அம்பர்


 
சோழநாட்டில் அம்பர் என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது.  தஞ்சை மாவட்டத்தில் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இவ்வூரை அடுத்து அம்பர் மாகானம் உள்ளது.   

அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே என்னும் தேவாரத்தின் மூலம் அரசிலாற்றங்கரையில் அம்பர் மாநகர் அமைந்து இருந்தமையை அறிகிறோம்.  ஆற்றில் அக்கரையில் அமைந்த ஊர் என்னும் பொருள்பட அம்பர் என்ற பெயர் அமைந்திருக்கலாம்.  சுசீந்திரத்தில் பழையாற்றின் அக்கரையில் அமைந்த ஊர் அக்கரை என்றே பெயர் பெற்றிருப்பது ஒப்புநோக்கத்தக்கது.

அம்பர் என்னும் ஊர் அருவந்தை என்ற வள்ளலுக்கு உரியதாக இருந்தது என்பதை அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடிய புறநானூற்றுப் பாட்டு ஒன்று தெரிவிக்கிறது.

புலவர் பெயர் ஊர்ப்பெயருடன் இணைத்துக் கூறப்பட்டதை போல வள்ளல் முதலியோரின் பெயரும் ஊர்ப்பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட மரபும் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

சோழன் கிள்ளிக்குரிய அம்பரைச் சூழ்ந்து அரிசில் என்னும் ஆறு ஒடியதாக கூறும் சங்க இலக்கியப் பாடலும் அம்பர் என்ற ஊர் சோழ நாட்டினகத்ததே என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

அம்பர் என்ற பெயருடன் மற்றும் ஓர் ஊர் ஜெய்ப்பூர் அரசின் தலைநகராக இருந்துள்ளது. இவ்வூர் நம் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெற்ற அம்பர் இல்லை.

ஏந்து கோட்டு யானை இசைவெங்கிள்ளி
வம்பு ஆணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம்தண் அறல் அன்ன இவள்
விரிஒலி கூந்தல் விட்டு அமைகலனே
(நற்-141-9-12)
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல்அருவந்தை வாழியர் . . . (புறம் – 385-8-10)
- இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் - தொகுதி – ஒன்று – ஆர். ஆளவந்தார் – ப.62.

அம்பர்
அம்பர் என்றதொரு ஊர்ப்பெயர் சங்க காலம் தொட்டே தெரியவருகின்றது. அம்பர் தொடர்பாக இக்காலத்து மூன்று ஊர்ப்பெயர்களைக் காண்கின்றோம்.  அம்பர், அம்பர் மாகாளம், இன்னம்பர் என்பன அம்மூன்றும், மூன்றுமே தஞ்சையைச் சார்ந்தன.  இவற்றுள் அம்பர், அம்பர் மாகாளம் இரண்டும் அருகருகேயுள்ள ஊர்கள்.

அம்பர் இன்றும் அம்பர் என்றே வழங்கப்படுகின்றது.  தலமரம் புன்னை, இக்கோயில் கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலாகும்.  இதனை வைத்து சங்ககாலம் சுட்டும் அம்பர் இன்று காணப்படும் அம்பர் இரண்டும் ஒன்றாக இருக்கும் என்று எண்ணத்துணியலாம்.  இருப்பினும் சங்ககாலச் சான்றுகளை நோக்க கோயில் இருந்ததாகத் தெரியவில்லை.  எனவே, பின்னர் சோழன் கட்டிய கோயில் இங்கு உள்ளது என்பது பொருத்தமாகிறது.  அரிசிலாற்றங்கரையில் உள்ள இதனை,  

வம்பு அணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த 
அரிசில் அம்தண் அறல் அன்ன இவள்
வரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே
– நற் – 141
காவிரி அணையும் தாழ்நீர் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
– புறம் – 385
எனவும் இப்பாடல் காட்டும் தன்மை அரிசிலாற்றங் கரையில் உள்ளமையை உணர்த்துகின்றன.  இதனை நோக்க அம்பர் நீர்துறையினுள் அமைந்த இடமாகத் தெரிதலையும், அப்பு நீரைக் குறிக்கும் பெயர் என்பதையும் நோக்க நீரோடு இப்பெயர்த் தொடர்பு கொண்டமைந்திருக்கலாம் என்றென்னலாம்.

வண்டு என்பது வண்டர் என்பது அமைத்தாற் போன்று அம்பு என்ற சொல் அம்பர் என்று நின்றதோ எனவும் கருதலாம்.  இந்நிலையில் வேட்டுவர் தொடர்பானதாக என்று திரு. சிவலிங்கனாரின் கருத்து அமையும்.

அம்பர், அம்பர் மாகாளம் என்ற இரு ஊர்களும் அடுத்தடுத்து அமைவதைக் காண, முதலில் அம்பர் என்ற ஊரிலேயே அம்பர் மாகாளமும் அமைந்து, பின்னர் அக்கோயிற் சிறப்பு காரணமாக அதனைத் தனித்து அம்பர் மாகாளம் எனச் சுட்டும் தன்மை அமைந்ததோ என்ற எண்ணமும், எழுகின்றது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.  நாவுக்கரசரும் இவ்விறைவனைக் குறிப்பிடுகின்றார் (பதி-301-3) அம்பர் நகர் என்ற சேக்கிழாரின் கூற்று (34-529-4) அம்பர் தனிப்பகுதியாகச் சிறந்து விளங்கியது என்பதை உணர்த்தவல்லது.  கல்வெட்டும் அம்பர் நாடு என்று சுட்டுவது இணைத்து நோக்கத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்