வள்ளுவர் கண்ட சமுதாயம்...1

கள்ளுண்ணாமை........

சமுதாயம் என்பது என்ன என்னும் வினாவிற்கு எப்படி விடை கூறலாம்.மனிதர்கள் கூட்டமாக வாழ்வது சமுதாயமா? பன்றிகள் கூடதான் கூட்டமாக வாழ்கின்றன அதனை சமுதாயம் என்று கூறலாமா?முடியாது இல்லையா?அப்பொழுது சமுதாயம் என்பது பகுத்தறிந்து தனக்கு இது தேவை தேவை இல்லை என ஆய்து அறிந்து தெளிந்த சிந்தனை,நல்வழிபட்டு நடந்து பிறரையும் நடத்தி வைப்பவர்கள் நிறைந்த கூட்டத்தையே சமுதாயம் என்று கூற வேண்டும்.ஆனால் இன்று சமுதாயம் எப்படி உள்ளது.எங்கு காணீணும் பொய்கள் புரட்டுகள் ஏமாற்றங்கள்,வஞ்சகங்கள்,இளைய சமுதாயம் பெரும்பாலர் மதுவுக்கு அடிமை,என்றல்லவா இருக்கின்றது.இதனை சமுதாயம் என்று எப்படி ஒத்துக்கொள்வது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முப்பாட்டன் வள்ளுவ பெருந்தகை நாம் வாழ்க்கையில் சிறந்த நெறியைப் பின்பற்றி மேன்மைகளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வாழ்க்கையின் சாரத்தை ஒன்றே முக்கால் அடியில் பிழிந்து சாறாக கொடுத்துள்ளார்.

அவற்றுள் ஒன்றுதான் கள்ளுண்ணாமை .அறிவினை மயக்கும் கள்ளினை உண்ணுவதால் ஏற்படும் உடல் நலக்கேட்டினையும் ,கள்ளுண்ணுபவனைச் சமுதாயம் எப்படி மதிக்கும் என்பதைப் பற்றி பத்துக் குறள்கிளில் கூறுகின்றார்.

மதுவை உண்ணுவதால் ,பிறரால் மதிக்க கூடிய தன்மையை இழப்பதுடன்,தன் தோற்றப் பொலிவினையும் இழப்பர்.

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
களகாதல் கொண்டொழுகுவார்.

இதனையே அறநெறி சாரமும் ,

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையன் என்றுரைக்கும்தேசும் - களியென்னும்
கட்டுரையால் கோது படுமேல் இவையெல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து (144)

வஞ்சமுங் களவும் பொய்யு மயக்கமு மரபில் கொட்புந்
தஞ்சமென் றாரை நீக்குந் தன்மையுங் களிப்புந் தாக்கும்

எனக் கம்பராமாயணமும் மது உண்பதால் ஏற்படும் விளைவுகளைக் கூறுகின்றன.
கள்ளுண்பவனைத் தாயே மதிக்கமாட்டாள் என்றால் பிறகு யார் தான் மதிப்பார்கள்.
யாவரும் இகழக்கடிய மதுவை உண்பவனிடத்து வெட்கம் கூட அவனை விட்டு சென்றுவிடும்.

வள்ளுவர் கள்ளுண்பவரைச் செத்தவராகவே எண்ணுகின்றார்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லார் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

இப்படி அறிவை கெடுத்துப் பிறரால் எள்ளப்படும் தன்மைக்கு ஆளாக்கும் குடி சமுதாயத்திற்குத் தேவையில்லை என்ற காரணத்திற்காக தான் வள்ளுவர் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.மது நஞ்சு என்று தெரிந்தும் கண்ணை திறந்து கொண்டே கிணற்றில் விழுவது போல அதில் விழுந்து உழன்று கொண்டிருப்பவர்கள் சிந்தித்தால் வள்ளுவர் கண்ட உயர்ந்த சமுதாயம் உருவாகக் முடியும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

மதுவை மறப்போம்,மகிழ்வை பெறுவோம்.சமுதாயத்தில் நன்மக்கள் என்ற பெயரினை அடைவோம்என்ற எண்ணத்தில் தெளிவும் உறுதியும் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதியை ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டால் வள்ளுவர் கண்ட சமுதாயம் மலரும்.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
திருக்குறளை ஆரம்ப பள்ளி பாடங்களில் வைக்காமல் மேல்நிலைப் பள்ளி கல்லூரி பாடத் திட்டத்தில் வைத்தல் இன்னும் சிறப்பாக அது சென்று அடையும் என்பது என் எண்ணம்.

புரியாத வயதில் அதை படித்து அப்படியே மறந்து விடுகிறோம்.


இவை போக எனக்கு வள்ளுவர் மீது ஒரு ஆதங்கம் உண்டு. அவர் ஒரு ஆண் ஆதிக்க ஆசாமி என்றும், தன் மனைவிக்கு சம உரிமை அளிக்காதவர் என்ற ஒரு ஆதங்கம். ஆடு உண்மையா
அ. நம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//வஞ்சகமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்புந்
தஞ்சமென் றாரை நீக்குந் நன்மையுங் களிப்புந் தாக்கும்//

`வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்
தஞ்சமென் றாரை நீக்குந் தன்மையும் களிப்புந் தாக்கும்'

கட்டுரை நன்று; வாழ்த்துகள்.
புலவன் புலிகேசி இவ்வாறு கூறியுள்ளார்…
ராம்ஜி.யாஹூ கூறியுள்ளது போல் திருக்குறளை கல்லுரிப் பாடங்களில் வைத்தால் உபயோகமாக இருக்கும்.....
தமிழரண் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்.

//பன்றிகள் கூடதான் கூட்டமாக வாழ்கின்றன அதனை சமுதாயம் என்று கூறலாமா?முடியாது இல்லையா?//

அருமையான விளக்கம். சிறப்பான கட்டுரை.''அவர்கள் விற்பதால்தான் நாங்கள் குடிக்கிறோம்'' என்று கூறும் குருட்டு ஆசாமிகளுக்கு வள்ளுவ ஆசான் கூறும் கருத்துக்களைச் சற்றுக் கூறுங்களேன்.

//அவர் ஒரு ஆண் ஆதிக்க ஆசாமி என்றும், தன் மனைவிக்கு சம உரிமை அளிக்காதவர் என்ற ஒரு ஆதங்கம். அஃது உண்மையா?//

இது பொய் என்பதைத் தாங்கள் கூறும் கருத்துரைப்பில் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

நன்றி.
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களுக்கு வணக்கம். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளேன்.

//அவர் ஒரு ஆண் ஆதிக்க ஆசாமி என்றும், தன் மனைவிக்கு சம உரிமை அளிக்காதவர் என்ற ஒரு ஆதங்கம். ஆடு உண்மையா?//

பெண்ணின் பெருந்தக்க யாவுள?

என்று பெண்மையைப் பெருமைபடுத்திய ஒரே நூல் திருக்குறள்தான். அப்படியிருக்க.. இப்படி இருக்குமா?
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் திருவள்ளுவர் பெண்களை இழிவுபடுத்தும் எண்ணத்தில் தமது நூலை ஆக்கவில்லை,அன்றைய சூழலில் இருந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பாகவே அந்நூலை நாம் பார்க்க வேண்டும்.அதே வள்ளுவர் பிறன்மனை விழையாமையைப் பற்றி பேசியுள்ளாரே....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
திருக்குறளைக் கல்லூரிகளில் பாடமாக வைப்பதில் நானும் உடன் படுகின்றேன்..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
திருவள்ளுவர் தாம் அமைத்துக் கொண்ட அதிகாரத்தை வலியுறுத்தும் நோக்கிலும் படைத்திருப்பதைக் காணலாம். தெரிந்துதெளிதல் அதிகாரத்தில் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.என்பர் அடுத்த அதிகாரமான தெரிந்து வினையாடலில் எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் என்று கூறுவர்....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//''அவர்கள் விற்பதால்தான் நாங்கள் குடிக்கிறோம்'' என்று கூறும் குருட்டு ஆசாமிகளுக்கு வள்ளுவ ஆசான் கூறும் கருத்துக்களைச் சற்றுக் கூறுங்களேன்.//
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோல தாங்க இதுவும்.வள்ளுவர்
'களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க குளித்தானைத் தீத்துரீஇ யற்று'என்று கூறுகிறார் பாருங்கள்.
Several tips இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்ல எழுதி இருக்கிறீர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்