மொழிப் போரில் அண்ணாவின் மொழியாளுமை

குள்ள உருவம்; குறும்புப்பார்வை; விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலையில்லா தோற்றம்; நறுக்கப்பட்ட மீசை; நகை தவழும் முகம்; சீவாத தலை; சிறிதளவு வெளிவந்த தொப்பை; செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள்; இடுப்பில் பொடி மட்டை; கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம்; இத்தோற்றத்தோடு காட்சியளித்து நின்கிறாரே அவர்தான் அண்ணா, என நாவலர் நெடுஞ்செழியன் காட்சிப்படுத்தும், இந்த உருவம் தான் 1937 இன் தொடக்க காலக்கட்டங்களிலும்,பிந்திய காலங்களிலும் தாய் மொழி தமிழ் அழியும் நிலை ஏற்பட்ட பொழுது,‘ நம்முடைய தமிழ் மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்! நம்முடைய நாடு நமக்குக் கிடைத்தால்தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியும்’எனச் தமிழ் சமுகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். அதன் விளைவாக எண்ணிறந்தோர் மொழிகாக்க வீறு கொண்டு எழுந்தனர்.அவ்வாறு அவர்கள் வீறுகொண்டு எழுவதற்குக் காரணம்,அண்ணாவின்,மொழியாளுமை என்றால் மிகையில்லை.

பழுத்த அறிவு,கூரிய அறிவு நுட்பம்,அகன்ற காட்சியறிவு அகியவை அவர் தம் நடையினை அணி செய்கின்றன.அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகின்றது. கருத்து முதன்மையும் முழுமையும் கருத்து வெளிப்பாட்டு விருப்பமும் அவர் தம் நடையின் தலைச்சிறந்த பண்புகள் எனலாம்.சுருக்கம்,தெளிவு,இனிமை,ஓசை நயம்,அறிவாழம் முதலியவை அவர் தம் நடையின் ஏனைய பண்புகளாம்.அத்துடன் அவர்தம் நடை ஒரு தனி வீறும் தனியாண்மையும் கொண்டது என்பர் அ.கி.மூர்த்தி (அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்,பக்கம்,8)
இந்தி எதிர்ப்பு

1937-1939 அப்பொழுது சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திர பகுதியையும் உள்ளடக்கியது) முதலமைச்சராக இருந்த இராஜாஜி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டுமென சட்டம் இயற்றினார். இந்த சட்டத்தை எதிர்த்துப் பலர் போராடினர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர் அறிஞர் அண்ணா ஆவர்.
அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்பு ஏன்?,இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல,வீட்டுக்கு ஒரு மறவர் வாரீர் நாட்டுக்குத் தன்னுயிர் தாரீர்!,விலங்கினை ஒழித்திட வீரனே விரைந்து வா!,தமிழ் அழிக்கும் ஆதிக்கம் இனியும் நீடிப்பதா?, மொழியைக் காக்கவும் நாட்டை மீட்டிடவும் விரைந்து வாரீர்!, தம்பியே வா ! தானையோடு வா!, போர் முரசு கொட்டிடுவோம் தார்வேந்தர் பரம்பரையே திரண்டு வா! என்னும் தலைப்புகளில் சொற்பொழிவாற்றி மக்கள் உள்ளத்துள் மொழிப்போரின் தேவையையும் அதை பற்றிய தெளிவினையும் உணர்த்தினார். .

கொண்ட கருத்தை உணர்த்தும் பாங்கு
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார் பெறின்(648)

என்னும் வள்ளுவ மொழிக்கேற்ப, அண்ணா பொதுமக்களிடம் தன் கருத்துருவை முன் வைக்கும் பொழுது, அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம்,தமது கருத்தைத் தெளிவாக எடுத்துரைப்பர். 21-9-1957-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு ஏன்?என்னும் தலைப்பில் திருவண்ணாமலையில் சொற்பொழிவாற்றுகிறார். அச் சொற்பொழிவில் இந்தி எதிர்ப்பிற்கான காரணத்தை மிகத் தெளிவாக அவையோருக்கு அளிக்கின்றார்.

நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய் மொழி பிற மொழிகளுடன்,ஒப்பிட்டு பார்க்கின்ற நேரத்தில் மொழியாளர்கள் எல்லாம் பார்த்து இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது?இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றுள்ளீர்கள்?ஈராயிரமாண்டுக் காலமாகவா மொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகிறது?ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும்,பொறாமையோடு சிலரும்,பொச்சரிப்பாலே பலரும் கேட்கத்தக்க நல்ல நிலையிலே தான் தமிழ் மொழி இருக்கின்றது.ஆகையாலே தமிழ்மொழிக்காக வாதாடுவதற்காக தமிழர் மன்றத்தில் தமிழன் பேசவில்லை.ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதமை,தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிறமொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளை கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது.

இங்கே நாம் ஆயிரமாயிரம் கூடியிருக்கின்றோம்.நாம் வளர்ச்சியடைந் திருக்கின்ற இந்த நேரத்திலும் நம்மை உண்மையிலேயே அடக்கி ஆளவேண்டு மென்று கருதுகின்றவர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால்,அவர்கள் இருக்கின்ற திக்குநோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும்.தமிழ்ப் பார்வையிலே குளிர்ச்சி உண்டு.கோபக்கனலும் உண்டு.தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான்,தோழன் என்று வருபவனுக்குது தமிழன்,தன்னுடைய தாளை மதிப்பவனை அவனுடைய தலைதாளிலே படுகின்ற வரை ஓயமாட்டான்.(பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்,பூம்புகார் பதிப்பகம், பக்கம்,711)

உவமை
அண்ணா தன்னுடைய கருத்தினைத் தெளிவுபடுத்த தனது பொழிவுகளில் உவமைகளைக் கையாண்டுள்ளார்.24-6-1960-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு-போராட்டம் மட்டுமல்ல என்னும் தலைப்பில் தியாகராய அரங்கில் உரையாற்றுகின்றார். அப்பொழுது இந்தியைத் திணிக்கவில்லை எனக் கூறிக் கொண்டே ஆட்சியாளர்கள் இந்தியைத் திணிக்கின்றார்கள் என்னும் கருத்தைக் கூறும்பொழுது ,

சிறுவர்கள் மருந்து சாப்பிட மறுக்கும்போது கொஞ்சம் இனிப்பை மருந்தில் கலந்து கொடுப்பது போல என்ற உவமையைத் தமது உரையில் கையாளுகின்றார்.
10-7-1960-ஆம் ஆண்டு மொழியைக் காத்திடவும் நாட்டை மீட்டிடவும் வீரர்களே விரைந்து வாரீர் என அண்ணா விடுத்த மொழிப்போர் அறை கூவலில் , முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே எனக்குத் திருமணம் ஏற்பாடாகி, என்னுடைய மனைவியை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்;அப்போது ஒரு குறும்புக்கார நண்பர் என்னிடத்திலே ஓடோடி வந்து,உன்னுடைய மனைவி சுத்தக் கறுப்பு என்று சொன்னார்;அவர் அவ்வாறு சொன்னதாலே,உருவத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குத் தோன்றியது.உடனே என்னுடைய மனைவியைப் பார்த்தபோது,அவர் சொன்ன மாதிரி கறுப்பாக இல்லாமல் நல்ல சிவப்பாக இருந்ததோடு
மட்டுமல்லாமல்,அழகாகவும் இருந்தாள்.அதைப்போல காங்கிரசுகாரர்கள் எங்களைத் திட்டுவதாலே,ஆபத்தானவர்கள் என்று சொல்வதனாலே மக்களுக்கு எங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு,நம்முடைய கூட்டத்திற்கு ஏராளமாக வந்து கூடுகின்றார்கள்.என்றும் வாழ்கை நிகழ்வினை உவமையாக்கியுள்ளார்.
வீரச் சுவை

7-8-1960 இல் போர் முரசு கொட்டிவிட்டோம்;தார்வேந்தர் பரம்பரையே திரண்டு வா ! என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றும் பொழுது, அண்ணா அவையோரின் உள்ளத்துள் பதியுமாறும்,எழுச்சி ஏற்படும் வகையிலும் மொழிப்போரின் இன்றியமை யாமையை விளக்கி, இன்னுயிரை ஈந்தாவது தமிழ் நலம் காக்க வேண்டுமென மக்களை நோக்கி எழுச்சியுரையாற்றுகின்றார்.

ஆட்சியினர் ஏவுகின்ற அடக்குமுறைக்கு ஆளாக அழைக்கின்றேன், தேவைப்பட்டால் உயிர் இழக்கச் சம்மத்திக்கவே அழைக்கின்றேன்.கண்களை இழக்க நேரிடலாம்;உயிரை இழக்க நேரிடலாம்;அதற்காகவே அழைக்கின்றேன்,இப்படி அழைப்பு விடுத்தால் நான் கல்நெஞ்சகாரன்தான்!

‘இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்ற நம்பிக்கை உள்ளத்துள் எழவேண்டும். போராட்டத்தின் போது போலிசார் அடக்குமுறை அவிழ்த்துவிட்டால்,போலிசாரின் காலால் எட்டி உதைக்கப்பட்டால்,குருதி குளமானால் அந்த மண் மகிமை பெறவேண்டும்.இரத்தம் பாய்ந்து புதுபுரியாக வேண்டும் நாம் நடத்துகின்ற போராட்டம் நாட்டு விடுதலைக்காகவும் மொழிக்காகவும்தான்’
.
தூத்துக்குடியிலே கால் இழந்துபோல,டால்மியா புரத்திலே கையிழந்தது போல, நெல்லிகுப்பத்திலே உயிரிழந்ததுபோல, சென்னையிலே படுகொலைக்கு ஆளானது போல, நேருக்கு கறுப்புக்கொடி காட்டிய நேரத்திலே சிக்குண்டு மாண்டது போல நான் என்ன தருவது-கைகளையா,கால்களையா,அல்லது உங்களுடைய இன்னுயிரையா?( 27-6-1960 இல் விலங்கினை ஒடித்திட வீரனே விரைந்து வா!)

குடும்பம் குடும்பமாக வாருங்கள் அண்ணனோடு தம்பியும் சுற்றமோடு நண்பரும் கூடி ஓடி வாருங்கள்!போராட்டக் களத்திற்கு!உங்களோடு வரமுடியாத அளவுக்கு தள்ளாத வயதுடைய பாட்டியும் கூட உங்களைத் தேடி வரவேண்டும் களத்திற்கு.தண்டூன்றித் தள்ளாடியவாறு உங்கள் பாட்டன்மாரும் பாடி நோக்கி வருகின்ற தன்மையிலே தாயகம் மீட்க அனைவரும் வாரீர்!வாரீர்.( 19-7-1960 ஆம் ஆண்டு தம்பியே வா! தானையோடு வா!)

இழைத்துணர்ந்தவர்

அண்ணா நூற்புலமையும்,பட்டறிவு புலமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றதால், சொற்களின் திறன் அறிந்து,சொல்லும் முறையறிந்து, சொற்களால் விளையும் பயன் அறிந்து தன் கருத்தை மக்களிடம் வெளிப்படுத்தினார். அதனால் தான் அண்ணாவினுடை மொழி நடை பிறரினும் தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றது. ஒருமுறை அண்ணவினுடைய கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்யபட்ட பயில்வான், அவருடைய பேச்சு திறத்தால் கவரப்பட்டு அச் செயலை செய்யாமல் கைவிட்டதை இந்தி போராட்டம் மட்டுமல்ல என்னும் தலைப்பில் பேசும் பொழுது எடுத்துக்காட்டுகின்றார்.(24-6-1960,இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல)

பேச்சுக்கலையில் ஈடு இணையற்றவர் அண்ணா.தம் பேச்சு பெருமையுற எல்லா வகை இலக்கிய நயங்களையும் அவர் கையாளுகின்றார்.உவமை,உருவகம், அடுக்குமொழி,சொல்திறம்,மேற்கோள் மொழிகள் முதலியவை அந்நயங்கள். உவமை யும், உருவமும்,அடுக்கு மொழியும் அண்ணா உரையிலிருந்து பிரிக்க இயலாதவை. அண்ணாவின் மொழி வனப்பும்,வண்ணமும்,வீறும் உடையது.தம் ஆழ்ந்த படிப்பால் வியத்தகு முறையில் அவர் மொழிகளைக் கையாளுகின்றார்.(அறிஞர் அண்ணா, சு.சண்முகசுந்தரம்,பக்கம்128)

அண்ணா தம் பேச்சு திறத்தால்,மொழி நடையால் தமிழுலக மக்களின் படித்தவரிலுருந்து பாமர் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிப்படுத்தி ,அவர்கள் உள்ளத்துள் புதிய எழுச்சியை ஏற்படுத்தி,புதிய சிந்தனைக்களுக்கு வித்திட்டார்.அவ்வித்து வளர்ந்து கிளை பரப்பி வளர்ந்திருந்தாலும்,அழிவுறாமல் காப்பது இளைய சமூகத்தினரின் கடனே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்