தையல் சிட்டும் நானும்

தாயின் பராமரிப்பிலிருந்து பறக்கும் நிலையில் பறக்க எத்தனித்த போது கீழே விழுந்து கிடந்த தையல்சிட்டு குருவியைத் தமிழ்த்துறையின் நூலகர் திரு ஜோசப் அவர்கள் எடுத்துவந்து (காலை 10மணி வாக்கில்) முனைவர்பட்ட மாணவர்களிடம் கொடுத்துள்ளார். தையல்சிட்டு வந்த செய்தியை அறிந்து பார்க்க சென்றேன். அதனை உள்ளங்கையில் பொத்தி வைத்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் எதுவும் செய்ய இயலாது என்றார்கள். நான் அதனை வாங்கி கொண்டு வந்து சொட்டுச் சொட்டாகச் சில சொட்டுகள் தண்ணீர் கொடுத்தேன். சிறிது நேரத்தில் கண்விழித்துப் பார்த்தது. அடுத்து என் கையிலிருந்து என் மேலே ஏறியது. பையப்பைய நகர்ந்து தோளில் அமர்ந்து பிறகு என் கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் சங்கிலியைப் இறுக பற்றிக்கொண்டது. இறங்கவேயில்லை. அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டது. எனக்கு வகுப்பு இருந்தது. வகுப்பு எடுக்கச் சென்றேன். எந்த சத்தத்திற்கும் அசங்கவில்லை. கண்விழித்து விழித்துப் பார்த்துவிட்ட பழைய நிலைக்கே சென்றது. அது கையில் பிடித்திருந்த பிடியை நகர்த்தவே இல்லை. வகுப்பு மாணவர்கள் பிடித்து இழுத்துப்பார்க்கின்றார்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை...