நான் கடவுள்


‘அகம் ப்ரமாஸ்மி ‘ இது தான் இப்படத்தின் மூலம்.இந்த அடியைப் பார்த்தவுடன் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று நினைவில் வந்தது
எண்ணாயிரம் ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறிவா ரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கின்
கண்ணாடி போலகலந்து நின்றானே.
இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு
உயிருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் யார் ஒருவர் உணர்ந்து அறிந்துகொள்கிறார்களோ அவர்கள் இறைவனாகிறார்கள்.
தமிழ் சினிமாவுலகை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றார் இயக்குனர் பாலா. இப்படம் தமிழின் வெளிவந்த சிறந்த படங்களின் வரிசையில் வைத்து எண்ணத் தக்கது.பல்வேறு விருதுகளுக்குத் தகுதியுடைய படம்.

திரைப்படம் என்றால் கதாநாயகன்,நாயகியைச் சுற்றியே அமைய வேண்டும் என்ற மரபினைப் பாலா கட்டுடைத்து,அப்படத்தில் வரக் கூடிய ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழச்செய்துள்ளார்
வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் திரைக்கதைக்குள் கொண்டு வந்து அழகான நாவல் படிப்பது போன்ற உணர்வினையும் தோற்றிவித்து, ஆழமாக காட்சிப்படுத்தி முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளார் இயக்குனர் பாலா
விளிம்பு நிலை மாந்தர்களின் மீது இயல்பாக ஏற்படக் கூடிய இரக்க உணர்வினை மட்டுமில்லாமல், அவர்களைப் பார்த்து சிரிக்கவும்,அழுகவும், நெகிழ்வும் செய்துள்ளார் பாலா.பிச்சையை இறை தோற்றத்தில் எடுக்க வைப்பதும் அப் பாத்திரங்களின் வழி சமுதாய இழிவுகளைச் சாடுகின்றார்.
ஆரியாவின் அறிமுகமே சிலிர்க்க வைக்கின்றது.அஹோரியாகவே வாழ்ந்துள்ளார்.அந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு ஆர்யா. பூஜாவின் நடிப்பும் குறிப்பிடும் படியுள்ளது.
காசி நகரினை இன்னும் காட்சிபடுத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
நவில்தோறும் நூல் நயம் போல்இப்படம் காணும் தோறும் புதிய கோணத்தை விரித்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
ஜெயமோகனின்
வசனங்களைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும், அவருக்கே உரிய நக்கல் நையாண்டி படம் முழுவதும் வியாவித்து இருக்கிறது.
படத்தின் உச்சம் இசைஞானி இளையராஜாவின் இசை. பேசாத இடங்களில் இசை பேசி நம்மை அழைத்துச் செல்கிறது.பார்க்க வேண்டிய படம்.மீண்டும் பார்க்கத் தூண்டும் படம்.

கருத்துகள்

தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விமர்சனம் நன்றி!!!!
S.Lankeswaran இவ்வாறு கூறியுள்ளார்…
விமர்சனம் நறுக்குத்தெறித்தாற் போன்று நயமாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்