியுள்ளார்.
முதற் பதிப்பு(தமிழ்)
2025 சீர்மை நூல்வெளி வெளியிட்டுள்ளது.
கருத்துகள்