வேளாண்மையியல் (பட்டயம்)


வேளாண்மையியல் (பட்டயம்)

TAM 228: தமிழ் வழி தகவல் பரிமாற்ற வழிமுறைகள்

கலைச் சொற்கள்
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சொல்லும் ஓர் பொருளை குறித்தே உருவாகிறது. ஒவ்வொரு மொழியில் உள்ள கருத்துக்களை பிற மொழியில் பெயர்த்து எழுதுதல் மொழிபெயர்ப்பு எனப்படுகிறது. மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பு கலைச் சொற்கள் ஆகும். ஒரு மொழியிலுள்ள ஒரு சொல்லுக்கு ஏற்ற சொற்செறிவும், கருத்தாழமும் மிக்க எளிமையான சொல்லை கலைச் சொல் என்கிறோம்.
ஒரு மொழியில் இல்லாத சொல்லுக்கு வேற்று மொழியினின்று நேரிடையாகச் சொற்களைப் பெற்றோ, ஒலிப் பெயர்த்தோ அல்லது மொழி பெயர்த்தோ புதுச் சொற்களை ஆக்கிக் கொள்வதைக் கலைச் சொல்லாக்கம் என்பர். குறுகிய பொருளில் பயன்படும் சொற்களே  கலைச்சொற்கள். புதிய கருத்துக்களை விளக்க, கலைச்சொற்கள் குறுகியவையாகவும்   இலக்கண    விதிகளுக்கு ஈடுகொடிப்பனவாகவும் இருக்க வேண்டும் (பக். 5, வெ.கலைச்செல்வி, கல்வியியல்)
கலைச்சொற்கள் உருவாக்கும் முறை
கலைச்சொற்களை உருவாக்கும் பொழுது இனிய ஓசை, அழகு, பழமை, சிறிய வடிவம் ஆகியவற்றைக் காட்டிலும் கருத்துத் தெளிவிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். அறிவியல் செய்தியானது, அவற்றிற்குரிய அறிவியல் துறைகளில் சரியான சொல் வடிவமாக மாற்றியமைக்கப்பட்டுத் துல்லியமாகப்படுவதே கலைச்சொற்களின் முதன்மை பணியாகும். தமிழில் கலைச்சொற்கள் ஊந்து முறைகளில் உருவாக்கப்படுகிறது.
1.    பழஞ்சொல்லைப் பயன்படுத்துதல் – calendar - நாள்காட்டி
2.    சொற்களின் விரிவு – pesticide - பூச்சிக்கொல்லி
3.    புதுசொல் படைத்தல் – pistil - சூலகம்
4.    மொழிபெயர்ப்பு – pulpwood - மரக்கூழ்
5.    எழுத்துப்பெயர்ப்பு – car – கார்
வேளாண்மை கலைச் சொற்களுக்கான சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன

ஆங்கிலம்
தமிழ்
         1.    
Abaxial
விதையிலை மேற்புறம்
         2.    
Blister beetle
பூ வண்டு, கொப்புள வண்டு
        3.    
Contour bund
சம உயர வரப்பு
        4.    
Disc harrow
வட்டுப் பறம்பு
        5.    
Exudate
நீர்மக்கசிவு
        6.    
Fauna
விலங்கு வளம்
        7.    
Gall nut
மாசிக்காய்
        8.    
Hayloft
வைக்கோல் புரி
       9.    
Inter crop
ஊடுபயிர்
      10.  
Jewel beetle
பொன்வண்டு
       11.  
Kolinji
கொழுஞ்சி
       12.  
Ley farming
புல்வெளி சுழற்சி
       13.  
Microspore
நுண்சிதல்
       14. 
Nodule
வேர்முடிச்சு
       15.  
Organic soil
மக்குமண்
       16.  
Pasture land
மேய்ச்சல் நிலம்
       17.  
Qernats
சுரங்க ஊற்று
      18.  
Rick
வைக்கோல் போர், தானியக்குவியல்
      19.  
Setaceous
நுண் இழை
      20.  
Tail terminal
வால்நுனி
      21.  
Uzifly
ஊசி ஈ
      22.  
Virescence
பசுமையாதல்
      23.  
Weed seed
களை விதை
      24.  
Xenia
பூந்தாள்
      25.  
Yield of grain
தானிய விளைச்சல்
     26.  
Zygote
கருமுட்டை

வட்டார வழக்குச் சொற்கள்
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான பேச்சு மொழிகள் உள்ளன. அவை மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. அப் பேச்சும், கையாளப்படும் சொற்களும் அவ்வவ் வட்டார மக்களுக்கு நன்கு புரியும். எடுத்துக்காட்டாக, ‘துடைப்பம்’ என்னும் யாவருக்கும் புரியக்கூடிய சொல், திருநெல்வேலி மாவட்டத்தில் ‘வாரியல்’ என்று வழங்கப்படுகிறது. ‘ஒட்டடை’ என்பது யாவருக்கும் புரியும்.  ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் இதனை,  ‘நூலாம்படை’  என்று வழங்குவர்.  வட ஆர்க்காட்டார், ‘எண்பது’ என்பதை ‘எம்பளது’ என்பர். இவை போல்வன வட்டார வழக்குச் சொற்கள் ஆகும்.
 
மேலும், விரைவாகப் பேசுதல், நகைச்சுவையாகப் பேசுதல், ஒரு குறிப்பிட்ட குழுவினர் தமக்கு மட்டுமே புரியும்படியாகப் பேசுதல்,    நண்பர்களுக்குள் விளையாட்டாகப் பேசுதல் முதலான காரணங்களால், வட்டார வழக்குகளையும் குழு வழக்குகளையும் கையாளுகின்றனர்.  பேச்சு வழக்கில் இடம்பெறும் இந்த வழக்குகள் நாளடைவில் எழுத்திலும் இடம்பெற்றுவிடும்.  மாணாக்கர் இவற்றை நீக்கிப் பேசுதலும் எழுதுதலும் சிறப்பாகும்.
 

வட்டாரவழக்கு
திருத்தம்
1
அடிச்சுக் கொளுத்திட்டேன்.
வெளுத்து வாங்கிட்டேன்.
தடபுடலாகச் செய்தேன்.
சிறப்பாகச் செய்தேன்.
2
ரீல் விடுகிறான்.
கதை அளக்கிறான்.
தடி உடுறான்.
பொய் கலந்து பேசுகிறான்.
3
காது குத்துறான்.
டபாய்க்கிறான்.
அமுக்கிறான்.
ஏமாற்றுகிறான்.
4
ஐஸ் வைக்கிறான்.
தாஜா பண்ணுறான்.
இதமாகப் பேசுகிறான்.
5
பந்தா பண்ணுறான்.
அல்டாப் பண்ணுறான்.
போலியாக நடக்கிறான்.


பொருந்திய சொல் தருதல்
        மொழியைக் கையாளுவதற்கு மொழிப்பயிற்சி மிக இன்றியமையாதது. இதனை ஔவையார் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்தொரு கல்வி மனப்பழக்கம் என்று கூறுவார். தொடர் வாசிப்பு பழக்கம் இருந்தாலே அது தவறின்றி எழுதவும், சரியான இடத்தில் சரியான சொற்களை அமைத்து எழுதும் பழக்கம் ஏற்பட்டு அதனை வழக்கமாக்கி கொள்ளலாம்.
சொல் தேர்வில் கவனிக்க வேண்டியவை
             பொருளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பொருள் உணர்ந்து சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும்  . மொழியில் வழங்கும் பெரும்பான்மையான சொறகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கின்றன. இருந்தாலும், தகவல் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு எழுதப்படும் ஒரு வாக்கியத்தில் ஒரு சொல் ஒரு பொருளை குறிப்பிடுகிறது. ஏனைய பொருள்கள் விலக்கப்படுகின்றன. இந்த வசதி இருந்தும் பொருள் குழப்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கான காரணங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
ஒரே மூலமானாலும் பொருள் வேறு
            ஒரு வினை சொல்லோடு சில விகுதிகளைச் சேர்பதன் மூலம் பெயர்ச்சொற்களைப் பெறலாம்.
ஊட்டி கொடைக்கானல் என்று குளிரவான இடத்திற்கு அழைத்துச் சென்றால் நல்லது
குளிர் என்ற வினையிலிருந்து குளிர்வு என்றும் குளிர்ச்சி என்றும் பெயர் வருகின்றன. பெயர்களுள் சிலவே ஆன என்னும் விகுதி இணைந்து பெயரையாக வழங்கும். குளிர்வான என்பது பெயரடையாக இடம் என்பதற்கு வழங்கும் வழக்கு இல்லை. குளிர்ச்சியான இடம் என்பது இதமான குளுமையைத் தரும் இடம் என்னும் பொருளைத் தருவதால அதுவே இங்கு ஏற்றுக் கொள்ள கூடியது.
            வாழ்வில் குறைவில்லாத மனிதன் எவனும் இல்லை.
குறை, குறைவு என்னும் இரு சொற்களும் வடுவ ஒப்புமையால் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவ்விரு சொற்களோடும் இல்லாத என்பது இணையும் போது முறையே குறைவில்லாத என்றும் குறையில்லாத என்றும் வரும். வாழ்வில் குறையில்லாத(குறைகள்- தேவைகள் இல்லாத) மனிதன் என்று இருக்க வேண்டிய இடத்தில் குறைவில்லாத(கம்மி இல்லாத) என்பது பயன்படுத்தப்பட்டிருப்பது பொருத்தமற்றது.
ஒரு பொருள் தரும் பல சொல்
ஒரே பொருளைத் தரும் இரு சொற்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் தேவை. ஒன்று வருமிடத்தில் மற்றொன்றைப் பயன்படுத்துவது சில இடங்களில் பொருத்தமாக இருக்கலாம். வேறுசில இடங்களில் பொருத்தம் இல்லாமல் போகலாம்.
புவனா …. கொஞ்ச வாரத்துக்கு முன்னால ஒரு வாரப்பத்திரிக்கையில் கவிதை எழுதியிருந்தா.
கொஞ்சம் என்பது சில என்பதும் ஒரே பொருளைத் தரும் சொற்கள். பேச்சு வழக்கில் நாள் என்பதற்கு முன் கொஞ்ச என்பதும் எழுத்து வழக்கில் சில என்பதும் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், கொஞ்சம் என்பது வாரம், மாதம் முதலியவற்றின் முன் யன்படுத்தப்படுவதில்லை மேற்காட்டிய எடுத்துக்காட்டு பேச்சு நடையில் இருப்பதால் அதற்குப் பொருத்தமாக கொஞ்ச நாளைக்கு என்று இருக்கலாம். சில வாரத்துக்கு என்பது இங்கு பொருத்தமாக இருக்காது.
அவர் செய்த கொடிய தவத்தைப் பார்த்து இந்திரன் நடுங்கினான்
கொடிய என்பதற்குப் பதிலாக, கடும் தவம் என்று பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும்.
அவருக்கு இரண்டு கைகளும் சிறப்பாகவே இருந்தன.
சிறப்பாக என்று இல்லாமல் நன்றாக இருந்தன என்னும் சொல்லைப் பயன்படுத்தினால் பொருத்மாக இருக்கும்.
சொல்லின் தொனிப்பொருள்
ஒரு மொழியை நன்கு அறிந்தவர்களுக்கு அந்த மொழியிலுள்ள சொற்களும் தொடர்களும் பொருளை உணர்த்துவதோடு நின்று விடுவதில்லை. அவர்கள் மனதில் பொருளோடு நிழலாடும் சில சாயல்களையும் உணர்த்துகின்றன. சொற்களின் பொருளோடு இழையும் இந்தத் தொனிப்புகளும் பொளைப் போன்றே மிக முக்கியமானவை. இந்தப் பொருள் சாயலை அல்லது தொனிப்பொருளைப் புறக்கணித்து விட முடியாது.
பகவானைக் காட்டிக் கொடுக்கும் குருவுக்குத் தான் அதிக மதிப்பு
காட்டிக் கொடுத்தல் என்பது நம்பிக்கைத் துரோகத்தைக் குறிக்கும் அதனால் காட்டக்கூடிய குரு என்று பயன்படுத்தலாம்.
இந்த தொல்லைகளில் நான் மனதைப் பறிகொடுத்துக்கொண்டிருக்கும் போதோ….
பறிகொடுத்தல் பொதுவாக அழகுணர்ச்சியோடு தொடர்புடையது அதற்கு பதிலாக வருந்திக் கொண்டிருக்கும் போது, உழப்பிக்கொண்டிக்கும் போது என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்.
கடும் பசியால் உயிர் துறந்துகொண்டுள்ளனர் என்று எழுதுவதை விட உயிரிழந்து கொண்டுள்ளனர் என்பது பொருத்தமாகும்.
சொற்சேர்கையில் நெருடல்
குயில் என்னும் பறவை ஒலி எழுப்புவதை கூவுதல் என்ற சொல்லால் குறிப்பிடுவது தான் மரபு குயில் குவுகிறது என்பது சரியான சொற்சேர்கை. இது போன்று மொழியில் பல இயல்பான சொற் சேர்கைகள் உண்டு. அவற்றை மாற்றுவது படிப்பவர்களுக்கு செருடல் உணர்வைத் தரும். எழுதுபவர் மொழிப்பயிற்சி இல்லாதவர் என்ற உணர்வையும் தரும்.
உன் அப்பாவுக்கு ரயில் மோதி சாவு நடக்கப்போகிறது.
சாவு நேரப்போகிறது என்று இருக்கவேண்டும்
(தமிழ் நடைக் கையேடு,2004. திருச்சி : அடையாளம் பதிப்பகம்).

வழக்குச் சொற்கள், கட்டுரை எழுதும் முறைப் பற்றிய இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
நவீனக் கட்டுரை வடிவத்தால் சிறுகதையைப்போன்றது.

அ பளீரென்ற தொடக்கம்

ஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு

இ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு

— என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.

சிறந்தகட்டுரையின் அடிபப்டைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே.

நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை.

1. கட்டுரை எதைப்பற்றியது என ஒரே ஒருவரியில் சொல்ல உங்களால் முடியவேண்டும். அதுவே அதன் மையம். அதாவது ‘கரு’

2. கட்டுரையில் முதல்வரியிலேயே அந்த கரு நேரடியாக வெளிப்படுவது நல்லது. அல்லது அந்தக் கருவை நோக்கி நேரடியாகச் செல்லும் ஒரு வழி அந்த முதல்வரியில் திறந்திருக்க வேண்டும்

3. அந்த மையக்கருவை நிறுவக்கூடிய விவாதங்களாக தொடர்ந்துவரும் வரிகள் வெளிபப்டவேண்டும். அதற்கான ஆதாரங்கள், அதை நிறுவும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதை மறுக்கும் வாதங்களுக்கான பதில்கள் ஆகியவை.

4 கட்டுரையில் பேசப்படும் கருத்துக்கு ஆதாரம் காட்டும்போது வலிமையான ஒரு ஆதாரம் கொடுக்கப்பட்டால் போதும். ஒன்றுக்குமேல் ஆதாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அது கட்டுரையை சோர்வுற்றதாக ஆக்கும். பெரும்பாலும் ஒரு உதாரணத்தை நாம் சொல்லியதுமே அதேபோன்ற பல உதாரணங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றை வரிசையாக சொல்லிச்செல்லும் உற்சாகம் ஏற்படும்.அது கட்டுப்படுத்தப்படவேண்டும்.

5 வரிசையாக ஆதாரங்கள் கொடுத்து ஒன்றை நிறுவுவதாக இருந்தால் கட்டுரையின் நோக்கமே அதுவாக இருக்கவேண்டும், வேறு விஷயமே கட்டுரையில் இருக்கக் கூடாது.

6 கட்டுரையில் ஒரு விஷயம் குறிப்பிடப்படும்போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதைமட்டுமே அவ்விஷயத்தில் இருந்து எடுத்து முன்வைக்கவேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என தொடர்பில்லாதனவற்றை சொல்ல முயலக்கூடாது. உதாரணம், முக அறுவை சிகிழ்ச்சை பற்றிய ஒரு கட்டுரையில் மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றி சொல்லவரும்போது அவரது சமீபத்திய இசைத்தட்டின் விற்பனை எத்தனை லட்சம் என்ற தகவல் தேவையில்லை

7 கட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டதுபோல தோன்றவே கூடாது. ஒருவிஷயத்துக்கு ஒரு கட்டுரை என்பதே நல்லது

8 கட்டுரையில் முன்னுரை ,அல்லது பீடிகை இருந்தது என்றால் அது அக்கட்டுரையில் அளவில் எட்டில் ஒருபகுதிக்கும் குறைவாகவே இருக்கவேண்டும். எவ்வளவு சுருக்கமான பீடிகை இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. பீடிகை கண்டிப்பாக மையக்கருவை சுட்டவேண்டும்– நுட்பமாகவேனும்.

9. மையக்கருவிலிருந்து விலகி சில தகவல்களை அல்லது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அவற்றை இடைவெட்டுகளாக ஒருவரியில் அல்லது இரண்டு வரியில் சொல்லிச் செல்வது நல்லது. அடைப்புக் குறிக்குள் சொல்வது, — போட்டுச் சொல்வது சிறப்பு.

10.கட்டுரைக்கு தகவல்கள் எப்போதும் அவசியம். ஆனால் எத்தனை முக்கியமான தகவலாக இருந்தாலும் அது கட்டுரையை வரட்சியானதாக ஆக்கும். ஆகவே தகவல்களை எப்படியெல்லாம் சுவாரசியமாக ஆக்க முடியுமோ அப்படியெல்லாம் சுவாரஸியமாக ஆக்கவேண்டும். தகவல்களை குட்டிநிகழ்ச்சிகளாக ஆக்கலாம். ஒன்றுடன் ஒன்று பிணைக்கலாம். சொல்லும் மொழியால் வித்தியாசப்படுத்திக் காட்டலாம். பட்டியல்கள் ஒரு கட்டுரைக்கு எப்போதுமே பெரும் பாரம்

11. ஒரு கட்டுரை முழுக்க ஒரே வகை மொழி இருக்கவேண்டும். விளையாட்டுத்தனமான ஒரு கட்டுரை திடீரென்று கோபம் கொள்வ§தோ சட்டென்று தீவிரமடைவதோ கூடாது. அடிப்படையில் இது என்ன மனநிலை [mood] உள்ள கட்டுரை என்ற தெளிவு அக்கட்டுரையில் இருக்கவேண்டும். நகைச்சுவையாக ஆரம்பித்து மெல்ல தீவிரமடையும் கட்டுரைகளும் தீவிரமாக ஆரம்பித்து வேடிக்கையாக ஆகும் கட்டுரைகளும் உண்டு. அப்போது அந்த மாறுதல் சீராக ஆசிரியரால் கொண்டு வரப்படவேண்டும். எது மைய உணர்ச்சியோ அதுவே பெரும்பாலான அளவுக்கு இருக்க வேண்டும். பாதிப்பாதி என்றெல்லாம் இருக்கக் கூடாது

12. மேற்கோள்களை முடிந்தவரை தவிர்ப்பதே கட்டுரைக்கு நல்லது. மேற்கோள் கொடுக்கும்போது வித்தியாசமாகவோ கவித்துவமாகவோ தீவிரமாகவோ வேடிக்கையாகவோ கூறப்பட்ட மேற்கோள்களை மட்டுமே ” … ” போட்டு அப்படியே கொடுக்க வேண்டும். அதாவது அந்த மேற்கோள் வாசகனை நின்று கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். எக்காரணத்தாலும் நீண்ட மேற்கோள்கள் ஒரு கட்டுரையில் வரக்கூடாது. ஒருபோதும் எல்லாருக்கும் தெரிந்த மேற்கோள்களை கொடுக்கக் கூடாது. பொதுவான சாதாரணமான கருத்துக்களை ஒரு முக்கிய பிரமுகர் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டுவதானால் அக்கருத்துக்களை சுருக்கி நம் சொற்களில் கொடுப்பதே நல்லது.

13. கட்டுரையில் வழக்கமான வரிகளையும் வளர்த்தல் வரிகளையும் தேடிக் கண்டடைந்து வெட்டித்தள்ள வேண்டும். எழுதும்போது சரியாகச்ச் சொல்லிவிட்டோமா என்ற ஐயத்தில் நாம் மேலும் ஒருவரி சொல்ல உந்தபப்டுவோம். அதை கட்டுபப்டுத்த வேண்டும். ”இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்’ போன்ற வரிகள் கூடவே கூடாது.

14. பிரபலமான சொற்றொடர்களையும் தேய்ந்த சொற்றொடர்களையும் [ஜார்கன், க்ளீஷே] முற்றிலும் தவிர்க்கவேண்டும். ‘திருடனைத் தேள்கொட்டியது போல’ போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தில் எழுதும்போது இது நிறையவே நமக்கு வரும். நமது ஆங்கிலக் கல்வி அத்தகையது. ‘ஸ்டெப்பிங் இன் அதர்ஸ் ஷ¥ஸ்’ என்றெல்லாம்…

15. ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்

நன்றி ஜெயமோகன்
மேலும் விவரங்களுக்குக் கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும்


 https://www.jeyamohan.in/2208#.Xir9hzIzaUk





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்