கனவு ஆசிரியர் என்னும் நூலிலிருந்து

 இன்று பொருளியல் தேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் கல்வி முறையில், மானுட விழுமியங்கள், அற மதிப்பீடுகள்  குறித்த இடம் தெரியவில்லை. இவற்றை கற்பிப்பதில் ஆசிரியரின் பங்கு பெரிது என்றாலும், இன்றை சூழல் உகந்ததாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
 க. துளசிதாசன் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கனவு ஆசிரியர் என்னும் நூல் தமிழகப் படைப்பாளுமைகள் பலர் தங்களுக்கும் ஆசியருக்குமான உறவினைக் கூறுவதாக அமைந்துள்ளது.

தன்னுடைய மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஆப்ரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்

 எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்லர். அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்லர் என்பதை அவன் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் அதே சமயம் ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு நாயகன் இருக்கிறான் என்பதையும் ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் ஒரு தன்னலம் கருதாத தலைவர் இருக்கிறார் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.
ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் இருக்கிறான் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். இது கடினமான காரியம் தான் எனினும் உழைத்துப்பெற்ற ஒரு ரூபாய், சாலையில் கிடைத்த நூறு ரூபாயைவிடப் பலமடங்கு மதிப்பு மிக்கது என்பதையும் உங்களால் முடிந்தால் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.

தோல்வியிலிருந்து படிப்பினை பெறவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள் பொறாமையில் இருந்து விலகி நிற்க அவனுக்குப் பயிற்றுவியுங்கள். ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தால் வாழ்வு இன்பத்தைத் தரும் என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். புத்தங்களில் பொதிந்துள்ள அற்புதங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். அதே சமயம் நீலவானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் புதிரையும், சூரிய ஒளியில் கண்சிமிட்டும் தேனீக்களின் சுறுசுறுப்பையும் பச்சைப்பசேல் என்ற மலைப்பரப்பில் விரிந்து பரந்திருக்கும் பூக்களின் மலர்ச்சியையும் ரசிக்க சிந்திக்க அமைதியான நேரத்தை அவனுக்கு அளியுங்கள்.

பள்ளியில் ஏமாற்றுவதைவிட பெயிலாவது பல மடங்கு கண்ணியமானது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். மற்றவர்கள் அனைவரும் தவறு என்று தகிடுதத்தம் செய்தாலும் தனது எண்ணங்கள் சரியானவை என்று உறுதி கொள்ளும் அளவுக்கு அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.

இன்னும் மென்மையானவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளவும் முரடர்களிடம் அதற்குத் தக்கபடி நடந்துகொள்ளவும் சொல்லிக் கொடுங்கள். கும்பலில் கோவிந்த சொல்வது போல் அல்லாமல் சுயமாகச் சிந்திக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எல்லா மனிதர்களின் கருத்துக்களையும் உன்னிப்பாகக் கவனிக்கச்  சொல்லுங்கள். ஆனால், அவன் செவிமடுக்கும் அனைத்தையும் உண்மை என்னும் உரைக்கல்லில் உரசிப்பார்த்து நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை அவனுள் ஏற்படுத்துங்கள்.

துன்பம் மேலிடும்பொழுது, மனம் கனத்துப் போகும் போதும் சிரிப்பது எப்படி என்பதை அவனுக்கக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர்த் துளிகள் இழிவு இல்லை என்பதையும் அவனுக்குச் சொல்லுங்கள்.

உலகே மாயம் என்று துறவறம் பூண்டவர்களை எள்ளி நகையாடவும், அதே சமயம் சிற்றின்பம் என்றும் மூழ்கிடாமல் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள். தனது அறிவையும் பலத்தையும் பொருளீட்ட பயன்படுத்தும் அதே சமயத்தில் ஒரு போதும் தனது இதயத்திற்கும் மனசாட்சிக்கும் ஒரு விலை நிர்ணயித்துவிட வேண்டாம் என்று வலியுறுத்துங்கள்.

கூக்குரலிடும் கூட்டத்தினரின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு பொறுமையுடன் இருக்கவும் சரியானது என்று தான் அறிந்துகொண்ட கொள்கைகளுக்காக துடிப்புடன் எழுந்து போராடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

அவனை மென்மையாக நடத்துங்கள் ஆனால் ஆரத்தழுவி செல்லங் கொடுத்துவிடவேண்டாம். ஏனெனில் நெருப்புப் பிழம்புதான் உறுதியான எஃகை உருவாக்குகிறது. பொறுமையாக இருப்பதற்கு வேண்டி துணிச்சலையும் துணிவாக இருப்பதற்கு துணிச்சலையும் பொறுமையையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தன் மீது அபரிமித நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்; அப்போதுதான் மனிதகுலத்தின் மீது அவன் அபரிமித நம்பிக்கை கொண்டிருப்பான்.

இவ்வாறு தங்களிடம் கேட்டுக்கொள்வது மிகக் கடினமான காரியம்தான், உங்களால் முடிந்ததைச் செய்து என் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்.ஏனெனில் எவ்வளவு நல்ல பொடிப்பயல் என் மகன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்